Ads

அத்தியாயம் - 30 - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்அத்தியாயம்‌ - 30

(1) வணியைச்‌ சேர்ந்த காகாஜி வைத்யா, (2) பம்பாயைச்‌ சேர்ந்த பஞ்சாபி ராம்லால்‌.

இவ்வத்தியாயத்தில்‌ ஷீர்டிக்கு இழுக்கப்பட்ட இன்னும்‌ இரண்டு அடியவர்களைப்‌ பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது.

முன்னுரை‌

கருணையின்‌ இருப்பிடமாம்‌ ஷீர்டி சாயிராம்‌. தம்‌ அடியவர்களிடம்‌ பாசமும்‌, அளவில்லா நேசமும்‌ காட்டி அவருடைய வெறும்‌ தரிசனத்தாலேயே இச்சம்சார வாழ்க்கையில்‌ அவர்களுக்குள்ள பயத்தைப்‌ போக்குகிறார்‌. அவர்களின்‌ பெருங்கேடுகளை அழிக்கிறார்‌. அவர்‌ முதலில்‌ அருவமாய்‌ இருந்தார்‌. ஆயின்‌ தம்‌ அடியவர்களின்‌ பக்தியின்‌ பொருட்டு ஓர்‌ உருவத்தை எடுக்க வேண்டியவரானார்‌. ஞானிகளின்‌ வருகையின்‌ காரணம்‌ அடியவர்களுக்கு “விடுதலை: - *தன்னையறிதல்‌: அளிப்பதேயாகும்‌. அவர்களில்‌ ஸ்ரேஷ்டரான சாயிக்கு அக்காரணம்‌ தவிர்க்க இயலாதது. எவர்‌, அவர்தம்‌ பாதாரவிந்தங்களில்‌ சரணாகதி அடைகிறார்களோ அவர்களின்‌ முன்னேற்றம்‌ நிச்சயமானது. அவர்தம்‌ பாதாரவிந்தங்களை பிராமணர்கள்‌ நினைத்துக்கொண்டு புனித க்ஷேத்திரங்களினின்றும்‌, வந்து அவர்தம்‌ சன்னிதானத்தில்‌ வேதங்களை ஓதுகிறார்கள்‌. காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கிறார்கள்‌. பலவீனங்களைக்‌ கொண்டவர்களாகவும்‌, எந்தவித ஏற்றமும்‌ அற்ற நாம்‌ பக்தி’ என்றால்‌ என்ன என்பதை அறியோம்‌. ஆனால்‌ மற்றெல்லோரும்‌ கைவிட்டபோதிலும்‌ சாயி நம்மைக்‌ கைவிட்டுவிடமாட்டார்‌ என்ற அளவு அறிவோம்‌. யாரை அவர்‌ ஆசீர்வதிக்கிறாரோ அவர்கள்‌ எல்லையற்ற வலிமைபெற்று, மெய்‌ - பொய்‌ ஆகியவற்றைப்‌ பகுத்துணரும்‌ ஞானம்‌ எய்துகிறார்கள்‌.

தம்‌ அடியவர்களின்‌ ஆசையை சாயி முழுமையாக அறிகிறார்‌. அவைகளை நிறைவேற்றுகிறார்‌. எனவே அவர்கள்‌ விரும்பியதைப்‌ பெற்று நன்றியுடையவர்களாக இருக்கிறார்கள்‌. எனவே அவரைப்‌ பிரார்த்திக்கிறோம்‌. அவர்முன்‌ வீழ்ந்து வணங்குகிறோம்‌. நமது குற்றங்கள்‌ பலவற்றையும்‌ பொறுத்துக்கொண்டு கவலைகளினின்றும்‌ நம்மை அவர்‌ விடுவிக்கட்டும்‌. பெருந்துயரங்களால்‌ அவதியுற்றுக்கொண்டிருப்பவன்‌ சாயியை இங்ஙனம்‌ நினைத்துத்‌ தியானிக்கிறான்‌. அவரது அருளாலே அவன்‌ மனம்‌ அமைதியடைகிறது.

