Ads

அத்தியாயம் - 15 - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்அத்தியாயம் - 15

நாரத இசைமுறை - சோல்கரின்‌ சர்க்கரை இல்லாத தேநீர்‌ - இரண்டு பல்லிகள்‌.

ஷீர்டியில்‌ ராமநவமித்‌ திருவிழாவைப்‌ பற்றி ஆறாவது அத்தியாயத்தில்‌ குறிப்பிடப்பட்டதை நூலைக்‌ கற்போர்‌ நினைவு கூர்ந்தறியலாம்‌. எவ்விதம்‌ அத்திருவிழா முதன்முதலாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது, எவ்வாறு ஆரம்ப வருடங்களில்‌ அவ்விழாவின்போது கீர்த்தனைகள்‌ பாடுவதற்கான ஒரு ஹரிதாஸைப்‌ (பாடகரை) பெறுவது பெருங்கடினமானதாய்‌ இருந்தது, எவ்வாறு தாஸ்கணுவிற்கே இவ்விழாவினுடைய (கீர்த்தனை) பொறுப்பை நிரந்தரமாக பாபா ஒப்படைத்தது, அதிலிருந்து தாஸ்கணு அதனை எவ்வாறு வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொண்டு வருகிறார்‌ ஆகியவைகளை நினைவு கூர்ந்தறியலாம்‌.

நாரத இசை - பத்ததி

பொதுவாக நமது ஹரிதாஸர்கள்‌ கீர்த்தனைகள்‌ செய்யும்போது, மகிழ்வுநாள்‌ உடைகளையும்‌, முழு உடைகளையும்‌ அணிகிறார்கள்‌. ஃபேடா'வோ, ‘டர்பனோ’? ஏதோ ஒரு தலைப்பாகை அணிந்து கொள்கிறார்கள்‌. நீளமான அலைமோதும்‌ கோட்‌, உள்ளே ஒரு சட்டை, தோள்களில்‌ அங்கவஸ்திரம்‌, இடுப்புக்குக்‌ கீழே வழக்கமான நீள வேட்டி ஆகியவற்றை அணிகிறார்கள்‌. ஷீர்டி கிராமத்தில்‌ ஒரு கீர்த்தனைக்காக தாஸ்கணு ஒருமுறை இவ்வாறாக உடையணிந்து, பாபாவிடம்‌ வணங்குவதற்காகச்‌ சென்றார்‌. பாபா “நல்லாருக்கு மாப்பிள்ளே! இவ்வளவு அழகாக உடையணிந்து நீ எங்கே சென்றுகொண்டிருக்கிறாய்‌?” என்று கேட்டார்‌. “கீர்த்தனை செய்வதற்கு” என்று பதில்‌ வந்தது.

அப்போது பாபா, “இச்சிறு அலங்காரப்‌ பொருட்கள்‌ எல்லாம்‌ எதற்கு? கோட்டு, அங்கவஸ்திரம்‌, குல்லாய்‌ முதலிய எல்லாவற்றையும்‌ எனக்கு முன்னால்‌ கழற்றிவிடு” என்று கூறினார்‌. தாஸ்கணு உடனே அவற்றை எடுத்து பாபாவின்‌ பாதத்தடியில்‌ வைத்தார்‌. அதிலிருந்து கீர்த்தனை செய்யும்போது தாஸ்கணு இடுப்புக்குமேல்‌ ஒன்றும்‌ அணிவதில்லை. கைகளில்‌ ஒருஜதை சப்ளாக்‌ கட்டை, கழுத்தில்‌ மாலை இவற்றுடனேயே எப்போதும்‌ இருந்தார்‌. எல்லாப்‌ பாடகர்களும்‌ கைக்கொள்ளும்‌ முறையுடன்‌ இது ஒத்ததாய்‌ இல்லை. ஆனால்‌ இதுவே மிகச்சிறந்த மிகத்தூய வழியாகும்‌. கீர்த்தனை பத்ததிகளை படைத்துருவாக்கிய நாரத ரிஷியே மேல்‌ உடம்பிலும்‌, தலையிலும்‌ ஏதும்‌ அணியவில்லை. தம்‌ கையில்‌ வீணையேந்தி இடந்தோறும்‌ அலைந்து திரிந்து கடவுளின்‌ புகழைப்‌ பாடினார்‌.

