Ads

அத்தியாயம் - 24 - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்



அத்தியாயம்‌ - 24

பாபாவின்‌ தமாஷும்‌ வேடிக்கையும்‌ - சணா லீலை (1) ஹேமத்பந்த்‌, (2) சுதாமர்‌, (3) அண்ணா சிஞ்சணீகரும்‌ மெளஷிபாயியும்‌.

முன்னுரை

சத்குருவின்‌ பாதங்களில்‌ நம்‌ அஹங்காரத்தை சமர்ப்பித்தாலன்றி நமது வேலையில்‌ வெற்றிபெறமாட்டோம்‌. அஹங்காரத்தை ஒழித்தால்‌ நமது வெற்றி உறுதியளிக்கப்படுகிறது..

சாயிபாபாவை வணங்குவதால்‌ இகபர செளமபாக்கியம்‌ இரண்டுமே கிடைக்கிறது. நம்‌ உண்மையான இயற்கையில்‌ நிலையாக்கப்பட்டு அமைதியும்‌, மகிழ்ச்சியும்‌ அடைகிறோம்‌. எனவே எவரொருவர் அவரது சுபிட்சத்தைப்பெற விரும்புகிறாரோ அவர்‌ சாயிபாபாவின்‌ லீலைகளையும்‌, கதைகளையும்‌ பக்தியுடன்‌ கேட்கவேண்டும்‌. அவைகளைத்‌ தியானம்‌ செய்ய வேண்டும்‌. இவைகளை அவர்‌ செய்வாரேயானால்‌ தமது வாழ்க்கையின்‌ லட்சியத்தைச்‌ சுலபமாக அடைந்து பேரானந்தம்‌ பெறுவார்‌.

பொதுவாக அனைவரும்‌ தமாஷையும்‌, வேடிக்கையையும்‌ விரும்புவார்கள்‌. ஆனால்‌ தங்களைப்‌ பொருளாக வைத்து தமாஷ்‌ செய்யப்படுவதை அவர்கள்‌ விரும்புவதில்லை. ஆனால்‌ பாபாவின்‌ வழியோ விசித்திரமானது. அவைகள்‌ அபிநயத்துடன்‌ சேரும்போது பொதுமக்களுக்கு மிகவும்‌ ஆர்வமூட்டுவதாகவும்‌, அறிவுரை தருவதாகவும்‌ இருக்கின்றன. எனவே கேலிக்கு அவர்கள்‌ இலக்காயினும்‌ பொருட்படுத்துவதில்லை. ஹேமத்பந்த்‌ தனது சொந்த அனுபவத்தையே கீழே குறிப்பிடுகின்றார்‌.

சணா லீலை

ஷீர்டியில்‌ ஞாயிறுதோறும்‌ சந்தை நடைபெறும்‌. அண்டையிலுள்ள கிராமங்களிலிருந்து மக்கள்‌ அங்குவந்து தெருவில்‌ பந்தல்‌ கடைகளைப்‌ போட்டு தங்களது பொருட்களையெல்லாம்‌ விற்பனை செய்வர்‌. ஒவ்வொரு மாலையும்‌ மசூதியில்‌ ஏறக்குறைய கும்பல்‌ வந்துவிடும்‌. ஆனால்‌ ஞாயிறு மாலையோ மூச்சுத்‌ திணறும்‌ அளவுக்குக்‌ கூட்டம்‌ கூடிவிடும்‌. அத்தகைய ஒரு ஞாயிற்றுக்‌ கிழமையின்போது ஹேமத்பந்த்‌ பாபாவின்‌ முன்னால்‌ அமர்ந்து பாபாவின்‌ கால்களை நீவிப்‌ பிடித்துவிட்டுக்கொண்டும்‌, கடவுள்‌ பெயரை முணுமுணுத்துக்கொண்டும்‌ இருந்தார்‌.