இந்த சாயி கருணைக்கடல்‌, தம்மீது அவர்‌ கருணை பொழிந்ததன்‌ விளைவே இந்த சத்சரிதம்‌ என்கிறார்‌ ஹேமத்பந்த்‌. அல்லாவிடில்‌ அவருக்கு என்ன தகுதி இருக்கிறது! யார்தான்‌ இவ்வேலையை மேற்கொள்ள இயலும்‌! ஆனால்‌ சாயி எல்லாப்‌ பொறுப்புக்களையும்‌ ஏற்றுக்‌ கொண்டதால்‌ ஹேமத்பந்த்‌ எவ்வித பாரத்தையும்‌ உணரவில்லை. இது குறித்து எவ்விதக்‌ கவலையும்‌ கொள்ளவில்லை. அவரது பேச்சையும்‌, பேனாவையும்‌ உணர்வூட்ட ஆற்றல்‌ மிக்க ஞானஒளி இருக்கும்போது அவர்‌ ஏன்‌ சந்தேகம்கொள்ளவேண்டும்‌? அல்லது ஏன்‌ எவ்விதக்‌ கவலையும்‌ கொள்ளவேண்டும்‌. இது அவர்தம்‌ முன்வினைப்‌ புண்ணியவசத்தால்‌ ஸ்ரீசாயி அவர்கள்‌ இச்சேவைக்குத்‌ தம்மை ஆட்படுத்தி, ஆசீர்வதித்த அதிர்ஷ்டசாலியாக நினைத்துக்‌ கொள்கிறார்‌.

இந்தப்‌ பின்வரும்‌ நிகழ்ச்சி ஓர்‌ சுவையான கதை மட்டுமன்று, புனிதமான அமுதமுமாகும்‌. இதைப்‌ பருகுபவன்‌ சாயியின்‌ பெருமையையும்‌ அவர்தம்‌ எங்கும்நிறை தன்மையையும்‌ உணர்வான்‌. விவாதிக்க விமர்சிக்க விரும்புவோர்‌ இந்தக்‌ கதைகளுக்குச்‌ செல்லக்கூடாது. இங்கு தேவையாய்‌ உள்ளது விவாதமல்ல. அளவற்ற அன்பும்‌, பக்தியுமேயாம்‌. கற்றறிந்தோர்‌, பக்தியுடையோர்‌, உண்மையுடன்‌ நம்பிக்கை கொண்டுள்ளோர்‌ மட்டுமின்றி ஞானிகளின்‌ சேவகர்‌ என்று தம்மைக்‌ கருதுவோர்களும்‌ இக்கதைகளை விரும்பிப்‌ பாராட்டுவர்‌.

மற்றவர்கள்‌ அவைகளைக்‌ கற்பனைக்‌ கதைகள்‌ என்றுகொள்வர்‌. சாயியின்‌ அதிர்ஷ்டம்‌ வாய்ந்த அடியார்கள்‌ சாயி லீலைகளைக்‌ கற்பகத்தருவாகக்‌ கருதுவர்‌. இந்த சாயி லீலைகளின்‌ அமிர்தத்தைப்‌ பருகுவது அறியாமையில்‌ மூழ்கியுள்ள ஜீவன்களுக்கு முக்தி கொடுக்கும்‌. இல்லறத்தார்க்கு மனநிறைவளிக்கும்‌. லட்சியவாதிகளுக்குச்‌ சாதனை கைகூடும்‌. இதுபற்றிய கதையைக்‌ கவனிப்போம்‌.