சோல்கரின்‌ சர்க்கரை இல்லாத தேநீர்‌

புனே, அஹமத்நகர்‌ ஜில்லாக்களில்‌ பாபா அறிந்துகொள்ளப்பட்டார்‌. ஆனால்‌ நானா சாஹேப்‌ சாந்தோர்கர்‌ தனது சொந்த தனிப்பட்டமுறையிலான உரையாடல்களாலும்‌, தாஸ்கணு தனது மிக உயர்வான கீர்த்தனைகளாலும்‌ கொங்கணத்தில்‌ (பம்பாய்‌ ராஜதானியில்‌) பாபாவின்‌ புகழைப்‌ பரப்பினார்கள்‌. உண்மையில்‌ தாஸ்கணுதாம்‌ - அவரைக்‌ கடவுள்‌ ஆசீர்வதிப்பாராக, தமது அழகிய ஒப்புவமையற்ற கீர்த்தனைகளால்‌ அங்கேயிருந்த ஏராளமான மக்களை பாபாவினால்‌ பயனுறும்படிச்‌ செய்தார்‌.

கீர்த்தனைகளைக்‌ கேட்க வந்த மக்கள்‌ வெவ்வேறு சுவையுள்ளவர்களாய்‌ இருப்பர்‌. சிலர்‌ ஹரிதாஸின்‌ அறிவாழத்தை அல்லது புலமையை விரும்புவர்‌. சிலர்‌ அவரது அபிநயங்களையும்‌, சிலர்‌ அவரது பாடலையும்‌, சிலர்‌ அவரது விகட நகைச்சுவைகளையும்‌, சிலர்‌ அவரது துவக்க வேதாந்த வியாக்கியானங்களையும்‌, மற்றும்‌ சிலர்‌ அவரது முக்கிய கதைகளையுமாக பலர்‌ பலவிதமாக ஆர்வம்‌ கொண்டிருப்பர்‌. அவர்களுள்‌ மிகச்சிலரே கீர்த்தளனைகளைக்‌ கேட்பதன்‌ வாயிலாக ஞானிகளிடத்தோ, கடவுளிடத்தோ, நம்பிக்கையும்‌, பக்தியும்‌ பெறுகிறார்கள்‌. ஆயினும்‌ தாஸ்கணுவின்‌ கீர்த்தனைகளைக்‌ கேட்கும்‌ அவையோர்களது மனங்களின்‌ விளைவு மின்சாரமாகும்‌. அது அங்ஙனமே இருந்தது. கீழ்க்கண்ட ஒரு நிகழ்ச்சியை இங்கு தருகிறோம்‌. தாஸ்கணு ஒருமுறை தாணேவில்‌ கெளபீனேஷ்வர்‌ கோவிலில்‌ சாயிபாபாவின்‌ புகழைப்பாடிக்‌ கீர்த்தனை செய்துவந்தார்‌. அவையோர்களுள்‌ சோல்கர்‌ என்பவர்‌ சிவில்‌ கோர்ட்டில்‌ ஒரு தற்காலிக ஊழியராக வேலை பார்த்துவந்த ஏழை ஆவார்‌. மிகவும்‌ கவனத்துடன்‌ தாஸ்கணுவின்‌ கீர்த்தனையை அவர்‌ கேட்டுப்‌ பெரிதும்‌ உருகிப்போனார்‌. அவர்‌ அங்கேயே, அப்போதே மனத்தினால்‌ பாபாவுக்கு வணக்கம்‌ செலுத்தி விரதம்‌ எடுத்துக்கொண்டு பின்வருமாறு கூறினார்‌.

