அத்தியாயம் - 21
(1) திரு.1:சடாகூர், (2) அனந்தராவ் பாடண்கர், 3) பண்டரீபுரத்து வக்கீல் ஆகியோரின் கதைகள்.
இவ்வத்தியாயத்தில் விநாயக் ஹரிச்சந்திர டாகூர், புனேவைச் சேர்ந்த அனந்தராவ் பாடண்கர், பண்டரீபுரத்தைச் சேர்ந்த ஒரு வக்கீல் ஆகியோரின் கதைகளை ஹேமத்பந்த் விவரிக்கிறார். இந்தக் கதைகளெல்லாம் நிறைந்த சுவையானவை. அவைகளை மிகவும் கவனத்துடன் கற்றுக் கிரகித்துக்கொண்டால் வாசகர்களை அது ஆன்மிகப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.
முன்னுரை
முற்பிறவிகளில் சேகரித்த நல்வினைகள் என்ற ரூபத்திலுள்ள நமது நல்ல அதிர்ஷ்டமே முனிவர்களின் கூட்டுறவை நாம் பெறுவதற்கு அடிகோலி, அதனால் பயன் எய்தும்படி செய்கின்றது என்பது பொதுவான நியதியாகும். இந்நியதியின் விளக்கமாக ஹேமத்பந்த் தமது சொந்த நிகழ்ச்சியை எடுத்துக் காண்பிக்கிறார். பம்பாயின் புறநகர்ப் பகுதியான பாந்த்ராவில் பல ஆண்டுகளாக அவர் ஒரு ரெஸிடெண்ட் மாஜிஸ்ட்ரேட்டாக இருந்தார்.
பீர் மெளலானா என்னும் பெயருடைய புகழ்பெற்ற முஹமதிய முனிவர் ஒருவர் அங்கு வசித்து வந்தார். பல ஹிந்துக்கள், பார்ஸியர்கள் மற்றும் பல மதத்தினரும் அவரிடம் சென்று தரிசனம் பெறுவது வழக்கம். இனூஸ் என்ற பெயர்கொண்ட அவருடைய முஜாவர் (பூசாரி) இரவும், பகலும் பலமுறை அவரைச்சென்று தரிசிக்கும்படி ஹேமத்பந்தை வற்புறுத்தி வந்தார். ஆனால் என்ன காரணத்தாலோ அவரால் பீர் மெளலானாவை தரிசிக்க முடியவில்லை. பல ஆண்டுகட்குப் பிறகு அவருடையமுறை வந்தது. ஷீர்டிக்கு அவர் அழைக்கப்பட்டார். அவர் அங்கேயே சாயிபாபாவின் தர்பாரில் நிரந்தரமாகச் சேர்க்கப்பட்டார். துரதிர்ஷ்டம் உள்ளவர்கள், முனிவர்களின் இத்தொடர்பைப் பெறுவதில்லை. அதிர்ஷ்டசாலிகள் மட்டுமே அதைப் பெறுகிறார்கள்.
முனிவர்களின் நிறுவனங்கள்
நினைவுக்கும் எட்டாத பழங்காலத்திலிருந்து இவ்வுலகில் முனிவர்களுடைய நிறுவனங்கள் (ஆசிரமங்கள்) இருந்து வந்திருக்கின்றன. வெவ்வேறு முனிவர்கள் வெவ்வேறு இடங்களில் தம்மைத்தாம் தோற்றுவித்துக்கொண்டு (அவதரித்து) தங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணித்திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள். வெவ்வேறிடங்களில் செயலாற்றியபோதும் அவர்கள் அனைவரும் ஒருவரேயாவர்.
அனைத்தும் வல்ல பரம்பொருள் என்கின்ற பொதுவான ஆணையுரிமையின் கீழ் அவர்கள் அனைவரும் ஒத்தியைவுடன் செயல்படுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் மற்றவர்கள் தத்தம் இடங்களில் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது மிக நன்றாகவே தெரியும். தேவை ஏற்படும்போது பிறிதொருவரின் வேலையை நிறைவு செய்கிறார்கள். இதை விளக்கும் ஒரு நிகழ்ச்சி கீழே தரப்படுகிறது.
