Ads

அத்தியாயம் - 39 & 50 - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்அத்தியாயம்‌ - 39 & 50

பாபாவின்‌ சமஸ்கிருத ஞானம்‌ - கீதையின்‌ ஒரு ஸ்லோகத்திற்கு பாபாவின்‌ பொருள்‌ விளக்கம்‌ - சமாதி மந்திர்‌ கட்டுதல்‌.

இந்த அத்தியாயம்‌ பகவத்கீதையின்‌ ஒரு செய்யுளுக்கு பாபாவின்‌ விளக்கத்தை அளிக்கிறது. பாபாவுக்கு வடமொழி தெரியாது என்றும்‌, பொருள்‌ விளக்கம்‌ நானா சாஹேப்‌ சாந்தோர்கரினுடையது என்றும்‌ சிலர்‌ ஆட்சேபித்ததால்‌, ஹேமத்பந்த்‌ அந்த ஆட்சேபத்தை மறுத்து வாதாடி வேறொரு அத்தியாயம்‌ எழுதினார்‌. ஐம்பதாம்‌ அத்தியாயமும்‌ இதே உட்கிடைப்‌ பொருளை விவரிப்பதால்‌ அதுவும்‌ இந்த அத்தியாயத்துடன்‌ இணைக்கப்பட்டுள்ளது.

முன்னுரை

மஹாசமாதி எய்தும்வரை ஸ்ரீ சாயி வாழ்ந்து நடமாடிய ஷீர்டியும்‌, த்வாரகாமாயியும்‌ நற்பேற்றுக்குரியவைகள்‌. யாருக்காக அவர்‌ அத்தனை தூரம்‌ வந்தாரோ, எவருடைய நன்றிக்‌ கடனுக்கு தம்மை உரியவராக்கிக்கொண்டாரோ அத்தகைய ஷீர்டி மக்கள்‌ ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்‌. முதலில்‌ ஷீர்டி ஒரு குக்கிராமம்தான்‌. ஆனால்‌ அவர்தம்‌ தொடர்பின்‌ காரணமாக பெரும்‌ முக்கியத்துவத்தை எய்திற்று. ஒரு தீர்த்தமாகவும்‌, புனிதப்‌ பயணத்துக்குரிய ஒரு புண்ணிய கேஷேத்திரமாகவும்‌ ஆனது. ஷீர்டியின்‌ பெண்மணிகளும்‌ அதே அளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்‌. அவர்பால்‌ அவர்கள்‌ கொண்டிருந்த முழுமனதான சிதையாத நம்பிக்கையும்‌ நற்பேற்றுக்குரியது. அவர்கள்‌‌ குளிக்கும்போதும்‌, சோளத்தை அரைக்கும்போதும்‌, பொடி செய்யும்போதும்‌, மற்ற இல்லற தர்மங்களைச்‌ செய்யும்போதும்‌ பாபாவின்‌ புகழைப்‌ பாடினார்கள்‌. அவர்களின்‌ அன்பு நற்பேற்றுக்குரியது. ஏனெனில்‌ கேட்போரின்‌, பாடுவோரின்‌ மனங்களில்‌ கொந்தளிப்பை அகற்றி சாந்தப்படுத்தியது. இனிமையான பாடல்களை அவர்கள்‌ பாடினார்கள்‌.

பாபாவின்‌ பொருள்‌ விளக்கம்‌

பாபாவுக்கு வடமொழி தெரியும்‌ என்பதை ஒருவரும்‌ நம்பவில்லை. ஒருநாள்‌ நானா சாஹேப்‌ சாந்தோர்கருக்குக்‌ கீதையின்‌ ஒரு செய்யுளுக்கு சிறந்த பொருள்‌ விளக்கம்‌ அளித்து அனைவரையும்‌ அதிசயத்தில்‌ ஆழ்த்தினார்‌. இதைப்பற்றிய சுருக்கமான விவரம்‌ 8.3. தேவ்‌ என்னும்‌ ஓய்வுபெற்ற மம்லதாரால்‌ எழுதப்பட்டு, சாயிலீலா சஞ்சிகையில்‌ (தொகுப்பு 7 ‘ஸ்புதவிஷயா’ பக்கம்‌ 563) மராத்தியில்‌ பதிப்பிக்கப்பட்டது.