“பாபா, நான்‌ என்‌ குடும்பத்தைக்‌ காப்பாற்ற இயலாத ஓர்‌ ஏழை, தங்களது அருளால்‌ நான்‌ இலாகாவிற்குரிய தேர்வில்‌ வெற்றிபெற்று, நிரந்தர உத்தியோகம்‌ பெற்றால்‌ ஷீர்டிக்குச்‌ சென்று, தங்கள்‌ பாதங்களில்‌ வீழ்ந்து, தங்கள்‌ நாமத்தினால்‌, கற்கண்டை வினியோகிப்பேன்‌.” இது நிறைவேறுதற்குரிய நல்ல அதிர்ஷ்டம்‌ இருந்ததால்‌, சோல்கர்‌ பரீ க்ஷையில்‌ தேர்வு பெறவே செய்தார்‌. எவ்வளவு விரைவோ, அவ்வளவு நலம்‌ என்பதாக, தனது விரதத்தை நிறைவேற்றுவது ஒன்றே அவருக்கு எஞ்சியிருந்தது. பெருங்குடும்பத்தைத்‌ தாங்கவேண்டிய ஏழை மனிதர்‌ சோல்கர்‌. அவரால்‌ ஷீர்டி பயணத்திற்கு நேரும்‌ செலவைத்‌ தாங்குதல்‌ இயலாது. தாணே ஜில்லாவில்‌ உள்ள நாணே காட்டையோ அல்லது சஹ்யாத்ரி மலைத்தொடரையோ கூட ஒருவன்‌ எளிதில்‌ கடந்துவிடலாம்‌. உம்பரேகாட்டை, அதாவது வீட்டின்‌ தலைவாயிலை, ஓர்‌ ஏழை மனிதன்‌ கடப்பது என்பது மிகமிகக்‌ கடினமானது. எவ்வளவு விரைவில்‌ தனது விரதத்தைப்‌ பூர்த்திசெய்ய முடியுமோ அவ்வளவு விரைவில்‌ பூர்த்திசெய்ய ஆவலும்‌, கவலையுமுற்ற சோல்கர்‌ தனது செலவைக்‌ குறைத்துச்‌ சிக்கனப்படுத்தி பணத்தைச்‌ சேகரிக்கத்‌ தீர்மானித்தார்‌. தனது உணவிலும்‌, தேநீரிலும்‌ சர்க்கரை உபயோகிப்பதில்லையென முடிவுசெய்து தேநீரைச்‌ சர்க்கரை இன்றியே அருந்தத்‌ தொடங்கினார்‌. இவ்வாறாக அவர்‌ சிறிது பணம்‌ சேகரிக்க இயன்றதும்‌ ஷீர்டியை வந்தடைந்து பாபாவின்‌ தரிசனத்தைப்‌ பெற்றார்‌. அவர்‌ பாதங்களில்‌ வீழ்ந்தார்‌. ஒரு தேங்காயை அர்ப்பணித்தார்‌. தனது விரதப்படி அந்தக்கரண சுத்தியுடன்‌ கற்கண்டை வினியோகித்தார்‌.

