அத்தியாயம் - 46
பாபாவின் கயா பயணம் - ஆடுகளின் கதை.
இந்த அத்தியாயம் ஷாமா காசி, பிரயாகை, கயா முதலிய இடங்களுக்குச் பயணம் செல்வதையும், பாபா எங்ஙனம் அவருக்கு முன்னால் சென்று அங்கிருந்தார் என்பதையும் விளக்குகிறது. மேலும், இரண்டு ஆடுகளைப்பற்றிய பாபாவின் பழைய நினைவுகளையும் விவரிக்கிறது.
முன்னுரை
"ஓ! சாயி, தங்களது பாதங்களும் தங்களைப் பற்றிய நினைவுகளும் தங்களது தரிசனமும் புனிதமானவை. அவை எங்களை கர்ம தளைகளிலிருந்து விடுவிக்கிறது. எங்களுக்குத் தங்கள் ரூபம் தெரியாமலிருந்தாலும், இப்போதும் அடியவர்கள் தங்களை நம்பினால் பிரத்தியட்சமான அனுபவங்களை உடனே தங்களிடமிருந்து பெறுகிறார்கள். கட்புலனுக்குத் தென்படாத சூட்சுமமான நூலால் தாங்கள் அருகிலும், தொலைவிலுமுள்ள யக்தர்களைத் தங்கள் பாதகமலங்களுக்கு ஈர்த்து இழுத்து, அன்பும் பாசமுமுள்ள தாயாரைப் போல அரவணைக்கிறீர்கள். தாங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை அடியவர்கள் அறியவில்லையென்றாலும் தாங்கள் அவர்களின் அருகிலேயே இருந்து அவர்களுக்கு உதவி புரிந்து ஆதரிக்கிறீர்கள் என்பதைக் கடைமுடிவாக அவர்கள் உணர்ந்துகொள்ளும்படி அவ்வளவு சாமர்த்தியமாக நூலை இழுக்கிறீர்கள்.
தங்கள் அஹங்காரத்தின் காரணமாக புத்திசாலிகள், அறிவாளிகள், கற்றறிந்தோர் இவர்களெல்லோரும் சம்சாரக் குழியில் விழுகிறார்கள். ஆனால் மிகவும் ஏழ்மையான, சாதாரண பக்தர்களைத் தங்கள் சக்தியினால் காப்பாற்றுகிறீர்கள். ஆன்மஸ்வரூபமாகவும் யாரும் அறியாதபடியும் எல்லா லீலைகளையும் புரிந்துவிட்டு அவற்றுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாததுபோல் தோற்றமளிக்கிறீர்கள். தாங்களே செயல்களைச் செய்கிறீர்கள். ஆனால் செய்யாதவரைப் போன்று காட்சியளிக்கிறீர்கள். ஒருவருக்கும் ஒருபோதும் தங்கள் வாழ்க்கையைப்பற்றி தெரியாது. எனவே எங்களதூ பாவங்களைப் போக்கும் எங்களுக்குண்டான சிறந்த வழி மனம், மொழி, மெய் இவற்றால் தங்கள் பாதாரவிந்தங்களைச் சரணடைந்து தங்களது நாமத்தை எப்போதும் ஸ்மரணம் செய்வதேயாகும். அடியவர்களின் ஆசைகளைத் தாங்கள் மூர்த்தி செய்கிறீர்கள். பற்றற்றவர்களுக்குத் பேரானந்தப் பெருநிலையை அளிக்கிறீர்கள். தங்கள் இனிமையான பெயரை ஸ்மரணம் செய்வதே அடியவர்களுக்கு மிகமிக எளிதான சாதனமாகும்.
இச்சாதனங்களால் ராஜச, தாமசப் பண்புகள் மறைந்து சத்துவ குணமும், நேர்மையும் முக்கியத்துவம் அடைகின்றன. விவேகம், பற்றின்மை, ஞானம் முதலியவையும் தொடர்கின்றன. பின்னர் நாம், நமது ஆன்மாவுடனும், குருவிடமும் ஒன்றிவிடுவோம். (இரண்டும் ஒன்றே) இதுவே குருவிடம் பூரண சரணாகதி அடைவது என்பதாகும். நமது மனம் அமைதியும், சாந்தியும் பெறுவதே இதற்கான ஒரே நிச்சயமான அடையாளமாகும். இச்சரணாகதி, பக்தி, ஞானம் இவற்றின் பெருமை தனித்தன்மை வாய்ந்தது. ஏனெனில் அமைதி, பற்றின்மை, புகழ், முக்தி முதலியவை அதைத்தொடர்ந்து வருகின்றன.
