Ads

அத்தியாயம் - 32 - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்



அத்தியாயம்‌ - 32

குரு - கடவுள்‌ தேவை - பட்டினி அங்கீகரிக்கப்படவில்லை.

இந்த அத்தியாயத்தில்‌ ஹேமத்பந்த்‌ இரண்டு விஷயங்களை விவரிக்கிறார்‌. (1) பாபா எங்ஙனம்‌ தமது குருவைக்‌ காடுகளில்‌ சந்தித்தார்‌? அவர்‌ மூலம்‌ கடவுள்‌ சந்திப்பு. (2) மூன்று நாட்கள்‌ விரதமிருக்க எண்ணிய திருமதி. கோகலேயை எங்ஙனம்‌ பாபா பூரணப்போளியைச்‌ சாப்பிடச்‌ செய்தார்‌.

முன்னுரை

முதலில்‌ கண்ணுக்குத்‌ தெரியும்‌ இச்சம்சார வாழ்க்கையை ஹேமத்பந்த்‌ ஆலமரத்துடன்‌ ஒப்பிடுகிறார்‌. கீதையின்‌ சொற்களில்‌ வேர்‌ மேலும்‌, கிளைகள்‌ கீழும்‌ என்பதாக அதன்‌ கிளைகள்‌ மேலும்‌, கீழும்‌ பரவுகின்றன. குணங்களால்‌ போஷிக்கப்படுகின்றன. அதன்‌ துளிர்கள்‌ புலன்களாகின்றன. அதன்‌ வேர்கள்‌ செயல்களாக மனிதர்களின்‌ இவ்வுலகம்வரை நீண்டிருக்கின்றன. இவ்வுலகத்தில்‌ அதன்‌ ரூபமோ, முடிவோ, ஆரம்பமோ அல்லது அதன்‌ பற்றுக்கோடோ தெரியாது. வலிமையான வேர்களுள்ள இவ்வாலமரத்தைப்‌ பற்றின்மை என்னும்‌ கூரிய ஆயுதத்தால்‌ வெட்டுவதன்‌ மூலம்‌ அதற்கப்பாலுள்ள பாதையை ஒருவன்‌ தேடவேண்டும்‌. அதில்‌ செல்பவன்‌ திரும்பிவருதல்‌ கிடையாது.

இப்பாதையில்‌ செல்வதற்கு நல்ல வழிகாட்டியின்‌ (குரு) உதவி இன்றியமையாதது. ஒருவன்‌ எவ்வளவுதான்‌ கற்றறிந்தவனாய்‌ இருப்பினும்‌ வேதவேதாந்தங்களில்‌ எவ்வளவுதான்‌ ஆழ்ந்த அறிவுடையவனாக இருப்பினும்‌ தனது பயணமுடிவை அவன்‌ பத்திரமாகச்‌ சென்றடைய முடியாது. வழிகாட்டி ஒருவர்‌ அவனுக்கு உதவ அங்கிருந்தால்‌ சரியான வழியைக்‌ காண்பித்துப்‌ பயணத்தின்‌ போதுள்ள இடர்கள்‌, குழிகள்‌, கொடிய மிருகங்கள்‌ இவற்றை ஒதுக்கிச்‌ செல்லமுடியும்‌. பயணமும்‌ இலகுவானதாகிவிடும்‌. இவ்விஷயத்தில்‌ பாபாவின்‌ சொந்த அனுபவமாக அவர்‌ சொன்ன கதை உண்மையில்‌ ஆச்சரியமானது. கேட்டறியும்போது நம்பிக்கை, பக்தி, ரக்ஷ்ணை ஆகியவற்றை அளிக்கிறது.

தாகம்‌

ஒருமுறை எங்களில்‌ நால்வர்‌ மத சாஸ்திரங்களையும்‌, மற்ற புத்தகங்களையும்‌ படித்துக்கொண்டிருந்தோம்‌. இவ்வாறாக உற்சாகம்‌ பெற்றுப்‌ பிரம்மத்தின்‌ குணத்தைப்‌ பற்றி விவாதிக்கத்‌ தொடங்கினோம்‌.

எங்களுள்‌ ஒருவர்‌: “அவரவர்‌ ஆன்மாவைத்‌ தத்தம்‌ ஆன்மாவாலேயே உயர்த்தவேண்டும்‌ என்றும்‌ பிறரை நாடக்கூடாது என்றும்‌ கூறினார்‌”.