ஷாமா பாபாவின்‌ இடப்பக்கத்திலும்‌ வாமன்ராவ்‌ வலப்பக்கத்திலும்‌ இருந்தனர்‌. அப்போது ஷாமா சிரித்துக்கொண்டே அண்ணா சாஹேபிடம்‌, “பாரும்‌ உமது கோட்டின்‌ கை மடிப்பில்‌ தானியங்கள்‌ இருக்கின்றன” என்று கூறிக்கொண்டே அவர்‌ கோட்டு மடிப்பைத்‌ தொட்டு அங்கு தானியங்கள்‌ இருப்பதைக்‌ கண்டார்‌. ஹேமத்பந்த்‌ விஷயம்‌ என்ன என்று அறிவதற்காகத்‌ தனது இடது முழங்கையை நீட்டினார்‌. அப்போது அனைவரின்‌ ஆச்சரியத்திற்கேற்ப சில பருப்பு மணிகள்‌ கீழே உருண்டோடி சுற்றி உட்கார்ந்திருந்தவர்களால்‌ பொறுக்கியெடுக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியே தமாஷிற்கான விஷயமாக ஆனது. அங்கிருந்த அனைவரும்‌ எங்ஙனம்‌ தானியம்‌ கோட்டு மடிப்புக்குள்‌ சென்று அவ்வளவு நேரமும்‌ அங்கேயே இருந்தன என்று வியந்தனர்‌. ஹேமத்பந்த்துக்கும்‌ அவைகள்‌ எப்படி நுழைந்து அவ்வளவு நேரமும்‌ அங்கேயே இருந்தன என்று யூகிக்க இயலவில்லை. ஒருவரும்‌ இவ்விஷயத்தில்‌ திருப்தியான பதிலை அளிக்க இயலாத இவ்வினோதத்தைப்‌ பற்றி அதிசயித்துக்‌ கொண்டிருக்கையில்‌ பாபா கூறினார்‌.

“இந்த ஆளுக்கு (அண்ணா சாஹேப்‌) தனியாகத்‌ தின்னும்‌ பழக்கம்‌ இருக்கிறது. இன்றைக்குச்‌ சந்தை நாளாகையால்‌ பருப்பு மணிகளை அசைபோட்டுக்கொண்டே வந்தார்‌. அவர்‌ பழக்கம்‌ எனக்குத்‌ தெரியும்‌. அதற்கு இதுவே சாட்சி, இவ்விஷயத்தில்‌ வேறென்ன ஆச்சரியமிருக்கிறது?”

ஹேமத்பந்த்‌ : பாபா பொருட்களைத்‌ தனியாகத்‌ தின்று நானறியேன்‌. பின்னர்‌ என்‌ மீது இக்கெட்ட வழக்கத்தை ஏன்‌ சுமத்துகிறீர்கள்‌? ஷீர்டி சந்தையையே நான்‌ இன்னும்‌ பார்த்தது இல்லை. இன்றைக்கு, சந்தைக்கு நான்‌ போகவே இல்லை. பின்னர்‌ எங்ஙனம்‌ நான்‌ பருப்பு மணிகள்‌ வாங்கியிருக்க முடியும்‌? அவைகளை வாங்காதபோது எப்படி நான்‌ உண்ண முடியும்‌? எனதருகில்‌ உள்ளவர்களுக்குப்‌ பகிர்ந்து கொடுக்காமல்‌ நான்‌ ஒருபோதும்‌ எதையும்‌ சாப்பிடுவதில்லையே!

பாபா : அருகிலிருப்பவர்களுக்கு நீர்‌ கொடுப்பது உண்மைதான்‌. ஆனால்‌ ஒருவரும்‌ அருகில்‌ இல்லையென்றால்‌ நீரோ, நானோ என்ன செய்யமுடியும்‌? ஆனால்‌ நீங்கள்‌ உண்ணும்முன்‌ என்னை நினைவில்கொள்கிறீரா? எப்போதும்‌ நான்‌ உம்முடன்‌ இருக்கவில்லையா? பின்பு நீர்‌ உண்ணும்‌ முன்பாக எதையேனும்‌ எனக்கு அளிக்கிறீரா?

