அத்தியாயம் - 28
ஷீர்டிக்கு இழுக்கப்பட்ட சிட்டுக் குருவிகள் - (1) லக்ஷ்மிசந்த், (2) புர்ஹாண்டமூர் மாது, (3) மேகா.
முன்னுரை
சாயி முடிவானவரோ, வரையறைக்கு உட்பட்டவரோ அல்ல. எறும்பு, பூச்சிகள் முதற்கொண்டு பிரம்மா வரையுள்ள எல்லா ஜீவராசிகளிலும் அவர் உறைந்திருக்கிறார். அவர் சர்வவியாபி. வேதஞானத்தில் நன்றாகப் பயிற்சியுடையவர். அங்ஙனமே ஆத்ம உணர்விலும். இவை இரண்டிலுமே அவர் வல்லவராகையால் சத்குருவாய் இருப்பதற்கு அவர் மிகப்பொருத்தமானவர். சீடர்களைத் தட்டியெழுப்பி, அவர்களை ஆத்ம உணர்வில் ஸ்தாபிக்க இயலாத யாரும், எவ்வளவு கற்றறிந்தவராக இருப்பினும் சத்குரு என்றழைக்கப்படுவதற்குத் தகுதியுடையவராகார். பொதுவாக இவ்வுடலை அன்னை ஈன்றெடுக்கிறாள். தவறாமல் வாழ்வை, சாவும் பின் தொடர்கிறது. ஆனால் சத்குருவோ வாழ்வு - சாவு இரண்டையுமே சத்குரு அழித்துவிடுகிறார். எனவே மற்றெவரைக் காட்டிலும் அதிகக் கருணையும், அன்பும் உடையவராவார்.\nசாயிபாபா அடிக்கடி கூறுவதாவது : “எனது ஆள் (பக்தன்) எவ்வளவு தூரத்திலிருந்தாலும், என்னிடமிருந்து மூவாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்தாலும் காலில் நூல் கட்டியுள்ள சிட்டுக் குருவியைப் போன்று ஷீர்டிக்கு இழுக்கப்படுவான்”. இந்த அத்தியாயம் அம்மாதிரி மூன்று சிட்டுக் குருவிகள் இழுக்கப்பட்ட கதையைக் கூறுகின்றது..
(1) லாலா லக்மிசந்த்
பம்பாயில் ஸ்ரீ வெங்கடேஷ்வர் அச்சகத்தில் இம்மனிதர் பணியாற்றி வந்தார். பின்னர் ரயில்வே டிபார்ட்மெண்டிலும் அதன் பின் ராலி பிரதர்ஸ் & கம்பெனியிலும் இவர் குமாஸ்தாவாகப் பணியாற்றினார். 1910ல் அவர் பாபாவின் தொடர்பு பெற்றார். கிறிஸ்துமஸுக்கு ஓரிரண்டு மாதங்களுக்கு முன்பாக, தாடியுடன் கூடிய கிழவனார் ஒருவர் தம் பக்தர்கள் புடைசூழ நின்று கொண்டிருப்பதைத் தான் சாந்தாக்ருஸில் இருக்கும்போது கனவில் கண்டார். சில நாட்களுக்குப் பின் தாஸ்கணுவின் கீர்த்தனையைக் கேட்பதற்காகத் தமது நண்பரான தத்தாத்ரேயா மஞ்சுநாத் பிஜுர் என்பவரின் வீட்டுக்குச் சென்றார். கீர்த்தனை செய்யும்போது மக்கள்முன் பாபாவின் படத்தை வைப்பது தாஸ்கணுவின் வழக்கமாகும். தான் கனவில் கண்ட கிழவனாரின் உருவ அமைப்புகள் எல்லாம் இப்படத்துடன் அப்படியே அச்சாகப் பொருந்தியிருப்பது கண்டு லக்ஷ்மிசந்த் அதிசயப்பட்டார். தான் கனவில் கண்ட கிழவனார் சாயிபாபாவே என்ற முடிவிற்கு வந்தார்.