Ads

அத்தியாயம் - 29 - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்



அத்தியாயம்‌ - 29

(1) சென்னை பஜனை சங்கம்‌, (2) டெண்டுல்கர்‌ (தகப்பனாரும்‌ மகனும்‌), (3) டாக்டர்‌ கேப்டன்‌ ஹாடே, (4) வாமன்‌ நார்வேகர்‌ ஆகியோரின்‌ கதைகள்‌.

இந்த அத்தியாயம்‌ சாயிபாபாவைப்‌ பற்றிய மற்றபல அற்புதமான, சுவையான கதைகளை விவரிக்கிறது.

சென்னை பஜனை சங்கம்‌

1916ஆம்‌ ஆண்டில்‌ இந்தக்‌ குழு காசிக்குத்‌ தீர்த்தயாத்திரையாக புறப்பட்டது. ஒரு மனிதர்‌, அவர்‌ மனைவி, மகள்‌, மைத்துனி ஆகியோரையே அக்குழு கொண்டிருந்தது. துரதிர்ஷ்டவசமாக அவர்களின்‌ பெயர்கள்‌ குறிக்கப்படவில்லை. போகும்‌ வழியில்‌ அஹமத்நகர்‌ ஜில்லா கோபர்காவன்‌ தாலுக்காவிலுள்ள ஷீர்டியில்‌, தமது பக்தர்களுக்கும்‌, அங்கு சென்று தங்களது திறமைகளைக்‌ காட்டிய திறமைசாலிகளுக்கும்‌ தினந்தோறும்‌ பணத்தை வினியோகித்துவரும்‌ தாராளமும்‌, அமைதியும்‌, சாந்தியும்‌ உடைய பெரும்ஞானி ஒருவர்‌ இருக்கிறார்‌ என்று அவர்கள்‌ கேள்விப்பட்டனர்‌.

சாயிபாபாவால்‌ தகஷிணையாக ஏராளமான பணம்‌ தினந்தோறும்‌ சேகரிக்கப்பட்டது. இத்தொகையிலிருந்து பக்த கொண்டாஜியின்‌ மகளான அமனி என்ற 3 வயது குழந்தைக்குத்‌ தினந்தோறும்‌ ரூ.1ம்‌, வேறு சிலருக்குத்‌ தினந்தோறும்‌ ரூ.2 முதல்‌ ரூ.5 வரையும்‌, அமனியின்‌ தாயாருக்குத்‌ தினந்தோறும்‌ ரூ.6ம்‌ மற்றும்‌ அவர்‌ விரும்பியவாறு மற்ற பக்தர்களுக்கு தினந்தோறும்‌ ரூ.1௦" முதல்‌ ரூ.20 வரையிலும்‌, சமயத்தில்‌ ரூ.50 கூட அவர்‌ வினியோகித்தார்‌.

இவற்றையெல்லாம்‌ கேள்விப்பட்டு அந்த கோஷ்டி ஷீர்டிக்கு வந்து தங்கியது. அக்குழு மிக நன்றாக பஜனை செய்து மிகச்சிறந்த பாடல்களையெல்லாம்‌ பாடியது. ஆனால்‌ அந்தரங்கமாக அவர்கள்‌ பணத்துக்காக ஆசைப்பட்டனர்‌. அக்கோஷ்டியில்‌ மூவர்‌ பேராசை பிடித்தவர்களாய்‌ இருந்தனர்‌. ஆனால்‌ அவ்வீட்டுத்‌ தலைவியின்‌ குணம்‌ வேறுபட்டதாய்‌ இருந்தது. அவளுக்கு பாபாவின்‌ மேல்‌ அன்பும்‌, பிரியமும்‌ இருந்தது. ஒருநாள்‌ மத்தியான ஆரத்தியின்போது அவளது பக்தி, நம்பிக்கை இவற்றில்‌ பெருமகிழ்வடைந்த பாபா அவளுக்கு அவளது இஷ்ட தெய்வக்‌ காட்சியை அளித்தார்‌. வழக்கப்படி சாயிநாதனுக்குப்‌ பதில்‌ சீதாநாதனாக (ராமனாக) காட்சியளித்தார்‌. அவளது இஷ்ட தெய்வத்தைக்‌ கண்டு மிகமிக உருகிப்போய்‌ விட்டாள்‌. கண்களிலிருந்து ஆனந்தக்‌ கண்ணீர்‌ பொங்கி வழிய மகிழ்ச்சியில்‌ கைகளைத்‌ தட்டினாள்‌. மக்கள்‌ அவளது ஆனந்த நிலையைக்‌ கண்டு அதிசயமுற்றனர்‌. ஆனால்‌ அதன்‌ காரணத்தை அவர்கள்‌ அறிய இயலவில்லை.