பாபாவிடம்‌, அவரது தரிசனத்தால்‌ தான்‌ மிகவும்‌ மகிழ்ச்சியுற்றதாகவும்‌, அன்றைய தினத்தில்‌ அவரது ஆசைகள்‌ பூர்த்தியாயின என்றும்‌ கூறினார்‌. தன்னுடைய விருந்து உபசரிப்பாளராகிய பாபு சாஹேப்‌ ஜோகுடன்‌, சோல்கர்‌ மசூதியில்‌ இருந்தார்‌. விருந்து உபசரிப்பாளரும்‌, விருந்தினருமாகிய இருவரும்‌ எழுந்து மசூதியைவிட்டுப்‌ புறப்படப்‌ போனபோது, பாபா, ஜோகிடம்‌ பின்வருமாறு கூறினார்‌, “அவருக்கு (உமது விருந்தினருக்கு) சர்க்கரை நிறைமுழுமையுமாய்‌ கரைக்கப்பட்ட தேநீரைக்‌ கொடுப்பீர்‌”. இத்தகைய உட்கருத்து வளஞ்செறி சொற்களைக்‌ கேட்டு சோல்கர்‌ மிகவும்‌ மனதுருகிப்‌ போனார்‌. வியப்பால்‌ செயலிழந்தார்‌. அவரின்‌ கண்கள்‌ கண்ணீரால்‌ பனித்தன. மீண்டும்‌ பாபாவின்‌ பாதங்களில்‌ வீழ்ந்தார்‌. தனது விருந்தினருக்கு அளிக்கப்பட வேண்டிய தேநீரைப்பற்றிய வழிநெறியைக்‌ கேட்டு ஜோகும்‌ ஆச்சரியமடைந்தார்‌.

தமது சொற்களின்‌ மூலம்‌ சோல்கரின்‌ மனத்தில்‌ நம்பிக்கையையும்‌, பக்தியையும்‌ தோற்றுவிக்க பாபா விரும்பினார்‌. அவருடைய விரதப்படி தாம்‌ கற்கண்டைப்‌ பெற்றுக்கொண்டதையும்‌, உணவில்‌ சர்க்கரை பயன்படுத்தக்கூடாது என்ற அவரது இரகசியத்‌ தீர்மானத்தையும்‌ தாம்‌ முழுமையாக அறிந்திருப்பதாக, அது அங்ஙனம்‌ இருந்தபடியே, பாபா குறிப்பிட்டார்‌. பாபா கூறியதன்‌ பொருளாவது, “என்‌ முன்னர்‌ பக்தியுடன்‌ உங்களது கரங்களை நீட்டுவீர்களேயானால்‌, உடனேயே இரவும்‌, பகலும்‌ உங்களுடன்‌ கூடவே நான்‌ இருக்கிறேன்‌. இவ்வுடம்பால்‌ நான்‌ இங்கேயே இருப்பினும்‌, ஏழ்கடலுக்கப்பால்‌, நீங்கள்‌ செய்வதையும்‌ நான்‌ அறிவேன்‌. இந்தப்‌ பரந்த உலகின்கண்‌ நீங்கள்‌ விரும்பியபடி எங்கு வேண்டுமானாலும்‌ செல்லுங்கள்‌. நான்‌ உங்களுடனேயே இருக்கிறேன்‌. உங்களது இதயமே எனது இருப்பிடம்‌. நான்‌ உங்களுக்குள்ளேயே இருக்கிறேன்‌. உங்களது இதயத்துள்ளும்‌, அதைப்‌ போன்ற சகல ஜீவராசிகளின்‌ இதயங்களினுள்ளும்‌ இருக்கும்‌ என்னையே எப்போதும்‌ வணங்குவீர்களாக! என்னை இங்ஙனமாக அறிபவர்‌ உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவரும்‌, அதிர்ஷ்டசாலியும்‌ ஆவார்‌”.

இவ்வாறாக, எவ்வித அழகிய முக்கியமான நீதி பாபாவினால்‌ சோல்கருக்கு உபதேசிக்கப்பட்டது!