சகோதரர்‌ B.V. நரசிம்மஸ்வாமி எழுதிய இருநூல்களான ‘சாயிபாபாவின்‌ சாஸனாம்ருதத்‌ திருமொழிகள்‌’ (பக்கம்‌ 61), ‘The Wonderous Saint Sai Baba’ (பக்கம்‌ 36) ஆகியவற்றில்‌ இதைப்பற்றிய சிறு தகவல்‌ வருகின்றது. தேவ்‌ 27.9.1936 தேதியுள்ள தமது ஆங்கில வாக்குமூலத்தில்‌ இதைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறார்‌. இது மேற்குறித்து ஸ்வாமி எழுதிய ‘பக்தர்களின்‌ அனுபவங்கள்‌ 3’ (பக்கம்‌ 66லும்‌) பதிப்பிக்கப்பட்டு இருக்கிறது. இப்பொருள்‌ குறித்து நானா ஸாஹேபிடமிருந்தே, B.V.தேவ்‌ நேரடித்‌ தகவல்‌ பெற்றாராதலால்‌ அவருடைய கூற்றையே கீழே அளிக்கிறோம்‌.

நானா சாஹேப்‌ சாந்தோர்கர்‌ வேதாந்தத்தில்‌ ஒரு சிறந்த மாணவர்‌. அவர்‌ கீதையை விளக்கங்களுடன்‌ பயின்று இருக்கிறார்‌. அவைகள்‌ எல்லாவற்றையும்‌ பற்றி தாம்‌ மிகவும்‌ கற்று சிறந்த அறிவாளியெனக்‌ கர்வமடைந்தார்‌. இவைகளைப்‌ பற்றியோ, வடமொழியைப்‌ பற்றியோ, பாபாவுக்கு ஒன்றுமே தெரியாது என்று கற்பனை செய்துகொண்டார்‌. எனவே, ஒருநாள்‌ பாபா குட்டை அம்பலப்படுத்தினார்‌.

இந்நாட்கள்‌ பாபாவிடம்‌ கூட்டம்‌ திரளத்‌ தொடங்குவதற்கு முன்பாகும்‌. அப்போது அத்தகைய அடியவர்களிடம்‌ பாபா தனியாக உரையாடல்‌ நிகழ்த்துவதுண்டு. நானா அவரருகில்‌ பாபாவின்‌ கால்களைப்‌ பிடித்துவிட்டுக்கொண்டு எதையோ முணுமுணுத்துக்கொண்டிருந்தார்‌.

பாபா : நானா, உனக்குள்ளேயே என்ன முணுமுணுத்துக்கொண்டிருக்கிறாய்‌?

நானா : வடமொழியிலிருந்து ஒரு ஸ்லோகத்தை நான்‌ ஒப்பித்துக்கொண்டிருக்கிறேன்‌.

பாபா : என்ன ஸ்லோகம்‌?

நானா : பகவத்கீதையிலிருந்து

பாபா : அதைப்‌ பலமாகக்‌ கூறு

நானா : பின்னர்‌ பகவத்கீதை அத்‌.4ல்‌ 34வது ஸ்லோகத்தை பின்வருமாறு ஒப்பித்தார்‌.

தத்‌ வித்தி ப்ரணிபாதேன பரிப்ரஷ்னேன ஸேவயா

உபதேக்ஷ்யந்தி தே ஞானம்‌ ஞானினஸ்தத்வதர்ஷின: *

பாபா : நானா அது உனக்குப்‌ புரிகிறதா?

நானா : ஆம்‌.

பாபா : அப்படியானால்‌ என்னிடம்‌ அதை விளக்கிக்‌ கூறு.

நானா : சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தும்‌, குருவிடம்‌ கேட்டும்‌, பணிவிடை செய்தும்‌, இந்த ஞானம்‌ என்பது என்ன என்பதை அறிவாயாக. அப்போது உண்மை ஞானத்தின்‌ சத்பொருளை (பிரம்மத்தை) எய்திய அந்த ஞானிகள்‌, ஞானோபதேசத்தை உனக்கு நல்குவார்கள்‌ என்பது அதன்‌ பொருள்‌.

பாபா : செய்யுள்‌ முழுவதற்குமான இத்தகைய திரள்‌

* तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया ।

उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्वदर्शिनः ॥

கருத்து எனக்குத்‌ தேவையில்லை. ஒவ்வொரு சொல்லுக்கும்‌ அதன்‌ இலக்கணவேகம்‌, பொருள்‌ ஆகியவற்றை எனக்குச்‌ சொல்‌.