ஒரு அடியவரை பாபா ஏற்றுக்கொண்டால், அவரை அவர் தொடர்கிறார். இரவும், பகலும், வீட்டிலும் வெளியிலும் அவருடனேயே இருக்கிறார். அவர் விரும்பியவாறு எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். அறிவுக்கெட்டாத வகையில் ஏதாவது ஒரு ரூபத்தில் அவருக்கு முன்பாகவே சென்று பாபா அங்கு இருக்கிறார். கீழ்வரும் கதை இதை விளக்குகிறது.
கயா பயணம்
காகா சாஹேப் தீக்ஷித், சாயிபாபாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, தனது மூத்த மகன் பாபுவுக்கு, நாக்பூரில் பூணூல் திருமணம் நிகழ்த்த நிச்சயித்தார். ஏறக்குறைய அதே தருணம் நானா சாஹேப் சாந்தோர்கர் தமது மூத்த மகனுக்கு குவாலியரில் திருமண வைபவம் நிகழ்த்த நிச்சயித்தார். தீக்ஷித், சாந்தோர்கர் ஆகிய இருவரும் ஷீர்டிக்கு வந்து, இவ்வைபவங்களுக்கு பாபாவை அன்புடன் வரவேற்றனர். தமது பிரதிநிதியாக ஷாமாவை ஏற்றுக்கொள்ளும்படி பாபா அவர்களிடம் கூறினார். அவரே நேரடியாக வரவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டபோது ஷாமாவை அவர்களுடன் கூட்டிக்கொண்டு செல்லும்படி அவர்களிடம் கூறி காசிக்கும், பிரயாகைக்கும் சென்றபின்பு நாம் ஷாமாவைவிட முன்னாலிருப்போம் என்று கூறினார். இத்தருணம் பாபாவின் மொழிகளைளைக் குறித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவைகள், அவரின் சர்வ வியாபகத்தைக் காண்பிக்கின்றன.
ஷாமா, பாபாவின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு இந்த வைபவங்கள், விழாக்கள் ஆகியவற்றுக்காக நாக்பூருக்கும், குவாலியருக்கும் சென்றுவிட்டு பின்னர் காசி, பிரயாகை மற்றும் கயாவுக்கும் செல்லத் தீர்மானித்தார். ஆபாகோதேவும் அவருடன் செல்வதாக இருந்தார். இருவரும் முதலில் நாக்பூருக்கு பூணூல் விழாவுக்குச் சென்றனர். காகா சாஹேப் தீக்ஷித், ஷாமாவுக்கு அவரின் செலவுக்காக ரூ.200 கொடுத்தார். பின்னர் அவர்கள் குவாலியருக்குத் திருமண வைபவத்துக்காகச் சென்றனர். அங்கே நானா சாஹேப் சாந்தோர்கர், ஷாமாவுக்கு நூறு ரூபாயும் அவரது சம்பந்தியான ஜடார் நூறு ரூபாயும் கொடுத்தனர். பின்னர் ஷாமா காசி, அயோத்தி முதலிய இடங்களுக்குச் சென்றார். காசியில் ஜடாரின் அழகான லக்ஷ்மி நாராயணர் கோவிலிலும், அயோத்தியில் ராமர் கோவிலிலும் ஜடாரின் மேனேஜரால் நன்கு வரவேற்கப்பட்டார்.
அவர்கள் (ஷாமா, கோதே) அயோத்தியில் இருபத்தோரு நாட்களும், காசியில் இரண்டு மாதங்களும் தங்கினர். பின்னர் அங்கிருந்து கயாவுக்குப் புறப்பட்டனர். கயாவில் பிளேக் பரவியிருக்கிறது என்பதை ரயிலில் அவர்கள் கேள்விப்பட்டு மனக்கிலேசம் அடைந்தனர். இரவில் கயா ஸ்டேஷனில் இறங்கி தர்மசாலையில் தங்கினார்கள். காலையில் கயாவாலா (யாத்ரீ கர்களுக்கு உணவும், இருப்பிடமும் அளிக்கும் அந்தணர்) வந்து “யாத்ரீகர்கள் எல்லாம் முன்னரே புறப்பட்டுவிட்டனர். நீங்களும் சீக்கிரம் புறப்படுவது நல்லது”? என்றார். ஷாமா தற்செயலாக அவரை கயாவில் பிளேக் இருக்கிறதா என்று வினவினார். இல்லை என்றார் கயாவாலா. “தயவு செய்து எந்தவிதக் கவலையும், பயமுமின்றி வந்து தாங்களே பாருங்கள்!” என்றார். பின்னர் அவர்கள் அவருடன் சென்று அவரது இல்லத்தில் தங்கினார்கள். அது பெரிய விசாலமான சத்திரமாகும்.