நீதி

இந்நிகழ்ச்சியின்‌ வாயிலாக பாபா நமக்கு என்ன போதிக்கிறார்‌ என்பதைக்‌ கவனத்துடன்‌ நினைவில்‌ வைப்போமாக! புலன்கள்‌ தரும்‌ தேவைகளை அடையும்‌ முன்னதாகவே மனமும்‌, அறிவும்‌ அவைகளின்‌ பலன்களை அனுபவித்துவிடுகின்றன என பாபா அறிவுறுத்தியுள்ளார்‌. முதலில்‌ பாபாவை நினை. அதுவே உன்‌ மனதில்‌ நிலைகொண்டுள்ள அவருக்கு நிவேதனம்‌ செய்யும்‌ முறையாகிறது. புலன்கள்‌ முதலியன தங்கள்‌ தேவைகளை அடையாமல்‌ இருக்க இயலாது. ஆனால்‌ அவைகள்‌ முதலில்‌ குருவுக்குச்‌ சமர்ப்பிக்கப்பட்டால்‌ அவைகளின்‌ மீதுள்ள பற்று இயற்கையாகவே மறைந்துவிடுகிறது. இவ்விதமாக ஆசை, கோபம்‌, வெறுப்பு முதலியவை பற்றிய நமது எல்லா எண்ணங்களும்‌ முதலில்‌ குருவிடம்‌ சமர்ப்பிக்கப்பட்டு அவரை நோக்கிச்‌ செலுத்தும்‌ பயிற்சியானது அளிக்கப்பட்டால்‌ எல்லாவித எண்ணங்களையும்‌ களைவதற்கு கடவுள்‌ உதவிசெய்வார்‌.

பொருட்களை அனுபவிக்கும்முன்‌ பாபா அருகிலோ, அல்லது அங்கிருப்பதாகவோ, நினைத்துக்கொண்டால்‌ அப்பொருள்‌ அவர்‌ அனுபவிக்கத்தக்கதா அல்லவா என்ற கேள்வி உடனே எழும்‌. பின்‌ அனுபவிக்கத்‌ தகாதவை எல்லாம்‌ நம்மால்‌ ஒதுக்கப்பட்டு, நமது தீய பண்புகள்‌ அல்லது செயல்கள்‌ நம்மைவிட்டு மறைகின்றன. நமது பண்பும்‌ வளர்கிறது. பின்னர்‌ குருவிடம்‌ உள்ள அன்பு வளர்ந்து தூய ஞானம்‌ துளிர்க்கிறது.

இந்த ஞானம்‌ வளரும்போது ‘நான்‌’ ‘எனது’ என்ற எண்ணம்‌ அழிந்து நமது அறிவு ஆன்ம உணர்வுடன்‌ கலக்கிறது. பின்னர்‌ நாம்‌ பேரின்பத்தையும்‌, திருப்தியையும்‌ பெறுகிறோம்‌. குருவுக்கும்‌, கடவுளுக்கும்‌ பேதமில்லை. அவர்களுள்‌ பேதம்‌ காண்பவன்‌ கடவுளை எவ்விடத்தும்‌ காண்பதில்லை. எனவே பேத மனப்பான்மையை ஒழித்துக்‌ குருவையும்‌, கடவுளையும்‌ ஒன்றாகக்‌ கருதவேண்டும்‌. எனவே எண்ண மாறுபாடுகளை நீக்கி குருவைக்‌ கடவுளாக வழிபடவேண்டும்‌. இவ்வாறு நமது குருவுக்குப்‌ பணிவிடை செய்தோமானால்‌ கடவுள்‌ நிச்சயம்‌ மகிழ்வடைந்து நமது மனத்தைத்‌ தூய்மைப்படுத்தி நம்மை நாமே அறியும்‌ உணர்வையளிக்கிறார்‌. ரத்தினச்‌ சுருக்கமாக, முதலில்‌ குருவை நினைக்காமல்‌ நாம்‌ எப்பொருட்களையும்‌ புலன்கள்‌ வழி அனுபவிக்கக்கூடாது.

இவ்விதமாகப்‌ பயிற்சியளிக்கப்பட்டால்‌, நம்‌ மனம்‌ பாபாவால்‌ நிறைந்து, பாபாவின்‌ தியானம்‌ விரைவில்‌ வளரும்‌. பாபாவின்‌ சகுணரூபம்‌ எப்போதும்‌ நம்‌ கண்முன்‌ இருக்கும்‌. பிறகு பக்தி, பற்றின்மை, முக்தி யாவும்‌ நம்முடையதேயாம்‌. இங்ஙனமாக நமது மனக்கண்ணில்‌ பாபாவின்‌ ரூபம்‌ நிலைப்படுத்தப்பட்டால்‌ நாம்‌ பசி - தாகத்தையும்‌, இச்சம்சார வாழ்க்கையையும்‌ மறந்துவிடுகிறோம்‌. உலக போகங்களில்‌ நமக்கிருக்கும்‌ ஞாபகம்‌ மறைந்துவிடும்‌. நமது மனம்‌ அமைதியையும்‌, மகிழ்ச்சியையும்‌ அடையும்‌.