பின்னர்‌ மாலைப்பொழுதில்‌ எல்லாவற்றையும்‌ அவள்‌ தன்‌ கணவனுக்கு விளக்கினாள்‌. சாயிபாபாவுக்குப்‌ பதிலாக அவள்‌ எங்ஙனம்‌ ராமரைக்‌ கண்டாள்‌ என அவள்‌ கூறினாள்‌. மிகுந்த எளிமையும்‌, பக்தியும்‌ உடையவளாதலால்‌ அது அவளது ‘மனப்‌ பிராந்தியே’ என அவர்‌ நினைத்தார்‌. “மற்றவர்கள்‌ எல்லாம்‌ சாயிபாபாவைப்‌ பார்த்துக்கொண்டிருக்கும்போது நீ மட்டும்‌ ராமனை காண்பதாவது” என்று அவர்‌ அவளை கேலி செய்தார்‌. அவளது மனம்‌ அமைதியாகவும்‌, சாந்தமாகவும்‌ இருந்தபோதெல்லாம்‌ அடிக்கடி ஸ்ரீராம தரிசனத்தைக்‌ கண்டாள்‌. ஆதலால்‌ அவள்‌ இக்கூற்றுக்குச்‌ செவி சாய்க்கவில்லை.

அற்புதக்‌ காட்சி

இம்மாதிரியாக எல்லாம்‌ நடந்துகொண்டிருந்தபோது ஒருநாள்‌ இரவு அவள்‌ கணவர்‌ தன்‌ கனவில்‌ அற்புதக்‌காட்சி ஒன்றைக்‌ கண்டார்‌. அது கீழ்வருமாறு :

அவர்‌ ஒரு பெரிய நகரத்தில்‌ இருக்கிறார்‌. போலீஸ்‌ அவரைக்‌ கைதுசெய்து கைகளைக்‌ கட்டி, லாக்‌-அப்பில்‌ வைத்திருக்கிறது. போலீஸ்‌ நன்றாக அழுத்திக்‌ கட்டிக்கொண்டிருக்கும்போது ஜெயிலுக்கு வெளியில்‌ சாயிபாபா அமைதியாக நின்றுகொண்டிருப்பதைக்‌ காண்கிறார்‌. பாபா இவ்வளவு அருகில்‌ இருப்பதைக்‌ கண்டு வெளிப்படையான குரலில்‌ அவரிடம்‌ “உமது புகழைக்‌ கேள்விப்பட்டு நான்‌ உமது திருவடிகளிடையே வந்தேன்‌. தாங்களே நேரில்‌ நின்றுகொண்டிருக்கும்போது எனக்கு இந்தக்‌ கேடு ஏன்‌ நிகழ வேண்டும்‌?” என வினவுகிறார்‌.

பாபா : உனது கர்மத்தின்‌ விளைவை நீ அனுபவித்தாக வேண்டும்‌.

அவர்‌ : இந்தப்‌ பிறவியில்‌ இத்தகைய துரதிர்ஷ்டத்தை அளிக்கும்‌ விதத்தில்‌ நான்‌ ஏதும்‌ செய்யவில்லையே?

பாபா : இப்பிறவியில்‌ இல்லையென்றால்‌ உனது போன பிறவியில்‌ நீ ஏதும்‌ பாவம்‌ செய்திருப்பாய்‌.

அவர்‌ : எனது முந்தைய பிறவிபற்றி எனக்கு ஏதும்‌ தெரியாது ஆனால்‌ அப்படியே நான்‌ செய்திருப்பதாகவே வைத்துக்கொண்டபோதிலும்‌ தங்கள்‌ சாந்நித்யத்தின்‌ முன்னர்‌, நெருப்பில்‌ வைக்கோல்‌ எரிவதைப்போன்று ஏன்‌ அவைகள்‌ அழிக்கப்படக்கூடாது?

பாபா : உனக்கு அத்தகைய நம்பிக்கை உண்டா?