\nஇச்சித்திரத்தின் தரிசனம், தாஸ்கணுவின் பாடல், அவர் உரை நிகழ்த்திய துகாராமின் வாழ்க்கை இவை அனைத்தும் அவர் மனதில் ஓர் ஆழ்ந்த உணர்வை ஏற்படுத்தியது. அவர் ஷீர்டி போகத் தீர்மானித்தார். சத்குரு தேடும் படலத்திலும், ஆன்மிக முயற்சியிலும் கடவுள் எப்போதும் உதவி செய்கிறார் என்பது பக்தர்களின் அனுபவமாகும். அதேநாள் இரவு 8 மணியளவில் சங்கர் ராவ் என்ற அவரது நண்பர், வீட்டுக் கதவைத் தட்டி, ஷீர்டிக்குத் தன்னுடன் அவர் வருவாரா என்று கேட்டார். அவரது மகிழ்ச்சி கரை காணவில்லை. உடனே அவர் ஷீர்டி செல்லத் தீர்மானித்தார். தனது மாமாவிடமிருந்து ரூ.15ஐ கடன் வாங்கிக்கொண்டு உரிய ஏற்பாடுகளை எல்லாம் செய்தான பிறகு அவர் ஷீர்டிக்குப் புறப்பட்டார். ரயிலில் அவரும் அவரது நண்பரும் சில பஜனைப் பாடல்களைப் பாடினர். ஷீர்டிக்கு அருகில் உள்ள தங்கள் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்த, உடன் வந்த நான்கு முஹமதியப் பிரயாணிகளிடம் அவர்கள் இருவரும் சாயிபாபாவைக் குறித்து விசாரித்தனர்.\nபல ஆண்டுகளாக ஷீர்டியில் வசித்துவரும் சாயிபாபா ஒரு பெரும் ஞானி என்று அவர்கள் எல்லோரும் கூறினர். அவர்கள் கோபர்காவனை அடைந்தபோது, பாபாவுக்குச் சமர்ப்பிப்பதற்காக சில பழங்களை லக்ஷ்மிசந்த் வாங்க விரும்பியிருந்தார். ஆனால் அங்குள்ள இயற்கைக் காட்சிகள், வேடிக்கை வினோதங்கள் இவற்றில் அவ்வளவு தூரம் கவரப்பட்டவராய் அதிலேயே ஆழ்ந்து மூழ்கி மேற்படிப் பழங்களை வாங்குவதை மறந்தே போய்விட்டார். ஷீர்டியை அவர்கள் நெருங்கிக் கொண்டிருந்தபோது மீண்டும் பழங்களைப் பற்றி அவருக்கு நினைவு வந்தது. அதே சமயத்தில் தலையில் பழக்கூடையுடன் இருந்த கிழவி ஒருத்தி வண்டியைத் தொடர்ந்து ஓடி வந்துகொண்டிருப்பதைக் கண்டார். வண்டி நிறுத்தப்பட்டது. மகிழ்வுடன் சில பழங்களைப் பொறுக்கி அவர் வாங்கினார். அப்போது, “மீதமுள்ளவற்றையும் எடுத்துக்கொண்டு போய் என் சார்பில் பாபாவுக்குச் சமர்ப்பியுங்கள்*? என்றாள் அக்கிழவி. பழங்களை அவர் வாங்க எண்ணியிருந்தது, அவர் அதை மறந்துபோனது, அக்கிழவியின் குறுக்கீடு, பாபாவின்பால் அவளது பக்தி, ஆகிய இந்த உண்மைகள் அனைத்தும் அந்த இரு நண்பர்களுக்கும் வியப்பையூட்டியது.