பின்னர்‌ நானா அதை பதம்‌ பதமாக விவரித்தார்‌.

பாபா : வெறுமனே சாஷ்டாங்கமாக நமஸ்காரம்‌ செய்தால்‌ மட்டும்‌ போதுமா?

நானா : ப்ரணிபாத என்ற சொல்லுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம்‌ என்னும்‌ பொருள்‌ தவிர வேறு எப்பொருளும்‌ எனக்குத்‌ தெரியாது.

பாபா : பரிப்ரஷ்னா என்றால்‌ என்ன?

நானா : கேள்வி கேட்டல்‌

பாபா : ப்ரஷ்னா என்றால்‌ என்ன பொருள்‌?

நானா : அதுவே (கேட்டல்‌)

பாபா : பரிப்ரஷ்னாவைப்‌ போல்‌ ப்ரஷ்னாவும்‌ அதே பொருளை உணர்த்தினால்‌ வியாஸர்‌ ஏன்‌ பரி என்னும்‌ அடைமொழியை முன்னால்‌ சேர்த்தார்‌? வியாஸர்‌ பைத்தியமாய்‌ இருந்தாரா?

நானா : பரிப்ரஷ்னாவுக்கு அதைத்தவிர வேறெந்த பொருளும்‌ எனக்குத்‌ தெரியாது.

பாபா : ‘சேவா’ அது எத்தகைய சேவையைக்‌ குறிக்கிறது?

நானா : நாங்கள்‌ எப்போதும்‌ செய்துகொண்டிருக்கும்‌ அதையே தான்‌.

பாபா : அத்தகைய சேவை செய்தால்‌ போதுமா?

நானா : ‘சேவை’ என்ற சொல்‌ அதைத்தவிர வேறு எதைக்‌ குறிக்கிறது என்று எனக்குத்‌ தெரியாது.

பாபா : அடுத்த வாக்கியத்தில்‌ ‘உபதேக்ஷ்யந்தி தே ஞானம்‌‘ என்பதில்‌ ஞானம்‌ என்ற சொல்லுக்கு வேறெந்த சொல்லையாவது போட்டு அதை அங்ஙனம்‌ படிக்க முடியுமா?

நானா : ஆம்‌.

பாபா : என்ன சொல்‌? நானா : அஞ்ஞானம்‌.

பாபா : இந்தச்‌ சொல்லைப்‌ போட்டு (ஞானத்துக்கு பதில்‌) செய்யுளிலிருந்து ஏதாவது பொருள்‌ உணரப்படுகிறதா?

நானா : சங்கரபாஷ்யம்‌ அத்தகைய பொருள்‌ தரும்‌ அமைப்பு எதையும்‌ தரவில்லை.

பாபா : அவர்‌ தராததைப்‌ பற்றி லட்சியம்‌ செய்யாதே. அஞ்ஞானம்‌ என்ற சொல்‌ இன்னும்‌ சிறந்த பொருளை உணர்த்துமென்றால்‌, அதை உபயோகிப்பதற்குத்‌ தடை ஏதும்‌ உண்டா?

நானா : அஞ்ஞானம்‌ என்பதை அதில்‌ வைத்து பொருளை உணர்வது எவ்வாறு என்பது எனக்கு விளங்கவில்லை.

பாபா : கிருஷ்ணர்‌ அர்ஜுனனை ஞானிகளையும்‌, தத்துவ தரிசிகளையும்‌ நாடி அவர்களை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து தத்துவ விசாரணையையும்‌, சேவையையும்‌ செய்யுமாறு ஏன்‌ சொல்கிறார்‌? கிருஷ்ணர்‌ தாமே ஒரு தத்துவதரிசியும்‌ உண்மையில்‌ ஞானரூபமூமேயல்லவா?

நானா : ஆம்‌, அங்ஙனமேயானால்‌ அவர்‌ அர்ஜுனனிடம்‌ ஞானிகளை அணுகுமாறு ஏன்‌ குறிப்பிட்டார்‌ என்பது எனக்குப்‌ புரியவில்லை?

பாபா : இதை நீ புரிந்துகொள்ளவில்லையா?

நானா செருக்குக்‌ குலைவுற்றார்‌. கர்வம்‌ அழிக்கப்பட்டது. பின்னர்‌ பாபா விவரிக்க ஆரம்பித்தார்‌.