அவர்‌ : ஆம்‌.

பாபா : உனது கண்களை மூடு.

அவர்‌ : கண்களை மூடியது தான்‌ தாமதம்‌ ஏதோ ஒன்று கீழே விழுந்து பலத்த அடிபடுவதுபோல்‌ கேட்டது. அவர்‌ கண்களைத்‌ திறந்தபோது தாம்‌ விடுதலையாகி இருப்பதையும்‌, போலீஸ்‌ இரத்தம்‌ சிந்தி கீழே விழுந்து கிடப்பதையும்‌ கண்டார்‌. மிகவும்‌ பீதியடைந்து பாபாவை அவர்‌ பார்த்தார்‌.

பாபா : நீ இப்போது நன்றாகப்‌ பிடிபட்டுக்கொண்டாய்‌. இப்போது அதிகாரிகள்‌ வந்து உன்னைக்‌ கைது செய்வார்கள்‌. அவர்‌ கெஞ்சினார்‌. தங்களைத்‌ தவிர என்னைக்‌ காப்பாற்றுவார்‌ வேறு ஒருவரும்‌ இல்லை. எப்படியாவது என்னைக்‌ காப்பாற்றுங்கள்‌ என்றார்‌.

பின்னர்‌ பாபா அவரை மீண்டும்‌ கண்களை மூடச்‌ சொன்னார்‌. அவர்‌ அதே மாதிரியாகச்‌ செய்து பின்‌ கண்களைத்‌ திறந்ததும்‌ அவர்‌ ஜெயிலுக்கு வெளியே விடுதலையாகி இருப்பதையும்‌ பாபா அவரருகில்‌ இருப்பதையும்‌ கண்டார்‌.

பாபாவின்‌ காலடிகளில்‌ அப்போது அவர்‌ வீழ்ந்தார்‌, “இந்த நமஸ்காரத்திற்கும்‌ முந்தைய நமஸ்காரங்களுக்கும்‌ ஏதேனும்‌ வித்தியாசம்‌ உண்டா?” என்று பாபா கேட்டார்‌. “ஏராளமான வித்தியாசம்‌ இருக்கிறது. எனது முந்தைய நமஸ்காரங்களெல்லாம்‌ தங்களிடமிருந்து பணம்‌ பெறுவதற்காகச்‌ செய்யப்பட்டன. ஆனால்‌ இந்த நமஸ்காரமோ தாங்கள்‌ கடவுள்‌ என்ற எண்ணத்தில்‌ செய்யப்படுகிறது. அத்துடன்‌ தாங்கள்‌ முஸ்லீமாக இருந்துகொண்டு ஹிந்துக்களைப்‌ பாழ்படுத்துவதாக நினைத்தேன்‌.

பாபா : முஹமதியக்‌ கடவுள்‌ மீது உனக்கு நம்பிக்கை இல்லையா?

அவர்‌ : இல்லை.

பாபா : ‘பஞ்ஜா’ என்ற உலோகத்தாலான கை அடையாளம்‌ உங்கள்‌ வீட்டில்‌ இல்லையா? ‘தாபூத்‌’ (மொஹரம்‌) சமயத்தில்‌ நீ அதை வழிபடுவதில்லையா? கல்யாணம்‌ மற்றும்‌ இதர பண்டிகைக்‌ காலங்களில்‌ நீங்கள்‌ அமைதிப்படுத்தி ஆற்றும்‌ காட்பீபீ என்ற மற்றொரு முஹமதியப்‌ பெண்தெய்வம்‌ உங்கள்‌ வீட்டில்‌ இல்லையா?

அவர்‌ இவைகளையெல்லாம்‌ ஒத்துக்கொண்டார்‌.

பாபா : உனக்கு வேறென்ன வேண்டும்‌.

அவரது குரு ராம்தாஸின்‌ தரிசனத்தைப்‌ பெற அவர்‌ மனதில்‌ அவா ஒன்று எழுந்தது. அப்போது பாபா பின்னால்‌ திரும்பிப்‌ பார்க்கச்‌ சொன்னார்‌. அவர்‌ திரும்பியபோது ராம்தாஸ்‌ நின்றுகொண்டிருந்தார்‌. அவர்‌ காலடியில்‌ விழப்போனபோது ராம்தாஸ்‌ மறைந்துவிட்டார்‌. பின்னர்‌ அவர்‌ பாபாவை விருப்பத்துடன்‌ “நீங்கள்‌ வயதானவராகத்‌ தோன்றுகிறீர்களே. உங்கள்‌ வயது என்னவென்று தெரியுமா?” என்று கேட்டார்‌.

