Ads

அத்தியாயம் - 13 - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்



அத்தியாயம் - 13

மேலும்‌ பல சாயி லீலைகள்‌ - வியாதிகள்‌ குணமாக்கப்படுதல்‌ (1) பீமாஜி பாடீல்‌, (2) பாலா ஷிம்பி, (3) பாபு சாஹேப்‌ பூட்டி, (4) ஆலந்தி ஸ்வாமி, (5) காகா மஹாஜனி, (6) ஹர்தாவைச்‌ சேர்ந்த தத்தோபந்த்‌.

மாயையின்‌ அளவறியா சக்தி

பாபாவின்‌ மொழிகள்‌ எப்போதும்‌ சுருக்கமானவை, மிருதுவானவை, ஆழமானவை, பொருள்‌ செறிந்தவை, திறமையானவை, நன்றாக சமநிலைப்படுத்தப்பட்டவை. அவர்‌ எப்போதும்‌ திருப்தியடைந்தவராய்‌ இருந்தார்‌. எதற்கும்‌ கவலைப்படவில்லை. அவர்‌ சொன்னார்‌, “நான்‌ ஒரு பக்கிரியானபோதும்‌ எனக்கு வீடோ, மனைவியோ இல்லாதிருப்பினும்‌ எல்லாக்‌ கவலைகளையும்‌ விட்டொழித்து நான்‌ ஒரே இடத்தில்‌ வசித்தாலும்‌ தடுக்கமுடியாத மாயை என்னை அடிக்கடி தூரத்துகிறாள்‌. என்னை மறந்தாலும்‌, அவளை மறக்கமுடியவில்லை. அவள்‌ என்னை எப்போதும்‌ சூழ்ந்துகொள்கிறாள்‌. பரமாத்மா ஸ்ரீ ஹரியினுடைய இந்த மாயை (தோற்ற சக்தி) பிரம்மா, மற்றவர்களையும்‌ துரத்துகிறது. பின்‌ என்னைப்போன்ற ஏழைப்‌ பக்கிரியைப்‌ பற்றிப்‌ பேச என்ன இருக்கிறது? பரமாத்மாவிடம்‌ சரண்‌ புகுவோர்‌ அவரது அருளால்‌, அவளது யந்தங்களினின்றும்‌ விடுவிக்கப்படுவர்‌.”

மாயையின்‌ சக்தியைப்‌ பற்றி இம்மொழிகளால்‌ பாபா பேசினார்‌. கிருஷ்ண பரமாத்மா ஞானிகள்‌ தமது உயிருள்ள ரூபங்கள்‌ என்று பாகவதத்தில்‌ உத்தவருக்கு உபதேசித்திருக்கிறார்‌. பாபா தமது அடியவர்களின்‌ நலனுக்காக யாது கூறியிருக்கிறார்‌ என்பதைக்‌ கவனியுங்கள்‌: “யார்‌ அதிர்ஷ்டசாலியோ எவருடைய பாவங்கள்‌ ஒழிந்தனவோ அவர்கள்‌ எனது வழிபாட்டை எய்துகிறார்கள்‌. சாயி சாயி' என்று ஏப்போதும்‌ கூறிக்கொண்டிருப்பீர்களானால்‌ நான்‌ உங்களை ஏழ்கடலுக்கு அப்பால்‌ எடுத்துச்‌ செல்வேன்‌. இம்‌மொழிகளை நம்புங்கள்‌. நீங்கள்‌ நிச்சயம்‌ நன்மையயைவீர்கள்‌. வழிபாட்டின்‌ கூறுகள்‌ எட்டோ, பதினாறோ எனக்குத்‌ தேவையில்லை. எங்கு முழுமையான பக்தி இருக்கிறதோ அங்கு நான்‌ அமர்கிறேன்”. தம்மைத்தாமே முழுவதுமாக சரணடைவோர்களின்‌ தோழரான சாயி, அவர்களின்‌ நன்மைக்காக என்ன செய்தார்‌ என்பதைத்‌ தற்போது படியுங்கள்‌.