(1) ஞானிகளின்‌ முன்னால்‌ வெறுமனே சாஷ்டாங்கமாக நமஸ்கரிப்பது மட்டும்‌ போதாது. நம்‌ சத்குருவிடம்‌ சர்வாஸ்வ சரணாகதியடைய (பரிபூர்ண சமர்ப்பணம்‌) வேண்டும்‌.

(2) கேள்வி கேட்டால்‌ மட்டும்‌ போதாது. ஒழுங்கற்றமுறையிலும்‌, குருவை சிக்கலில்‌ மாட்டிவிடும்‌ வகையிலும்‌ கேட்கக்கூடாது. விடைகளிலுள்ள பிழைகளைச்‌ சுட்டிக்காட்டவோ அல்லது பயனற்ற ஆர்வத்துடன்‌ கேட்கப்படவோ கூடாது. அது காரிய மனப்பான்மையுடன்‌ ஆன்மிக முன்னேற்றம்‌ அல்லது மோட்சத்தை அடையும்‌ நோக்கத்துடன்‌ இருக்கவேண்டும்‌.

(3) சேவை என்பது ஏதோ ஒரு பணிசெய்வது அல்ல. தான்‌ செய்ய அல்லது செய்யமறுக்க உரிமையுள்ளவன்‌ என்பது போன்ற உணர்வுகளைத்‌ தன்னுள்‌ இருத்திக்கொண்டு செய்வது சேவையன்று. உடலின்‌ அதிபதி தான்‌ அல்ல என்றும்‌ உடல்‌ குருவுக்கே அர்ப்பணமானது என்றும்‌ அவருக்குச்‌ சேவை செய்வதற்காக மட்டுமே உளதாய்‌ இருக்கிறது என்றும்‌ உணரவேண்டும்‌. இதன்படி நடந்தால்‌ முந்தைய ஸ்லோகத்தில்‌ குறிப்பிட்ட ‘ஞானம்‌’ என்பது எதனைக்‌ குறிக்கிறது என்று சத்குரு உணர்த்துவார்‌.

குரு அஞ்ஞானத்தைப்‌ போதிக்கிறார்‌ என்று கூறுவதன்‌ பொருள்‌ நானாவுக்கு விளங்கவில்லை.

பாபா எங்ஙனம்‌ ஞானோபதேசம்‌ செயற்படுத்தப்படுகிறது? அறியாமையை அழிப்பதே ஞானம்‌. கீதை அத்‌.18ல்‌ 66வது ஸ்லோகத்துக்கு ஞானேஷ்வரியின்‌ விளக்கச்செய்யுள்‌ 1396ல்‌ கூறப்படுவதாவது : “ஒ! அர்ஜுனா, அறியாமையை அகற்றுவது இத்தகையது அதாவது கனவும்‌, தாக்கமும்‌ மறைந்துவிடுமானால்‌ நீ உன்றுடையவனே. அது அங்ஙனமே”, மற்றும்‌ கீதை அத்‌.5, ஸ்லோகம்‌ 16க்கு ஞானேஷ்வரியின்‌ விளக்கச்செய்யுள்‌ 83 கூறுவதாவது” அறியாமையை அழிப்பது என்பதைத்‌ தவிர ஞானத்தில்‌ மாறுபாடாகவோ தற்சார்புடையதாகவோ வேறு எதுவும்‌ உள்ளதா?! (இல்லையென்பது குறிப்பு). இருளைத்‌ துரத்துவது என்றால்‌ ஒளி எனப்பொருள்‌.

த்‌யவைதத்தை அழிப்பதென்றால்‌ அத்வைதம்‌ எனப்பொருள்‌. த்‌வைதத்தை அழிப்பதுபற்றிப்‌ பேசும்போதெல்லாம்‌ நாம்‌ அத்வைதத்தைப்பற்றிப்‌ பேசுகிறோம்‌. இருளை அகற்றுவது பற்றி

* मन अज्ञान निमालिया | मीच एक असे अपैसया ||

सनिम्द्रस्वण्न गेलिया | आपण जसें || २३९३ (गो.अ.२८:६६)

तें अज्ञान जैं समूळ तुटे | तं भ्रांतीचें मसैरें फिटे || ८३ || (गो.५:२३)