பாபா : என்ன! நான்‌ கிழவன்‌ என்றா சொல்கிறாய்‌? என்னோடு ஒரு ஓட்டப்பந்தயம்‌ விட்டுப்பார்த்துவிட்டுச்‌ சொல்‌.

இதைக்‌ கூறிவிட்டு பாபா ஓடத்‌ தொடங்கினார்‌. அவரும்‌ பின்னால்‌ ஓடினார்‌. ஓடும்போது பாபா அவர்தம்‌ பாதத்தால்‌ எழும்பிய தூசியில்‌ மறைந்துவிட்டார்‌. அவரும்‌ கண்விழித்தார்‌.

விழித்தபின்‌ கனவுக்காட்சியைப்‌ பற்றி அவர்‌ தீவிரமாகச்‌ சிந்தித்தார்‌. அவரது மனோபாவனை முற்றிலுமாக மாறிவிட்டது. பாபாவின்‌ பெருமையை அவர்‌ உணர்ந்துகொண்டார்‌. இதன்பின்‌ அவரது பறிக்கும்‌ குணமும்‌, சந்தேகமும்‌ மறைந்து ஒழிந்தன. பாபாவின்‌ பாதாம்புயத்தில்‌ உண்மையான பக்தி அவருக்கு ஏற்பட்டது. அக்காட்சி கனவுதான்‌. ஆனால்‌ கேட்கப்பட்ட வினா விடைகள்‌ மிகவும்‌ விறுவிறுப்பானதும்‌ பொருள்‌ செறிந்ததும்‌ ஆகும்‌.

மறுநாள்‌ காலை எல்லோரும்‌ ஆரத்திக்காக மசூதியில்‌ குழுமியபோது பாபா அவருக்கு இரண்டு ரூபாய்‌ மதிப்புள்ள இனிப்புக்களையும்‌, தம்‌ பாக்கெட்டிலிருந்து இரண்டு ரூபாய்‌ பணமும்‌ எடுத்து பிரசாதமாக அளித்தார்‌. மேலும்‌ சில நாட்கள்‌ அவரை அங்கு தங்கச்செய்து “அல்லா உனக்கு தாராளமாக அளிப்பார்‌. உனக்கு எல்லாவித நன்மைகளையும்‌ செய்வார்‌” என்று ஆசி கூறினார்‌. 

அங்கு அவர்‌ அதிகமாகப்‌ பணம்‌ பெறவில்லை. ஆனால்‌ அதற்கும்‌ மேலானவைகளைப்‌ பெற்றார்‌. அதாவது பாபாவின்‌ ஆசியை! அது அவருக்குத்‌ தொடர்ந்து நன்மையளித்து வந்தது. பின்னால்‌ அக்கோஷ்டிக்கு ஏராளமான பணம்‌ கிடைத்தது. அவர்களது பிரயாணம்‌ வெற்றிகரமாக முடிவடைந்தது. அவர்கள்‌ பிரயாணத்தின்போது எவ்வித அசெளகரியமோ, தொல்லையோ ஏற்படவில்லை. பாபாவின்‌ அருளால்‌ எய்திய ஆனந்தத்தையும்‌, ஆசிகளையும்‌ நினைந்தவாறே பத்திரமாகவும்‌ செளக்கியமாகவும்‌ வீடு திரும்பினர்‌.

டெண்டுல்கர்‌ குடும்பம்‌

பாந்த்ராவில்‌ டெண்டுல்கர்‌ என்னும்‌ குடும்பம்‌ ஒன்று இருந்தது. அதன்‌ உறுப்பினர்கள்‌ எல்லோரும்‌ பாபாவிடம்‌ பக்தி பூண்டவர்களாக வாழ்ந்து வந்தனர்‌. “ஸ்ரீ சாயிநாத்‌ பஜன்மாலா: என்னும்‌ 800 செய்யுட்கள்‌ கொண்ட ஒரு நூலை திருமதி சாவித்ரிபாயி டெண்டுல்கர்‌ பதிப்பித்திருக்கிறார்‌. அது பாபாவின்‌ லீலைகளை எல்லாம்‌ விளக்குகிறது. பாபாவைப்பற்றி ஆர்வம்‌ கொண்டோர்‌ எல்லோரும்‌ படிக்க உகந்த நூல்‌ அது.