சுதாமரின்‌ கதை

மேற்கூறிய கதை சொல்லப்படும்போது ஹேமத்பந்த்‌ அதே மாதிரியான சுதாமரின்‌ கதையை நினைவுகூர்கிறார்‌. அதே தத்துவத்தை இக்கதையும்‌ விளக்குவதால்‌ இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.

கிருஷ்ணரும்‌, அவரது அண்ணனான பலராமரும்‌ சுதாமர்‌ என்ற தோழருடன்‌ அவர்களது குரு சாந்தீபனி முனிவரின்‌ ஆசிரமத்தில்‌ வசித்து வந்தனர்‌. ஒருமுறை கிருஷ்ணரும்‌, பலராமரும்‌ காட்டிற்கு விறகு கொண்டுவருவதற்காக அனுப்பப்பட்டனர்‌. பின்னர்‌ சாந்தீபனியின்‌ மனைவி அதேபோல்‌ சுதாமரையும்‌ மூவருக்குமான கடலைப்‌ பருப்புக்களுடன்‌ காட்டுக்கு அனுப்பினாள்‌.

கிருஷ்ணர்‌, சுதாமரைக்‌ காட்டிடையே கண்டபோது அவரிடம்‌, “தாதா, நான்‌ தாகமாயிருப்பதால்‌ எனக்கு தண்ணீர்‌ வேண்டும்‌” என்றார்‌, அதற்கு சுதாமர்‌ “வெறும்‌ வயிற்றுடன்‌ தண்ணீர்‌ குடிக்கக்கூடாது. சிறிது நேரம்‌ இளைப்பாறுவது நல்லது‌” என்றார்‌. அவர்‌ தன்னிடம்‌ கடலை இருப்பதாகவோ, அதைச்‌ சிறிது அவர்‌ எடுத்துக்கொள்ளலாம்‌ என்றோ கூறவில்லை. கிருஷ்ணர்‌ களைப்பாய்‌ இருந்தமையால்‌ சுதாமரின்‌ மடியில்‌ தலைவைத்துப்‌ படுத்து குறட்டை விட்டார்‌. இதைக்‌ கண்டு சுதாமர்‌ தன்னிடமிருந்த கடலையை எடுத்து உண்ணத்‌ தொடங்கினார்‌. கிருஷ்ணர்‌ திடீரெனக்‌ கேட்டார்‌, “தாதா என்ன சாப்பிடுகிறாய்‌? சப்தம்‌ எங்கிருந்து வருகிறது?”

அதற்கு சுதாமர்‌, “சாப்பிடுவதற்கு என்ன இருக்கிறது? நான்‌ குளிரால்‌ நடுங்கிக்கொண்டு இருக்கிறேன்‌. எனது பற்கள்‌ தாளம்‌ அடித்துக்கொண்டிருக்கின்றன. விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக்‌ கூட என்னால்‌ திருத்தமாகப்‌ பாராயணம்‌ செய்யமுடியவில்லை” என்றார்‌.

இதைக்‌ கேட்ட சர்வவியாபியான‌‌ கிருஷ்ணர்‌, “மற்றவர்களது பொருட்களை உண்ணும்‌ ஒரு மனிதனைக்‌ கனவில்‌ கண்டேன்‌, அதைப்பற்றிக்‌ கேட்டபோது தின்பதற்கு ஒன்றுமில்லை என்ற பொருளில்‌, ‘என்ன? மண்ணா தின்பதற்கு உள்ளது!’ எனக்‌ கேட்டான்‌. அதற்கு மற்றொருவன்‌ ‘அது அங்ஙனமே இருக்கட்டும்‌’ என்றான்‌. தாதா இது ஒரு கனவுதான்‌. நீ எதையும்‌ எனக்கில்லாமல்‌ உண்ணமாட்டாய்‌ என்று எனக்குத்‌ தெரியும்‌. ஆயினும்‌ கனவில்‌ கண்ட ஞாபகத்தில்‌ நீ என்ன உண்கிறாய்‌ என்று நான்‌ கேட்டேன்‌?” என்றார்‌.