பேசும்போதெல்லாம்‌ ஒளியைப்பற்றிப்‌ பேசுகிறோம்‌. அத்வைத நிலையை நாம்‌ உணர வேண்டுமென்றால்‌, நம்‌ மனதிலுள்ள த்வைத உணர்வை நீக்கவேண்டும்‌. அதுவே அத்வைத நிலையை நாம்‌ உணர்வதாகும்‌. த்வைத நிலையை மனதில்‌ கொண்டுள்ள ஒருவன்‌, அத்வைத நிலையைப்பற்றி எங்ஙனம்‌ பேசமுடியும்‌? அப்படி ஒருவன்‌ பேசுவானாகில்‌ அதே நிலையை அடைந்தாலொழிய அதை எங்ஙனம்‌ ஒருவன்‌ அறியமுடியும்‌? உணர முடியும்‌?

மீண்டும்‌ கூறுமிடத்து சீடனும்‌ சத்குருவைப்‌ போலவே உண்மையில்‌ ஞானத்தின்‌ பண்புருவமானவன்‌. மனப்பான்மை, மேலான உணர்வு, மிகச்சிறந்த அமானுஷ்ய சத்துவநிலை, ஒப்பற்ற செயலாற்றல்‌, ஐஸ்வர்ய யோகம்‌ (தெய்வீக சக்திகள்‌) இவைகளிலேயே சீடனுக்கும்‌, குருவுக்குமுள்ள வேறுபாடு நிலவுகிறது. குரு நிர்குணமானவர்‌, சச்சிதானந்தமயமானவர்‌. உண்மையிலேயே மனித வர்க்கத்தை உயர்த்தி உலகை உய்விப்பதற்கே அவர்‌ மானுட உருவம்‌ எடுக்கிறார்‌. ஆனால்‌ அதன்‌ பொருட்டாக அவரது உண்மையான நிர்குணத்தன்மை எள்ளளவும்‌ பாதிக்கப்படுவதில்லை.

அவர்தம்‌ வியாபகம்‌ (அல்லது உளதாயிருக்கும்‌ தன்மை) தெய்வீக சக்தி, ஞானம்‌ முதலியன குறைவதில்லை. உண்மையில்‌ சீடனும்‌ அதே ஸ்வரூபத்தில்தான்‌ இருக்கிறான்‌. கணக்கற்ற பிறப்பு, இறப்புகளுடைய முன்வினைகளின்‌ விளைவானது அறியாமை என்னும்‌ ரூபத்தில்‌ அவன்‌ பார்வையினின்று, தான்‌ சுத்த சைதன்யன்‌ என்பதை அறியவிடாமல்‌ மறைக்கிறது. (பகவத்கீதை அத்‌.5 : ஸ்லோகம்‌ 15)** இங்ஙனம்‌ மேலே கூறப்பட்டவிதமாக அவன்‌ “நான்‌ ஜீவன்‌: தான்‌ ஒரு தாழ்வான பரிதாபமான ஜீவன்‌ என்று எண்ணுகிறான்‌. அறியாமையாகிய இவ்வேர்களை குரு கிள்ளியெறிந்து அவனுக்கு உபதேசம்‌ அல்லது அறிவுரை அளிக்க வேண்டும்‌.

தாழ்வான ஈனமான எல்லையற்ற பிறவிகளை எடுத்து பல முடிவில்லாத பிறப்புகளினால்‌ திக்பிரமை அடைந்துள்ள சீடனுக்கு குரு நூற்றுக்கணக்கான பிறப்புகளில்‌ ‘நீ கடவுள்‌, நீ வலிமையுள்ளவன்‌, நீ செல்வமுள்ளவன்‌’ என்று உபதேசித்து அறிவுறுத்துகிறார்‌. பின்னர்‌ தானே உண்மையில்‌ கடவுள்‌ என்பதை சிறிதளவு உணர்கிறான்‌.

சீடன்‌ உழன்றுகொண்டிருப்பதான மாயத்தோற்றமானது யாதெனின்‌ - தானே உடலென்றும்‌, தானே ஜீ வனென்றும்‌ (அஹங்காரம்‌), பரமாத்மாவாகிய கடவுளும்‌ உலகமும்‌ தன்னிடமிருந்து வேறுபட்டவைகள்‌ என்பதுமாகும்‌. இது கணக்கற்ற முற்பிறவிகளில்‌ அவன்‌ மரபுரிமையாகப்‌ பெற்ற பிழையானதொரு கருத்தாகும்‌. அந்த மாயையின்‌ அடிப்படையிலான செயல்களால்‌ மகிழ்ச்சி - துயரம்‌ இரண்டையும்‌ கலந்து அனுபவிக்கிறான்‌. இம்மாயையை, இப்பிழையை, இந்த அறியாமையின்‌ வேரை அகற்றுவதற்கு அவன்‌ விசாரணை செய்யத்‌ துவங்கவேண்டும்‌. எங்ஙனம்‌ இந்த அறியாமை உண்டாகிறது? அது எங்கு உள்ளது? இதை அவனுக்கு உணர்த்துவதுதான்‌ குரு உபதேசம்‌.