இதற்கு இரண்டாமவர்‌: “யார்‌ மனதைக்‌ கட்டுப்படுத்துகிறானோ அவன்‌ ஆசீர்வதிக்கப்பட்டவன்‌. எண்ணங்கள்‌, யோசனைகள்‌ இவற்றிலிருந்து நாம்‌ விடுபட்டவர்களாக இருக்கவேண்டும்‌. நாமில்லாமல்‌ இவ்வுலகத்தில்‌ ஒன்றும்‌ கிடையாது” என்றார்‌.

மூன்றாமவர்‌ : உலகம்‌ (தோற்றம்‌) எப்போதும்‌ மாறிக்கொண்டேயிருக்கிறது. அருவமே நிலைத்தது (முடிவற்றது) எனவே நாம்‌ நிலையான, நிலையற்றவற்றைப்‌ பகுத்துணர வேண்டும்‌.

நான்காமவர்‌ (பாபா) : (தீவிரமாக) ஏட்டறிவு பயனற்றது. நமக்கிடப்பட்ட கடமைகளைச்‌ செய்து, குருவின்‌ பாதத்தில்‌ உடல்‌, மனம்‌, ஐந்து பிராணன்கள்‌ இவற்றை சமர்ப்பித்துவிடவேண்டும்‌. குருவே கடவுள்‌, சர்வ வியாபி, இவ்வுறுதியான மனநிலை பெறுவதற்கு எல்லையற்ற திடநம்பிக்கை அவசியமாகும்‌. இவ்வாறாக விவாதித்துக்கொண்டு கற்றறிந்த நாங்கள்‌ நால்வரும்‌ காடுகளில்‌ கடவுளைத்‌ தேடி அலையத்‌ தொடங்கினோம்‌. அம்மூவரும்‌ அறிவின்‌ துணைகொண்டே சுதந்திரமாக எவர்‌ உதவியுமின்றி தேட முயன்றனர்‌. வழியில்‌ ஒரு வனஜாரி (எருமையின்‌ மீது தானியத்தை கொண்டுசென்று விற்பவன்‌) எதிர்ப்பட்டான்‌.

வனஜாரி : இப்போது உஷ்ணமாயிருக்கிறது. எங்கே இவ்வளவு தூரம்‌ போகிறீர்கள்‌?

நாங்கள்‌ : காட்டில்‌ தேடுவதற்கு

வனஜாரி : எதைத்‌ தேடி நீங்கள்‌ செல்கிறீர்கள்‌.

நாங்கள்‌ அவனுக்கு நம்பமுடியாத மழுப்பும்‌ விதத்தில்‌ ஒரு பதில்‌ கொடுத்தோம்‌. திக்குதிசை தெரியாமல்‌ காட்டில்‌ நாங்கள்‌ அலைந்துகொண்டிருப்பதைக்‌ கண்ட அவன்‌ மனதிரங்கி, “காடுகளை முழுவதும்‌ அறியாமல்‌, திடீரென்று நீங்கள்‌ இப்படி திசை தெரியாமல்‌ அலையக்கூடாது. காடுகளிடையே நீங்கள்‌ செல்லவிரும்பினால்‌ ஒரு நல்ல வழிகாட்டியை அழைத்துச்‌ செல்லவேண்டும்‌. இந்த கடுமையான உச்சிவேளையில்‌ அனாவசியமாக ஏன்‌ அலைந்துகொண்டிருக்கிறீர்கள்‌. தேடும்‌ உங்களது இரகசியத்தை நீங்கள்‌ எனக்கு வெளியிட வேண்டாம்‌. ஆயினும்‌ நீங்கள்‌ அமர்ந்து, சாப்பிட்டு, நீர்‌ குடித்து இளைப்பாறிய பின்‌ செல்லலாம்‌. உள்ளத்தில்‌ எப்போதும்‌ பொறுமையாய்‌ இருங்கள்‌!” என்று கூறினான்‌. அவ்வளவு இனிமையாகப்‌ பேசியபோதும்‌ அவனது வேண்டுதலை நிராகரித்துவிட்டு மேலே நடக்கத்‌ தொடங்கினோம்‌.

