Ads

அத்தியாயம் - 33 - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்



அத்தியாயம்‌ - 33

உதியின்‌ பெருமை,

தேள்கடி - பிளேக்‌ வியாதிகள்‌ குணமாக்கப்படுதல்‌ - ஜாம்நேர்‌ அற்புதம்‌ - நாராயண்ராவின்‌ வியாதி - பாலாபுவா சுதார்‌ - அப்பா சாஹேப்‌ குல்கர்ணி, ஹரிபாவ்‌ கர்ணிக்‌.

சென்ற அத்தியாயத்தில்‌ குருவின்‌ பெருமையைப்பற்றி நாம்‌ விவரித்தோம்‌. இந்த அத்தியாயத்தில்‌ உதியின்‌ பெருமையைப்பற்றி விளக்குவோம்‌.

முன்னுரை

இப்போது பெரும்‌ ஞானிகளின்முன்‌ தலைதாழ்த்தி வணங்குவோம்‌. அவர்களின்‌ கருணை நிறைந்த கடைக்கண்‌ பார்வைகளே மலைபோன்ற பாவங்களை அழித்து, நமது ஒழுக்கத்திவுள்ள தீய கறைகளை நீக்கிச்‌ சீர்படுத்துகிறது. அவர்களின்‌ சாதாரணப்‌ பேச்சே நல்ல உபதேசத்தை அளித்து நமக்கு அழியாத இன்பத்தை நல்குகிறது. “இது எங்களுடையது, அது உங்களுடையது” என்ற பாகுபாடு அவர்கள்‌ மனதில்‌ எழுவதே இல்லை. அவர்களது கடனானது இப்பிறவியிலும்‌, இனிவரும்‌ பிறவிகளிலும்‌ நம்மால்‌ திருப்பிக்‌ கொடுக்கப்படப்‌ போவதேயில்லை.

உதி

பாபா அனைவரிடமிருந்தும்‌ தஷஷிணையைப்‌ பெற்றார்‌. இவ்வாறாகச்‌ சேகரிக்கப்பட்ட பணத்திலிருந்து அவர்‌ பெருமளவு தர்மத்திற்கும்‌ மீதியை விறகு வாங்குவதற்கும்‌ செலவழித்தார்‌. அவர்‌ எப்போதும்‌ எரியவிட்டுக்கொண்டிருந்த துனி என்ற புனித நெருப்பில்‌ விறகை இட்டார்‌. இந்நெருப்பிலிருந்து வரும்‌ சாம்பலானது ‘உதி’ என்று அழைக்கப்பட்டது. பக்தர்கள்‌ ஷீர்டியைவிட்டுப்‌ புறப்படும்‌ சமயத்தில்‌ இந்த உதியானது தாராளமாக வினியோகிக்கப்பட்டது.

இந்த உதியினால்‌ பாபா குறிப்பிடுவது அல்லது உபதேசிப்பது என்ன? இப்பிரபஞ்சத்தில்‌ காணப்படும்‌ நிகழ்ச்சிகள்‌ யாவும்‌ சாம்பலைப்‌ போன்று நிலையற்ற பொருள்‌ என்பதே. பஞ்ச பூதங்களால்‌ அமைக்கப்பட்ட நம்‌ உடம்பானது அவைகளின்‌ எல்லா இன்பங்களையும்‌ துய்த்து முடித்து ஓய்ந்த பின்னர்‌ சாம்பலாக்கப்படும்‌. அவர்களின்‌ உடல்‌ சாம்பலாக்கப்படும்‌ என்ற உண்மையை பக்தர்களுக்கு நினைவூட்டவே பாபா உதியை வழங்குகிறார்‌. பிரம்மம்‌ ஒன்றே மெய்ப்பொருள்‌ என்பதையும்‌, பிரபஞ்சம்‌ நிலையற்றது என்றும்‌ தந்‌தை, தாய்‌, மகன்‌ இவர்கள்‌ யாவரும்‌ உண்மையில்‌ நம்முடையவர்‌ அல்ல என்றும்‌ இதனால்‌ உபதேசித்தார்‌. இவ்வுலகத்துக்கு நாம்‌ தனியாக வந்தோம்‌. தனியாகவே உலகைவிட்டுப்‌ போகவேண்டும்‌. உதி பலவிதமான உடல்‌-மன நோய்களைக்‌ குணப்படுத்தியது என்பது அறியப்பட்டது. இப்போதும்‌ கூட அறியப்பட்டுக்‌ கொண்டிருக்கிறது.

நித்ய - அநித்ய வஸ்துக்களைப்‌ பகுத்துணரும்‌ விவேகம்‌ மற்றும்‌ அநித்ய வஸ்துக்களில்‌ பற்றின்மை முதலியதான தத்துவங்களை பாபா அவரது உதி, தகஷிணையின்‌ மூலம்‌ அடியவர்களின்‌ காதுகளில்‌ ஓத விரும்பினார்‌. முன்னது (உதி) விவேகத்தையும்‌ பின்னது (தக்ஷிணை) பற்றின்மையையும்‌ நமக்கு அறிவுறுத்தியது. இவ்விரண்டும்‌ நம்மிடத்தில்‌ இருந்தாலொழிய நாம்‌ இச்சம்சார சாகரத்தைக்‌ கடக்க முடியாது. எனவே பாபா தகஷிணையைக்‌ கேட்டுப்‌ பெற்றார்‌. அவர்கள்‌ விடைபெறும்போது உதியை பிரசாதமாக அளித்து அதை அவர்கள்‌ நெற்றியிலிட்டுத்‌ தமது வரம்‌ நல்கும்‌ கரத்தை அவர்கள்‌ தலைமீது வைத்தார்‌. பாபா மகிழ்வான மனநிலையில்‌ இருக்கும்போது ஆனந்தமாகப்‌ பாடுவார்‌. அத்தகைய ஒரு பாட்டு, உதியைப்‌ பற்றியதாகும்‌. உதி பாடலின்‌ பல்லவி இவ்வாறானது.