காகாஜி வைத்யா

நாசிக்‌ ஜில்லாவைச்‌ சார்ந்த வணியில்‌ காகாஜி வைத்யா என்பவர்‌ வாழ்ந்து வந்தார்‌. அவர்‌ அங்கே சப்தஷ்ரிங்கிதேவி உபாசகர்‌. சாதகமற்ற சூழ்நிலைகளாலும்‌, துயரங்களாலும்‌ அவர்‌ பெருமளவு மன அமைதியை இழந்து சலனமுற்று இருந்தார்‌. இத்தகைய சூழ்நிலையில்‌ ஒருநாள்‌ மாலை தேவியின்‌ கோவிலுக்குச்‌ சென்று தம்மைக்‌ கவலைகளிலிருந்து மீட்குமாறு மிகவும்‌ பக்திபூர்வமாக, மனமுருகிப்‌ பிரார்த்தனை செய்தார்‌. தேவி அவரது பக்தியால்‌ மிகவும்‌ மகிழ்ந்து அதேநாள்‌ இரவு கனவில்‌ தோன்றி அவரிடம்‌ கூறினாள்‌, “பாபாவிடம்‌ நீ செல்வாயாக. பின்‌ உன்‌ மனம்‌ அமைதியடையும்‌”. இந்த பாபா யார்‌ என்று அவளிடமிருந்து அறிவதில்‌ காகாஜி ஆர்வமுற்றார்‌. ஆனால்‌ அவர்‌ எவ்வித விளக்கமும்‌ பெறும் முன்னரே தூக்கம்‌ கலைந்து எழுந்துவிட்டார்‌. தேவி, தன்னைக்‌ காணுமாறு பணித்த இந்த பாபா யாராக இருக்கக்கூடும்‌ என்று எண்ணத்‌ தொடங்கினார்‌.

சிறிது எண்ணத்திற்குப்‌ பின்‌ இந்த பாபா த்ரயம்பகேஷ்வரராக (சிவனாக) இருக்கவேண்டும்‌ என முடிவு கட்டினார்‌. எனவே அவர்‌ த்ரயம்பக்கிற்கு (நாசிக்‌ ஜில்லா) சென்றார்‌. அங்கு பத்து நாட்கள்‌ தங்கினார்‌. அவ்வமயம்‌ தினந்தோறும்‌ அதிகாலை குளித்து, ‘ஸ்ரீருத்ரம்‌’ ஓதி, அபிஷேகம்‌ மற்றபிற சமய சம்பிரதாயங்களையும்‌ செய்தார்‌. இவைகள்‌ எல்லாம்‌ செய்தும்கூட முன்போலவே அவர்‌ சலனமுற்றவராகவே இருந்தார்‌. பின்னர்‌ அவர்‌ தமது இருப்பிடத்திற்குச்‌ சென்று மீண்டும்‌ இரங்கத்தக்க நிலையில்‌ வேண்டினார்‌. அன்றிரவு தேவி மீண்டும்‌ அவர்‌ கனவில்‌ தோன்றி, “நீ ஏன்‌ த்ரயம்பகேஷ்வரத்திற்கு சென்றாய்‌? நான்‌ பாபா என்று கூறியது ஷீர்டியைச்‌ சேர்ந்த ஸ்ரீ சமர்த்த சாயியை” என்றாள்‌.