நாங்கள்‌ தன்னறிவு நிரம்பியவர்கள்‌ என்றும்‌ ஒருவரின்‌ உதவியும்‌ எங்களுக்குத்‌ தேவையில்லை என்றும்‌ நினைத்தோம்‌. காடு பரந்ததாகவும்‌, பாதையற்றதாகவும்‌ இருந்தது. சூரியஒளி கூட உட்புகாத அளவுக்கு மரங்கள்‌ அவ்வளவு நெருக்கமாகவும்‌, உயரமாகவும்‌ வளர்ந்து இருந்தன. எனவே நாங்கள்‌ வழிதவறி இங்குமங்கும்‌ நெடுநேரம்‌ அலைந்துகொண்டிருந்தோம்‌. முடிவாக நல்லதிர்ஷ்டம்‌ ஒன்றினால்‌ மட்டுமே எங்கு விட்டோமோ அங்கேயே வந்துசேர்ந்தோம்‌. வனஜாரி திரும்பவும்‌ எங்களைச்‌ சந்தித்தான்‌. வனஜாரி : உங்கள்‌ சொந்த புத்திசாதுர்யத்தை மட்டுமே நம்பி வழியை நீங்கள்‌ தவறவிட்டுவிட்டீர்கள்‌. சிறிய அல்லது பெரிய விஷயங்களில்‌ வழிகாட்ட ஒரு வழிகாட்டி நமக்கு எப்போதும்‌ தேவை. வெறும்‌ வயிற்றுடன்‌ எந்த லட்சியத்திலும்‌ வெற்றியடைய இயலாது. கடவுள்‌ நினைத்தாலன்றி ஒருவரும்‌ நம்மை வழியில்‌ சந்திப்பதில்லை. உணவளிக்கப்படுவதை மறுக்காதீர்கள்‌. பரிமாறப்பட்ட உணவு தள்ளப்படக்கூடாது. ரொட்டி, உணவு ஆகியவை கிடைப்பது வெற்றியின்‌ அடையாளமாகும்‌.

இதைக்‌ கூறிக்கொண்டே அவன்‌ மீண்டும்‌ எங்களுக்கு உணவை வைத்து அமைதியுடனும்‌, பொறுமையுடனும்‌ இருக்கும்படிக்‌ கூறினான்‌. மீண்டும்‌ என்னுடன்‌ இருந்தவர்களுக்கு இந்த நல்ல விருந்தோம்பல்‌ பிடிக்கவில்லை. அவனை நிராகரித்துவிட்டுச்‌ சென்றுவிட்டனர்‌. தாகத்தையும்‌, பசியையும்‌ தீர்த்துக்கொள்ளாமலேயே மூவரும்‌ செல்லும்‌ அளவுக்கு பிடிவாதமாக இருந்தனர்‌. எனக்கு பசியாயும்‌, தாகமாயும்‌ இருந்ததால்‌ வனஜாரியின்‌ அசாதாரண அன்பில்‌ உருகினேன்‌. மிகவும்‌ கற்றறிந்தவர்கள்‌ என்று எங்களை எண்ணிக்கொண்டோம்‌. அன்புக்கும்‌, இரக்க குணத்திற்கும்‌ நாங்கள்‌ புதியவர்களாகவே இருந்தோம்‌. வனஜாரி கல்வியறிவற்றவன்‌, தகுதியற்றவன்‌. கீழ்க்குலத்தைச்‌ சேர்ந்தவன்‌ என்றாலும்‌ அவன்‌ உள்ளத்தில்‌ அன்பு இருந்தது. அவன்‌ எங்களை உண்ணச்‌ சொன்னான்‌. மற்றவர்களை நிஷ்காமியாக நேசிப்பவன்‌ உண்மையிலேயே உயர்த்தப்படுகிறான்‌. அவனது விருந்தோம்பலை ஏற்றுக்கொள்ளுதலே ஞானத்தை ஏற்றுக்கொள்வதற்கான சிறந்த ஆரம்பமாகுமென நான்‌ நினைத்தேன்‌. எனவே அளிக்கப்பட்ட ரொட்டித்‌ துண்டை மிக்க மரியாதையுடன்‌ நான்‌ ஏற்றுக்கொண்டேன்‌. தண்ணீரையும்‌ பருகினேன்‌.

அப்போது ஆ! குருவே எங்கள்முன்‌ வந்து நின்றார்‌. “எதைப்‌ பற்றி சர்ச்சை?” என்று அவர்‌ கேட்டார்‌. நடந்த எல்லாவற்றையும்‌ நான்‌ கூறினேன்‌. அப்போது அவர்‌, “நீ என்னுடன்‌ வர விரும்புகிறாயா? உனக்குத்‌ தேவையானதை நான்‌ காண்பிப்பேன்‌. ஆனால்‌ நான்‌ சொல்லுவதில்‌ நம்பிக்கையுடையவனே வெற்றியடைவான்‌?” என்றார்‌. மற்றவர்கள்‌ அவர்‌ கூறியதை ஒப்புக்கொள்ளாமல்‌ அவரை விட்டுச்‌ சென்றனர்‌. ஆனால்‌ நான்‌ அவரை வணங்கி அவரது கொள்கையை ஏற்றுக்கொண்டேன்‌. பின்னர்‌ அவர்‌ என்னை ஒரு கேணிக்கு அழைத்துச்‌ சென்றார்‌. என்‌ கால்களைக்‌ கயிற்றால்‌ கட்டினார்‌. என்னைத்‌ தலைகீழாக பக்கத்தில்‌ இருந்த மரத்தில்‌ தொங்கவிட்டார்‌. கிணற்று நீர்‌ மட்டத்திலிருந்து மூன்றடி உயரத்துக்கு மேலே தொங்கவிடப்பட்டிருந்த எனக்குத்‌ தண்ணீர்‌ கைகளுக்கோ வாய்க்கோ எட்டவில்லை.*