ரமதே ராம்‌ ஆவோஜி! ஆவோஜி!

உதியாங்கி கோனியா லாவோஜி! லாவோஜி!

ஓ! விளையாட்டு ராமா, வாரும்‌! வாரும்‌!

உங்களுடன்‌ உதி மூட்டைகளை கொண்டு வாரும்‌! வாரும்‌!

பாபா இதனை மிகுந்த தெளிவான இனிமையான குரலில்‌ பாடுவது வழக்கம்‌.

உதியைப்‌ பற்றி ஆன்மிகக்‌ குறிப்பாகச்‌ சொல்லப்பட்ட பொருள்‌ இவ்வளவே. அதற்குத்‌ தன்னுடையதான லெளகிக தனிமுறைச்‌ சிறப்பும்கூட உண்டு. உதி ஆரோக்கியம்‌, சுபிட்சம்‌, கவலைகளினின்று விடுதலை மற்றும்‌ பல லோகாயத லாபங்களை அளித்தது. எனவே நமது ஆன்மிக, லெளகிக இலட்சியங்களை எய்த நமக்கு உதவுகிறது. உதி பற்றிய கதைகளை நாம்‌ இப்போது தொடங்குவோம்‌.

தேள்கடி

நாசிக்கைச்‌ சேர்ந்த நாராயண்‌ மோதிராம்‌ ஜனி என்பவர்‌ பாபாவின்‌ ஒரு அடியவர்‌. இவர்‌ ராமச்சந்திர வாமன்‌ மோடக்‌ என்ற பாபாவின்‌ மற்றுமொரு அடியவரின்‌ கீழ்‌ வேலை பார்த்து வந்தார்‌. ஒருமுறை அவர்‌ தமது தாயாருடன்‌ சென்று பாபாவைப்‌ பார்த்தார்‌. அப்போது பாபா அவளிடம்‌, அவரது மகன்‌ இனிமேல்‌ வேலைசெய்யக்‌ கூடாதென்றும்‌ சுய வியாபாரம்‌ ஆரம்பிக்க வேண்டுமென்றும்‌ கூறினார்‌. சில நாட்களுக்குப்‌ பின்‌ இவ்வுரை உண்மையானது. நாராயண்‌ ஜனி வேலையை விட்டுவிட்டு ஆனந்தாஸ்ரம்‌ என்ற ஒரு தங்கும்‌ விடுதியை ஆரம்பித்தார்‌. அது செழிப்பாக வளர்ந்தது.

ஒருமுறை இந்த நாராயண்‌ ஜனியின்‌ நண்பர்‌ ஒருவரைத்‌ தேள்‌ கடித்தது. அதனால்‌ ஏற்பட்ட வலி தீவிரமானது. தாங்கிக்கொள்ள முடியாதது. அத்தகைய சந்தர்ப்பங்களில்‌ உதி மிகவும்‌ பலனுள்ளது. வலிக்கும்‌ இடத்தில்‌ அது தடவப்படவேண்டும்‌. எனவே நாராயண்‌ உதியைத்‌ தேடினார்‌ ஆனால்‌ கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர்‌ அவர்‌ பாபாவின்‌ படத்தின்முன்‌ நின்று பாபாவின்‌ உதவியைவேண்டி, அவர்‌ நாமத்தை ஜெபித்து பாபாவின்‌ படத்தின்‌ முன்னால்‌ புகைந்துகொண்டிருக்கும்‌ ஊதுபத்தியின்‌ சாம்பலிலிருந்து ஒரு சிட்டிகை எடுத்து அதை பாபாவின்‌ உதியாக நினைத்துக்கொண்டு வலிக்கும்‌ இடத்திலும்‌, கடிவாயிலும்‌ தடவினார்‌. அவர்‌ விரலை எடுத்த உடனேயே வலி மறைந்துவிட்டது. இருவருமே உணர்ச்சிவசப்பட்டுப்‌ பெருமகிழ்ச்சியுற்றனர்‌.

