Ads

அத்தியாயம் - 51 - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்முடிவுரை

நாம்‌ 51வது அத்தியாயத்தை முடித்துவிட்டு கடைசி அத்தியாயத்திற்கு (மூல நூலில்‌ 52வது அத்தியாயம்‌) வருகிறோம்‌. இதில்‌ முடிவுரையாகச்‌ சொல்லும்போது ஹேமத்பந்த்‌ மராத்தியப்‌ புனித நூல்களில்‌ உள்ளபடி இதுவரை உள்ள அத்தியாயங்களில்‌ கூறப்பட்டுள்ள விஷயங்களை பாடல்களாக அட்டவணைப்படுத்தி எழுதப்போவதாகக்‌ கூறியிருந்தார்‌. ஆனால்‌ துரதிர்ஷ்டவசமாக அம்மாதிரி அட்டவணை ஹேமத்பந்தின்‌ எழுத்துப்‌ பிரதிகளில்‌ இல்லை. எனவே பாபாவின்‌ ஆசிபெற்ற சிறந்த பக்தரான தாணேவைச்‌ சேர்ந்த மாஜி மம்லதார்‌ திரு B.V. தேவ்‌ என்பவர்‌ அதை அமைத்து வழங்கினார்‌. ஆங்கிலப்‌ புத்தகங்களில்‌ ஆரம்பத்தில்‌ அட்டவணை கொடுத்து ஒவ்வொரு அத்தியாயத்தில்‌ கண்டுள்ளவற்றை அதன்‌ தலைப்பில்‌ கொடுப்பதுபோல்‌ இந்த அத்தியாயத்தில்‌ கண்டுள்ளவற்றை அட்டவணையின்‌ கடைசியாகக்‌ கருதவேண்டாம்‌. எனவே இதை முடிவுரையாகக்‌ கருதுவோம்‌. துரதிர்ஷ்டவசமாக இந்த அத்தியாயத்தின்‌ கையெழுத்துப்‌ பிரதியைச்‌ சரிபார்த்து அச்சிடும்‌ வரையில்‌ ஹேமத்பந்த்‌ உயிருடன்‌ இல்லை. அது அச்சகத்துக்கு அனுப்பப்படும்‌ சமயம்‌ தேவ்‌ அவர்கள்‌ அவற்றின்‌ முடிவற்ற நிலையையும்‌ சில இடங்களில்‌ புரிந்துகொள்ள முடியாத நிலையில்‌ இருப்பதையும்‌ கண்டார்‌. ஆயினும்‌ அது அவ்வாறே பிரசுரிக்கப்பட வேண்டியதாயிற்று. அவற்றின்‌ முக்கியமான தலைப்புகள்‌ இங்கு சுருக்கமாகக்‌ கொடுக்கப்பட்டுள்ளன.

சத்குரு சாயி மகிமை

விருப்பு வெறுப்பு இல்லாதவரும்‌, உயர்வு தாழ்வுகளைக்‌ கருதாதவரும்‌, எவருக்கு பக்தர்கள்‌ எல்லோரும்‌ ஒரே மாதிரியாகக்‌ காணப்படுகிறார்களோ, எவர்‌ உயிரினங்கள்‌ எல்லாவற்றிலும்‌ எவ்வித பேதமுமின்றி கலந்து நிற்கிறாரோ, எவர்‌ இந்த அண்ட சராசரங்களில்‌ உள்ள அசையும்‌ - அசையாப்‌ பொருட்களை பகவான்‌ பிரம்மனுடைய ரூபத்தில்‌ உண்டாக்கி வீடுகள்‌, அரண்மனைகள்‌ மற்றும்‌ ஆகாயம்‌ இவை யாவற்றையும்‌ சூழ்ந்து நிற்கிறாரோ அந்த சமர்த்த சாயியை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறோம்‌. அவரை நினைத்தாலும்‌, சரசணடைந்தாலும்‌ அவர்‌ நமது எல்லா விருப்பங்களையும்‌ நிறைவேற்றி நம்மை வாழ்வின்‌ லட்சியங்களை அடையச்‌ செய்கிறார்‌. லோகாயத இச்சைகளாகிய இந்த சமுத்திரத்தைக்‌ கடப்பது மிகக்‌ கடினம்‌. மோகம்‌ என்ற அலைகள்‌ உயர்ந்து, தீய எண்ணங்களாகிய கரையை நோக்கி ஓடி மோதுகின்றன. ஆதலால்‌ நமது மன வலிமையாகிய மரங்கள்‌ வேருடன்‌ வீழ்த்தப்படுகின்றன. அஹங்காரமென்னும்‌ காற்று கடுமையாக வீசி, கடலைக்‌ கொந்தளிக்கச்‌ செய்கிறது. வெறுப்பு, கோபமாகிய முதலைகள்‌ பயமின்றித்‌ திரிகின்றன. நான்‌, எனது என்ற எண்ணங்களும்‌ மற்ற சந்தேகங்களும்‌ நீர்ச்சுழல்களாக இடையறாது சுற்றிக்கொண்டிருக்கின்றன. திட்டுதல்‌, வெறுத்தல்‌, பொறாமை ஆகிய எண்ணற்ற மீன்கள்‌ அங்கு விளையாடுகின்றன. இவ்வளவு பயங்கரமானதாகவும்‌, கொடுமையானதாகவும்‌ இந்தக்‌ கடல்‌ இருந்தாலும்‌ சத்குரு சாயி இதை அழிக்கவல்லவர்‌. அவரது பக்தர்கள்‌ இதைப்பற்றிப்‌ பயமடைய வேண்டியதில்லை. நமது சத்குரு இந்தக்‌ கடலை பத்திரமாகக்‌ கடப்பதற்கு வேண்டிய படகு போன்றவர்‌.‌