அஞ்ஞானம்‌ என்பது கீழ்க்கண்டவையே.

(1) நான்‌ ஒரு ஜீவன்‌ (ஜந்து)

(2) உடம்பே ஆத்மா (நானே உடல்‌)

(3) கடவுள்‌, உலகம்‌, ஜீவன்‌ இவை எல்லாம்‌ வேறானவை.

(4) நான்‌ கடவுளல்ல

(5) உடல்‌, ஆத்மா அன்று என்பதை அறியாமல்‌ இருத்தல்‌

(6) கடவுள்‌, உலகம்‌, ஜீவன்‌ இவைகள்‌ எல்லாம்‌ ஒன்று என்பதை அறியாமல்‌ இருத்தல்‌

இப்பிழைகளெல்லாம்‌ அவனது கவனத்துக்குக்‌ கொண்டுவரப்பட்டாலன்றி ஜீவன்‌, உலகம்‌, உடம்பு இவைகளெல்லாம்‌ என்ன?! அவைகள்‌ ஒன்றுக்கொன்று தொடர்புடையவையா!, ஒன்றுக்கொன்று

** अज्ञानेनावृत ज्ञान तेन मुह्यन्ति ज्ञंतव: |

மாறுபாடானவையா! அல்லது அனைத்தும்‌ ஒன்றேதானா என்பதை சீடன்‌ அறிந்துகொள்ள முடியாது.

இவைகளை அவனுக்குப்‌ போதித்து, அவனது அறியாமையை அழிப்பதே இந்த ஞானம்‌, அஞ்ஞானம்‌ இவைகளின்‌ போதனைகளாகும்‌. ஞானமூர்த்தியாகிய ஜீவனுக்கு ஏன்‌ இந்த ஞானம்‌ போதிக்கப்படவேண்டும்‌? உபதேசம்‌ என்பது அவரது தவறைச்‌ சுட்டிக்காட்டி அறியாமையை அழிக்கவேயாகும்‌.

பாபா தொடர்ந்தார்‌: ‘ப்ரணிபாத’ என்பது சரணாகதி - உடலால்‌, உள்ளத்தால்‌, செல்வங்களுடன்‌ சரணாகதியடைய வேண்டும்‌ - ஏன்‌ கிருஷ்ணர்‌ அர்ஜுனனை வேறு ஞானிகளைக்‌ கேட்கும்படி கூறுகிறார்‌?

நல்ல யக்தன்‌ யாவற்றையும்‌ வாசுதேவன்‌ எனக்கொள்கிறான்‌. (பகவத்கீதை அத்‌.7 : ஸ்லோகம்‌ 9)

எந்த குருவும்‌ அடியவருக்குக்‌ கிருஷ்ணனாகிறார்‌. குரு, சீடனை வாசுதேவனாக நினைக்கிறார்‌. இவர்கள்‌ இருவரையும்‌ கிருஷ்ணர்‌ தம்முடைய பிராணனும்‌, ஆத்மனுமாகக்கொள்கிறார்‌. (பகவத்கீதை அத்‌.7 ஸ்லோகம்‌ 18 ஞானதேவரின்‌ விளக்கம்‌) அத்தகைய பக்தர்களும்‌, குருவும்‌ இருப்பதை கிருஷ்ணர்‌ அறிந்திருப்பதால்‌ அவர்களின்‌ பெருமை உயர்ந்து திகழுதற்பொருட்டாகவும்‌, அனைவரும்‌ அறிதற்பொருட்டாகவும்‌ அர்ஜுனனிடம்‌ அவர்களைப்பற்றிச்‌ சொல்கிறார்‌. சமாதி மந்திர்‌ கட்டுதல்‌