இரண்டு பல்லிகள்‌

இரண்டு சிறிய பல்லிகளின்‌ கதையுடன்‌ இவ்வத்தியாயத்தை முடிப்போம்‌. ஒருமுறை பாபா மசூதியில்‌ அமர்ந்திருந்தார்‌. ஒரு பக்தரும்‌ அவர்‌ முன்னர்‌ அமர்ந்திருந்தார்‌. ஒரு பல்லி ‘டிக்‌!..டிக்‌..!’ துடிப்பை விளைவித்தது. ஆச்சரியத்தால்‌ உந்தப்பட்ட அவர்‌, பல்லியின்‌ இத்துடிப்பு, ஏதேனும்‌ பின்விளைவு காட்டுதல்‌ குறித்ததா? அது நல்ல அடையாளமா அல்லது தீய சகுனமா என்று பாபாவைக்‌ கேட்டார்‌. அப்பல்லியின்‌ சகோதரி அதனைப்‌ பார்க்க ஓளரங்காபாத்திலிருந்து வந்துகொண்டிருப்பதாயும்‌ அதனால்‌ அப்பல்லி மிகவும்‌ மகிழ்ச்சியுற்றிருக்கிறது என்றும்‌ பாபா கூறினார்‌. பாபா சொல்லுவதன்‌ அர்த்தம்‌ புரியாமல்‌ அவர்‌ மெளனமாய்‌ அமர்ந்து இருந்தார்‌. உடனேயே ஓளரங்காபாத்திலிருந்து குதிரையில்‌ ஒரு பெருந்தகை பாபாவைப்‌ பார்க்க வந்தார்‌.

அவர்‌ மேற்கொண்டு பயணத்தைத்‌ தொடர விரும்பினார்‌. ஆனால்‌ அவரது குதிரை பசியாய்‌ இருந்தபடியால்‌, நகர்வதாக இல்லை. அதற்குக்‌ கொள்ளு தேவைப்பட்டது. கொள்ளு கொண்டு வருவதற்காகத்‌ தனது தோளில்‌ இருந்து ஒரு பையை எடுத்தார்‌. தூசியைப்‌ போக்குவதற்காகத்‌ தரையில்‌ அடித்தார்‌. அதிலிருந்து ஒரு பல்லி விழுந்தது.

எல்லோர்‌ முன்னிலையிலும்‌ அது சுவரில்‌ ஏறியது. கேள்விகேட்ட பக்தரிடம்‌ அப்பல்லியை நன்றாகக்‌ கவனிக்கும்படி பாபா கூறினார்‌. அது உடனே தனது பெருமையான நடையுடன்‌ தன்‌ சகோதரியை நோக்கிச்‌ சென்றது. நீண்ட காலத்திற்குப்‌ பின்னர்‌ இரண்டும்‌ சந்தித்தன. ஒன்றையொன்று முத்தம்‌ கொடுத்துக்‌ கட்டியணைத்துக்கொண்டன. சுற்றிச்சுற்றி ஓடிவந்து அன்பால்‌ நடனம்‌ ஆடின. ஷீர்டி எங்கே இருக்கிறது? ஓளரங்காபாத்‌ எங்கே இருக்கிறது? குதிரையிலிருந்த மனிதர்‌ பல்லியுடன்‌ எங்ஙனம்‌ ஓளரங்காபாத்திலிருந்து வந்தார்‌? இரண்டு சகோதரிகள்‌ சந்திக்கப்‌ போவதை எங்ஙனம்‌ பாபா முன்னாலேயே தீர்க்க தரிசனம்‌ செய்தார்‌.

இவையெல்லாம்‌ உண்மையிலேயே மிகவும்‌ ஆச்சரியமானதும்‌, பாபாவின்‌ எங்குநிறை பேரறிவையும்‌, அனைத்தையும்‌ உணரும்‌ ஆற்றலையும்‌ மெய்ப்பிப்பதுமாகும்‌.

பிற்சேர்க்கை

எவரொருவர்‌ இவ்வத்தியாயத்தை பக்தியுடன்‌ படிக்கிறாரோ அல்லது தினமும்‌ கருத்தூன்றிப்‌ பயில்கிறாரோ சத்குரு சாயிபாபாவின்‌ அருளால்‌ அவரது அனைத்து ஆழ்துயர்‌ நிலைகளும்‌ அகற்றப்படும்‌. எனவே.

ஸ்ரீ சாயியைப்‌ பணிக

அனைவர்க்கும்‌ சாந்தி நிலவட்டும்‌