நெறிகட்டும்‌ பிளேக் வியாதி

ஒருமுறை பாந்த்ராவிலுள்ள அடியவர்‌ ஒருவர்‌ வேறோர்‌ இடத்திலுள்ள தனது மகள்‌, நெறிகட்டும்‌ பிளேக்‌ வியாதியால்‌ கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறாள்‌ என்பதை அறிந்தார்‌. அவரிடம்‌ உதி இல்லை. எனவே அவர்‌ நானா சாஹேப்‌ சாந்தோர்கரிடம்‌ அதை அனுப்பும்படி விஷயத்தைத்‌ தெரியப்படுத்தினார்‌. நானா சாஹேப்‌ தனது மனைவியுடன்‌ கல்யாணுக்குப்‌ பயணம்‌ செய்து கொண்டிருந்தபோது தாணே ரயில்‌ நிலையத்துக்கருகில்‌ உள்ள ஒரு சாலையில்‌ இவ்விஷயத்தைக்‌ கேள்விப்பட்டார்‌. அப்போது அவரிடம்‌ உதி இல்லை. எனவே அவர்‌ தரையிலிருந்து கொஞ்சம்‌ மண்ணை எடுத்து பாபாவைத்‌ தியானம்‌ செய்து அவரது உதவியைத்‌ தொழுது வேண்டிக்கொண்டு அருகிலிருந்த தனது மனைவியின்‌ நெற்றியில்‌ இட்டார்‌. அடியவர்‌ இவையெல்லாவற்றையும்‌ கண்டார்‌. பின்பு அவர்‌ தமது மகள்‌ வீட்டுக்குச்‌ சென்றபோது மூன்று நாட்களாகக்‌ கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த தனது மகள்‌, தாணே ரயில்‌ நிலையத்தருகில்‌ நானா பாபாவை வேண்டிக்கொண்ட அதே சமயத்திலிருந்து குணமடையலானாள்‌ என்பதை அறிந்து மிகவும்‌ மகிழ்ச்சியடைந்தார்‌.

ஜாம்நேர்‌ அற்புதம்‌

சுமாராக 1904-05ம்‌ ஆண்டில்‌, நானா சாஹேப்‌ சாந்தோர்கர்‌ ஷீர்டியிலிருந்து நூறு மைல்களுக்கு அப்பால்‌ உள்ள கான்தேஷ்‌ ஜில்லாவிலுள்ள ஜாம்நேரின்‌ மம்லதாராக இருந்தார்‌. அவரது மகளான மைனாதாயி கருவுற்றுப் பிரசவிக்க இருந்தாள்‌. அவளது பிரசவம்‌ மிகவும்‌ கஷ்டமாகி இரண்டு மூன்று நாட்களாக பிரசவ வேதனையால்‌ கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தாள்‌. நானா சாஹேப்‌ எல்லாவிதப்‌ பரிகாரங்களைச்‌ செய்து முயற்சித்தும்‌ பலனில்லை. அவர்‌ பாபாவை நினைவுகூர்ந்து அவரின்‌ உதவியைத்‌ தொழுது வேண்டினார்‌. அப்போது ஷீர்டியில்‌ பாபுகீர்புவா என்று பாபா கூப்பிடும்‌ ராம்கீர்புவா என்பவர்‌ கான்தேஷிலுள்ள தமது சொந்த ஊருக்குப்‌ போக விரும்பினார்‌.

பாபா அவரைக்‌ கூப்பிட்டு, அவர்‌ வீட்டுக்குப்‌ போகும்‌ வழியில்‌ உள்ள ஜாம்நேரில்‌ சிறிது தங்கி ஓய்வெடுத்துக்கொண்டு செல்லுமாறும்‌ நானா சாஹேபிடம்‌ உதியையும்‌, ஆரத்தியையும்‌ அளிக்கும்படியும்‌ சொன்னார்‌. ராம்கீர்புவா தன்னிடம்‌ இரண்டே ரூபாய்கள்‌ தான்‌ இருப்பதாகவும்‌ ஜல்காவன்‌ வரையிலுள்ள ரயில்வே கட்டணத்துக்கு மட்டுமே இதுபோதுமானது என்றும்‌, ஜல்காவனில்‌ இருந்து முப்பது மைல்‌ தூரத்திலுள்ள ஜாம்நேர்‌ வரை போவது தம்மால்‌ இயலாது என்றும்‌ கூறினார்‌. இதற்கு பாபா, எல்லா ஏற்பாடுகளும்‌ செய்யப்படுமாதலால்‌ அவரைக்‌ கவலைப்பட வேண்டாம்‌ என்றும்‌ உறுதியளித்தார்‌.

பின்னர்‌ மாதவ்‌ அட்கரால்‌ புனையப்பட்ட புகழ்பெற்ற ஆரத்திப்‌ பாடலை (அதன்‌ மொழி பெயர்ப்பு இறுதியில்‌ அளிக்கப்படுகிறது) ஷாமாவிடம்‌ எழுதச்‌ சொல்லி, அதன்‌ பிரதியை உதியுடன்‌ ராம்கீர்புவாவிடம்‌ கொடுத்து, நானா சாஹேபிடம்‌ கொடுக்கும்படிக்‌ கூறினார்‌. பின்னர்‌ ராம்கீர்புவா பாபாவின்‌ மொழிகளை நம்பி ஷீர்டியைவிட்டுப்‌ புறப்பட்டு ஜல்காவனை அதிகாலை இரண்டு மணியளவில்‌ அடைந்தார்‌. அப்போது அவரிடம்‌ இரண்டே அணாக்கள்தாம்‌ மீதமிருந்தன. மிகவும்‌ நெருக்கடியான நிலையில்‌ இருந்தார்‌. அவரது பெறும்சுமை தணிவுறும்‌ வகையில்‌, “யார்‌ ஷீர்டியைச்‌ சேர்ந்த பாபுகீர்புவா?” என்று யாரோ கூப்பிடுவது கேட்டது. பின்னர்‌ அவர்‌ அவனிடம்‌ சென்று, தாமே பாபுகீர்புவா என்று கூறினார்‌. தாம்‌ நானா சாஹேபிடமிருந்து வருவதாகவும்‌ அவருடைய வேலையாள்‌ என்றும்‌ கூறி நல்ல ஜோடிக்‌ குதிரைகளுடன்‌ கூடிய ஒரு பிரமாதமான வண்டியிடம்‌ அழைத்துச்‌ சென்றான்‌.