எப்போது ஷீர்டிக்குப்‌ போவது, எப்படி பாபாவைப்‌ பார்ப்பது என்பதே காகாஜியின்‌ இப்போதைய கேள்வியாக இருந்தது. ஒரு ஞானியைத்‌ தரிசிக்க ஒருவன்‌ உண்மையான ஆர்வமுள்ளவனாக இருப்பின்‌ ஞானி மாத்திரமல்ல, கடவுளும்‌ அவனது வேண்டுகோளை நிறைவேற்றுகிறார்‌. உண்மையில்‌ ‘ஸந்த்‌’தும்‌ (ஞானி), ‘அனந்த்‌’தும்‌ (கடவுள்‌) ஒருவரே. எள்ளளவும்‌ அவர்களிடையே வேறுபாடு இல்லை. ஒரு ஞானியைப்‌ பார்க்க அவனாகவே செல்கிறாளனென்று ஒருவன்‌ நினைத்தால்‌ அது வெறும்‌ டம்பமேயாகும்‌. ஞானியின்‌ அருளின்றி எவரே அவரை அணுகி தரிசிக்க இயலும்‌?! மரத்தின்‌ இலைகூட அவன்‌ ஆணையின்நி அசைவதில்லை. ஞானியிடம்‌ செல்ல பக்தன்‌ எவ்வளவு அதிகம்‌ கவலையுள்ளவனாக இருக்கிறானோ, எவ்வளவு அதிகம்‌ பக்தியுடனும்‌, நம்பிக்கையுடனும்‌ இருக்கிறானோ, அவ்வளவு விரைவில்‌ அவன்‌ மனநிறைவு அடையும்‌ வண்ணம்‌ அவனது எண்ணம்‌ நிறைவேற்றப்படும்‌. யாரையாவது விருந்துக்கு அழைக்கும்‌ ஒருவன்‌ அவரை வரவேற்பதற்கு சகல ஏற்பாடுகளையும்‌ செய்கிறான்‌. காகாஜி சம்பந்தப்பட்ட விஷயமும்‌ அங்ஙனமே நடந்தது.

ஷாமாவின்‌ வேண்டுதல்கள்‌

ஷீர்டிக்கு தமது விஜயத்தைப்‌ பற்றி காகாஜி நினைத்துக்கொண்டிருக்கையில்‌ அவரை அழைத்துச்செல்ல ஒருவர்‌ அவர்‌ இருப்பிடத்திற்கே வந்தார்‌. அவர்‌ வேறு யாருமல்ல, பாபாவின்‌ மிக்க நெருங்கிய பழக்கமுள்ள அடியவரான ஷாமாவே ஆவார்‌. இத்தருணத்தில்‌ அவர்‌ வணிக்கு எங்ஙனம்‌ வந்தார்‌ என்பதைத்‌ தற்போது கவனிக்கலாம்‌. ஷாமா தமது இளம்வயதில்‌ தீவிரமாக நோய்வாய்ப்பட்டார்‌. அவரது தாயார்‌ அவர்களின்‌ குலதெய்வமான வணியில்‌ உள்ள சப்தஷ்ரிங்கிதேவியிடம்‌ தன்‌ மகன்‌ குணமடைந்தால்‌ அழைத்து வந்து அவள்‌ பாதத்தில்‌ சமர்ப்பிப்பதாக வேண்டிக்கொண்டாள்‌.

தாயாரோ சில ஆண்டுகளுக்குப்‌ பிறகு தனது ஸ்தனங்களில்‌ ஒருவிதத்‌ தோல்‌ வியாதியால்‌ அவதியுற்றாள்‌. அத்தருணத்தில்‌ தனது தெய்வமான தேவியிடம்‌ மீண்டும்‌ ஒரு வேண்டுதலைச்‌ செய்தாள்‌. இந்த இரண்டு வேண்டுதல்களும்‌ நிறைவேற்றப்படாமலே இருந்தன. அவளது மரணப்‌ படுக்கையில்‌ தனது மகன்‌ ஷாமாவைத்‌ தன்‌ அருகே அழைத்து வேண்டுதல்களைக்‌ குறித்து அவரது கவனத்தை ஈர்த்து அவற்றை நிறைவேற்றுவதாக சத்தியம்‌ வாங்கிய பின்பு உயிர்‌ நீத்தாள்‌. சிலநாட்களுக்குப்‌ பின்னர்‌ ஷாமா இவ்வேண்டுதல்களைக்‌ குறித்து மறந்துவிட்டார்‌. இவ்வாறாக முப்பது ஆண்டுகள்‌ கடந்தன.