இவ்வாறாக என்னைத்‌ தொங்கவிட்டு அவர்‌ போய்விட்டார்‌. எங்கு போனாரென்பது ஒருவருக்கும்‌ தெரியாது. நாலைந்து மணிநேரம்‌ கழித்து அவர்‌ திரும்பி வந்தார்‌. என்னை துரிதமாக வெளியில்‌ எடுத்து, எப்படி

* நாலைந்து மணிநேரம்‌ தலைகீழாகக்‌ கிணற்றில்‌ தொங்கவிடப்படுதலை உண்மையாக அப்படியே நாம்‌ எடுத்துக்கொள்ளக்கூடாது. அது சமாதி நிலையைக்‌ குறிக்கும்‌ ஒரு ரூப விளக்கமாகும்‌. உணர்வுகளில்‌ இரண்டு வகைகள்‌ உண்டு. (1) புலன்‌ வழி உணர்வுகள்‌, (2) ஆன்ம வழி உணர்வுகள்‌. தங்கள்‌ இலட்சியத்தை அடைய புலன்களும்‌, மனதும்‌ வெளியேறி தங்கள்‌ ஆசையை அடையும்படி படைக்கப்பட்டிருக்கின்றன. நமக்கு அப்போது இன்பமோ அல்லது துன்பமோ, தனியோ அல்லது கலப்போ ஆகிய புலன்வழி உணர்வுகள்‌ ஏற்படுகின்றன. ஆனால்‌ பேரின்பநிலையோ, மகிழ்ச்சியோ கிடைப்பதில்லை, புலன்களும்‌, மனதும்‌ தங்கள்‌ ஆசையிலிருந்து திருப்பிவிடப்பட்டு தலைகீழான நிலை அவைகளுக்கு கொடுக்கப்படும்போது அதாவது உள்நோக்கி ஆன்மாவில்‌ சங்கமிக்கும்போது மற்றொன்றான ஆன்ம உணர்வைப்‌ பெறுகிறோம்‌. அது சொல்லால்‌ விவரிக்க முடியாத அளவு பேரின்பத்தையும்‌, கலப்பற்ற மகிழ்ச்சியையும்‌ நமக்கு அளிக்கிறது. “நான்‌ பேரானந்தத்தின்‌ உச்ச நிலையில்‌ இருந்தேன்‌. நான்‌ அனுபவித்த மகிழ்ச்சியை எங்ஙனம்‌ கூறுவேன்‌” என்னும்‌ மொழிகள்‌ குரு அவரை சமாதிநிலையில்‌ வைத்தாரென்றும்‌ தண்ணீர்‌ மேலென்பது அமைதியற்ற புலன்‌, மனம்‌ இவைகளுக்கு அப்பால்‌ என்பதாம்‌. இருந்தது என்று கேட்டார்‌. “நான்‌ பேரானந்தத்தின்‌ உச்சநிலையில்‌ இருந்தேன்‌. என்னைப்‌ போன்ற முட்டாள்‌ அந்தப்‌ பேரானந்தத்தை எங்ஙனம்‌ விவரிக்க முடியும்‌?” என்று பதில்‌ சொன்னேன்‌. இவ்விடையைக்‌ கேட்டு அவர்‌ மிகவும்‌ மகிழ்ச்சியடைந்தார்‌. என்னை அவர்பால்‌ இழுத்துத்‌ தட்டிக்கொடுத்து என்னை அவரிடம்‌ வைத்துக்கொண்டார்‌.