அவர்கள்‌ இருவரும்‌ அதில்‌ பிரயாணம்‌ செய்தார்கள்‌. வண்டி வேகமாக ஓடியது. அதிகாலையில்‌ அவர்கள்‌ ஓடைக்கரையொன்றை அடைந்தனர்‌. வண்டியோட்டி குதிரைகளைத்‌ தண்ணீர்‌ குடிக்க அழைத்துச்‌ சென்றான்‌. பியூன்‌, ராம்கீர்புவாவை சிறிது உணவு உட்கொள்ளுமாறு கூறினான்‌. பியூனின்‌ தாடி, மீசை இவைகளையெல்லாம்‌ ராம்கீர்புவா பார்த்துவிட்டு அவனை முஹமதியனாகச்‌ சந்தேகப்பட்டு எவ்விதச்‌ சிற்றுண்டியையும்‌ அவனிடமிருந்து பெற விருப்பமில்லாதவராயிருந்தார்‌. ஆனால்‌ வேலையாளோ தாம்‌ ஒரு ஹிந்து, கார்வாலைச்‌ சேர்ந்த க்ஷத்ரியன்‌ என்றும்‌, நானா சாஹேப்‌ இந்த சிற்றுண்டிகளையெல்லாம்‌ அனுப்பியிருப்பதாகவும்‌ இதை ஏற்றுக்கொள்வதில்‌ எவ்வித கஷ்டமோ, சந்தேகமோ, வேண்டியதில்லையென்றும்‌ கூறினான்‌. பின்னர்‌ அவர்கள்‌ இருவரும்‌ சிற்றுண்டி உண்டு மீண்டும்‌ புறப்பட்டனர்‌. பொழுதுவிடியும்போது ஜாம்நேரை அடைந்தனர்‌. ராம்கீர்புவா சிறுநீர்‌ கழிக்கச்சென்று சில நிமிடங்களில்‌ திரும்பி வந்தார்‌. அப்போது குதிரைவண்டியையும்‌, வண்டியோட்டியையும்‌ காணாது பேச்சற்றவரானார்‌.

பின்னர்‌ அருகிலுள்ள கச்சேரிக்குச்‌ சென்று விசாரித்து மம்லதார்‌, வீட்டில்‌ இருப்பதை அறிந்து கொண்டார்‌. நானா சாஹேபின்‌ வீட்டுக்குச்‌ சென்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பாபாவின்‌ உதியையும்‌, ஆரத்தியையும்‌ அளித்தார்‌. இத்தருணத்தில்‌ மைனாதாயின்‌ விஷயம்‌ மிகமிகத்‌ தீவிரமடைந்து வீட்டிலிருந்தோர்‌ அனைவரும்‌ அவளைக்‌ குறித்து ஆழ்ந்த கவலையுற்றனர்‌. நானா சாஹேப்‌ தனது மனைவியை அழைத்து உதியைத்‌ தண்ணீரில்‌ கரைத்துக்‌ கொடுக்கும்படியும்‌, ஆரத்தியைப்‌ பாடும்படியும்‌ கேட்டுக்கொண்டார்‌. பாபாவின்‌ உதவி, உற்ற சமயத்தில்‌ கிடைத்திருக்கின்றதென அவர்‌ நினைத்தார்‌. சில நிமிடங்களில்‌ பிரசவம்‌ பத்திரமாக ஆனது என்றும்‌, கண்டம்‌ கடந்து போய்விட்டது என்றும்‌ பிரசவ அறையிலிருந்து செய்தி கிடைத்தது. ராம்கீர்புவா நானா சாஹேபிடம்‌, பியூன்‌, வண்டி, சிற்றுண்டி முதலியவைகளுக்காக நன்றி செலுத்தியபோது நானா பெருமளவு ஆச்சரியப்பட்டார்‌. ஏனெனில்‌ அவர்‌ ஸ்டேஷனுக்கு ஒருவரையும்‌ அனுப்பவில்லை. ஷீர்டியிலிருந்து எந்த ஆள்‌ வருவதும்‌ அவருக்குத்‌ தெரியாது.

தாணேவைச்‌ சேர்ந்த திரு B.V. தேவ்‌ என்னும்‌ ஓய்வுபெற்ற மம்லதார்‌ இதைப்பற்றி நானாவின்‌ புதல்வனான பாபுராவ்‌ சாந்தோர்கரிடமும்‌, ஷீர்டியைச்‌ சேர்ந்த ராம்கீர்புவாவிடமும்‌ விசாரித்துவிட்டுத்‌ தன்னைத்‌ தானே திருப்திபடுத்திக்கொண்ட பின்பு, சாயிலீலா சஞ்சிகையில்‌ (தொகுப்பு 13, எண்‌. 11,12&13) ஒரு பகுதி உரைநடையாகவும்‌ ஒரு பகுதி கவிதையாகவும்‌ கொண்ட கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்‌.

சகோதரர்‌ B.V. நரசிம்மஸ்வாமியும்‌ (1) மைனாதாயி, (2) பாபு சாஹேப்‌ சாந்தோர்கர்‌, (3) ராம்கீர்புவா இவர்களிடமிருந்து 1.6.1936, 16.9.1936, 1.12.1936 ஆகிய தேதிகளிடப்பட்ட வாக்குமூலத்தைப்‌ பெற்று “அடியவர்களின்‌ அனுபவங்கள்‌” பகுதி IIIல்‌ பதிப்பித்து இருக்கிறார்‌. ராம்கீர்புவாவின்‌ வாக்குமூலம்‌ கீழ்வருமாறு.