திரு. டாகூர்
V.H. டாகூர் B.A., என்பவர் வருவாய்த்துறை அலுவலகத்தில் ஒரு குமாஸ்தா. அவர் ஒருமுறை ஒரு சர்வே கோஷ்டியுடன் பெல்காமுக்கு (தெற்கு மஹாராஷ்ட்ரம்) அருகில் உள்ள வட்காவனுக்கு வந்தார். அங்கு அவர் கன்னட முனிவர் ஒருவரைக் (அப்பா) கண்டு அவர்முன் வணக்கம் செலுத்தினார். நிச்சலதாஸின் “விசார சாகரம்? என்ற நூலின் (வேதாந்தத்தைப் பற்றிய இயன்மதிப்பார்ந்த இலக்கியப் படைப்பு) ஒரு பகுதியை அவையோரின்முன் எடுத்து விளக்கிக்கொண்டிருந்தார். டாகூர் புறப்படுவதற்காக முனிவரிடம் விடைபெறும்போது அவர்,” நீ இந்தப் புத்தகத்தைக் கற்கவேண்டும். அங்ஙனம் செய்வாயேயாகில் உனது விருப்பங்கள் நிறைவேற்றப்படும். எதிர்காலத்தில் உனது அலுவலகக் கடமைகளின் நிமித்தமாக நீ வடக்கே செல்லும்போது உனது நல்ல அதிர்ஷ்டத்தினால் ஒரு பெரிய முனிவரைக் காண்பாய். அவர் உனக்கு எதிர்காலத்திற்கு உரிய வழியைக் காண்பிப்பார். உனது மனதுக்கு ஓய்வுகொடுத்து உன்னை மகிழச் செய்வார்!” என்று கூறினார்.
பின்னர் அவர் ஜுன்னருக்கு மாற்றப்பட்டார். நாணேகாட் என்ற நாணே மலைத்தொடரை அவர் கடந்து செல்லவேண்டியதாய் இருந்தது. மலைத்தொடர் மிகவும் செங்குத்தானதாகவும் கடப்பதற்கு இயலாததாயும் இருந்தது. அதனைக் கடக்க ஒரு எருமை மாட்டைத் தவிர வேறு எவ்விதப் போக்குவரத்து வசதியும் இல்லை. எனவே மலைத்தொடரின் மீது செல்வதற்கு அவர் எருமையின் மீது சவாரி செய்யவேண்டியதாயிற்று. அது அவரை மிகுந்த அசெளகரியத்திற்கும், வலிக்கும் உட்படுத்தியது.
பின்னர் அவர் கல்யாணுக்கு உயர்ந்த பதவியில் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு நானா சாஹேப் சாந்தோர்கரின் பழக்கம் ஏற்பட்டது. சாயிபாபாவைப் பற்றி அவரிடமிருந்து நிரம்பக் கேள்விப்பட்டிருந்தார். அவரைப் பார்க்க விரும்பினார். அடுத்த நாள் நானா சாஹேப் ஷீர்டிக்கு செல்வதாக இருந்தார், போகும்போது டாகூரையும் தன்னுடன் கூட வரும்படி அழைத்தார். டாகூரால் அவருடன் செல்ல இயலவில்லை. ஏனெனில், ஒரு சிவில் வழக்கு விஷயமாக அவர் தாணே சிவில் கோர்ட்டில் ஆஜராக வேண்டியிருந்தது. எனவே, நானா சாஹேப் தனியாகச் சென்றார். டாகூர் தாணேவுக்குச் சென்றார். ஆனால், அங்கு விசாரணை ஒத்திப்போடப்பட்டது. பின்னர், அவர் தாம் நானா சாஹேபுடன் செல்லாததற்கு பச்சாதாபப்பட்டார். எனினும், அவர் ஷீர்டிக்குச் சென்றார். அங்கு சென்றபோது அதற்கு முதல் தினமே நானா சாஹேப் ஷீர்டியை விட்டுச் சென்றதாக அறிந்தார். அவ்விடத்தில் சந்தித்த அவருடைய மற்ற நண்பர்கள் அவரை பாபாவிடம் அழைத்துச் சென்றார்கள்.