பாபு டெண்டுல்கர்‌ என்னும்‌ அவர்களது புதல்வன்‌ இரவும்‌, பகலும்‌ அரும்பாடுபட்டு படித்துக்கொண்டிருந்தான்‌. அவன்‌ மருத்துவப்‌ பரீட்சைக்குச்‌ செல்லவேண்டும்‌. சில ஜோசியர்களைக்‌ கலந்தாலோசித்தான்‌. அவனது ஜாதகத்தைப்‌ பரிசீலித்துவிட்டு கிரஹங்கள்‌ அவனுக்கு இவ்வருடம்‌ சாதகமில்லை என்றும்‌, எனவே அடுத்த வருடம்‌ அவன்‌ பரீட்சைக்குச்‌ சென்றால்‌ நிச்சயம்‌ வெற்றிபெறுவான்‌ என்றும்‌ அவர்கள்‌ கூறினர்‌. இது அவனைக்‌ கவலைக்குள்ளாக்கி, நிலைகொள்ளாமலிருக்கச்‌ செய்தது. சில நாட்களுக்குப்பின்‌ அவனது தாயார்‌ ஷீர்டி சென்று பாபாவைக்‌ கண்டாள்‌.

பல விஷயங்களுடன்‌, சில நாட்களில்‌ பரீட்சை எழுதவிருந்த தன்‌ மகனின்‌ கவலைக்கிடமான நிலைமையையும்‌ அவள்‌ பாபாவுக்குக்‌ கூறினாள்‌. இதைக்‌ கேட்டுவிட்டு பாபா கூறினார்‌, “உனது மகனிடம்‌ என்னை நம்பும்படிச்‌ சொல்‌. ஜாதகம்‌, கைரேகைக்காரர்களின்‌ ஜோசியம்‌ ஆகிய முன்னோடி உரைகளைத்‌ தூக்கியெறிந்துவிட்டு அவன்பாட்டுக்குப்‌ படித்துக்கொண்டிருக்கட்டும்‌. பரீட்சையை அமைதியாக எழுதட்டும்‌. அவன்‌ இவ்வாண்டு தேறுவது உறுதி. என்னை நம்பும்படியும்‌, ஏமாற்றறடையவேண்டாம்‌ என்றும்‌ சொல்‌”.

தாய்‌, வீட்டுக்குத்‌ திரும்பி இச்செய்தியை மகனுக்குத்‌ தெரிவித்தாள்‌. பின்னர்‌ அவன்‌ கஷ்டப்பட்டுப்‌ படித்து உரிய காலத்தில்‌ பரீட்சையும்‌ எழுதினான்‌. எழுதும்‌ பேப்பர்களை (Written) அவன்‌ நன்றாகச்‌ செய்திருந்தான்‌. ஆனால்‌ சந்தேகத்தால்‌ பீடிக்கப்பட்டு பாஸ்‌ செய்வதற்குப்‌ போதுமான மார்க்குகள்‌ தான்‌ பெறப்போவதில்லை என்று எண்ணினான்‌. எனவே வாய்மொழிப்‌ பரீட்சைக்கு (Oral) போவதைப்பற்றி அவன்‌ கவலைப்படவில்லை. ஆனால்‌ பரீட்சை அதிகாரி அவனை விடுவதாக இல்லை.