சர்வவியாபியான கிருஷ்ணரைப்‌ பற்றியும்‌, அவர்தம்‌ லீலையைப்‌ பற்றியும்‌, சுதாமர்‌ எள்ளளவேனும்‌ அறிந்திருப்பாராயின்‌ அவர்‌ அவ்வாறு நடந்துகொண்டிருக்கமாட்டார்‌. எனவே தன்‌ செய்கைக்காக அவர்‌ வருந்தவேண்டியதாயிற்று. அவர்‌ கிருஷ்ணரின்‌ நெருங்கிய நண்பரானபோதும்‌ தமது வாழ்க்கையை அஷ்டதரித்திரத்தில்‌ கழிக்க வேண்டியதாயிற்று.

ஆனால்‌ பின்னர்‌ அவர்‌ கிருஷ்ணருக்குத்‌ தன்‌ மனைவியின்‌ சொந்த உழைப்பால்‌ ஈட்டிய ஒரு பிடி அவலை அளித்தபோது கிருஷ்ணர்‌ மகிழ்ச்சியடைந்து அவருக்கு அனுபவிப்பதற்காக ஒரு பொன்நகரத்தை அளித்தார்‌. மற்றவர்களுடன்‌ பகிர்ந்துண்ணாது தனியாகத்‌ தின்போர்‌ இக்கதையை நினைவில்‌ வைக்கவேண்டும்‌. கடவுளுக்கு முதலில்‌ சமர்ப்பித்து அவைகள்‌ அவரால்‌ திருப்தி அடையப்பெற்ற பிறகே அவற்றை அனுபவிக்க வேண்டும்‌ என்று ஸ்ருதியும்‌ பகர்கின்றது. பாபாவும்‌ நமக்கு அதையே அவர்தம்‌ ஒப்புவமையற்ற வேடிக்கையான வழியில்‌ கற்பித்திருக்கிறார்‌.

அண்ணா சிஞ்சணீகரும்‌ மேளவியாயியும்‌

ஹேமத்பந்த்‌ இப்போது சமாதானம்‌ நிலைநாட்டுவோரின்‌ பாகத்தை பாபா ஏற்றுக்கொண்ட மற்றொரு வேடிக்கையான சம்பவத்தைக்‌ கூறுகிறார்‌. தாமோதர்‌ கனஷ்யாம்‌ பாபரே என அழைக்கப்பட்ட அண்ணா சிஞ்சணீகர்‌ என்ற அடியவர்‌ ஒருவர்‌ இருந்தார்‌. அவர்‌ எளிமையானவர்‌, முரடர்‌, நேர்மையானவர்‌ அவர்‌ எவரையும்‌ லட்சியம்‌ செய்யமாட்டார்‌. எப்போதும்‌ கரவின்றிப்‌ பேசி எல்லாவற்றையும்‌ கைமேல்‌ காசிலேயே நடத்தினார்‌. வெளிப்படையாகக்‌ கடுமையாகவும்‌, வசப்படாதவராயும்‌ இருந்தபோதும்‌ அவர்‌ நற்பண்புடையவராயும்‌, கள்ளமின்றியுமிருந்தார்‌. எனவே சாயிபாபா அவரை நேசித்தார்‌.*

ஒருநாள்‌, ஒவ்வொருவரும்‌ ஒரு வழியில்‌ சேவை செய்வதைப்போன்று, அண்ணாவும்‌ தலைகுனிந்து நின்றுகொண்டு கைப்பிடியில்‌ இருந்து இடது கைக்கு பிடித்து நீவிக்கொண்டிருந்தார்‌. அம்மா என்று பாபாவாலும்‌ மெளஷிபாயி என்று பிறராலும்‌ அழைக்கப்பட்ட கிழவிதவையான வேணுபாயி கெளஜல்கி வலது புறத்தில்‌ அவளுக்கே உரிய விதத்தில்‌ சேவை செய்தாள்‌. மெளஷிபாயி தூய உள்ளத்துடன்‌ கூடிய முதியவள்‌. அவள்‌ தன்‌ இரு கைவிரல்களையும்‌ கோர்த்துக்கொண்டு பாபாவின்‌ அடிவயிற்றைச்சுற்றி அழுத்தமாக பதித்துப்‌ பிசைந்தாள்‌.