அவர் பாபாவைத் தரிசித்து அவருடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். அளவு கடந்த மகிழ்ச்சியடைந்தார். அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கியது. அவர் உடம்பு புல்லரித்தது. சிறிது நேரத்திற்குப் பின்னர் எங்கும் நிறை பேரறிவாளராகிய பாபா அவரைநோக்கி, “இவ்விடத்தினுடைய வழியானது கன்னடதேச முனிவரான அப்பாவின் உபதேசங்களைப் போன்றோ, நாணேகாட்டின் எருமைச் சவாரியைப் போன்றோ அவ்வளவு எளிதானதன்று. இவ்வாத்மிக வழியில், அது மிகவும் கடினமானதாகையால் நீர் உமது மிகச்சிறந்த முயற்சியைக் கைக்கொள்ளுதல் அவசியமாகும்”? என்று கூறினார். தாம் மட்டுமே அறிந்த இத்தகைய உட்கருத்து வளஞ்செறிந்த அடையாளங்களையும், சொற்களையும் கேட்டு டாகூர் ஆனந்தக் களிப்பில் மூழ்கினார். கன்னடதேச முனிவரின் மொழிகள் உண்மையானதைத் தெரிந்துகொண்டார்.
பின்னர் அவர் தனது இரு கரங்களையும் கூப்பி வணங்கித் தன் சென்னியை பாபாவின் பாதங்களில் வைத்து, தாம் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று வேண்டினார். பின்னர் பாபா கூறினார், “அப்பா உன்னிடம் சொன்னது சரியானதே. ஆனால், இவைகள் பயிலப்பட்டு வாழ்க்கையில் கடைபிடிக்கப்பட வேண்டும். வெறும் கல்வியினால் பயனேதும் இல்லை. நீங்கள் சிந்தித்து, கற்றபடி நெறியில் நிற்றல் வேண்டும். இல்லாவிடில் அவைகளால் ஒரு பலனும் இல்லை. குருவின் அனுக்கிரஹமின்றியும், ஆத்மானுபூதியின்றியும் உள்ள வெறும் ஏட்டுப் படிப்பால் பயனில்லை”. விசார சாகரம் என்ற நூலின் கோட்பாட்டியல் பகுதி டாகூரினால் படிக்கப்பட்டு வந்தது. ஆனால் ஷீர்டியில் அவருக்கு நடைமுறையிலான வழி காண்பிக்கப்பட்டது. பின்னால் கொடுக்கப்பட்ட மற்றொரு நிகழ்ச்சியும், இவ்வுண்மையை இன்னும் அதிக வன்மையுடன் வெளிக்கொணர்கிறது.
அனந்தராவ் பாடண்கர்
புனேவைச் சேர்ந்த அனந்தராவ் பாடண்கர் என்னும் பெருந்தகை ஒருவர் பாபாவைக் காண விரும்பினார். அவர் ஷீர்டிக்கு வந்து பாபாவின் தரிசனத்தைப் பெற்றார். அவரது கண்களில் ஆவல் நிறைவேறின. அவர் மிகவும் ஆனந்தமடைந்தார். பாபாவின் பாதங்களில் வீழ்ந்து உரிய வழிபாட்டை நிகழ்த்திய பின்பு, பாபாவிடம் “நான் ஏராளமாகப் படித்திருக்கிறேன். வேதங்கள், வேதாந்தங்கள், உபநிஷதங்கள் இவைகளைப் பயின்றும், புராணங்களைக் கேட்டும் இருக்கிறேன். என்றாலும் எனக்கு மனஅமைதி ஏற்படவில்லை.