\nஇந்தக் கிழவி, தான் கனவில் கண்ட கிழவனாருக்கு ஏதேனும் உறவுபோலும் என்று லக்ஷ்மிசந்த் நினைத்தார். பின்னர் மீண்டும் அவர்கள் சவாரி செய்து ஷீர்டிக்கருகில் வந்தனர். மசூதியில் கொடி பறந்துகொண்டிருப்பதைக் கண்டு அதற்கு அவர்கள் வணக்கம் செலுத்தினர். கையில் பூஜை சாமான்களுடன் மசூதிக்கு சென்று உரியமுறையில் பாபாவை வழிபட்டனர். லக்ஷ்மிசந்த் பாபாவைக் கண்டதும் மிகவும் உருகி, அதிக மகிழ்ச்சியடைந்தார். நறுமணம் கமழும் தாமரை மலரால் தேனீ ஒன்று கவரப்படுவதுபோல் பாபாவின் திருவடிகளில் அவர் கவரப்பட்டார்.\nபின்னர் பாபா கூறினார் : “வஞ்சகமான ஆசாமி! வழியில் பஜனை செய்கிறான். மற்றவர்களை விசாரிக்கிறான். ஏன் மற்றவர்களைக் கேட்கவேண்டும்? நமது கண்களாலேயே எல்லாவற்றையும் நாம் காண வேண்டும். மற்றவர்களைக் கேட்க வேண்டிய அவசியம் என்ன? உனது கனவு மெய்யா, பொய்யா என்று நீயே எண்ணிப்பார். மார்வாடியிடமிருந்து கடன் வாங்கிக்கொண்டு தரிசனத்துக்காக வரவேண்டியதன் தேவையென்ன? உள்ளத்தின் ஆசை இப்போது நிறைவடைந்ததா?”\nஇம்மொழிகளைக் கேட்டு பாபாவின் சர்வ வியாபித்துவத்தைக் கண்டு லக்ஷ்மிசந்த் அதிர்ச்சியடைந்தார். தனது வீட்டிலிருந்து தான் ஷீர்டிக்கு வரும் வழியில் நிகழ்ந்தது எல்லாவற்றையும் பாபா அறிந்தது எங்ஙனம் என்று திகைத்து நின்றார்.\nதமது தரிசனத்தைப் பெறுவதற்காகவோ, எந்த ஒரு விழா நாட்களைக் கொண்டாடுவதற்காகவோ, தீர்த்த யாத்திரை செய்வதன் பொருட்டோ மக்கள் கடனாளியாவது பாபாவுக்குப் பிடிக்கவே பிடிக்காது என்பதே இவ்விடத்தில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயமாகும்.
சன்ஸா (கோதுமைப் பணியாரம்)
மத்தியான வேளையில் லக்ஷ்மிசந்த் உணவுக்காக அமர்ந்திருந்தபோது, ஒரு பக்தரிடமிருந்து பிரசாதமாகக் கொஞ்சம் சன்ஸாவை அவர் பெற்றார். மறுநாளும் அதை அவர் எதிர்பார்த்தார். ஆனால் ஒன்றும் பெறவில்லை. எனவே அதைப்பெற அவர் கவலையுற்றார். மூன்றாம் நாள் பாபாவிடம் ஆரத்தி நேரத்தின்போது என்ன நைவேத்யம் தான் கொண்டுவர வேண்டுமென ஜோக் கேட்டார். சன்ஸாவைக் கொண்டுவரும்படி பாபா கூறினார்.\nபின் பக்தர்கள் இரண்டு பானை நிறைய சன்ஸாவைக் கொண்டுவந்தனர். லக்ஷ்மிசந்த் மிகவும் பசியாய் இருந்தார். அவர் முதுகில் கொஞ்சம் வலி இருந்தது. பாபா அப்போது, “நீ பசியாயிருப்பது நன்று. அதற்காக கொஞ்சம் சன்ஸாவை உட்கொள். முதுகு வலிக்கு ஏதாவது மருந்து போட்டுக் கொள்!” என்று அவரிடம் கூறினார். பாபா மீண்டும் தம் மனதைப் படித்து, அங்கு என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை உணர்த்தியது குறித்து அவர் மீண்டும் ஆச்சரியத்தால் தாக்கப்பட்டார். எத்தகைய சர்வவியாபியாக பாபா இருக்கிறார்.