“ஒருநாள்‌ பாபா என்னை அவரிடம்‌ அழைத்து, உதிப்பொட்டலம்‌ ஒன்றையும்‌, பாபாவின்‌ ஆரத்தியின்‌ பிரதி ஒன்றையும்‌ கொடுத்தார்‌. அச்சமயம்‌ நான்‌ கான்தேஷ்‌ போகவேண்டியிருந்தது. பாபா என்னை ஜாம்நேர்‌ போகும்படியும்‌, ஆரத்திப்‌ பாடலையும்‌, உதியையும்‌ ஜாம்நேரில்‌ நானா சாஹேப்‌ சாந்தோர்கரிடம்‌ கொடுக்கும்படியும்‌ கூறினார்‌. என்னிடம்‌ இருப்பதெல்லாம்‌ ரூ.2 என்றும்‌ கோபர்காவனிலிருந்து ஜல்காவன்‌, பின்னர்‌ வண்டியில்‌ ஜல்காவனிலிருந்து ஜாம்நேர்‌ செல்வதற்கும்‌ அது எங்ஙனம்போதும்‌ என்று நான்‌ அவரிடம்‌ கேட்டேன்‌. பாபா “கடவுள்‌ கொடுப்பார்‌” என்று கூறினார்‌. அன்று வெள்ளிக்கிழமை.

நான்‌ உடனே புறப்பட்டேன்‌. மன்மாட்‌ இரவு 7.30 மணிக்குச்‌ சென்றேன்‌. பின்னர்‌ ஜல்காவனிற்கு காலை 2.45க்குச்‌ சென்றேன்‌. அந்த நாட்களில்‌ பிளேக்‌ கட்டுப்பாடுகள்‌ விதிக்கப்பட்டிருந்தன. எனக்கு மிகவும்‌ கஷ்டமாக இருந்தது. ஜாம்நேர்‌ செல்வதற்கு என்ன செய்யவேண்டும்‌ என்று நான்‌ கண்டுபிடிக்க வேண்டியதிருந்தது. காலை சுமார்‌ 3 மணியளவில்‌ பூட்ஸ்‌, டர்பன்‌, நல்ல உடைகளுடன்‌ கூடிய ஒரு வேலையாள்‌ என்னிடம்‌ வந்து என்னை வண்டியில்‌ அமர்த்தி ஓட்டிச்சென்றான்‌. நான்‌ திகிலுடன்‌ இருந்தேன்‌. வழியில்‌ பாகூரில்‌ சிற்றுண்டி உட்கொண்டேன்‌. ஜாம்நேரை நாங்கள்‌ அதிகாலை அடைந்தோம்‌. நான்‌ சிறுநீர்‌ கழிக்கச்சென்று திரும்பியபோது குதிரைவண்டியைக்‌ காணவில்லை. வண்டிக்காரனும்‌ மறைந்துபோனான்‌

நாராயாண்ராவ்‌

பக்தர்‌ நாராயண்ராவ்‌ (தந்‌தை பெயரும்‌ உபபெயரும்‌ தரப்படவில்லை) பாபா வாழ்ந்திருக்கும்போது இரண்டுமுறை அவரைச்‌ சந்திக்கும்‌ நல்லதிர்ஷ்டம்‌ பெற்றிருந்தார்‌. பாபா காலமான 1918க்கு மூன்றாண்டுகளுக்குப்‌ பின்னர்‌ அவர்‌ ஷீர்டிக்கு வர விரும்பினார்‌. ஆனால்‌ வர இயலவில்லை. பாபாவின்‌ மஹாசமாதியான ஓர்‌ ஆண்டிற்குள்‌ அவர்‌ நோய்வாய்ப்பட்டு மிகவும்‌ அவதியுற்றார்‌. எல்லாவிதமான சாதாரண சிகிச்சைகளும்‌ அவருக்குப்‌ பலன்‌ அளிக்கவில்லை. எனவே பாபாவை அல்லும்‌, பகலும்‌ தியானித்தார்‌. ஒரு நாளிரவு கனவில்‌ அவர்‌ ஓர்‌ காட்சி கண்டார்‌.

பாபா நிலவறை ஒன்றிலிருந்து வெளிவந்து அவருக்கு ஆறுதலளித்து, “கவலைப்படாதே, நாளையிலிருந்து நீ குணமடைவாய்‌. ஒரு வாரத்திற்குள்‌ நன்றாக நடமாடுவாய்‌” என்று கூறினார்‌. கனவில்‌ குறிப்பிடப்பட்ட தினத்திற்குள்‌ நாராயண்ராவ்‌ பூரணகுணமடைந்தார்‌. இப்போது கருத்தில்‌ கொள்ளவேண்டிய அம்சம்‌ இதுதான்‌,

“உடல்‌ இருந்ததனால்‌ பாபா வாழ்ந்துகொண்டிருந்தார்‌. உடலை விட்டுவிட்டதனால்‌ இறந்துவிட்டாரா? இல்லை. பாபா எப்போதுமே வாழ்கின்றார்‌. ஏனெனில்‌ ‘பிறப்பு - இறப்பு’ என்ற இருமையையும்‌ கடந்தவர்‌ அவர்‌. எவனொருவன்‌ முழுமனத்துடன்‌ அவரை நேசிக்கிறானோ, அவன்‌ எந்த நேரத்திலும்‌ எந்த இடத்திலும்‌, அவரிடமிருந்து பதிலைப்‌ பெறுகிறான்‌. நமது அருகிலேயே அவர்‌ எப்போதும்‌ இருக்கிறார்‌. எந்த ரூபத்தையும்‌ எடுத்துக்கொள்கிறார்‌. பிரியமுள்ள பக்தனிடத்துத்‌ தோன்றி அவனை திருப்திப்படுத்துகிறார்‌.