எனவே, எனது கல்வியறிவு யாவும் பயனற்றவை என நினைக்கிறேன். எளிய, ஒன்றும் அறியாத பக்தியுள்ள மக்கள் என்னைவிடச் சிறந்தவர்கள். மனம் அடங்கினாலன்றி எந்த நூலறிவும் பயனில்லை. தங்கள் திருநோக்கினாலும், விளையாட்டான மொழிகளாலும் தாங்கள் எளிதாக எவ்வளவோ மக்களுக்கு மனச்சாந்தி வழங்குகிறீர்கள் என்று நான் பலரிடம் இருந்து கேட்டிருக்கிறேன். எனவே, நான் இங்கு வந்திருக்கிறேன். தயவுசெய்து என்மேல் இரக்கம் காண்பித்து, என்னை ஆசீர்வதியுங்கள்?” என்று கூறினார். இதற்கு பாபா அவருக்கு ஒரு உருவகக் கதை சொன்னார்.
ஒன்பது லத்தி உருண்டைகளின் கதை (நவவித பக்தி)
ஒருமுறை ஒரு வணிகன் இவ்விடம் வந்தான். அவன் முன்னால் ஒரு குதிரை லத்தி (சாணம்) இட்டது (ஒன்பது உருண்டை லத்தி). வணிகன் மனமார்ந்த அக்கறையுடன் தனது வேட்டியின் முனையை விரித்து அந்த ஒன்பது உருண்டைகளையும் அதில் சேகரித்தான். அதன் மூலம் அவன் மன ஒருமைப்பாட்டை (மன அமைதி) அடைந்தான்.
பாடண்கருக்கு இக்கதையின் உட்பொருள் விளங்கவில்லை. எனவே, அவர் கணேஷ் தாமோதர் என்ற தாதா கேல்கரிடம் பாபா இதன்மூலம் என்ன பொருள்கொள்கிறார் என்று கேட்டார். அவர் “எனக்கும் பாபா பொருள்கொள்வது, சொல்லுவது அனைத்தும் தெரியாது என்றாலும், அவருடைய தெய்வீக அகத்தூண்டுதலால் நான் தெரிந்துகொண்டதைக் கூறுகிறேன். குதிரையே கடவுளின் அருள். வெளிப்பட்ட ஒன்பது உருண்டைகள் பக்தியின் ரூபங்கள் அல்லது வகைகள். அவையாவன:
(1) ஸ்ரவணம் (கேட்டல்),
(2) கீர்த்தனை (வேண்டுதல்),
(3) ஸ்மரணம் (நினைவுறுத்திக்கொள்ளுதல்),
(4) பாத சேவனம் (பாதங்களை தஞ்சமடைதல்),
(5) அர்ச்சனை (பூஜை),
(6) நமஸ்காரம் (வணங்குதல்),
(7) தாஸ்யா (சேவை),
(8) சக்யத்வா (நட்பு),
(9) ஆத்ம நிவேதனம் (தன்னையே இறைவனுக்கு சமர்ப்பித்தல்)
இவைகள் பக்தியின் ஒன்பது விதங்கள். இவைகளில் ஏதாகிலும் நம்பிக்கையுடன் பின்பற்றப்பட்டால் பரமாத்வாகிய ஹரி மகிழ்வெய்தி பக்தனின் வீட்டில் தாமே வெளிப்படுவார். எல்லாச் சாதனைகளும் அதாவது ஜபம், தபம், யோகப்பயிற்சி, வேவேதபாராயணம் அவைகளின் வியாக்யானப் பேச்சு ஆகியவையாவும் பக்தியுடன் சேர்ந்திருந்தாலன்றி முழுவதுமாகப் பயனற்றவையே ஆகும். வேதஞானம் அல்லது பெரும் ஞானியென்ற புகழ், வெறும் சம்பிரதாயமான பஜனை இவற்றால் பயனில்லை. அன்பான பக்தியே தேவைப்படுவதாகும். வணிகனைப் போன்றோ அல்லது உண்மையைத் தேடும் ஒருவனைப் போன்றோ உங்களைக் கருதிக்கொள்ளுங்கள். ஒன்பதுவகை பக்தியை விளைவிப்பதில் அல்லது சேகரிப்பதில் அவன் கொண்டதைப் போன்ற கவலையுடனும், ஆர்வத்துடனும் இருங்கள். அப்போது நீங்கள் நிலையுறுதியையும், மனச்சாந்தியையும் எய்துவீர்கள்”.