பீமாஜி பால்‌

புனே ஜில்லா, ஜுன்னர்‌ தாலுக்கா நாராயண்காவனைச்‌ சேர்ந்த பீமாஜி பாடீல்‌ என்பவர்‌ பல வியாதிகளாலும்‌, நெடுநாள்‌ நெஞ்சு வலியாலும்‌ துன்பப்பட்டார்‌. முடிவில்‌ அது க்ஷயரோகமாக மாறியது. அவர்‌ எல்லாவித சிகிச்சைகளையும்‌ முயன்று ஒரு பிரயோஜனமுமில்லை. எல்லா நம்பிக்கையையும்‌ இழந்து, முடிவாகக்‌ கடவுளை நோக்கி அவர்‌ வேண்டிக்கொண்டார்‌. ஓ! நாராயண மூர்த்தியே, இப்போது என்னைக்‌ குணப்படுத்தும்‌”. சூழ்நிலைகள்‌ எல்லாம்‌ நன்றாய்‌ இருக்கையில்‌ நாம்‌ கடவுளை நினைப்பதில்லை. கேடும்‌, துரதிர்ஷ்டமும்‌ நம்மைத்‌ தாக்கும்போது நாம்‌ அவரை நினைக்கிறோம்‌. எனவே பீமாஜி இப்போது கடவுளை நோக்கித்‌ திரும்பினார்‌. இவ்விஷயத்தில்‌ பாபாவின்‌ பெரும்‌ அடியவரான நானா சாஹேப்‌ சாந்தோர்கரை கலந்தாலோசிக்க அவருக்குத்‌ தோன்றியது. தனது துன்பமனைத்தையும்‌ கூறி அவருக்கு ஒரு கடிதம்‌ எழுதி அவருடைய கருத்தைத்‌ தெரிவிக்கக்‌ கேட்டிருந்தார்‌.

நானா தமது பதிலில்‌ ஒரேஒரு வழிதான்‌ இருக்கிறது, அதாவது பாபாவின்‌ பாதங்களினின்று உதவி பெறுவதேயாகும்‌ என்று கூறினார்‌. ஷீர்டிக்கு அவர்‌ அழைத்துவரப்பட்டு பாபாவின்‌ முன்னர்‌ அமர்த்தப்பட்டார்‌. நானா சாஹேபும்‌, ஷாமாவும்‌ (மாதவ்ராவ்‌ தேஷ்பாண்டே) அங்கு இருந்தனர்‌. முன்னைய தீய கர்மங்களாலேயே இவ்வியாதி என்று பாபா சுட்டிக்‌ காண்பித்து முதலில்‌ இதில்‌ தலையிடத்‌ தீர்மானம்‌ இல்லாதவராய்‌ இருந்தார்‌. நோயாளியோ தாம்‌ அனாதரவானவர்‌ என்றும்‌, அவரையே சரணாகதி அடைந்திருப்பதாகவும்‌, அவர்தாம்‌ கடைசி கதியென்றும்‌, கருணை காட்டும்படியும்‌ கூறி அலறத்‌ தொடங்கினார்‌. அப்போது பாபாவின்‌ உள்ளம்‌ உருகியது. அவர்‌ கூறியதாவது, “பொறு, உன்னுடைய கவலைகளைத்‌ தூர எறி, உன்னுடைய துன்பங்கள்‌ ஒரு முடிவுக்கு வந்துவிட்டன. ஒருவன்‌ எவ்வளவுதான்‌ நசுக்கப்பட்டு வேதனைப்பட்டவனாக இருப்பினும்‌, இம்மசூதியில்‌ கால்‌ வைத்தவுடனே அவன்‌ மகிழ்ச்சியின்‌ பாதையில்‌ செல்கிறான்‌. இங்கே உள்ள பக்கிரி மிகவும்‌ அன்பானவர்‌. அவர்‌ இவ்வியாதியைக்‌ குணப்படுத்துவார்‌. எல்லோரையும்‌ அன்புடனும்‌, ஆசையுடனும்‌ பாதூகாப்பார்‌”. ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை நோயாளி ரத்தவாந்தி எடுத்துக்கொண்டிருந்தார்‌. ஆனால்‌ பாபாவின்‌ சந்நிதானத்தில்‌ எவ்வித வாந்தியும்‌ இல்லை. நம்பிக்கையும்‌, கருணையும்‌ கொண்டமொழிகளை பாபா உதிர்த்த அத்தருணத்திலிருந்தே வியாதி குணமடையும்‌ நிலைக்குத்‌ திரும்பியது. அசெளகர்யமும்‌, சுகாதாரக்‌ குறைவும்‌ உள்ள பீம்பாயின்‌ வீட்டில்‌ தங்கும்படி பாபாவால்‌ கேட்கப்பட்டார்‌. ஆனால்‌ பாபாவின்‌ உத்தரவுக்குக்‌ கீழ்ப்படிய வேண்டும்‌. அவர்‌ அங்கு தங்கியிருக்கையில்‌ பாபா அவரை இரண்டு கனவுகள்‌ மூலம்‌ குணப்படுத்தினார்‌.