த்ருஷ்டி
இத்தருணத்தில் லக்ஷ்மிசந்த் ஒருமுறை ஓர் இரவு சாவடி ஊர்வலத்தைக் கண்ணுற்றார். பாபா அப்போது இருமலால் மிகுந்த அல்லல்பட்டுக் கொண்டிருந்தார். பாபாவின் இத்தொல்லை சிலரின் த்ருஷ்டிபட்டதால் இருக்க வேண்டும் என்று நினைத்தார். மறுநாள் காலை அவர் மசூதிக்குச் சென்றபோது பாபா ஷாமாவிடம் “நேற்றிரவு நான் இருமலால் அவதியுற்றேன். அது த்ருஷ்டியினாலோ? சிலரின் த்ருஷ்டி என் மீது வேலை செய்கிறது. எனவேதான் நான் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன்?” என்றார். இவ்விஷயத்தில் லக்ஷ்மிசந்தின் உள்ளத்தில் இருந்ததை பாபா பேசினார்.\nபாபாவின் சர்வ வியாபித்துவத்துக்கான இந்த நிரூபணங்களையெல்லாம் கண்டுவிட்டு பாபாவை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, “நான் தங்கள் தரிசனத்தால் பெருமகிழ்ச்சியடைகிறேன். எப்போதும் என்பால் அன்புகொண்டு தயவுள்ளவராக இருந்து என்னைக் காத்து ரக்ஷியுங்கள். தங்கள் பாதாம்புயத்தைத் தவிர பிறிதொரு கடவுள் எனக்கில்லை. தங்கள் பஜனையின்பாலும், பாதகமலங்களின்பாலும் என் மனம் எப்போதும் லயித்து இருக்கட்டும். இவ்வுலகின் துன்பங்களிலிருந்து தங்களின் அருள் எங்களைப் பாதுகாக்கட்டும். நான் எப்போதும் தங்கள் நாமத்தையே உச்சரிக்க வேண்டும். மகிழ்வுடன் இருக்கவேண்டும்” என்று வேண்டினார்.\nபாபாவின் உதியையும், ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டு மிகவும் அகமகிழ்ந்து, திருப்தியுற்று வழியெல்லாம் பாபாவின் புகழைப் பாடியவண்ணம் தன் நண்பனுடன் வீடு திரும்பினார். அது முதற்கொண்டு பாபாவின் தீவிர பக்தராக அவர் இருந்தார். ஷீர்டிக்குச் செல்லும் எந்த நண்பனிடமும் பூமாலைகள், தக்ஷிணை, கற்பூரம் இவைகளை அவர் கொடுத்தனுப்புவார்.