தாம்‌ நிறைவேற்றி முடித்தற்பொருட்டாக ஆர்வம்கொண்ட விஷயங்கள்‌ குறித்து பாபா பேசியதோ எவ்விதமான வெற்று ஆர்ப்பரிப்பு செய்ததோ கிடையாது. ஆனால்‌ நிதானமாக, நிச்சயமான பலன்கள்‌ கிட்டுமாறு சூழ்நிலைகளையும்‌, சுற்றுப்புறங்களையும்‌ அவர்‌ அவ்வளவு திறமையாக அமைத்தது குறித்து மக்கள்‌ ஆச்சரியப்பட்டனர்‌. இக்கருத்துக்கேற்ற நிகழ்ச்சி சமாதிமந்திரின்‌ கட்டிட வேலையாகும்‌. நாக்பூரைச்‌ சேர்ந்த புகழ்பெற்ற கோடீஸ்வரரான ஸ்ரீமான்‌ பாபு சாஹேப்‌ பூட்டி தனது குடும்பத்துடன்‌ ஷீர்டியில்‌ வசித்து வந்தார்‌. அங்கு தனக்குச்‌ சொந்தமான கட்டிடம்‌ ஒன்று வேண்டும்‌ என்று அவர்‌ மனதில்‌ எண்ணம்‌ ஒன்று எழுந்தது. இதற்கு சில நாட்களுக்குப்‌ பிறகு தீக்ஷித்‌ வாதாவில்‌ தூங்கிக்கொண்டிருக்கும்போது அவர்‌ ஒரு காட்சி கண்டார்‌.

பாபா அவர்‌ கனவில்தோன்றி அவருக்கும்‌ சொந்தமான வாதா ஒன்றை கோவிலுடன்‌ கட்டும்படிப்‌ பணித்தார்‌. அங்குத்‌ தூங்கிக்கொண்டிருந்த ஷாமாவுக்கும்‌ அதே மாதிரி காட்சி தோன்றியது. பாபு சாஹேப்‌ கண்விழித்தபோது, ஷாமா அழுதுகொண்டிருப்பதைப்‌ பார்த்தார்‌. ஏன்‌ என்று அவரைக்‌ கேட்டார்‌. அவர்‌ பாபா தம்‌ கனவில்‌, தமதருகில்‌ நெருங்கிவந்து “வாதாவைக்‌ கோவிலுடன்‌ கட்டுக, நான்‌ உங்களுடைய ஆசைகளைப்‌ பூர்த்தி செய்வேன்‌!” எனத்‌ தெளிவாக ஆணையிட்டார்‌. பாபாவின்‌ இனிமையும்‌, அன்பும்‌ பொருந்திய மொழிகளைக்‌ கேட்டு நான்‌ உணர்ச்சிவசப்பட்டேன்‌. என்‌ தொண்டை அடைத்தது. எனது கண்களில்‌ நீர்‌ பொங்கி வழிந்தது, நான்‌ அழத்‌ தொடங்கிவிட்டேன்‌ என்றார்‌.

பாபு சாஹேப்‌ இருவரது கனவும்‌ ஒத்திருந்ததைக்‌ கண்டு ஆச்சரியப்பட்டார்‌. பணமும்‌, வசதியும்‌ பொருந்திய அவர்‌ அங்கு ஒரு வாதா கட்ட தீர்மானித்தார்‌. மாதவ்ராவுடன்‌ கூடி ஒரு திட்டம்‌ தீட்டினார்‌. காகா சாஹேப்‌ தீக்ஷித்தும்‌, அதை ஆமோதித்தார்‌. பாபாவின்‌ முன்னர்‌ அது சமர்ப்பிக்கப்பட்டபோது அவரும்‌ அதை உடனே அங்கீகரித்தார்‌. பின்னர்‌ கட்டிடவேலை முறைப்படி ஆரம்பமானது. ஷாமாவின்‌ மேற்பார்வையில்‌ கீழ்த்தளம்‌, உக்கிராண அறை, கிணறு முதலியன பூர்த்தியாயின. லெண்டிக்குப்‌ போகும்போதும்‌ வரும்போதும்‌, பாபாவும்‌ சில முன்னேற்றங்களுக்கு யோசனை தெரிவித்தார்‌. தொடர்ந்து மேற்படி வேலைகள்‌ பாபு சாஹேப்‌ ஜோகிடம்‌ ஒப்படைக்கப்பட்டது. அது நிறைவேறிக்‌ கொண்டிருக்கும்போது திறந்த முற்றம்‌ அல்லது மேடை இருக்கவேண்டும்‌ என்றும்‌, நடுவில்‌ ஸ்ரீ முரளீதரின்‌ உருவம்‌ (கண்ணன்‌ குழலுடன்‌) ப்ரதிஷ்டை செய்யப்பட வேண்டுமென்றும்‌ பாபு சாஹேப்‌ பூட்டிக்கு எண்ணம்‌ உதித்தது. இவ்விஷயத்தைப்‌ பாபாவிடம்‌ சொல்லி பாபாவுடைய சம்மதத்தைப்‌ பெறுவதற்கு அவர்‌ ஷாமாவைக்‌ கேட்டுக்கொண்டார்‌. பாபா வாதாவைக்‌ கடந்து சென்றுகொண்டிருக்கும்போது ஷாமா இதைப்பற்றி அவரிடம்‌ கேட்டார்‌. ஷாமா கூறியதைக்‌ கேட்டு பாபா சம்மதித்து “கோவிலின்‌ வேலை முடிந்ததும்‌ நான்‌ அங்கு தங்குவேன்‌” என்றார்‌.