முதல்‌ கனவில்‌ தன்னை ஒரு பையனாகவும்‌, மராட்டிச்‌ செய்யுள்‌ ஒப்பிக்காததற்காக உபாத்தியாயரின்‌ கடுமையான பிரம்படியை வாங்கிக்‌ கஷ்டப்படுவதைப்‌ போன்றும்‌ கண்டார்‌. இரண்டாவது கனவில்‌ ஒரு கல்லை யாரோ ஒருவர்‌ தனது நெஞ்சின்மீது மேலும்‌ கீழும்‌ உருட்டிக்‌ கடுமையான வலியையும்‌, வேதனையையும் உண்டாக்குவதாகவும்‌ கண்டார்‌. கனவில்‌ அவர்பட்ட இக்கஷ்டத்துடன்‌ அவரின்‌ சிகிச்சை முடிவடைந்து அவர்‌ வீடு திரும்பினார்‌. பின்னர்‌ அடிக்கடி ஷீர்டி வந்து பாபா தனக்குச்‌ செய்ததை நன்றியுடன்‌ நினைத்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்‌.

பாபாவும்‌ நன்றியுள்ள நினைப்பு, மாறாத நம்பிக்கை, பக்தி இவற்றைத்‌ தவிர வேறைதையும்‌ எதிர்பார்க்கவில்லை. மஹாராஷ்ட்ர மக்கள்‌ பதினைந்து தினங்களுக்கு ஒருமுறை தங்களது இல்லங்களில்‌ சத்யநாராயண பூஜையை எப்போதும்‌ செய்கிறார்கள்‌. ஆனால்‌ தனது கிராமத்திற்கு திரும்பியபோது பீமாஜி பாடீல்‌ புதிய சத்யசாயி விரத பூஜையை, சத்யநாராயண பூஜைக்கு பதிலாக தனது இல்லத்தில்‌ ஆரம்பித்தார்‌.