தாய்ப்பறவை தன்‌ குஞ்சைப்‌ பேணுதல்‌ போன்று என்னை அன்புடன்‌ கவனித்தார்‌. அவருடைய குருகுலத்தில்‌ என்னை சேர்த்துக்கொண்டார்‌. எத்தகைய அழகுடையது அது! அங்கே என்‌ பெற்றோர்களை மறந்தேன்‌. பாசத்தை துறந்தேன்‌. எளிதாக விடுவிக்கப்பட்டேன்‌. அவரது கழுத்தைக்‌ கட்டியணைத்து எப்போதும்‌ அவரையே கற்றுநோக்கிக்‌ கொண்டிருக்கவேண்டும்‌ என்று நினைத்தேன்‌. அவரது ரூபம்‌ எனது கண்மணியில்‌ பதிக்கப்படாவிட்டால்‌ நான்‌ குருடாயிருப்பதே நலம்‌. குருகுலம்‌ அத்தகையது. அதனுள்‌ ஒருமுறை நுழைந்த யாரும்‌ வெறுங்கையுடன்‌ திரும்ப இயலாது. எனது வீடு, சொத்து, தாய்‌, தந்த அனைத்தும்‌ முழுக்க முழுக்க குருவேயானார்‌. எனது உணர்வுகள்‌ எல்லாம்‌ தங்கள்‌ இடத்தை விட்டுவிட்டு எனது கண்களிலேயே ஒருமை அடைந்தன. எனது பார்வை அவரை மையமாகக்கொண்டிருந்தது. எனது தியானத்தின்‌ ஒரே லட்சியமாக அவர்‌ இருந்தார்‌.

அவரைத்‌ தவிர பிறரைப்பற்றி நான்‌ உணரவில்லை. இவரே எனது குரு. அவரைத்‌ தியானம்‌ செய்யும்போது எனது மனமும்‌, புத்தியும்‌ அசையாமல்‌ நின்றுவிட்டன. இவ்வாறாக நான்‌ அமைதியாக இருக்க வேண்டியதாயிற்று. அமைதியுடன்‌ அவரை வணங்க வேண்டியதாயிற்று.”

நீங்கள்‌ முழுவதும்‌ வேறான காட்சிகளைக்‌ காணும்‌ மற்ற குருகுலங்கள்‌ உள்ளன. ஞானத்தைப்‌ பயில்வதற்காக சீடர்கள்‌ அங்கு செல்கிறார்கள்‌. பணம்‌, காலம்‌, உழைப்பு இவைகளைச்‌ செலவழிக்கிறார்கள்‌. ஆனால்‌ முடிவாக அவர்கள்‌ வருத்தப்பட நேரிடும்‌. அங்கேயுள்ள குரு தனது ரகசிய ஞானத்தைப்‌ பற்றியும்‌, தனது நேர்மையைப்‌ பற்றியும்‌ பெருமையடித்துக்கொள்கிறார்‌. தனது புனிதத்‌ தன்மையையும்‌, தூய்மையையும்‌ அவர்‌ ஒரு காட்சியாக்கிக்கொள்கிறார்‌. ஆனால்‌ அவர்‌ தன்‌ உள்ளத்தில்‌ பட்சமாய்‌ இல்லை. தனது புகழைப்‌ பற்றியே அவர்‌ பலப்படப்‌ புகழ்ந்து பாடிக்கொள்கிறார்‌. ஆனால்‌ அவரது சொந்த மொழிகளே அடியவர்களை உருவாக்குவதில்லை. அவர்களும்‌ தெளிவடைவதில்லை. தன்னையறிதலைப்‌ பொறுத்தவரை அவரிடம்‌ ஒன்றுமில்லை. சீடர்களுக்கு அத்தகைய பள்ளிகள்‌ என்ன விதத்தில்‌ பயன்படும்‌? அதனால்‌ அவர்கள்‌ என்ன நன்மை அடைவார்கள்‌?

இதற்கு முன்னர்‌ குறிப்பிட்ட குருவானவர்‌ வேறுவிதமானவர்‌. அவரது அருளால்‌ எவ்வித முயற்சி, படிப்புமின்றியே ஞானம்‌ தானாகவே எனக்குப்‌ பளிச்சிட்டது. நான்‌ எதையும்‌ தேடவில்லை. ஆனால்‌ எனக்கு எல்லாம்‌ வெள்ளிடைமலையென விளங்கியது. குரு மட்டுமே தலைகீழ்‌ தொங்கவிடுதல்‌” எவ்வாறு மகிழ்ச்சியைக்‌ கொடுக்கும்‌ என்பதை அறிவார்‌.