இத்தருணத்தில்‌ ஒரு புகழ்பெற்ற ஜோதிடர்‌ ஷீர்டிக்கு வந்து அங்கு ஒரு மாதம்‌ தங்கியிருந்தார்‌. ஸ்ரீமான்‌ பூட்டியையும்‌, மற்றவர்களையும்‌ குறித்து அவர்‌ கூறிய முன்னோடிச்‌ செய்திகள்‌ யாவும்‌ உண்மையாயின. அனைவரும்‌ மகிழ்ந்தனர்‌. ஷாமாவின்‌ தம்பியான பாபாஜியும்‌ ஜோதிடரைக்‌ கலந்து ஆலோசித்தார்‌. அப்போது அவரது தாயாரின்‌ வேண்டுதல்களை அவரின்‌ அண்ணன்‌ அவளின்‌ மரணப்படுக்கையில்‌ நிறைவேற்றுவதாக வாக்களித்தது இன்னும்‌ நிறைவேற்றப்படவில்லை. எனவே கடவுள்‌ அவர்கள்மீது மகிழ்வுறாமல்‌ அவர்களுக்குத்‌ துன்பங்களை அளித்துக்கொண்டு இருக்கிறார்‌ என்று கூறினார்‌. பாபாஜி இதைத்‌ தன்‌ அண்ணனிடம்‌ கூறவும்‌ அவர்‌ நிறைவேற்றப்படாத வேண்டுதல்களை நினைவுகூர்ந்தார்‌. மேற்கொண்டு எவ்விதத்‌ தாமதமும்‌ ஆபத்தானது என எண்ணி ஒரு பொற்கொல்லனை அழைத்து ஒரு ஜதை வெள்ளி ஸ்தனங்களைத்‌ தயாரிக்கச்‌ சொன்னார்‌.

பின்னர்‌ அவர்‌ மசூதிக்குச்‌ சென்று பாபாவின்‌ முன்னால்‌ வீழ்ந்துபணிந்து அவர்‌ முன்னர்‌ இரண்டு வெள்ளி ஸ்தனங்களையும்‌ வைத்து ஏற்றுக்கொண்டு தம்மை வேண்டுதல்களினின்று விடுவிக்கும்படி (ஏனெனில்‌, பாபாவே ஷாமாவுக்கு சப்தஷ்ரிங்கி தெய்வம்‌) வேண்டிக்கொண்டார்‌. சப்தஷ்ரிங்கி கோவிலுக்கு அவரையே போகும்படியும்‌, அவற்றைத்‌ தேவியின்‌ பாதங்களில்‌ அவரையே சமர்ப்பிக்கும்படியும்‌ பாபா வற்புறுத்தினார்‌. பாபாவின்‌ அனுமதியையும்‌, உதியையும்‌ பெற்றபின்‌ ஷாமா வணிக்குப்‌ புறப்பட்டார்‌. அங்கு அவர்‌ பூசாரியைத்‌ தேடிக்கொண்டு காகாஜியின்‌ வீட்டை வந்தடைந்தார்‌. காகாஜி அப்போதுதான்‌ பாபாவைப்‌ பார்க்க மிக்க கவலை உள்ளவராக இருந்தார்‌. அத்தருணத்தில்‌ ஷாமாவும்‌ அங்கு வந்தடைந்தார்‌. எத்தகைய வியத்தகு ஒற்றுமை இது!