புர்ஹாண்பூர் அம்மையார்
இப்போது நாம் மற்றுமொரு குருவியிடம் திரும்புவோம் (பக்தனுக்கு பாபா அழைக்கும் பெயர்). புர்ஹாண்பூரில் உள்ள ஒரு மாது, சாயிபாபா தன் வீட்டுக்கு வந்து அவர்தம் உணவுக்காக கிச்சடி (உப்பு, பருப்பு கலந்த சாதம்) பிச்சை கேட்டுக் கொண்டிருப்பதாகக் கனவு கண்டாள். விழித்துப் பார்க்கையில் வாசற்படியில் யாரையும் காணோம் என்றபோதும் அக்காட்சியால் அவள் மனம் மிக நெகிழ்ந்து தனது கணவன் உள்ளிட்ட அனைவருக்கும் கூறினாள். தபால் இலாகாவில் அவர் பணியாற்றி வந்தார். அவர் அகோலாவுக்கு மாற்றப்பட்டபோது பக்தர்களான கணவனும் மனைவியும் ஷீர்டிக்குப் போவதெனத் தீர்மானித்தனர். ஒரு பொருத்தமான நாளில் இருவரும் புறப்பட்டு வழியில் கோமதி தீர்த்தத்துக்குச் சென்றுவிட்டு ஷீர்டியை அடைந்து அங்கு இரண்டு மாதங்கள் தங்கினர்.\nஒவ்வொரு நாளும் அவர்கள் மசூதியை அடைந்து பாபாவை வழிபட்டு, காலத்தைச் சந்தோஷமாகக் கழித்தனர். அவ்விருவரும் கிச்சடியை நைவேத்யமாக சமர்ப்பிக்க ஷீர்டிக்கு வந்தனர். ஆனால் முதல் பதினான்கு தினங்களுக்கு என்ன காரணத்தினாலேயோ அதை சமர்ப்பிக்க அவர்களுக்கு இயலவில்லை. அப்பெண்மணிக்கு இந்தக் காலதாமதம் பிடிக்கவில்லை. பின் பதினைந்தாவது நாள் அவள் தனது கிச்சடியுடன் மசூதிக்கு வந்தாள். பாபாவும் மற்றவர்களும் ஏற்கனவே சாப்பாட்டுக்காக அமர்ந்துகொண்டிருப்பதையும் திரை தொங்கவிடப்பட்டதையும் கண்டாள். ஆனால் அவளால் பொறுக்க இயலவில்லை. திரையைக் கையால் விலக்கிவிட்டு உள்ளே நுழைந்தாள். அப்பலகாரத்துடன் அவள் வந்ததும் பாபா மிகவும் மகிழ்ந்து கரண்டி- கரண்டியாகக் கிச்சடியை உண்டார். இவ்விஷயத்தில் பாபாவின் ஊக்கத்தைக் கண்டு எல்லோரும் அதிசயமடைந்தனர். இந்தக் கிச்சடிக் கதையைக் கேட்பவர்களுக்கெல்லாம் பக்தர்கள்பால் பாபா கொண்டிருந்த அசாதாரண அன்பு உறுதியாயிற்று.
மேகா
இப்போது நாம் மூன்றாவதும், பெரியதுமான சிட்டுக் குருவியிடம் போவோம். ராவ்பஹதூர் ஹரிவிநாயக் சாதேவின் பிராமணச் சமையல்காரனான வீரம்காவனைச் சேர்ந்த மேகா என்பவன் எளிமை மிகுந்தவன், படிக்காதவன். அவன் ஒரு சிவபக்தன். 'நமசிவாய:' என்ற பஞ்சாக்ஷரத்தை அவன் சதாகாலமும் ஸ்மரித்து வந்தான். சந்தியாவைப் பற்றியோ அதன் முக்கிய மந்திரமான காயத்ரியைப் பற்றியோ அவனுக்கு எதுவும் தெரியாது. சாதே அவனிடம் ஆர்வம் பூண்டு அவனுக்கு சந்தியாவையும், காயத்ரியையும் கற்பித்தார். ஷீர்டி சாயிபாபா சிவனின் அவதாரம் என்று அவனுக்குக் கூறி ஷீர்டிக்கு அவனைப் புறப்படச் செய்தார். ப்ரோச் ரயில் நிலையத்தில் சாயிபாபா ஒரு முஹமதியர் என்று கேள்விப்பட்டான். அவனது வைதீகமான எளிய மனம் ஒரு முஹமதியர் முன் வணங்குவதைக் குறித்து மிகவும் குழப்பமடைந்ததால் தன்னை அங்கு அனுப்ப வேண்டாமென அவனது எஜமானரை வேண்டிக்கொண்டான். ஆனால் அவரோ போகவேண்டியதை வற்புறுத்தி அவ்விடமிருந்த தனது மாமனாரான கணேஷ் தாமோதர் என்ற தாதா கேல்கருக்கு ஒரு கடிதம் கொடுத்து அவனை சாயிபாபாவுக்கு அறிமுகப்படுத்துமாறு அனுப்பினார்.