பாலா கண்யத்‌ விம்பி

பாபாவின்‌ மற்றொரு பக்தரான பாலா கண்பத்‌ ஷிம்பி என்பவர்‌, கொடியவிதத்தைச்‌ சேர்ந்த மலேரியாவினால்‌ மிகவும்‌ கஷ்டப்பட்டார்‌. எல்லாவித மருந்துகளையும்‌, கஷாயங்களையும்‌ உபயோகித்தார்‌, பலனேதுமில்லை. ஜுரம்‌ சிறிதளவும்‌ குறைந்தபாடில்லை. அவர்‌ ஷீர்டிக்கு ஓடி பாபாவின்‌ பாதங்களில்‌ வீழ்ந்தார்‌. பாபா அவருக்கு இவ்விஷயத்தில்‌ ஒரு நூதனமான செயல்முறையை அனுசரிக்கச்‌ செய்தார்‌. கொஞ்சம்‌ சாதத்தைத்‌ தயிருடன்‌ கலந்து, லக்ஷ்மி கோவிலுக்கு முன்னால்‌ உள்ள கருப்பு நாய்க்குக்‌ கொடுக்கும்படி கூறினார்‌. பாலாவுக்கு இதை எங்ஙனம்‌ நிறைவேற்றுவதென்று புதிராக இருந்தது. ஆனால்‌ அவர்‌ வீட்டிற்குப்‌ போனவுடனே தயிரையும்‌, சாதத்தையும்‌ கண்டார்‌. அவை இரண்டையும்‌ கலந்து அக்கலவையை லக்ஷ்மி கோவிலுக்கு அருகில்‌ கொணர்ந்தார்‌. அப்போது ஒரு கருப்பு நாய்‌ வாலையாட்டிக்கொண்டு நிற்பதைக்‌ கண்டார்‌. நாயின்‌ முன்னர்‌ தயிருடன்‌ கலந்த சாதத்தை வைத்தார்‌. நாயும்‌ அதை உண்டது. ஆச்சர்யமாகவே, பாலா கண்பத்‌ ஷிம்பி மலேரியாவிலிருந்து விடுபட்டார்‌. 

பாயு சாஹேப்‌ டூட்டி

ஸ்ரீமான்‌ பூட்டி, ஒருமுறை வாந்தியெடுத்தல்‌, வயிற்றுப்‌ போக்கு முதலியவற்றால்‌ அவதியுற்றார்‌. அவருடைய அலமாரி மருந்து, மாத்திரைகளால்‌ நிறைந்து இருந்தது. ஆயினும்‌ அவற்றால்‌ ஒரு பயனும்‌ இல்லை. வாந்தியெடுத்து வயிற்றுப்போக்கு ஆனதன்‌ காரணமாக பாபு சாஹேப்‌ மிகவும்‌ தளர்ச்சி அடைந்தார்‌. எனவே பாபாவின்‌ தரிசனத்திற்காக மசூதிக்குச்‌ செல்லக்கூட அவரால்‌ இயலவில்லை. பாபா அப்போது அவரைக்‌ கூப்பிட்டனுப்பி, அவரைத்‌ தம்முன்‌ உட்காரச்‌ செய்து, “இப்போது கவனி, இனிமேல்‌ நீ வெளியேறக்கூடாது” என்று கூறி, தமது ஆட்காட்டி விரலை ஆட்டி, மேலும்‌ “வாந்தியெடுத்தலும்‌ நிற்கவேண்டும்‌” எனக்கூறினார்‌. இப்போது பாபாவின்‌ சொற்களில்‌ உள்ள சக்தியைக்‌ கவனியுங்கள்‌. இரண்டு வியாதிகளும்‌ ஓடிவிட்டன. பூட்டியும்‌ குணமானார்‌.

மற்றோர்முறை காலராவால்‌ அவர்‌ தாக்கப்பட்டு கடினமான தாகத்தால்‌ அல்லலுற்றார்‌. டாக்டர்‌ பிள்ளை எல்லாவித சிகிச்சைமுறைகளை கையாண்டும்‌ குணமளிக்க முடியவில்லை. பின்னர்‌ அவர்‌ பாபாவிடம்‌ சென்று தனது தாகத்தைத்‌ தணித்துத்‌ தன்னை குணமாக்கும்‌ ஒரு பானத்தைப்‌ பற்றிக்‌ கலந்து ஆலோசித்தார்‌. பாபா அவருக்கு, சர்க்கரை கலந்த பாலில்‌ வேகவைக்கப்பட்ட கலவைக்கூழாகிய பாதாம்‌ பருப்பு, வால்நட்‌ பருப்பு, பிஸ்தா பருப்பு இவற்றைச்‌ சாப்பிடுவதைத்‌ தேர்ந்து அருளினார்‌. எந்த வைத்தியராலும்‌ இது நிலைமையை மோசப்படுத்தி முடிவுக்குக்‌ கொண்டுவந்துவிடும்‌ என்று கருதப்படும்‌. ஆனால்‌ பாபாவின்‌ கட்டளையை அறவே கீழ்ப்படியும்‌ குணத்தால்‌ இவை உட்கொள்ளப்பட்டு அதிசயப்படும்‌ வகையில்‌ குணமாக்கவும்பட்டது.