அடுத்தநாள் பாடண்கர் பாபாவை வணங்கச் சென்றபோது பாபா அவரை ஒன்பது லத்தி உருண்டைகளையும் சேகரித்தீரா எனக் கேட்டார். அதற்கு அவர் தான் ஒரு எளியவனாயிருப்பதால் பாபா அவருக்கு முதலில் அருள்செய்ய வேண்டுமென்றும், பின்னர் அவைகளை எளிதாகச் சேர்க்கலாமென்றும் தெரிவித்தார். அதன் பின் பாபா அவரை ஆசீர்வதித்து அவர் மனஅமைதியும், நன்மையும் அடைவார் என்று கூறி ஆறுதல் அளித்தார். இதைக்கேட்டு பாடண்கர் அளவுகடந்த இன்பமும், மகிழ்ச்சியும் அடைந்தார்.
பண்டரீபுரத்து வக்கீல்
பாபாவின் எங்கும்நிறை பேரறிவையும், மக்களைத் திருத்துவதையும், சரியான பாதையில் அவர்களை நெறிப்படுத்துவதையும் காட்டும் சிறுகதை ஒன்றினைக் கூறி இவ்வத்தியாயத்தை முடிப்போம். ஒருமுறை பண்டரீபுரத்திலிருந்து ஒரு வக்கீல் ஷீர்டிக்கு வந்து மசூதிக்குச் சென்றார். சாயிபாபாவைக் கண்டார். அவர்தம் பாதத்தடியில் வீழ்ந்தார். கேட்காமலேயே சிறிது தக்ஷிணை அளித்தார். ஒரு மூலையில் அமர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் உரையாடலைக் கேட்க ஆர்வமுள்ளவராக இருந்தார்.
பின்னர், பாபா தமது முகத்தை அவர் பக்கம் திருப்பி, “மக்கள் தாம் எவ்வளவு வஞ்சனை உடையவர்களாக இருக்கிறார்கள்! அவர்கள், பாதங்களில் விழுகிறார்கள், தக்ஷிணை அளிக்கிறார்கள், ஆனால் அந்தரங்கமாக, காணாவிடத்தில் திட்டுகிறார்கள். இது அற்புதமாக இல்லையா? என்று கூறினார். இக்குல்லாய் (குறிப்பு) வக்கீலுக்குப் பொருத்தமாக இருந்தது. ஒருவருக்கும் இக்குறிப்பு விளங்கவில்லை. வக்கீல் இதை கிரகித்தார். ஆனால் அவர் அமைதியாய் இருந்தார்.
அவர் வாதாவுக்குத் திரும்பியபோது, வக்கீல் காகா சாஹேப் தீக்ஷித்திடம் சொன்னதாவது, “பாபா குறிப்பிட்டது சரிநுட்பமாக உண்மையே ஆகும். இக்கணை என்மேலேயே எய்யப்பட்டது. அதாவது, மற்றவர்களைத் திட்டுவதிலோ, அவதூறு பேசுவதிலோ நான் மனம்போன போக்கில் போகக்கூடாது என்ற எனக்குரிய குறிப்பேயாகும். பண்டரீ புரத்தின் முன்சீஃப் அல்லது சப்- ஜட்ஜ் (நூல்கர்) தமது உடல்நல முன்னேற்றத்தை முன்னிட்டு இவ்விடம் வந்து தங்கியிருந்தபோது, பண்டரீ புரத்தின் பார்-ரூமில் (வக்கீல்கள் அறையில்) இந்த விஷயத்தைப் பற்றிய விவாதம் (மற்ற பார் அறைகளில் நடப்பதைப் போன்று) நடந்தது.