அப்பா சாஹேப்‌ குல்கர்ணி

1917ம்‌ ஆண்டு அப்பா சாஹேப்‌ குல்கர்ணிக்கு ஒரு வாய்ப்பு நேரிட்டது. அவர்‌ தாணேவுக்கு மாற்றப்பட்டு, பாலா சாஹேப்‌ பாடேயால்‌ அளிக்கப்பட்ட பாபாவின்‌ படத்தை வழிபடத்‌ தொடங்கினார்‌. உண்மையான ஆர்வத்துடன்‌ அவர்‌ வழிபாடு செய்தார்‌. பூ, சந்தனம்‌, நைவேத்யம்‌ இவைகளைத்‌ தினமும்‌ பாபாவின்‌ படத்தின்முன்‌ சமர்ப்பித்தார்‌. அவரை நேரில்‌ காணவும்‌ விரும்பினார்‌. இது தொடர்பாக ஒன்றைக்‌ குறிப்பிடலாம்‌. பாபாவின்‌ படத்தை ஆர்வத்துடன்‌ பார்ப்பதானது, அவரை நேரில்‌ காண்பதற்குச்‌ சமமாகும்‌. கீழ்வரும்‌ கதை இவ்வுண்மையை வெளிப்படுத்துகிறது.

பாலாபுவா சுதார்‌

பம்பாயைச்‌ சேர்ந்த பாலாபுவா சுதார்‌ என்னும்‌ அருட்தொண்டர்‌, அவர்தம்‌ கடவுள்பற்று, பக்தி மற்றும்‌ பஜனை முதலியவற்றால்‌ நவீன துகாராம்‌ என்று அழைக்கப்பட்டார்‌. அவர்‌ முதல்முறையாக 1917ல்‌ ஷீர்டிக்கு வந்தார்‌. பாபாவின்‌ முன்னால்‌ நமஸ்கரித்தபோது பாபா, “இம்மனிதரை நான்‌ நான்கு ஆண்டுகளாக அறிவேன்‌” என்றார்‌. பாலாபுவா ஆச்சரியப்பட்டு, இதுவே தமது முதல்‌ ஷீர்டி விஜயமாதலால்‌, அஸ்தெங்ஙனம்‌ இருக்க முடியும்‌ என்று எண்ணினார்‌.

ஆனால்‌ அதைப்பற்றித்‌ தீவிரமாகச்‌ சிந்தித்தபோது நான்காண்டுகளுக்கு முன்னர்‌ பம்பாயில்‌ பாபாவின்‌ படத்தின்‌ முன்னர்‌ வீழ்ந்து நமஸ்கரித்தது நினைவிற்கு வந்தது. தனக்குள்‌ அவர்‌, ஞானிகள்‌ எத்தகைய நிறைபேரறிவு உடையவர்களாகவும்‌, சர்வவியாபிகளாகவும்‌ இருக்கிறார்கள்‌. தமது அடியவர்களிடம்‌ அவர்கள்‌ எத்தகைய அன்புடன்‌ விளங்குகின்றனர்‌. அவர்தம் புகைப்படத்தின்‌ முன்னர்‌ மட்டுமே நான்‌ பணிந்தேன்‌. இவ்வுண்மை பாபாவால்‌ கவனிக்கப்பட்டது. உரிய தருணத்தில்‌ தமது படத்தைக்‌ காண்பது நேரில்‌ தம்மைக்‌ காண்பதற்குச்‌ சமமாகும்‌ என்பதை அவர்‌ உணரும்படிச்‌ செய்தார்‌.

அப்பா சாஹேபின்‌ கதைக்குத்‌ திரும்புவோம்‌. அவர்‌ தாணேவில்‌ இருந்தபோது பிவண்டி என்னுமிடத்துக்கு செல்ல வேண்டியதிருந்தது. ஒரு வாரத்திற்குள்‌ அவர்‌ திரும்புவார்‌ என்று எதிர்பார்க்கப்படவில்லை. அவர்‌ இல்லாதபோது மூன்றாவதுநாள்‌ பின்வரும்‌ ஆச்சரியமான சம்பவம்‌ நிகழ்ந்தது. மத்தியானம்‌ ஒரு பக்கிரி அப்பா சாஹேபின்‌ வீட்டிற்கு வந்தார்‌. அவருடைய அங்க அமைப்பெல்லாம்‌ பாபாவின்‌ படத்துடன்‌ சரியாக ஒத்திருந்தன. குல்கர்ணியின்‌ மனைவியும்‌, குழந்தைகளும்‌ அவரை அவர்‌ ஷீர்டி சாயிபாபாவா? எனக்‌ கேட்டனர்‌. அதற்கு அவர்‌ இல்லை என்று கூறி ஆனால்‌ தாம்‌ அவரின்‌ பணிவுள்ள ஒரு வேலையாள்‌ என்றும்‌, அவ்விடத்திற்கு அவர்தம்‌ கட்டளைப்படியே அவர்களின்‌ குடும்ப நலத்தை விசாரிக்க வந்திருப்பதாகவும்‌ கூறினார்‌. பின்னர்‌ அவர்‌ தக்ஷிணை கேட்டார்‌. அப்பெண்மணி ஒரு ரூபாய்‌ கொடுத்தாள்‌. அவர்‌ உதிப்‌ பொட்டலம்‌ ஒன்றைக்‌ கொடுத்து அதை வழிபாட்டுக்காக பூஜையறையில்‌ படத்துடன்‌ வைக்கும்படிக்‌ கூறினார்‌. பின்னர்‌ அவர்‌ வீட்டை விட்டுப்‌ போய்விட்டார்‌. இப்போது சாயியின்‌ அற்புதமான லீலையைக்‌ கேளுங்கள்‌.