தனக்குக் கொடுக்கப்பட்ட இடத்தைப் பற்றி ஷாமா மிகவும் மகிழ்ந்தார். ஆனால் கட்டிடத்தின் முற்பகுதியில் நடுவே மாட்டப்பட்டிருந்த பாபாவின் பெரிய அழகான சாயி படமே அவரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இப்படத்தைப் பார்த்ததும் ஷாமாவுக்கு உணர்ச்சி பொங்கியது. “அவர் காசிக்கும், பிரயாகைக்கும் சென்ற பிறகு ஷாமாவுக்கு முன்னதாகவே நாம் அங்கிருப்போம்” என்ற பாபாவின் மொழிகளை நினைவுகூர்ந்தார். கண்களில் கண்ணீர் பொங்கியது. மயிர்க்கூச்செறிந்து தொண்டை அடைத்துத் தேம்பி அழத்தொடங்கினார். அங்கு பிளேக் இருப்பது குறித்துப் பயந்து அதனால் அவர் அழுகிறார் என கயாவாலா நினைத்தார். ஆனால் ஷாமா பாபாவின் படத்தை எங்கிருந்து, எப்போது அவர் பெற்றார் என்று விசாரித்தார். கயாவுக்கு வரும் யாத்ரீகர்களின் வசதிகளைக் கவனித்துக்கொள்வதற்காக அவருக்கு 200 அல்லது 300 ஏஜண்டுகள் மன்மாடிலும், புண்தாம்பேயிலும் வேலை செய்வதாகவும், அவர்களிடமிருந்து பாபாவின் புகழைக் கேள்விப்பட்டதாகவும் கூறினார்.
பின்னர் ஏறக்குறையப் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ஷீர்டிக்கும் சென்று பாபாவின் தரிசனத்தைப் பெற்றார். அங்கு ஷாமாவின் வீட்டில் தொங்கவிடப்பட்டிருந்த பாபாவின் படத்தை பாபாவின் அனுமதிபெற்று, ஷாமா அவருக்குக் கொடுத்தார். இது அதேபடம்தான். இந்த முந்தைய நிகழ்ச்சியை ஷாமா அப்போது நினைவு கூர்ந்தார். முன்னால் தனக்கு பணிவன்பு புரிந்த அதே ஷாமாதான் தனது விருந்தினர் என்று தெரிந்தவுடன் கயாவாலாவுக்கு மகிழ்ச்சி கரைகாணவில்லை. பின்னர் அவர்களிருவரும் அன்பையும், சேவையையும் பரிமாறிக்கொண்டார்கள். மிகமிக உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருந்தனர். கயாவாலா அவருக்குச் சரியான ராஜோபசாரம் செய்தார். அவர் பெரும் பணக்காரர். தான் ஒரு பல்லக்கில் அமர்ந்து, யானையின் மேல் ஷாமாவை அமரச்செய்து அவரது தேவை, செளகர்யங்கள் அனைத்தையும் கவனித்துக்கொண்டார்.
இக்கதையின் நீதியாவது பாபாவின் 9மாழிகள் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே உண்மையாகின்றன. தமது அடியவர்கள்பால் அவர் கொண்டுள்ள அன்பு எல்லையற்றதாகும். அதைவிட்டுவிடுவோம், அவர் எல்லா ஜீவராசிகளையும் கூடச் சமமாக நேசித்தார். ஏனெனில் அவர்கள்பால் தாம் ஒன்றியவராக நினைத்தார். பின்வரும் கதை இதை விளக்குகிறது.