துன்புற்று வந்த நோய்கள் யாவும் சாயிபாபாவின் பின்னால் போவதால் மட்டுமே மருந்துகள் இன்றி குணப்படுத்தப்படும் வாய்ப்பு சிறிதேனும் உள்ளதா என்றும், சப்-ஜட்ஜைப் போன்ற படித்தவர்கள் இதைப்போன்ற முறைகளை அனுசரிப்பது சரியா என்றும் சொல்லப்பட்டது அல்லது விவாதிக்கப்பட்டது. அதாவது மறைமுகமாக சாயிபாபா அவதூறு பேசப்பட்டார் அல்லது குறைகூறப்பட்டார். நானும் இந்த விஷயத்தில் கொஞ்சம் பங்குகொண்டேன். இப்போது சாயிபாபா எனது ஒழுங்கீனத்தை எடுத்துக் காட்டினார். இது எனக்குரிய கண்டனமாகாது, ஆனால் ஓர் சகாயமாகும். ஓர் உபதேசமாகும். அதாவது நான் பிறரைத் தூற்றுவது, துஷ்பிரசாரம் செய்வது இவற்றில் தன்னிச்சையுடன் செயல்படக் கூடாது என்பது பற்றியும் அனாவசியமாகப் பிறர் காரியங்களில் தலையிடக்கூடாது என்பது பற்றியுமாகும்”.
ஷீர்டி, பண்டரீபுரத்திலிருந்து முந்நூறு (300) மைல் தூரத்தில் இருக்கிறது. எனினும் அங்குள்ள பார் அறையில் என்ன நிகழ்ந்தது என்பதை பாபா தமது எங்கும்நிறை பேரறிவால் அறிந்திருந்தார். இடையில் உள்ள இடங்கள், ஆறுகள், காடுகள், மலைகள் யாவும் அவர்தம் அனைத்தையும் உணரும் பார்வைக்குத் தடை செய்வன அல்ல. அவர் எல்லோருடைய இதயங்களையும் பார்க்க முடியும், படிக்க முடியும். எதுவும் அவருக்கு ரகசியமோ மறைக்கப்பட்டதோ அன்று. அண்மையிலோ
ஈசாவின் நீதி
சேய்மையிலோ உள்ள ஒவ்வொன்றும் பட்டப் பகலொளியைப் போன்று தெளிவாகவும், சுத்தமாகவும் அவருக்குத் தெரியும்.
ஒரு மனிதன் பக்கத்தில் இருந்தாலும், தூரத்தில் இருந்தாலும் அவன் சாயிபாபாவின் எங்கும்நிறை கூர்ந்த பார்வையினின்று தப்ப முடியாது. இதிலிருந்து மற்றவர்களைப் பற்றித் தூஷணையாகப் பேசக்கூடாது என்றும், தேவையில்லாமல் மற்றவரைக் குறைகூறக் கூடாது என்றும் வக்கீல் அறிந்துகொண்டார். இவ்வாறாக அவர்தம் கெட்டகுணம் முழுவதுமாக மறைந்து நல்வழிக்குத் திருப்பப்பட்டார். இக்கதை வக்கீலுக்கே என்றாலும், அனைவருக்கும் இது பொருந்துவதேயாகும். அனைவரும் இந்நியதியை உளத்தில்கொண்டு, அதனால் வரும் பயனை அடையவேண்டும்.
சாயிபாபாவின் பெருமை ஆழங்காண இயலாதது. அவ்வாறே அவர்தம் அற்புதமான லீலைகளுமாகும். அவர்தம் வாழ்க்கையும் அங்ஙனமேயாகும். ஏனெனில் அவரே பரப்பிரம்ம அவதாரம் ஆவார்.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்