காகாஜி அவரை யார்‌ அவர்‌ என்றும்‌ எப்போது அவர்‌ வந்தார்‌ என்றும்‌ விசாரித்தார்‌. அவர்‌ ஷீர்டியிலிருந்து வந்திருக்கிறார்‌ என்றறிந்தவுடன்‌ உடனே அவரைக்‌ கட்டியணைத்துக்கொண்டார்‌. அன்பால்‌ அவர்‌ அந்த அளவிற்கு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தார்‌. பின்னர்‌ அவர்கள்‌ சாயியின்‌ லீலைகளைப்‌ பற்றி பேசினர்‌. ஷாமாவின்‌ வேண்டுதல்களை நிறைவேற்றிய பின்னர்‌ இருவரும்‌ ஷீர்டிக்குப்‌ புறப்பட்டனர்‌. காகாஜி மசூதிக்குச்‌ சென்று பாபாவின்‌ பாதத்தில்‌ வீழ்ந்தார்‌. உடனே அவர்‌ கண்கள்‌ குளமாயின. அவர்‌ அமைதியுற்றார்‌.

தேவியின்‌ காட்சியின்படியே பாபாவைப்‌ பார்த்தவுடன்‌ அவர்‌ மனம்‌ சலனங்களை இழந்து அமைதியாயும்‌, அடக்கமாகவும்‌ ஆயிற்று. தமது மனத்தில்‌ காகாஜி கீழ்கண்டவாறு எண்ண ஆரம்பித்தார்‌, “என்ன வியத்தகு சக்தி இது! பாபா ஒன்றும்‌ பேசவில்லை. எவ்விதக்‌ கேள்வி பதிலும்‌ இல்லை. ஆசீர்வதிக்கவில்லை. வெறும்‌ தரிசனம்‌ ஒன்றே இவ்விதமாக மகிழ்ச்சிக்கு அடிகோலுகிறது. எனவே அமைதியின்மை அவரது வெறும்‌ தரிசனத்தாலேயே மறைந்து 'இன்ப உணர்வு' ஏனக்கு வந்திருக்கிறது. இதுவே தரிசனத்தின்‌ பபெருமை' எனப்படுவது”. அவரது பார்வை சாயியின்‌ பாதங்களில்‌ நிலைகொண்டது. அவரால்‌ ஒரு வார்த்தை கூட பேச இயலவில்லை. பாபாவின்‌ லீலைகளைக்‌ கேட்டு கரைகாணா மகிழ்ச்சியடைந்தார்‌. பாபாவிடம்‌ முழுமையாகச்‌ சரணடைந்து தம்‌ கவலைகளையும்‌, கஷ்டங்களையும்‌ மறந்தார்‌. கலப்பற்ற இன்பத்தை அவர்‌ எய்தினார்‌. அங்கு அவர்‌ பன்னிரெண்டு நாட்கள்‌ தங்கி இருந்தார்‌. பாபாவிடம்‌ விடைபெற்று உதி, ஆசீர்வாதம்‌ இவைகளுடன்‌ வீடு திரும்பினார்‌.

ராஹாதாவைச்‌ சேர்ந்த குஷால்சந்த்‌

அதிகாலை நேரங்களில்‌ நாம்‌ காணும்‌ கனவானது, விழித்திருக்கும்போது நனவாகிறது என்று சொல்லப்படுகிறது. அம்மாதிரி இருக்கலாம்‌. ஆனால்‌ பாபாவின்‌ கனவுகட்குக்‌ காலநியதியில்லை. நிகழ்ச்சி ஒன்றைக்‌ குறிக்குங்கால்‌ - ஒருநாள்‌ மாலை பாபா, காகா சாஹேப்‌ தீக்ஷித்தை அழைத்து, ராஹாதாவிற்குச்‌ சென்று, தாம்‌ நெடுநாள்‌ குஷால்சந்தை பார்க்காத காரணத்தால்‌ அவரை ஷீர்டிக்கு அழைத்து வருமாறு கூறினார்‌. அங்ஙனமே காகா சாஹேப்‌ ஒரு குதிரை வண்டியை அமர்த்திக்கொண்டு ராஹாதா சென்று பாபாவின்‌ செய்தியை தெரிவித்தார்‌. அதைக்கேட்டு குஷால்சந்த்‌ ஆச்சரியமடைந்தார்‌.