\nஅவன் ஷீர்டிக்குச் சென்று மசூதியை அடைந்தபோது பாபா மிகவும் கோபமாய் இருந்தார். அவனை மசூதிக்குள் நுழைய விடவில்லை. “அந்த ராஸ்கலை வெளியே தள்ளு” என்று கர்ஜித்தார். “நீ உயர்ந்த ஜாதி பிராமணன். நான் கீழான முஹமதியன். இங்கு வருவதால் நீ உனது ஜாதியை இழந்துவிடுவாய். எனவே நீ போய்விடு” என்று அவனை நோக்கி உரைத்தார். இவ்வுரைகளைக் கேட்டதும் மேகா நடுங்கத் தொடங்கினான். தன் மனதில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை பாபா எங்ஙனம் அறியலானார் என்பது குறித்து அவன் ஆச்சரியப்பட்டுக்கொண்டிருந்தான்.\nஅவன் அங்கு சில நாட்கள் தங்கி பாபாவுக்குத் தனக்கே உரியமுறையில் சேவை செய்துகொண்டிருந்தான். ஆனால் இன்னும் பக்குவமடையவில்லை. பின்னர் அவன் வீட்டிற்குச் சென்றுவிட்டு த்ரயம்பகேஷ்வரத்தில் ஒன்றரை ஆண்டுகள் தங்கியிருந்துவிட்டு மீண்டும் ஷீர்டிக்கு வந்தான். இம்முறை தாதா கேல்கரின் குறுக்கீட்டால் மசூதிக்குள் நுழையவும், ஷீர்டியில் தங்கவும் அனுமதிக்கப்பட்டான். மேகாவுக்கு பாபா உதவியது வாய்மொழிக் குறிப்புகள் எதனாலும் அல்ல. மேகாவின்மேல் அவர் மானசீகமான அருள் செய்தார். இதனால் மேகா பெருமளவு மாறுதலுற்று நன்மை அடைந்தான். பின்னர் சாயிபாபாவை சிவ அவதாரமாகவே அவன் கருதலானான். சிவனை வழிபடுவதற்கு வில்வ இலைகள் தேவையாய் இருந்ததால் மேகா ஒவ்வொரு நாளும் அவைகளைக் கொணர்வதற்காக மைல் கணக்கில் நடந்துசென்று தனது சிவனை (பாபாவை) வழிபடுவான்.\nகிராமத்தில் உள்ள எல்லா தெய்வங்களையும் வணங்கிய பின்னர் மசூதிக்கு வந்து பாபாவின் ஆசனத்திற்கு வணக்கம் செலுத்திய பின்னர் அவன் பாபாவை வழிபட்டு, சில சேவைகளைச் (பாபாவின் பாதங்களைப் பிடித்து விடுவது) செய்து பின்பு பாபாவின் பாதங்களைக் கழுவிய தீர்த்தத்தைப் பருகுவது ஆகியவை அவனது வழக்கம். ஒருமுறை கண்டோபா கோவிலின் கதவு சாத்தியிருந்ததால் அவன் அந்தக் கடவுளை வழிபடாமலே மசூதிக்கு வந்தான். பாபா அவனது வணக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் கதவு திறந்திருக்கிறது என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார். மேகா அங்கு சென்று கதவு திறந்தது கண்டு கண்டோபாவை வணங்கிய பின் வழக்கம்போல் பாபாவிடம் திரும்பி வந்தான்.