அவன்‌ எழுதிய பேப்பர்களில்‌ பாஸ்‌ செய்துவிட்டதாகவும்‌, வாய்மொழிப்‌ பரீட்சைக்கு அவன்‌ வரவேண்டும்‌ என்றும்‌ சகமாணவன்‌ ஒருவன்‌ மூலம்‌ செய்தியனுப்பினார்‌. இவ்வாறாக அவன்‌ அப்பரீட்சையில்‌ தேறுவதற்கு ஊக்குவிக்கப்பட்டு, இரண்டிலுமே வெற்றியடைந்தான்‌. கிரஹங்கள்‌ அவனுக்கு எதிராக இருந்தபோதிலும்‌ பாபாவின்‌ அருளால்‌ அவன்‌ இவ்வாறாக வெற்றி பெற்றான்‌. ஐயங்களும்‌, கஷ்டங்களும்‌ நம்மை சற்றே அசைத்து நம்பிக்கையை உறுதிப்படுத்தவே சூழ்கின்றன என்பதை இங்கே அறியவேண்டும்‌. நாம்‌ வாழ்க்யிைல்‌ சோதனைக்குள்ளாக்கப்படுகிறோம்‌. முழு நம்பிக்கையுடன்‌ பாபாவைப்‌ பற்றிக்கொண்டு நமது முயற்சிகளைத்‌ தொடர்ந்து செய்வோமேயானால்‌ நமது முயற்சிகள்‌ அனைத்தும்‌ முடிவாக வெற்றிமுடி சூட்டப்பெறும்‌.

இப்பையனின்‌ தந்தையாரான ரகுநாத்ராவ்‌ பம்பாயில்‌ உள்ள வெளிநாட்டு வாணிபக்‌ கம்பெனி ஒன்றில்‌ பணியாற்றி வந்தார்‌. வயதாகிவிட்டபடியால்‌ அவரால்‌ வேலையைச்‌ சரியாகச்‌ செய்ய இயலவில்லை. எனவே அவர்‌ ஓய்விற்காக விடுப்பு எடுக்க வேண்டியதாயிற்று. விடுமுறையின்போது அவர்‌ தேகநிலை முன்னேறாததால்‌ லீவை அதிகப்படுத்துவதோ அல்லது வேலையினின்று ஓய்வு பெறுவதோ தவிர்க்க முடியாததாகிவிட்டது. அவர்‌ முதுமையும்‌, நம்பிக்கையும்‌ வாய்ந்த பணியாளராக இருப்பதால்‌ அந்த ஸ்தாபனத்தின்‌ முக்கிய மேனேஜர்‌ அவருக்கு ஒரு பென்ஷனுடன்‌ ஓய்வு கொடுக்கத்‌ தீர்மானித்தார்‌.

எவ்வளவு பென்ஷன்‌ கொடுப்பது என்ற பிரச்சினை இத்தகைய தீர்மானத்திலிருந்து வந்தது. அவர்‌ மாதம்‌ ரூ.150 பெற்று வந்தார்‌. பென்ஷன்‌ தொகையான ரூ.75 வீட்டுச்‌ செலவுகளைப்‌ பராமரிக்கப்‌ போதுமானவை அன்று. எனவே அவர்களெல்லாம்‌ இவ்விஷயத்தில்‌ கவலையுள்ளவர்களாக இருந்தனர்‌. முடிவான ஏற்பாட்டுக்குப்‌ பதினைந்து தினங்கட்கு முன்பாக பாபா, திருமதி டெண்டுல்கரின்‌ கனவில்‌ தோன்றி, “பென்ஷன்‌ நூறு ரூபாயாக அளிக்கப்பட வேண்டும்‌ என நான்‌ விரும்புகிறேன்‌. இது உனக்கு திருப்திதானே?” என்று கேட்டார்‌. “பாபா இம்மாதிரி ஏன்‌ என்னைக்‌ கேட்கவேண்டும்‌? நாங்கள்‌ உங்களையே முழுவதும்‌ நம்புகிறோம்‌” என்று திருமதி டெண்டுல்கர்‌ பதிலளித்தார்‌. பாபா ரூ.100 என்று கூறியபோதும்‌, ரூ.10 இன்னும்‌ அதிகமாகவே கொடுக்கப்பட்டது. இது ஒரு விசேஷ நியதியாக, தமது பக்தர்களுக்கு அத்தகைய அற்புதமான அன்பையும்‌, பாதுகாப்பையும்‌ பாபா நிச்சயமாகவே காண்பிக்கிறார்‌ என்பதை உணர்த்துகிறது.

கேப்டன்‌ ஹாடே

பிகானீரில்‌ தங்கியிருந்த கேப்டன்‌ ஹாடே என்பவர்‌ பாபாவின்‌ மிகப்பெரும்‌ பக்தர்‌. ஒருமுறை அவரது கனவில்‌ பாபா தோன்றி “என்னை மறந்துவிட்டாயா?”” என்று கேட்டார்‌. ஹாடே உடனே பாபாவின்‌ பாதங்களைப்‌ பிடித்துக்கொண்டு, “தனது தாயைக்‌ குழந்தை மறந்துவிட்டால்‌ அது எங்ஙனம்‌ காப்பாற்றப்படும்‌”? என்றார்‌.