அன்று மதியம்‌ உண்டபின்‌ சிறுதுயில்‌ கொண்டிருந்தபோது, பாபா அவர்‌ கனவில்‌ தோன்றி உடனே ஷீர்டிக்கு வரும்படிக்‌ கூறினார்‌ என்றும்‌ தாமும்‌ ஷீர்டிக்கு வருவதற்கு ஆவலாக இருப்பதாகவும்‌ குஷால்சந்த்‌ கூறினார்‌. பக்கத்தில்‌ தமது குதிரை இல்லாததால்‌, தமது மகனை பாபாவுக்கு அறிவிக்கும்படியாக அனுப்பியிருந்தார்‌. அவருடைய மகன்‌ கிராம எல்லைக்குப்‌ போய்க்கொண்டிருந்தபோது தீக்ஷித்தின்‌ வண்டி எதிரே வந்தது. தீக்ஷித்‌ குஷால்சந்தை அழைத்துவரவே தாம்‌ அனுப்பப்பட்டிருப்பதாக அறிவித்தார்‌. பின்‌ இருவரும்‌ ஷீர்டி திரும்பினர்‌. குஷால்சந்த்‌ பாபாவைக்‌ கண்டார்‌. அனைவரும்‌ மகிழ்ச்சியுற்றனர்‌. பாபாவின்‌ இந்த லீலையைக்‌ கண்டு குஷால்சந்த்‌ மிகவும்‌ உணர்ச்சிவசப்பட்டார்‌.

பம்பாயைச்‌ சேர்ந்த பஞ்சாபி ராம்லால்‌

பம்பாயைச்‌ சேர்ந்த ராம்லால்‌ என்ற பஞ்சாபி பிராமணர்‌ ஒரு கனவு கண்டார்‌. அதில்‌ பாபா தோன்றி ஷீர்டிக்கு வரும்படிக்‌ கூறினார்‌. காட்சியில்‌ அவர்‌ ஒரு மஹந்த்‌ (மஹான்‌) ஆகத்‌ தோன்றினார்‌. ஆனால்‌ அவர்‌ எங்கிருப்பார்‌ என ராம்லால்‌ அறியார்‌. பாபாவைச்‌ சென்று பார்க்க எண்ணினார்‌. ஆனால்‌ அவரது விலாசத்தை அறியார்‌. என்ன செய்வதென்றும்‌ அவருக்குத்‌ தெரியவில்லை. ஒரு பேட்டிக்காக ஒருவரை அழைப்பவன்‌ தேவையான ஏற்பாடுகள்‌ அனைத்தையும்‌ செய்கிறான்‌. இந்த விஷயத்தில்‌ அதுவே நடந்தது.

அதே நாள்‌ மாலை, வீதிகளில்‌ மெதுவாக நடந்துகொண்டிருக்கும்போது பாபாவின்‌ ஒரு படத்தை ஒரு கடையில்‌ அவர்‌ கண்டார்‌. அவர்‌ கனவில்‌ கண்ட மஹானின்‌ உருவாம்சங்கள்‌ இப்படத்துடன்‌ மிகப்பொருத்தமாக ஒன்றின. விசாரித்ததில்‌ அவர்‌ ஷீர்டியைச்‌ சேர்ந்த சாயிபாபா எனத்‌ தெரிந்துகொண்டார்‌. ஷீர்டிக்கு உடனே சென்றார்‌. தனது இறுதிக்காலம்வரை அங்கேயே தங்கினார்‌.

தரிசனத்துக்காக இவ்விதமாக பாபா ஷீர்டிக்குத்‌ தமது அடியவர்களைக்‌ கொணர்ந்தார்‌. அவர்களின்‌ ஆத்மார்த்த, லெளகிகத்‌ தேவைகளைப்‌ மூர்த்தி செய்தார்‌.

ஸ்ரீ சாயியைப்‌ பணிக

அனைவர்க்கும்‌ சாந்தி நிலவட்டும்‌