கங்கா ஸ்நானம்
ஒரு மகர சங்கராந்தி தினத்தன்று பாபாவின் உடலில் சந்தனம் பூசி அவரைக் கங்கை நீரால் குளிப்பாட்ட மேகா விரும்பினான். இந்த செயல்முறைக்கு உடன்பட முதலில் பாபா மனதில்லாதவராய் இருந்தார். ஆனால் அவனது தொடர்ந்த வேண்டுதல்களின் காரணமாக சம்மதித்தார். கோமதி ஆற்றிலிருந்து புனிதநீர் கொணர்வதற்காக அவன் 24 மைல் நடந்து போய்வர வேண்டும். அவ்வாறு நீர் கொண்டுவந்து மத்தியான ஸ்நானத்திற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, பாபாவை அதற்காகத் தயாராய் இருக்கும்படி கேட்டுக்கொண்டான்.\nஒரு பக்கிரி என்ற முறையில் தனக்கும் கங்கை நீருக்கும் ஒன்றும் தொடர்பு இருக்கவில்லை என்றுகூறி மீண்டும் அவனிடம் இந்தக் குளியலிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டினார். ஆனால் மேகா அதற்குச் செவி சாய்க்கவில்லை. கங்கை நீர் அபிஷேகத்தால் சிவபெருமான் மகிழ்கிறார் என்று அவனுக்குத் தெரியும். அந்த நல்ல நாளன்று அவனது சிவனுக்கு (பாபா) அந்த அபிஷேகத்தைச் செய்தாக வேண்டும். பின்னர் பாபா சம்மதித்துக் கீழிறங்கி வந்து ஆசனப் பலகையில் அமர்ந்து தலையை முன்னால் நீட்டிக்கொண்டு “ஓ! மேகா, இதையாவது தயவு செய்வாயாக, தலையே உடம்பின் பிரதான பாகமாதலால் தலைமேல் மட்டும் நீர் ஊற்று. உடம்பு முழுவதும் குளிப்பதற்கு அது சமமாகும்” என்றார். “அப்படியே?” என்றான் மேகா. அபிஷேக கலயத்தை மேலே தூக்கித் தலையின்மேல் ஊற்றத் தொடங்கினான். ஆனால் அப்படி செய்துகொண்டிருக்கும்போது அன்பால் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு “ஹர்.. ஹர்.. கங்கே!” என்று கூவிக்கொண்டே அவர் உடல் முழுவதும் நீரை ஊற்றிவிட்டான். கலயத்தைப் புறத்தில் வைத்துவிட்டுப் பாபாவைப் பார்க்கத் தொடங்கினான். அவனது வியப்புக்கும் ஆச்சரியத்துக்கும் ஏற்ப பாபாவின் தலை மட்டுமே நனைந்திருந்தது. உடம்பு ஈரமில்லாமலே இருந்தது.
திரிசூலமும் லிங்கமும்
பாபாவை மேகா இரண்டு இடங்களில் வழிபட்டான். மசூதியில் நேரடியாகவும், வாதாவில் நானா சாஹேப் சாந்தோர்கர் அளித்த பாபாவின் பெரியபடத்தின் மூலமாகவும் பூஜித்து வந்தான். இதை அவன் ஓராண்டுகாலம் செய்துவந்தான். பின்னர் அவனது பக்தியை மெச்சி அவனது நம்பிக்கையை உறுதி செய்வதற்காக பாபா அவனுக்கு ஒரு காட்சி நல்கினார். ஒருநாள் அதிகாலையில், மேகா இன்னும் படுக்கையைவிட்டு எழாமலிருக்கையில் ஆனால் கண்கள் மூடியிருந்த நிலையில் (விழிப்புடன்), பாபாவின் உருவத்தை அவன் தெளிவாகக் கண்டான்.\nஅவன் விழித்திருப்பதை அறிந்து பாபா அவன்மீது அக்ஷதையை வீசியெறிந்து “மேகா! திரிசூலம் வரை” என்று உரைத்து மறைந்துவிட்டார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவன் ஆவலுடன் கண்களைத் திறந்தான். ஆனால் அங்கு பாபாவைக் காணவில்லை. அக்ஷதை மட்டும் அங்குமிங்கும் சிதறிக் கிடப்பதைக் கண்டான். பின்னர் பாபாவிடம் சென்று காட்சியைப்பற்றிக் கூறி ஒரு திரிசூலம் வரைவதற்கு அவரின் இசைவையும் கேட்டான்.