பின்னர்‌ ஹாடே தோட்டத்துக்குச்‌ சென்று அவரைக்காய்‌ பறித்து ஒரு விருந்துக்கும்‌, தக்ஷிணைக்கும்‌ ஏற்பாடு செய்துவிட்டு, இவைகளை எல்லாம்‌ பாபாவுக்குச்‌ சமர்ப்பிக்க இருந்தபோது விழித்துக்கொண்டார்‌. சிலநாட்களுக்குப்பின்‌ அவர்‌ குவாலியர்‌ வந்தவுடன்‌ ஒரு நண்பருக்கு ரூ.12ஐ மணியார்டர்‌ மூலம்‌ அனுப்பி ரூ.2ஐ ஷிதா (மளிகை) பொருட்களுக்கும்‌, காய்கறிகளுக்கும்‌ ரூ.10ஐ பாபாவுக்குத்‌ தகஷிணையாக அளிக்கும்‌ குறிப்பையும்‌ அனுப்பியிருந்தார்‌. அந்த நண்பர்‌ ஷீர்டிக்குச்‌ சென்று குறிப்பிடப்பட்ட சாமான்களையெல்லாம்‌ வாங்கினார்‌. ஆனால்‌ காய்கறிகள்‌ கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில்‌ தலையில்‌ சுமந்துகொண்டு ஒரு கூடைக்காரி வீதியில்‌ எதிர்ப்பட்டாள்‌. வியப்பிற்கேற்ப அந்தக்‌ கூடையில்‌ வேண்டிய அவரைக்காய்‌ கிடைத்தது. அது வாங்கப்பட்டு மற்றெல்லாப்‌ பொருட்களுடன்‌ சேர்த்து கேப்டன்‌ ஹாடேயின்‌ சார்பில்‌ பாபாவுக்குச்‌ சமர்ப்பிக்கப்பட்டன.

நிமோண்கர்‌ அடுத்த நாள்‌ நைவேத்யம்‌ (சோறும்‌, காய்கறியும்‌) தயார்‌ செய்து பாபாவுக்கு, கேப்டன்‌ ஹாடேயின்‌ சார்பில்‌ சமர்ப்பித்தார்‌. சாப்பிடும்போது அவரைக்காயையே பாபா முதலில்‌ எடுத்துச்‌ சாப்பிட்டதையும்‌, சாதம்‌ முதலியவற்றைத்‌ தொடாதது கண்டும்‌ அனைவரும்‌ அதிசயப்பட்டனர்‌. இதைத்‌ தன்‌ நண்பன்‌ மூலமாகக்‌ கேட்டறிந்த ஹாடேயின்‌ மகிழ்ச்சி கரைகாணாது போயிற்று.

புனிதமாக்கப்பட்ட நாணயம்‌

பாபாவின்‌ ஸ்பரிசத்தால்‌ புனிதமாக்கப்பட்ட நாணயம்‌ ஒன்று தன்‌ வீட்டில்‌ இருக்கவேண்டுமென பிறிதொரு சமயத்தில்‌ கேப்டன்‌ ஹாடே விரும்பினார்‌. ஷீர்டிக்குப்‌ போய்க்கொண்டிருந்த நண்பர்‌ ஒருவரைச்‌ சந்தித்தார்‌. அவரிடம்‌ தமது நாணயத்தை அனுப்பினார்‌. அந்த நண்பர்‌ ஷீர்டிக்குச்‌ சென்று நமஸ்கரித்தபின்‌ முதலில்‌ தமது ரூபாயை தக்ஷிணையாக அவர்‌ பாபாவுக்கு அளித்தார்‌. அதை அவர்‌ வாங்கி சட்டைப்பையில்‌ போட்டுக்கொண்டார்‌. பின்‌ நண்பர்‌ ஹாடேயின்‌ நாணயத்தைக்‌ கொடுத்தார்‌. அதை பாபா கையில்‌ வாங்கி உற்றுப்பார்த்துவிட்டு, தமது வலதுகை கட்டைவிரலால்‌ சுண்டிவிட்டு பிடித்து விளையாடினார்‌.