அடிவயிறே தட்டையாகி விடும்படியான வேகத்துடன்‌ சேவை செய்துகொண்டிருந்தாள்‌. பாபா இப்படியும்‌, அப்படியும்‌ புரண்டுகொண்டிருந்தார்‌. மற்றொருபுறமிருந்த அண்ணா நிதானத்துடன்‌ இருந்தார்‌. ஆனால்‌ மெளஷிபாயின்‌ அசைவுகளுடன்‌ அவளது முகமும்‌ அசைந்தது. ஒருதரம்‌ அவளது முகம்‌ அண்ணாவின்‌ முகத்திற்கு மிக அருகில்‌ வந்துவிட்டது. வேடிக்கையான பண்புடைய அவள்‌, “ஓ! இந்த அண்ணா ஒரு கெட்டவன்‌. அவன்‌ என்னை முத்தமிட விரும்புகிறான்‌. தலைநரைக்கும்‌ வயதாகியும்‌ முத்தமிடுவதற்கு அவன்‌ வெட்கப்படவில்லை” என்றாள்‌. இச்சொற்கள்‌ அண்ணாவைக்‌ கோபாவேசமடையச்‌ செய்தன. முஷ்டியை மடக்கிவிட்டுக்கொண்டு அவர்‌ “நான்‌ ஒரு கெட்ட கிழவன்‌ என்றா கூறுகிறாய்‌ நான்‌ அவ்வளவு முட்டாளா? நீயே சண்டையை ஆரம்பித்தாய்‌ என்னுடன்‌ சண்டையிட்டுக்‌ கொண்டிருக்கிறாய்‌?!” என்றார்‌.

* இவர்‌ தனது சொத்துக்கள்‌ யாவற்றையும்‌ ஷீர்டி சாயிபாபா சமஸ்தானத்துக்கு எழுதி வைத்தார்‌. அங்கிருந்த அனைவரும்‌ அவர்களுக்கிடையே நடைபெறும்‌ விஷயங்களை ரசித்துக்‌ கொண்டிருந்தனர்‌. அவர்கள்‌ இருவரையுமே பாபா சமமாக நேசித்தார்‌. சண்டையை நிறுத்த விரும்பிய அவர்‌ இவ்விஷயத்தை மிகத்‌ திறமையுடன்‌ கையாண்டார்‌. அன்புடன்‌ அவர்‌ கூறினார்‌. “அண்ணா ஏன்‌ அனாவசியமாக இக்கூச்சலையும்‌, குழப்பத்தையும்‌ உண்டாக்குகிறாய்‌? தாய்‌ முத்தமிடப்படும்போது உள்ள நெறியின்மை அல்லது தீங்குதான்‌ என்ன என்பது எனக்கு விளங்கவில்லை?” என்றார்‌. பாபாவின்‌ இம்மொழிகளைக்‌ கேட்ட இருவரும்‌ திருப்தி அடைந்தனர்‌. எல்லோரும்‌ மன மகிழ்வுடன்‌ தங்கள்‌ உளம்‌ நிறைவடையும்வரை சிரித்தனர்‌.

பாபாவின்‌ குணாதிசயம்‌ - பக்தர்கள்யால்‌ அவரின்‌ சார்பு

பாபாவின்‌ அடியவர்கள்‌ அவரவர்களுக்குரிய வழியிலேயே அவருக்குச்‌ சேவைசெய்ய அவர்‌ அனுமதித்திருந்தார்‌. இதில்‌ பிறர்‌ தலையிடுவதை அவர்‌ விரும்பவில்லை. உதாரணமாக இதே மெளஷிபாயி மற்றொரு சந்தர்ப்பத்தில்‌ பாபாவின்‌ அடிவயிற்றைத்‌ தேய்த்துவிட்டுக்கொண்டிருந்தாள்‌. அவள்‌ உபயோகித்த கடுமையையும்‌, வேகத்தையும்‌ கண்டு மற்ற அடியவர்களெல்லாம்‌ மனந்தளர்ந்து கவலை கொண்டவரானார்கள்‌. அவர்கள்‌ “ஓ! அம்மா இன்னும்‌ நிதானமாகவும்‌, மெதுவாகவும்‌ செயல்படு. அல்லாவிடில்‌ பாபாவின்‌ ரத்தக்குழாய்‌, நரம்பு இவைகளை உடைத்து விடுவாய்‌” என்று அவளிடம்‌ கூறினார்கள்‌.