பின்னர்‌ வாதாவை உற்றுப்பார்த்து மேலும்‌ தொடர்ந்தார்‌. “வாதா மூர்த்தியானதும்‌ நாமே அதை உபயோகித்துக்கொள்ளலாம்‌. நாம்‌ அங்கு வாழ்வோம்‌, நடப்போம்‌, விளையாடுவோம்‌, ஒருவரையொருவர்‌ கட்டியணைத்து மிகவும்‌ மகிழ்ச்சியாக இருப்போம்‌”. பின்னர்‌ ஷாமா பாபாவிடம்‌ வாதாவின்‌ மத்திய மண்டபத்துக்கு அஸ்திவாரம்‌ போட இது மங்களவேளையா என்று கேட்டபோது பாபா சரியெனக்‌ கூறினார்‌. ஷாமா ஒரு தேங்காயை உடைத்து வேலையை ஆரம்பித்தார்‌. உரிய சமயத்தில்‌ வேலை முடிவடைந்து முரளீதரின்‌ சிலை ஒன்றுக்கும்‌ ஆர்டர்‌ கொடுக்கப்பட்டது. ஆனால்‌ அது தயாராகும்‌ முன்னே ஒரு புதிய நிகழ்ச்சி நேரலாயிற்று.

பாபா மிகவும்‌ கடுமையாக நோயுற்று இயற்கை எய்தும்‌ தருணத்தில்‌ இருந்தார்‌. பாபா இயற்கை எய்தினால்‌ தமது வாதா பாபாவின்‌ திருவடிகளால்‌ புனிதப்படுத்தப்பட இயலாது போகும்‌ என்றும்‌, அவரது பணம்‌ முழுவதும்‌ (சுமார்‌ ஒரு லட்ச ரூபாய்‌) வீணாக்கப்பட்டுவிட்டது என்றும்‌ பூட்டி நினைத்து மிகவும்‌ வருத்தமும்‌, மனச்சோர்வும்‌ அடைந்தார்‌. இயற்கை எய்துவதற்குச்‌ சிறிது தருணத்துக்கு முன்‌, “என்னை வாதாவில்‌ வையுங்கள்‌” என்ற பாபாவின்‌ மொழிகள்‌ பாபு சாஹேபை மட்டுமல்ல, மற்றெல்லோரையுமே தேற்றின. உரிய தருணத்தில்‌ பாபாவின்‌ புனிதமேனி, முரளீதருக்காகத்‌ திட்டமிடப்பட்ட கோவிலின்‌ மேடையில்‌ சமாதியாக்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டது. பாபா தாமே முரளீதரானார்‌. வாதாவும்‌ சாயிபாபாவின்‌ சமாதிமந்திர்‌ (கோவில்‌) ஆனது. அவரின்‌ அற்புதமான வாழ்வு ஆழங்காண இயலாதது. பாபு சாஹேப்‌ பூட்டி ஆசீர்வதிக்கப்பட்டவர்‌. அதிர்ஷ்டம்‌ உள்ளவர்‌. அவருடைய வாதாவில்‌ பாபாவின்‌ புனிதமான தூய உடம்பு சயனித்து இருக்கிறது.

ஸ்ரீ சாயியைப்‌ பணிக

அனைவர்க்கும்‌ சாந்தி நிலவட்டும்‌