ஆலந்தி ஸ்வாமி

பாபாவின்‌ தரிசனத்தைப்பெற விரும்பிய ஒரு சாமியார்‌ ஆலந்தியிலிருந்து ஷீர்டிக்கு வந்தார்‌. தன்‌ காதிலுள்ள கடுமையான வலியால்‌ அவர்‌ அல்லலுற்றார்‌. அது அவரைத்‌ தூங்கவிடாமல்‌ தடை செய்தது. இதற்காக அவர்‌ ரணசிகிச்சை செய்யப்பட்டார்‌. ஆனால்‌ அது அவருக்கு எவ்விதப்‌ பலனையும்‌ அளிக்கவில்லை. இவ்வலி மிகவும்‌ கடினமானதாய்‌ இருந்தது. அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்‌ திரும்பிச்‌ செல்லும்போது பாபாவின்‌ அனுமதியைப்‌ பெற வந்தார்‌. அப்போது ஷாமா, ஸ்வாமிகளின்‌ காது வலிக்கு ஏதாவது செய்யுமாறு பாபாவை வேண்டினார்‌. “அல்லா அச்சா கரேகா!” என்றுகூறித்‌ தேற்றினார்‌. பிறகு ஸ்வாமிகள்‌ புனேவுக்குத்‌ திரும்பினார்‌. ஒரு வாரம்‌ கழித்து ஷீர்டிக்குக்‌ கடிதம்‌ ஒன்று அனுப்பியிருந்தார்‌. அதில்‌ தனது காதுவலி மறைந்துவிட்டது என்றும்‌, வீக்கம்‌ இருந்தது என்றும்‌, அவ்வீக்கத்தைப்‌ போக்குவதற்காக பம்பாய்க்கு, ரணசிகிச்சை செய்துகொள்ளச்‌ சென்று இருந்ததாகவும்‌, ஆனால்‌ டாக்டர்‌ காதைச்‌ சோதித்துவிட்டு ரணசிகிச்சை தேவையில்லை எனக்கூறியதாகவும்‌ குறிப்பிட்டிருந்தார்‌. பாபாவின்‌ மொழிகளுக்கு அத்தகைய ஆற்றல்‌ இருக்கிறது.

காகா மஹாஜனி

பாபாவின்‌ மற்றொரு அடியவரான காகா மஹாஜனி என்பவர்‌ ஒருமுறை வயிற்றுப்போக்கால்‌ அவதியுற்றார்‌. பாபாவுக்குத்‌ தனது சேவை தடைப்படாமல்‌ இருக்க, ஒரு மூலையில்‌ பானையில்‌ தண்ணீரை வைத்துவிட்டு பாபா கூப்பிடும்போதெல்லாம்‌ செல்வார்‌. சாயிபாபா அனைத்தையும்‌ அறிந்தவராயிருப்பதால்‌ தனது வியாதியையும்‌ அவர்‌ சீக்கிரம்‌ குணப்படுத்துவார்‌ என்று எண்ணிய காகா அதைப்பற்றி எதையுமே பாபாவிடம்‌ தெரிவிக்கவில்லை. மசூதிக்கு முன்னால்‌ கட்டப்பட்டிருக்கும்‌ தாழ்வாரத்தின்‌ வேலை, பாபாவால்‌ அனுமதியளிக்கப்பட்டுவிட்டது. ஆனால்‌ உண்மையில்‌ வேலை தொடங்கியவுடன்‌ பாபா கொந்தளிப்புற்று பலமாகக்‌ கூச்சலிடத்‌ தொடங்கினார்‌. எல்லோரும்‌ ஓடினார்கள்‌. காகாவும்‌ ஓடினார்‌. பாபா அவரைப்‌ பிடித்து அங்கேயே உட்கார வைத்தார்‌.