அந்நான்கு பேர்களுள்‌ ஒருவன்‌ கர்மகர்த்தா. அவனுக்கு எவ்வாறு சில சடங்குமுறைகளை செய்வது அல்லது செய்யாமல்‌ இருப்பது என்று மட்டுமே தெரியும்‌. இரண்டாமவன்‌ ஞானி. தனது ஞானப்‌ பெருமையில்‌ ஊறியவன்‌. மூன்றாவது ஆள்‌ கடவுள்‌ ஒருவரே ஆட்டுவிப்பவர்‌ என்று நம்பி அவரிடம்‌ தம்மை முழுமையாக சரணாக்கிவிட்ட பக்தன்‌. மூவரும்‌ விவாதித்து வாதம்‌ பண்ணிக்‌ கொண்டிருக்கையில்‌ கடவுளைப்‌ பற்றிய கேள்வி எழுந்தது. முறையான வழிகாட்டுதல்‌ இல்லாத அறிவுடன்‌ அவரைத்‌ தேடிக்கொண்டு போனார்கள்‌. விவேகம்‌, பற்றின்மை இவைகளின்‌ அவதாரமான சாயி நால்வருள்‌ ஒருவர்‌.

அவரே பிரம்ம அவதாரமாயிருந்தும்‌ ஏன்‌ அவர்களுடன்‌ சேர்ந்து முட்டாள்தனமாக நடந்துகொள்கிறார்‌ என்று சிலர்‌ கேட்கலாம்‌. மக்கள்‌ நன்மையடைவதற்கும்‌, அவர்கள்‌ தம்மைப்‌ பின்பற்றும்படித்‌ தாம்‌ ஓர்‌ எடுத்துக்காட்டாக இருக்கவுமே அவர்‌ இதைச்‌ செய்தார்‌. தாமே ஒரு அவதாரமாயிருந்தும்‌ கீழான வனஜாரியை மதித்து, “உணவே கடவுள்‌” என்ற உறுதியான நம்பிக்கையுடன்‌ அதை ஏற்றுக்கொண்டார்‌.

வனஜாரியின்‌ விருந்தோம்பலை ஏற்காதவர்கள்‌ எங்ஙனம்‌ கஷ்டப்பட்டார்கள்‌ என்றும்‌ குருவின்றி ஞானம்‌ அடைவது இயலாதென்பதையும்‌ அவர்‌ காண்பித்தார்‌. ஸ்ருதி (தைத்திரீய உபநிஷதம்‌) நமக்கு மாதா - பிதா - குருவின்‌ வழிபாட்டையும்‌, புனித கிரந்தங்களைக்‌ கற்பதையும்‌, கற்பிக்க வேண்டுவதையும்‌ வற்புறுத்துகிறது. இவைகளே நமது மனதைத்‌ தூய்மைப்படுத்தும்‌. இத்தூய்மை செய்யப்பட்டாலொழிய தன்னையறிதல்‌ இயலாததாகும்‌. உணர்ச்சிகளோ, மனதோ, புத்தியோ ஆன்மாவை எட்டுவதில்லை. காணுதல்‌, அறிந்துகொள்ளுதல்‌ இவ்விஷயத்தில்‌ நமக்கு உதவாது. குருவின்‌ அருள்‌ ஒன்றே எண்ணப்படுவதாகும்‌. நமது வாழ்க்கையின்‌ லட்சியங்களான தர்மம்‌, அர்த்தம்‌, காமம்‌ ஆகியவை நமது முயற்சியாலேயே அடையப்படுகிறது. ஆனால்‌ மோக்ஷம்‌ (விடுதலை) குருவின்‌ உதவியாலேயே அடையப்படுகிறது.

சாயியின்‌ தர்பாரில்‌ பல மனிதர்கள்‌ தோன்றி தங்கள்‌ பாத்திரத்தை நடித்தார்கள்‌. ஜோசியர்கள்‌ வந்து தங்கள்‌ ஜோசியங்களைக்‌ கூறினார்கள்‌. இளவரசர்கள்‌, கனவான்கள்‌, ஏழைகள்‌, பணக்காரர்கள்‌, சந்நியாசிகள்‌, யோகிகள்‌, பாடகர்கள்‌ மற்றும்‌ பலரும்‌ தரிசனத்திற்காக வந்தனர்‌. மஹார்‌ (கீழ்ஜாதியினர்‌) கூட வந்து தனது ஜோஹாரைத்‌ (வந்தனத்தைத்‌) தெரிவித்துவிட்டு சாயிபாபாவே தனது மாயிபாபா (உண்மையான பெற்றோர்‌) என்கிறார்‌. ஜாலவித்தைக்காரன்‌, கோந்தலிகள்‌ (வில்லுப்பாட்டுக்காரர்கள்‌)), குருடு, நொண்டி, நாத்பன்திகள்‌ (பாடகர்கள்‌), நாட்டியக்காரர்கள்‌, விளையாட்டு வீரர்கள்‌ இவ்வாறாக மற்றும்‌ பலரும்‌ வந்தனர்‌. உரிய வரவேற்பு அளிக்கப்பட்டனர்‌. வனஜாரியும்‌ தனது தருணத்தில்‌ தனக்குக்‌ கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நடித்தான்‌. நாம்‌ இப்போது வேறொரு கதைக்குப்‌ போவோம்‌.