\nபாபா : திரிசூலம் வரையும்படி நான் உன்னைக் கேட்ட மொழிகளை நீ கேட்கவில்லையா? எனது மொழிகள் எப்போதும் பொருள் என்னும் சூல் கொண்டிருக்கின்றன. ஒருபோதும் வெறுமையானதல்ல.\nமேகா : என்னைத் தாங்கள் எழுப்பியதாகக் கருதினேன். ஆனால் எல்லாக் கதவுகளும் மூடியிருந்ததால் அதை ஒரு காட்சியாக நினைத்தேன்.\nபாபா : நான் நுழைவதற்கு எனக்கு எவ்விதக் கதவும் தேவையில்லை. எனக்கு எவ்வித உருவமோ, நீளமோ கிடையாது. எப்போதும் எங்கும் நான் வசிக்கிறேன். என்னை நம்பி என்பால் லயமாகும் மனிதனின் எல்லாக் காரியங்களையும் பொம்மலாட்டத்தைப் போன்று நான் நின்று நடத்துகிறேன்.\nமேகா, வாதாவுக்குத் திரும்பிவந்து பாபாவின் படத்தருகே சிவப்பு திரிசூலம் ஒன்றைச் சுவரில் வரைந்தான். மறுநாள் புனேவில் இருந்து ஒரு ராம்தாஸி பக்தர் வந்து பாபாவை வணங்கி அவருக்கு ஒரு லிங்கத்தைச் சமர்ப்பித்தார். இச்சமயத்தில் மேகாவும் அவ்விடம் வந்தான். பாபா அவனிடம், “பார், சங்கர் வந்துவிட்டார். இப்போது அவரைக் காப்பாற்று (அதாவது வழிபடு). சூலத்தை, லிங்கம் உடனே தொடர்ந்து வந்தது கண்டு மேகா அதிசயமடைத்தான். வாதாவிலும் கூட காகா சாஹேப் தீக்ஷித் குளித்தபின் கையில் துவட்டிய துண்டுடன் நின்று சாயியை நினைத்துக் கொண்டிருந்தார்.\nஅப்போது மனக்காட்சியில் ஒரு லிங்கத்தைக் கண்டார். இது குறித்து அவர் அதிசயப்பட்டுக் கொண்டிருக்கையில் மேகா அவ்விடம் வந்து, பாபா தனக்கு பரிசளித்த லிங்கத்தை அவரிடம் காட்டினான். தான் சில நிமிட நேரங்களுக்கு முன் காட்சியில் தரிசித்த லிங்கம் இதனுடன் அச்சாகப் பொருந்தியிருப்பது கண்டு அவர் மிகவும் மகிழ்வுற்றார். சில நாட்களில் திரிசூலம் வரைவதும் முடிவடைந்தது. பாபா அந்த லிங்கத்தை, மேகா வழிபட்டுக்கொண்டிருந்த பெரிய படத்தின் அருகில் ஸ்தாபித்தார். சிவ பூஜை செய்வது மேகாவுக்கு மிகவும் பிடித்தமானது. திரிசூலம் வரையச் செய்வித்தும், அதனருகில் லிங்கத்தை ஸ்தாபித்தும் பாபா அவனது நம்பிக்கையை ஊர்ஜிதம் செய்தார்.\nபல ஆண்டுகள் தொடர்ந்த சேவைக்குப் பின்னர், ஒவ்வொரு நாள் மத்தியானமும், மாலையும் வழக்கமான வழிபாட்டையும், ஆரத்தியையும் செய்த பின்பு, 1912ல் மேகா சிவபதம் சேர்ந்தான். பின்னர் பாபா தமது கைகளை அவனது உடல்மீது தடவி, “இவன் என் உண்மை பக்தன்” என உரைத்தார். தமது சொந்த செலவிலேயே வழக்கமான சாப்பாடு பிராமணர்களுக்குச் செய்துவைக்க ஆணையிட்டார். இது காகா சாஹேப் தீக்ஷித்தால் நிறைவேற்றப்பட்டது.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்