அப்பா சாஹேப்‌, தனது குதிரை பிவண்டியில்‌ நோய்வாய்ப்பட்டதால்‌ பயணத்தைத்‌ தொடர முடியவில்லை. அந்நாள்‌ மாலை அவர்‌ வீட்டிற்குத்‌ திரும்பினார்‌. மனைவியின்‌ மூலம்‌ பக்கிரி விஜயத்தைப்‌ பற்றி அறிந்தார்‌. தான்‌ அப்பக்கிரியின்‌ தரிசனம்‌ பெறாததையும்‌ ஒரே ஒரு ரூபாய்‌ மட்டும்‌ தஷ்ஷிணையாக அளிக்கப்பட்டது குறித்து திருப்தியில்லாததையும்‌ நினைத்து மனதில்‌ சிந்தனை செய்தார்‌. தாம்‌ அப்போது இருந்திருந்தால்‌ பத்து ரூபாய்க்குக்‌ குறைவாக தக்ஷிணை அளித்திருக்கமாட்டேன்‌ என்று கூறினார்‌. பின்‌ உடனே பக்கிரியைத்‌ தேடிக்கொண்டு சென்றார்‌. உணவு உட்கொள்ளாமல்‌ மசூதியிலும்‌ மற்ற இடங்களிலும்‌ அவரைத்‌ தேடினார்‌. எங்கு தேடியும்‌ காண இயலவில்லை. பாபாவின்‌ கொள்கையை வாசகர்கள்‌ 32ம்‌ அத்தியாயத்தில்‌ கண்டிருக்கலாம்‌. அதாவது வெறும்‌ வயிற்றுடன்‌ கடவுளைத்‌ தேடுதல்‌ கூடாது என்பதாம்‌. உணவுக்குப்பின்‌ சித்ரே என்ற நண்பருடன்‌ அவர்‌ உலாவப்‌ புறப்பட்டார்‌.

சிறிதுதூரம்‌ சென்றபின்‌, விரைவாக ஒரு பக்கிரி அவர்களை நோக்கி வருவதை கண்டனர்‌. பாபாவின்‌ புகைப்படத்தில்‌ இருந்த அங்க அடையாளங்களுடன்‌ இப்பக்கிரியினது உருவமும்‌ ஒத்திருந்ததால்‌ இவரே மத்தியானம்‌ தமது வீட்டிற்கு வந்தவராக இருக்கக்கூடும்‌ என்று அப்பா சாஹேப்‌ எண்ணினார்‌. பக்கிரி உடனே தமது கையை நீட்டி தக்ஷிணை கேட்டார்‌. அப்பா சாஹேப்‌ அவருக்கு ஒரு ரூபாயை அளித்தார்‌. அவர்‌ மீண்டும்‌ கேட்கவே அப்பா சாஹேப்‌ மேலும்‌ இரண்டு ரூபாய்‌ கொடுத்தார்‌. அப்போதும்‌ அவர்‌ திருப்தியடையவில்லை. பின்னர்‌ அவர்‌ சித்ரேயிடம்‌ மூன்று ரூபாய்‌ கடன்‌ வாங்கி அதை அவருக்குக்‌ கொடுத்தார்‌. பக்கிரி மேலும்‌ விரும்பினார்‌. அப்பா சாஹேப்‌ மீண்டும்‌ அவருக்கு மூன்று ரூபாய்‌ கொடுத்தார்‌. மொத்தத்தில்‌ ஒன்பது ரூபாய்‌, பக்கிரி திருப்பியடைந்தவராகக்‌ காணப்படவில்லை. மேலும்‌ கேட்டார்‌. பின்னர்‌ தம்மிடம்‌ ஒரு பத்து ரூபாய்‌ கரன்ஸிநோட்டு இருப்பதாக அவரிடம்‌ கூறினார்‌. பக்கிரியும்‌ அதையே கேட்டு வாங்கிக்கொண்டு ஒன்பது ரூபாயைத்‌ திருப்பிக்‌ கொடுத்துவிட்டுப்‌ போய்விட்டார்‌. முன்னர்‌ அப்பா சாஹேப்‌ தாம்‌ பத்து ரூபாய்‌ கொடுக்கிறேன்‌ என்று கூறினார்‌. அத்தொகையும்‌ அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. 