பிரார்த்தனை

இப்போது நாம்‌ சாயிபாபாவின்‌ முன்னே முழுவதுமாக வீழ்ந்து அவர்‌ பாதகமலங்களைப்‌ பற்றிக்கொண்டு கீழ்க்கண்டவாறு எல்லோரும்‌ எல்லாவற்றிற்குமாகப்‌ பிரார்த்திப்போம்‌. “எங்களது மனம்‌ கண்டவாறு அலையாமல்‌ தங்களைத்‌ தவிர வேறு எதையும்‌ விரும்பாமல்‌ இருக்கட்டும்‌. இந்த சத்சரிதம்‌ எல்லோருடைய இல்லங்களிலும்‌ இருந்து தினசரி பாராயணம்‌ செய்யப்படட்டும்‌. இதைத்‌ தினமும்‌ முறையாகப்‌ படிப்பவர்களின்‌ துயரங்களைத்‌ தீருங்கள்‌.

பலஸ்ருதி (பாராயண பலன்‌)

இச்சரிதம்‌ படிப்பதால்‌ நீங்கள்‌ பெறும்‌ நலன்களைப்‌ பற்றிச்‌ சில வார்த்தைகள்‌, புனித கோதாவரி நதியில்‌ குளித்துவிட்டு ஷீர்டியில்‌ உள்ள சமாதி மந்திரிலுள்ள பாபாவின்‌ சமாதியை வணங்கித்‌ தரிசித்து இந்த சத்சரிதத்தைப்‌ படிக்கவோ அல்லது கேட்கவோ வேண்டும்‌. இதைச்‌ செய்தால்‌ உங்கள்‌ உடல்‌, பொருள்‌, ஆவியைத்‌ தாக்கும்‌ தீங்குகள்‌ மறையும்‌. தற்செயலாகச்‌ சாயியின்‌ கதைகளை நினைப்பதன்‌ மூலம்‌, உங்களை அறியாமலேயே நீங்கள்‌ ஆன்மிக வாழ்வில்‌ விருப்பம்‌ கொள்வீர்கள்‌. இச்சரிதத்தை ஆர்வமுடனும்‌, பக்தியுடனும்‌ படிப்பதால்‌ உங்கள்‌ பாவங்கள்‌ அழிக்கப்படும்‌. ஜனன மரணச்‌ சுழலை ஒழிக்க நீங்கள்‌ விரும்பினால்‌ சாயியின்‌ சரிதங்களைப்‌ பாராயணம்‌ செய்து, அவரை நினைத்து அவரது திருவடிகளில்‌ உங்களைச்‌ சேர்த்துக்கொள்ளுங்கள்‌. நீங்கள்‌ சாயி சரித சாகரத்தில்‌ மூழ்கி மேலெழுந்து அதன்‌ இன்பத்தை மற்றவர்களுக்குக்‌ கூறும்போது அவற்றின்‌ புதுப்புது நித்ய சுகந்தத்தை உணர்ந்து மற்றவர்களையும்‌ தொல்லைகளிலிருந்து காப்பீர்கள்‌. சாயியின்‌ உருவையே நீங்கள்‌ தொடர்ந்து தியானித்தால்‌ நரளடைவில்‌ உருவம்‌ மறைந்து உங்கள்‌ தன்னுணர்விலேயே கலந்துவிடும்‌. தன்னையறிதலும்‌, பிரம்மத்தை உணர்தலும்‌ மிகக்‌ கடினம்‌. ஆனால்‌ சகுண பிரம்மாவாகிய சாயியின்‌ உருவத்தின்‌ மூலம்‌ வழிபட்டால்‌ உங்கள்‌ பிரம்ம உணர்வின்‌ முன்னேற்றம்‌ எளிதாகும்‌. பக்தனானவன்‌ தன்னை சாயியிடம்‌ பரிபூர்ண சரணாகதியாக்கிவிட்டால்‌ தன்னுடைய தனித்தன்மையை இழந்து ஐக்கியமாகி கடலுடன்‌ நதி சங்கமிப்பது போல்‌ அவருடன்‌ ஒன்றாகிறான்‌. கனவிலோ, உறக்கத்திலோ அல்லது விழித்திருக்கும்‌ நிலையிலோ இவ்வாறு அவருடன்‌ இரண்டறக்‌ கலந்தால்‌ நீங்கள்‌ சம்சார பந்தத்தை ஒழிக்கிறீர்கள்‌. யாராயினும்‌ குளித்துவிட்டு அன்புடனும்‌, உண்மையுடனும்‌ இதை ஒரு வாரத்திற்குள்‌ படித்து முடித்தால்‌ அவர்களைப்‌ பீடித்த கேடுகள்‌ மறையும்‌. படிக்கக்‌ கேட்பவர்களுக்கு வரும்‌ அபாயங்களும்‌ நீக்கப்படும்‌. இதைப்‌ பாராயணம்‌ செய்து செல்வத்தை விரும்புபவன்‌ செல்வத்தையும்‌, நல்ல வியாபாரிகள்‌ வியாபாரத்தில்‌ வெற்றியையும்‌ அடைவர்‌. உண்மைக்கும்‌, பக்திக்கும்‌ தகுந்தவாறே பலன்களும்‌ அமையும்‌. இவைகளின்றி எவ்விதமான அனுபவமும்‌ இல்லை. இச்சரிதத்தை பக்தியுடன்‌ படித்தால்‌ சாயி மனம்‌ மகிழ்ந்து உங்கள்‌ அறியாமையையும்‌, ஏழ்மையையும்‌ நீக்கி உங்களுக்கு ஞானமும்‌, செல்வமும்‌, க்ஷேமமும்‌ நல்குவார்‌. கருத்தூன்றிய மனத்துடன்‌ ஒவ்வொரு நாளும்‌ ஒரு அத்தியாயம்‌ படித்தால்‌ அது எல்லையற்ற ஆனந்தத்தைக்‌ கொடுக்கும்‌. தனது நலனை எவன்‌ மனதில்‌ கொண்டுள்ளானோ அவன்‌ கட்டாயம்‌ கவனமாகப்‌ படிக்கவேண்டும்‌. தொடரும்‌ பிறவிகளில்‌ ஒவ்வொரு பிறவியிலும்‌ எப்போதும்‌ சந்தோஷமாக அவன்‌ சாயியை நினைப்பான்‌. முக்கியமாக குருபூர்ணிமா, கோகுலாஷ்டமி, ராமநவமி, நவராத்திரி (பாபா சமாதியான விஜயதசமி) தினங்களில்‌ இச்சரிதம்‌ வீடுகளில்‌ பாராயணம்‌ செய்யப்படவேண்டும்‌. இதைக்‌ கவனமுடன்‌ படித்தால்‌ உங்கள்‌ ஆசைகள்‌ நிறைவேற்றப்படும்‌. அவர்‌ பாதகமலங்களை உங்கள்‌ மனதால்‌ நினைப்பதால்‌ சம்சார சாகரத்தைச்‌ சுலபமாகக்‌ கடப்பீர்கள்‌. இதைக்‌ கற்பதால்‌ நோயாளிகள்‌ குணமுற்று திடகாத்திரமடைவர்‌. ஏழைகள்‌ செல்வம்‌ அடைவர்‌.