பின்னர்‌ நேரிட்ட குழப்பத்தில்‌ யாரோ ஒருவர்‌ ஒரு சிறிய நிலக்கடலைப்‌ பையை விட்டு ஓடியிருந்தார்‌. பாபா கைநிறைய கடலைப்‌ பருப்புகளை எடுத்து தமது கைகளால்‌அவற்றைத்‌ தேய்த்து, தோலை ஊதி சுத்தமான கடலைப்‌ பருப்புகளை காகாவிடம்‌ கொடுத்துச்‌ சாப்பிடச்‌ சொன்னார்‌. திட்டுவது, கடலையைச்‌ சுத்தம்‌ செய்வது, காகாவை அவற்றைச்‌ சாப்பிடச்செய்வது என்பன சமகாலத்தில்‌ நடைபெற்றன. பாபா தாமே சிலவற்றைச்‌ சாப்பிட்டார்‌. பையில்‌ உள்ளவை தீர்ந்ததும்‌ பாபா அவரைத்‌ தாம்‌ தாகமாய்‌ இருப்பதால்‌ தண்ணீர்‌ கொணரச்‌ சொன்னார்‌. கூஜா நிறைய காகா தண்ணீர்‌ கொணர்ந்தார்‌. பின்னர்‌ பாபா சிறிது தண்ணீர்‌ அருந்திவிட்டு, காகாவையும்‌ தண்ணீர்‌ குடிக்கும்படிக்‌ கூறினார்‌. பாபா அப்போது “உனது வயிற்றுப்போக்கு நின்று விட்டது. நீ இனிமேல்‌ தாழ்வாரத்தின்‌ வேலையைக்‌ கவனிக்கலாம்‌” என்று கூறினார்‌.

இதற்கு இடையில்‌ ஓடிப்போனவர்கள்‌ எல்லாம்‌ திரும்பிவந்தனர்‌. தனது வயிற்றுப்போக்கு நின்றுபோன காகாவும்‌ திரும்பி வந்து வேலையில்‌ கலந்துகொண்டார்‌. நிலக்கடலையா வயிற்றுப்போக்குக்கு மருந்து? நிகழ்கால மருத்துவப்படி நிலக்கடலை வயிற்றுப்போக்கை மிகவும்‌ அதிகரிக்கும்‌. அதைக்‌ குணப்படுத்தாது. பாபாவின்‌ மொழிகளே இவ்விஷயத்திலும்‌, மற்ற விஷயங்களிலும்‌ உள்ள உண்மையான சிகிச்சையாகும்‌.