* அன்னம்‌ ப்ரம்மம்‌‌

உண்ணாவிரதமும்‌, திருமதி கோகலேயும்‌

பாபா ஒருபோதும்‌ பட்டினி இருந்ததில்லை. மற்றவர்களையும்‌ பட்டினியிருக்க அனுமதிக்கவில்லை. விரதம்‌ இருப்பவன்‌ மனது அமைதியாய்‌ இருப்பதே இல்லை. பின்னர்‌ அவன்‌ எங்ஙனம்‌ பரமார்த்திகத்தை அடைய முடியும்‌? வெறும்‌ வயிற்றுடன்‌ கடவுள்‌ அறியப்படமாட்டார்‌. முதலில்‌ ஆன்மா சாந்தப்படவேண்டும்‌. வயிற்றில்‌ உணவின்‌ ஈரம்‌ இல்லையாயின்‌ அவர்தம்‌ புகழை எந்நாவுடன்‌ நாம்‌ இசைக்க முடியும்‌? கடவுளை எந்தக்‌ கண்களுடன்‌ பார்க்க முடியும்‌? அல்லது எந்தக்‌ காதுகளால்தான்‌ அவர்‌ புகழைக்‌ கேட்க முடியும்‌?

சுருக்கமாக, நமது எல்லா உறுப்புகளும்‌ அவைகட்குரிய போஷிப்பைப்‌ பெற்று நன்றாக இருக்கும்போது கடவுளை அடைவதற்குரிய பக்தி மற்றும்‌ பல சாதனைகளையும்‌ நாம்‌ பெற முடியும்‌. எனவே பசியோடிருத்தலோ மிகவும்‌ உண்பதோ ஆகாது. உடலுக்கும்‌, மனதுக்கும்‌ மிதமான போக்கே உண்மையில்‌ நல்லது.

திருமதி கோகலே என்ற பெண்மணி பாபாவின்‌ பக்தையான திருமதி காஷிபாய்‌ கனிட்கர்‌ என்பவளிடமிருந்து தாதா கேல்கருக்கு ஒரு அறிமுகக்‌ கடிதம்‌ வாங்கிவந்தாள்‌. அதற்கு முந்தின தினம்‌ பாபா, தாதா கேல்கரிடம்‌ தமது குழந்தைகளை ஷிம்காவின்‌ (புனித நாட்கள்‌) போது பட்டினியாயிருப்பதைத்‌ தாம்‌ அனுமதிக்க முடியாது என்று கூறினார்‌.

அடுத்த நாள்‌ அப்பெண்மணி தாதா கேல்கருடன்‌ சென்று பாபாவின்முன்‌ அமர்ந்தபோது பாபா, உடனே அவளை நோக்கி, “பட்டினியிருக்கத்‌ தேவையென்ன?” என்று கேட்டார்‌. தாதாபட்டின்‌ வீட்டுக்குப்‌ போய்‌ பூரணப்‌ போளியைச்‌ (கடலைமாவு, வெல்லம்‌ சேர்த்த கோதுமைரொட்டி) செய்து அவர்‌ குழந்தைகளுக்குக்‌ கொடுத்து நீயும்‌ உண்பாய்‌ என்று கூறினார்‌. பண்டிகை நன்னாட்கள்‌ இருந்தன. திருமதி கேல்கர்‌ அப்போது வீட்டு விலக்கம்‌ ஆகியிருந்தாள்‌. தாதாபட்டின்‌ வீட்டில்‌ சமையல்‌ செய்ய ஒருவரும்‌ இல்லை, எனவே பாபாவின்‌ அறிவுரை ‘காலத்தினாற்‌’ செய்ததாயிற்று. திருமதி கோகலே தாதாபட்டின்‌ வீட்டிற்குச்‌ செல்லவேண்டியதாயிற்று. சொல்லியபடி அப்பண்டத்தைச்‌ செய்யவேண்டியதாயிற்று. அன்றைக்கு அவள்‌ சமைத்து மற்றவர்க்கும்‌ போட்டுத்‌ தானும்‌ உண்டாள்‌. என்ன அருமையான கதை. எத்தகைய ஆழமான படிப்பினை!