கீழ்நிலையில்‌ உள்ளோரும்‌, நசுக்கப்பட்டோரும்‌ உன்னத நிலை பெறுவர்‌. மனம்‌ சலனங்களிலிருந்து விடுபட்டு ஒருநிலைப்படும்‌. நல்ல அன்பும்‌, பக்தியுமுள்ள வாசகர்களே, கேட்போரே! உங்களை வணங்குகிறோம்‌. வணங்கி ஒரு வேண்டுகோள்‌ விடுக்கிறோம்‌. தினமும்‌, மாதக்கணக்கிலும்‌ படித்த சாயியின்‌ கதைகளை ஒருபோதும்‌ மறக்காதீர்கள்‌. நீங்கள்‌ எவ்வளவு ஆவலுடன்‌ படிக்கிறீர்களோ அல்லது கேட்கிறீர்கேளளோ அவ்வளவுக்கவ்வளவு நாங்கள்‌ சாயியினால்‌ உற்சாகமூட்டப்பட்டு உங்களுக்குச்‌ சேவை செய்வதில்‌ உதவியாக இருப்போம்‌. இதன்‌ ஆசிரியர்‌, வாசகர்‌ இருவரும்‌ ஒத்துழைத்து உதவிசெய்து மகிழ்ச்சியுற வேண்டும்‌.

ப்ரசாத்‌ யாசனா - பிரசாதம்‌ கோரல்‌

கீழ்க்கண்ட பிரசாதம்‌ அல்லது உதவிகோரிப்‌ பிரார்த்தித்து இவ்வத்தியாயத்தை முடிக்கிறோம்‌. வாசகரும்‌, பக்தர்களும்‌ சாயியின்‌ பாதகமலங்களை சர்வ பக்தி பூர்வமாக நினைக்கட்டும்‌. சாயியின்‌ உருவம்‌ அவர்கள்‌ கண்களில்‌ நிலைக்கட்டும்‌. அவர்கள்‌ சாயிபாபாவை எல்லா உயிர்களிலும்‌ காணட்டும்‌.

ததாஸ்து - அப்படியே நடக்கட்டும்‌.‌

ஸ்ரீ சாயியைப்‌ பணிக அனைவர்க்கும்‌ சாந்தி நிலவட்டும்‌