இரண்டு ஆடுகள்
ஒருமுறை லெண்டியிலிருந்து பாபா திரும்பி வந்துகொண்டிருக்கும்போது, ஆட்டு மந்தையொன்றைக் கண்டார். அவைகளில் இரண்டு அவரின் கவனத்தைக் கவர்ந்தன. அவைகளிடம் சென்று அவற்றைத் தடவிக்கொடுத்து அன்பு செலுத்தி அவைகளை ரூபாய் 32க்கு விலைக்கு வாங்கினார். பாபாவின் இந்தச் செயலைக்கண்டு பக்தர்கள் ஆச்சரியமுற்றனர். இவ்வியாபாரத்தில் பாபா ஏமாற்றப்பட்டார் எனவும், ஒரு ஆடு ரூ.2 வீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3 அல்லது ரூ.4 வீதம் இரண்டு ஆடும் ரூ.8 மட்டுமே பெறும் எனவும் நினைத்தனர். அவர்கள் இதற்காக பாபாவைக் கடிந்துகொண்டனர். ஆனால் பாபா அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தார். ஷாமாவும், தாத்யா கோதேவும், அதற்கு விளக்கம் கேட்டனர். தமக்கென வீடும், கவனிக்கக் குடும்பமும் இல்லாதபடியால் தாம் பணத்தைச் சேமிக்கக்கூடாது என்று அவர் கூறினார். தமது செலவில் நான்குசேர் பருப்பு வாங்கி ஆடுகளுக்கு அளிக்கும்படிக் கூறினார். இது முடிந்தபின், பாபா அவ்வாடுகளை மந்தையின் சொந்தக்காரருக்குக் கொடுத்துவிட்டு, ஆடுகளைப் பற்றிய தமது பழைய ஞாபகத்தையும், கீழ்கண்ட கதையையும் கூறினார்.
“ஓ! ஷாமா, தாத்யா!?”, இவ்வியாபாரத்தில் நான் ஏமாற்றப்பட்டு விட்டேன் என நீங்கள் நினைக்கிறீர்கள். கிடையாது. அவைகளின் கதையைக் கேகளுங்கள். அவைகளின் முந்தைய பிறவியில் மனிதர்களாய் இருந்தனர். எனது நண்பர்களாய் இருந்து, எனது அருகில் அமரும் நல்லதிர்ஷ்டம் பெற்றிருந்தனர். அவர்கள் ஒருதாய் மக்கள். முதலில் ஒருவரையொருவர் நேசித்தனர். ஆனால் பிற்காலத்தில் பகையாளிகளாய் ஆகிவிட்டனர். மூத்தவன் சோம்பேறி. பின்னவன் சுறுசுறுப்பானவன் ஆதலால் பெரும்பொருள் திரட்டினான். மூத்தவன் பேராசையும், பொறாமையும் கொண்டு பின்னவனைக் கொன்று பணத்தை எடுத்துக்கொள்ள விரும்பினான்.
தங்கள் சகோதர உறவை மறந்து, ஒருவருடன் ஒருவர் சண்டை போடத் தொடங்கினர். மூத்தவன் இளையவனைக் கொல்லப் பல வழிமுறைகளைக் கையாண்டு அவனது முயற்சிகளில் தோல்வியடைந்தான். இவ்வாறாக அவர்கள் மரண விரோதியானார்கள். முடிவாக ஒரு சந்தர்ப்பத்தில் மூத்தவன், இளையவன் தலையில் தடிக்கம்பால் பலத்த மரணஅடி ஒன்று கொடுக்க, இளையவன் மூத்தவனை கோடாரியால் தாக்க இதன் விளைவாக இருவரும் அவ்விடத்திலேயே மாண்டனர். அவர்கள் வினையின் காரணமாக இருவரும் ஆடுகளாகப் பிறந்தனர். சற்றுமுன் என்னைக் கடந்துசென்றபோது, நான் அவர்களை அறிந்துகொண்டேன். அவைகளின் முந்தைய பிறவிகளை நினைவுகூர்ந்து இரக்கம்கொண்டு அவைகளுக்கு இளைப்பாறுதலும், செளகரியமும் தர விரும்பி என்னிடம் இருந்த எல்லாப் பணத்தையும் செலவழித்தேன். இதற்காகத்தான் நீங்கள் என்னைக் குறை கூறுகிறீர்கள். நீங்கள் என்னுடைய பேரத்தை விரும்பாததால் நான் அவைகளை மேய்ப்பவனிடமே திருப்பி அனுப்பிவிட்டேன்”. என்றார். ஆடுகளிடம் சாயியின் அன்பு அத்தகையது.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்