இதன்‌ பேரில்‌ பாபா உடனே தம்‌ இருக்கையை விட்டு எழுந்தார்‌. தமது சட்காவைத்‌ தரையில்‌ ஓங்கியடித்தார்‌. அவர்‌ கோபாவேசம்‌ அடைந்தார்‌. அவரது கண்கள்‌ நெருப்புத்‌ துண்டம்‌ போலாயின. ஒருவருக்கும்‌ அவர்‌ முன்பு நிற்கவோ, பேசவோ தைரியம்‌ இல்லை. பின்னர்‌ அவர்‌ சட்காவின்‌ ஒரு முனையைத்‌ தன்‌ இரு கைகளாலும்‌ எடுத்துக்கொண்டு, வயிற்றிலுள்ள தொப்புளில்‌ குச்சியின்‌ ஒரு நுனியை அமுக்கினார்‌. மற்றொரு நுனியைக்‌ கம்பத்தில்‌ பொருந்தவைத்து அழுத்த இரண்டு - மூன்றடி நீளமுள்ள அந்த சட்கா முழுவதும்‌ அடிவயிற்றுக்குள்‌ சென்றுவிட்ட மாதிரியாகத்‌ தோன்றியது.

இன்னும்‌ சிநிது நேரத்தில்‌ அடிவயிறு கிழிந்துவிடுமென்று மக்கள்‌ பயந்தனர்‌. தூண்‌ உறுதியானது, அசையாதது. பாபா அதனருகில்‌ மிகமிக நெருக்கமாகப்‌ போகத்தொடங்கித்‌ தூணை பலமாக அணைத்தார்‌. எந்த வினாடியிலும்‌ வயிறுகிழியுமென எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள்‌ எல்லாம்‌ பீதியடைந்து என்ன செய்வதென்று தெரியாமல்‌ பயத்தாலும்‌, வியப்பாலும்‌ ஊமையாகி நின்றார்கள்‌. பாபா தமது அடியவனுக்காகவே இவ்விதம்‌ கஷ்டப்பட்டார்‌. மற்ற அடியவர்கள்‌ மெளஷிபாயிடம்‌ அவளது சேவையில்‌ இன்னும்‌ நிதானமாக இருக்கும்படியும்‌ பாபாவுக்கு எவ்வித வலியையோ, தொல்லையையோ உண்டாக்க வேண்டாம்‌ என்றும்‌ குறிக்கவே விரும்பினர்‌. நல்லெண்ணத்துடனே அவர்கள்‌ இதைச்‌ செய்தனர்‌. ஆனால்‌ பாபா இதைக்கூடப்‌ பொறுக்கவில்லை. தங்களது நல்லெண்ண முயற்சியினால்‌ பெருந்துன்பம்‌ விளைவிக்கும்‌ இத்திடீர்‌ விளைவைக்‌ கண்டு அவர்கள்‌ ஆச்சரியமடைந்தனர்‌. காத்திருந்து பார்ப்பதைத்‌ தவிர அவர்களுக்கு வேறொன்றும்‌ செய்யமுடியவில்லை.

அதிர்ஷ்டவசமாக பாபாவின்‌ ஆவேசம்‌ சீக்கிரம்‌ குளிர்ந்தது. அவர்‌ குச்சியை விட்டுவிட்டுத்‌ தன்‌ இடத்தினுள்‌ வந்து அமர்ந்தார்‌. இதிலிருந்து அடியவர்கள்‌ மற்றவர்‌ சேவைகளில்‌ குறுக்கிடக்கூடாது என்றும்‌ தாங்கள்‌ விரும்பிய வண்ணமே பாபாவுக்கு அவர்கள்‌ சேவைசெய்ய விட்டுவிடவேண்டுமென்கிற பாடத்தைத்‌ தெரிந்துகொண்டனர்‌. ஏனெனில்‌ அவர்கள்‌ செய்யும்‌ சேவைகளின்‌ மதிப்பையும்‌, தகுதியையும்‌ பாபாவே அளக்க வல்லமையுடையவராய்‌ இருக்கிறார்‌.

ஸ்ரீ சாயியைப்‌ பணிக

அனைவர்க்கும்‌ சாந்தி நிலவட்டும்‌