பாபாவின்‌ ஸ்பரிசத்தால்‌ புனிதமாக்கப்பட்ட ஒன்பது ரூபாய்களும்‌ அவரிடமே திருப்பித்தரப்பட்டன. ஒன்பது என்ற எண்‌ குறிப்பிடத்தக்கது. அது நவவித பக்தியைக்‌ குறிக்கிறது. (21ம்‌ அத்தியாயத்தைப்‌ பார்க்க) லக்ஷ்மிபாயி ஷிண்டேவுக்கு பாபா தமது கடைசித்‌ தருணத்தில்‌ ஒன்பது ரூபாய்‌ கொடுத்ததை கவனிக்கலாம்‌. அப்பா சாஹேப்‌ உதிப்பொட்டலத்தைச்‌ சோதனை செய்தார்‌. அதில்‌ சில மலர்‌ இதழ்களும்‌, அக்ஷதைகளும்‌ இருப்பதைக்‌ கண்டார்‌. பின்‌ சில நாட்களுக்குப்‌ பிறகு ஷீர்டி சென்றபோது பாபாவின்‌ ரோமம்‌ ஒன்று அவருக்குக்‌ கிடைத்தது. அதையும்‌ உதிப்பொட்டலத்தையும்‌ ஒரு தாயத்திற்குள்‌ வைத்து எப்போதும்‌ தமது புயத்தில்‌ அணிந்துகொண்டார்‌. அப்பா சாஹேப்‌ உதியின்‌ சக்தியை உணர்ந்துகொண்டார்‌. அவர்‌ மிகவும்‌ புத்திசாலியாய்‌ இருந்தபோதும்‌ ஆரம்பத்தில்‌ சம்பளமாக ரூ.40 பெற்று வந்தார்‌. பாபாவின்‌ படமும்‌, உதியையும்‌ பெற்றான பிறகு நாற்பது ரூபாயைப்‌ போல பலமடங்கு அவர்‌ மாதச்‌ சம்பளமாகப்‌ பெற்றார்‌. அதிக ஆற்றலும்‌, செல்வாக்கும்‌ படைத்தவரானார்‌. இந்த உலக நன்மைகளுடன்‌ கூட அவர்தம்‌ ஆன்மிக முன்னேற்றமும்‌ துரிதமானது.

எனவே பாபரவின்‌ உதியைப்‌ பெற்றிருக்கும்‌ நல்லதிர்ஷ்டம்‌ உடையவர்கள்‌, அதை குளித்தபின்‌ நெற்றியில்‌ இட்டுக்கொண்டு சிறிதளவு எடுத்துத்‌ தண்ணீரில்‌ கரைத்துப்‌ புனித தீர்த்தமாகக்‌ குடித்துவிட வேண்டும்‌.

ஹரியாவ்‌ கர்ணிக்‌

1917ம்‌ ஆண்டில்‌ தாணே ஜில்லாவைச்‌ சேர்ந்த ஹரிபாவ்‌ கர்ணிக்‌ ஷீர்டிக்குக்‌ குருபூர்ணிமா தினத்தன்று (ஆவணி மாதம்‌) வந்து உரிய சம்பிரதாயங்களுடன்‌ பாபாவை வணங்கினார்‌. உடைகளையும்‌, தக்ஷிணையையும்‌ அவர்‌ சமர்ப்பித்தார்‌. ஷாமா மூலமாக பாபாவிடம்‌ விடைபெற்ற பிறகு மசூதியின்‌ படிகளில்‌ இருந்து இறங்கினார்‌. பின்‌ இன்னுமொரு ரூபாய்‌ பாபாவுக்குத்‌ தஷஷிணை கொடுக்க எண்ணினார்‌. எனவே அவர்‌ சற்றே திரும்பி, திரும்பவும்‌ படிகளில்‌ ஏற முயற்சித்தார்‌. ஆனால்‌ அவர்‌ பாபாவின்‌ விடையைப்‌ பெற்றுக்கொண்டதால்‌ போகும்படியும்‌, திரும்பி வரவேண்டாம்‌ என்றும்‌ ஷாமா ஜாடை காண்பித்தார்‌. எனவே அவர்‌ வீட்டுக்குக்‌ கிளம்பினார்‌. திரும்புகையில்‌ நாசிக்கில்‌ காலாராமரின்‌ கோவிலுக்குத்‌ தரிசனத்துக்குச்‌ சென்றார்‌. கோவிலின்‌ பெரிய கதவுக்கு சிறிதே உட்புறம்‌ அமரும்‌, நரசிங்க மஹராஜ்‌ என்ற ஞானி தமது அடியவர்களை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு ஹரிபாவிடம்‌ வந்து, அவரின்‌ மணிக்கட்டைப்‌ பிடித்து “எனது ஒரு ரூபாயைக்‌ கொடு” என்றார்‌. கர்ணிக்‌ வியப்படைந்தார்‌. மிகுந்த இஷ்டத்துடன்‌ அந்த ஒரு ரூபாயைக்‌ கொடுத்தார்‌. சாயிபாபா எங்ஙனம்‌ தான்‌ கொடுக்க இஷ்டப்பட்டிருந்த ரூபாயை நாசிக்கைச்‌ சேர்ந்த நரசிங்க மஹராஜ்‌ வழியாக வாங்கினார்‌ என்று எண்ணினார்‌. இக்கதை ஞானிகள்‌ அனைவரும்‌ ஒன்றே என்ற உண்மையையும்‌ எங்ஙனம்‌ அவர்கள்‌ ஒத்திசைவுடன்‌ செயல்படுகிறார்கள்‌ என்பதையும்‌ காட்டுகிறது.

ஸ்ரீ சாயியைப்‌ பணிக

அனைவர்க்கும்‌ சாந்தி நிலவட்டும்‌