பின்‌ அந்த நண்பரிடம்‌ அவர்‌ “உதிப்‌ பிரசாதத்துடன்‌ இதை அதன்‌ உரிமையாளரிடம்‌ திரும்பக்கொடு. அவரிடமிருந்து எனக்கு எதுவும்‌ வேண்டியதில்லை என்று கூறு. அமைதியுடனும்‌ திருப்தியுடனும்‌ அவரை வாழச்சொல்‌” என்று கூறினார்‌. அந்த நண்பர்‌ குவாலியருக்குத்‌ திரும்பி புனிதமாக்கப்பட்ட நாணயத்தை ஹாடேயிடம்‌ திரும்ப அளித்து, ஷீர்டியில்‌ நிகழ்ந்த எல்லாவற்றையும்‌ அவருக்குக்‌ கூறினார்‌. இம்முறை ஹாடே மிகவும்‌ மகிழ்ந்து, பாபா எப்போதும்‌ தாம்‌ விரும்பிய மாதிரியான நல்ல எண்ணங்களை ஊக்குவிக்கிறார்‌ என்று உணர்ந்தார்‌. பாபாவும்‌ அதையே முறையாக நிறைவேற்றினார்‌.

வாமன்‌ நார்வேகர்‌

இப்போது வாசகர்கள்‌ மற்றொரு கதையைக்‌ கேளுங்கள்‌. வாமன்‌ நார்வேகர்‌ என்றழைக்கப்படும்‌ மனிதர்‌ ஒருவர்‌ பாபாவை மிகவும்‌ நேசித்தார்‌. அவர்‌ ஒருமுறை ஒரு நாணயம்‌ கொண்டுவந்தார்‌. அதன்‌ ஒரு பக்கத்தில்‌ ராமர்‌ சீதா லக்ஷ்மணர்‌ ஆகியவர்களின்‌ உருவங்களும்‌ மற்றொரு பக்கத்தில்‌ கூப்பிய கரங்களுடன்‌ ஆஞ்சனேயர்‌ உருவமும்‌ பொறிக்கப்பட்டிருந்தது. அதை பாபா தமது ஸ்பரிசத்தால்‌ புனிதப்படுத்தி உதியுடன்‌ திருப்பி அளிக்கவேண்டுமென்ற எண்ணத்தில்‌ பாபாவுக்கு அதை அவர்‌ அளித்தார்‌. ஆனால்‌ பாபா உடனே அதை தம்‌ பாக்கெட்டிற்குள்‌ போட்டுக்கொண்டுவிட்டார்‌. வாமன்ராவின்‌ எண்ணத்தை ஷாமா பின்னர்‌ பாபாவுக்கு தெரிவித்து அதைத்‌ திருப்பியளிக்க வேண்டினார்‌.

பாபா பின்னர்‌ வாமன்ராவின்‌ முன்னிலையில்‌ இவ்வாறு பேசினார்‌. “அது ஏன்‌ அவருக்குத்‌ திருப்பியளிக்கப்படவேண்டும்‌. அதை நாமேதான்‌ வைத்துக்கொள்ள வேண்டும்‌. அதற்காக ரூ.25 கொடுத்தாரானால்‌ அது திருப்பியளிக்கப்படும்‌”. வாமன்ராவ்‌ ரூ.25 சேகரித்து அவற்றைப்‌ பாபாவின்‌ முன்னிலையில்‌ வைத்தார்‌. பின்னர்‌ பாபா, “அந்த நாணயத்தின்‌ மதிப்பு 25 ரூபாயைவிட மிகமிக அதிகமாகும்‌. ஷாமா இந்த ரூபாயை எடுத்து நமது ஸ்டோரில்‌ வைத்துக்கொள்‌. நாணயத்தை உனது பூஜையறையில்‌ வைத்து வழிபடு” என்றார்‌.

பாபா இம்மாதிரியான செயலை ஏன்‌ பின்பற்றினார்‌ என்பதைக்‌ கேட்க ஒருவருக்கும்‌ தைரியமில்லை. ஒவ்வொருவருக்கும்‌ எது மிகச்சிறந்தது, மிகப்‌ பொருத்தமானது என்பதை பாபா மட்டுமே அறிவார்‌.

ஸ்ரீ சாயியைப்‌ பணிக

அனைவர்க்கும்‌ சாந்தி நிலவட்டும்‌