ஹர்தாவைச்‌ சேர்ந்த தத்தோயந்த்‌

ஹர்தாவிலிருந்து வந்த தத்தோபந்த்‌ என்னும்‌ பெருந்தகை பதினான்கு ஆண்டுகளாக வயிற்றுவலியால்‌ அல்லலுற்றார்‌. எவ்வித சிகிச்சையும்‌ அவருக்கு எந்தப்‌ பலனையும்‌ அளிக்கவில்லை. பின்னர்‌, பாபா பார்வையாலேயே வியாதியைக்‌ குணப்படுத்துகிறார்‌ என்ற அவரின்‌ புகழைக்‌ கேள்விப்பட்டு ஷீர்டிக்கு ஓடிவந்து பாபாவின்‌ பாதங்களில்‌ வீழ்ந்தார்‌. பாபா அவரை அன்புடன்‌ நோக்கி ஆசீர்வாதங்கள்‌ அளித்தார்‌. பாபா தமது கரத்தை அவர்‌ தலையின்‌ மீது வைத்து ஆசீர்வாதத்தையும்‌, உதியையும்‌ அளித்தபின்‌ அவர்‌ குணமடைந்தார்‌. அதற்கப்பால்‌ இவ்வியாதியைப்‌ பற்றிய எவ்விதத்‌ தொந்தரவும்‌ இல்லை. இந்த அத்தியாயத்தின்‌ முடிவில்‌ மூன்று நிகழ்ச்சிகள்‌ அடிக்குறிப்பில்‌ காணப்படுகின்றன.

(1) மாதவ்ராவ்‌ தேஷ்பாண்டே மூல வியாதியால்‌ அல்லலுற்றார்‌. பாபா அவருக்கு சோனமுகியின்‌ (சூரத்தாவாரை - மிதமான பேதி மருந்து) கஷாயத்தைத்‌ தேர்ந்து கொடுத்தார்‌. இது அவரைக்‌ குணமாக்கியது. இரண்டு ஆண்டுகளுக்குப்பின்‌ இத்தொந்தரவு மீண்டும்‌ தலையெடுத்தது. மாதவ்ராவ்‌ பாபாவை கலந்தாலோசிக்காமல்‌ அதே மருந்தை உட்கொண்டார்‌. பெருமளவிற்கு இது வியாதியை அதிகப்படுத்தியது. ஆனால்‌ பின்னர்‌ அது பாபாவின்‌ அருளால்‌ குணமாக்கப்பட்டது.

(2) கங்காதர்‌ பந்த்‌ என்ற காகா மஹாஜனியின்‌ அண்ணன்‌ பல ஆண்டுகளாக வயிற்றுவலியால்‌ அவதியுற்றுக்கொண்டிருந்தார்‌. பாபாவின்‌ புகழைக்‌ கேள்விப்பட்டு ஷீர்டிக்கு வந்து தன்னைக்‌ குணமாக்கும்படி வேண்டிக்கொண்டார்‌. பாபா அவரின்‌ வயிற்றைத்‌ தொட்டு “கடவுள்‌ குணமாக்குவார்‌” என்று கூறினார்‌. அது முதற்கொண்டு அவருக்கு வயிற்றுவலி ஏதுமில்லை. அவர்‌ முழுவதுமாகக்‌ குணமாக்கப்பட்டார்‌.

(3) ஒருமுறை நானா சாஹேப்‌ சாந்தோர்கரும்‌ கடுமையான வயிற்றுவலியால்‌ அல்லலுற்றார்‌. இரவு, பகல்‌ முழுவதும்‌ அவரால்‌ இருப்புகொள்ள முடியவில்லை. டாக்டர்கள்‌ ஊசி போட்டும்‌ பலனளிக்கவில்லை. பின்னர்‌ அவர்‌ பாபாவை அணுகினார்‌. பின்னவர்‌ அவரை பர்‌ஃபி என்ற இனிப்புப்‌ பண்டத்தை நெய்யுடன்‌ உண்ணச்‌ சொன்னார்‌. இச்செயல்முறையைப்‌ பின்பற்றியதும்‌ அவர்‌ முழுக்கக்‌ குணமடைந்தார்‌.

பாபாவின்‌ சொற்களும்‌ கருணையுமே பல்வேறு வியாதிகளை நிரந்தரமாகக்‌ குணப்படுத்திய உண்மையான மருந்தாகும்‌ என்று இக்கதைகள்‌ நமக்குக்‌ காட்டுகின்றன. மருந்துகளோ மாத்திரைகளோ அல்ல.

ஸ்ரீ சாயியைப்‌ பணிக

அனைவர்க்கும்‌ சாந்தி நிலவட்டும்‌