பாபாவின்‌ எஜமானர்‌

பாபா தமது பால்யப்‌ பருவத்தின்‌ கதை ஒன்றைப்‌ பின்வருமாறு சொன்னார்‌. நான்‌ சிறு பையனாக இருந்தபோது உணவுக்காக வேலை தேடிக்கொண்டிருந்தேன்‌. பீட்காவனுக்கு சென்றேன்‌. அங்கு எனக்கு எம்ப்ராய்டரி வேலை கிடைத்தது. ஒரு துன்பத்தையும்‌ பாராது கடுமையாக உழைத்தேன்‌. முதலாளி என்மீது மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்‌. எனக்குமுன்‌ மற்ற மூன்று பையன்களும்‌ வேலை செய்தனர்‌. முதல்வன்‌ ரூ.50ம்‌ இரண்டாமவன்‌ ரூ.100ம்‌ மூன்றாமவன்‌ ரூ.150ம்‌ பெற்றனர்‌. இவர்களின்‌ மொத்தத்‌ தொகையைப்போல்‌ இரண்டுபங்கு நான்‌ பெற்றேன்‌. அதாவது ரூ.600ஐ பெற்றேன்‌. எனது புத்திசாதுர்யத்தைக்‌ கண்ட முதலாளி என்னை நேசித்தார்‌, துதித்தார்‌. முழுஆடை, தலைக்கு டர்பன்‌, உடம்புக்கு ஷேலா (சால்வை) முதலியவற்றைத்‌ தந்து என்னைக்‌ கெளரவித்தார்‌. இவற்றை உபயோகிக்காமல்‌ நான்‌ பத்திரமாக வைத்திருந்தேன்‌. எந்த ஒரு மனிதன்‌ அளிப்பதும்‌ நெடுநாள்‌ இருப்பதில்லை. 

அது முழுமையுடையதுமல்ல. ஆனால்‌ எனது எஜமானர்‌ (கடவுள்‌) அளிப்பதோ  காலமுடிவு பரியந்தம்‌ நிலைத்திருக்கிறது. அவரின்‌ வெகுமதியை வேறந்த வெகுமதியுடனும்‌ ஒப்பிட முடியாது. எனது எஜமானரோ, ‘எடுத்துக்கொள்‌, எடுத்துக்கொள்‌’ என்கிறார்‌. ஆனால்‌ எல்லோரும்‌ என்னிடம்‌ வந்து ‘கொடு, கொடு’ என்கிறார்கள்‌. நான்‌ கூறுவதன்‌ பொருளை ஒருவரும்‌ கவனத்துடன்‌ பார்ப்பதில்லை. எனது எஜமானரின்‌ கஜானா நீரம்பியிருக்கிறது. நிரம்பி வழிகிறது. நான்‌ கூறுவதாவது, வண்டிப்‌ பாரங்களில்‌ இச்செல்வத்தை எடுத்துச்‌ செல்லுங்கள்‌. சத்தியவதியான தாயாரின்‌ ஆசீர்வதிக்கப்பட்ட மகன்‌ இச்சசல்வத்தால்‌ தன்னை நிரப்பிக்‌ கொள்ளட்டும்‌. எனது பக்கீரின்‌ திறமை, எனது பகவானின்‌ லீலை, எனது எஜமானரின்‌ இயற்கையான செயல்வன்மை இவை மிகவும்‌ நூதனமானவை. என்னைப்பற்றி என்ன? உடம்பு (மண்‌) மண்ணுடன்‌ கலந்துவிடும்‌. இந்நேரம்‌ இனிமேல்‌ மீண்டும்‌ வராது. நான்‌ எங்கோ செல்கிறேன்‌. எங்கோ அமர்கிறேன்‌. மாயை என்னை கடுமையாக தொல்லைப்படுத்துகிறது, இருப்பினும்‌ எனது மாந்தர்களுக்காக எப்போதும்‌ நான்‌, ஆசைபூண்டு கவலைப்படுகிறேன்‌. எதையாவது (ஆன்மிக முயற்சி) செய்யும்‌ ஒருவன்‌ அதன்‌ பழத்தை அறுவடை செய்கிறான்‌. எனது இம்மொழிகளைக்‌ கேட்பவன்‌ விலைமதிப்பற்ற சந்தோஷத்தைப்‌ பெறுகிறான்‌

ஸ்ரீ சாயியைப்‌ பணிக

அனைவர்க்கும்‌ சாந்தி நிலவட்டும்‌