Ads

அத்தியாயம் - 47 - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்



அத்தியாயம்‌ - 47

பாபாவின்‌ பூர்வஜென்ம ஞாபகங்கள்‌ - வீரபத்ரப்பா, சனபஸப்பா (பாம்பு, தவளை) ஆகியோரின்‌ கதை.

இரண்டு ஆடுகளைப்பற்றி பாபாவின்‌ பழைய ஞாபகங்களை சென்ற அத்தியாயம்‌ விவரித்தது. இது அத்தகைய இன்னும்‌ பல ஞாபகங்களையும்‌ வீரபத்ரப்பா, சனபஸப்பா ஆகியோரின்‌ கதையையும்‌ கூறுகிறது.

முன்னுரை

சாயியின்‌ முகம்‌ புனிதமானது. சில கணங்களுக்கு நாம்‌ நமது பரர்வையை அவர்பால்‌ செலுத்தினாலும்‌ நமது முந்தைய பல பிறவிகளின்‌ துக்கங்களையழித்து நம்மீது பேரானந்தத்தை பொழிகிறார்‌. கருணையுடன்‌ அவர்‌ நம்மீது நோக்குவாராயின்‌ நமது முன்னைய கர்மவினைக்‌ கட்டுக்களெல்லாம்‌ அறுபட்டு மகிழ்ச்சிக்கு வழிகாட்டப்படுகிறோம்‌. கங்கை நதியானவள்‌, அவளிடம்‌ குளிப்பதற்காகச்‌ செல்லும்‌ மக்களனைவரின்‌ பாவங்களையும்‌, அழுக்கையும்‌ நீக்குகிறாள்‌. ஆனால்‌ ஞானிகள்‌ தன்னிடம்‌ வரவேண்டுமென்றும்‌, அவர்களது பாதாரவிந்தங்களால்‌ தான்‌ ஆசீர்வதிக்கப்பட்டு, தன்னிடம்‌ குவிக்கப்பட்ட அழுக்கு (பாவங்கள்‌) நீக்கப்படவேண்டுமென்றும்‌ மிகுந்த ஆவலுடன்‌ விரும்புகிறாள்‌. ஞானிகளின்‌ பாதாரவிந்தங்களால்‌ மட்டுமே இப்பாவமூட்டை அழிக்கப்படும்‌ என்று அவள்‌ உறுதியாக அறிகிறாள்‌. ஞானிகளுக்கெல்லாம்‌ தலையாய முடிமணியாக சாயி விளங்குகிறார்‌. அவரிடமிருந்து இப்போது நம்மைத்‌ தூய்மைப்படுத்தும்‌ பின்வரும்‌ கதையைக்‌ கேளுங்கள்‌."

பாம்பும்‌, தவளையும்‌

ஒருநாள்‌ எனது காலை உணவை உண்டபின்‌ ஒரு சிறு நதிக்கரை வரும்வரை மெதுவாக உலவிக்கொண்டிருந்தேன்‌. களைப்பாய்‌ இருந்தபடியால்‌ அங்கு சற்று இளைப்பாறினேன்‌. எனது கைகால்களைக்‌ கழுவிக்கொண்டு, குளித்துவிட்டு புத்துணர்ச்சி பெற்றேன்‌. அங்கு மரங்கள்‌ அடர்ந்து நிழல்மிகுந்த ஒரு வண்டிப்‌ பாதையும்‌, ஒற்றையடிப்பாதையும்‌ இருந்தது. மெல்லிய இளங்காற்றும்‌ இதமாக வீசிக்கொண்டிருந்தது. நான்‌ புகைபிடிப்பதற்கு சில்லிம்‌ (புகைக்குழாய்‌) தயார்‌ செய்துகொண்டிருந்தபோது ஒரு தவளை ஓலமிடுவதைக்‌ கேட்டேன்‌. சிக்கிமுக்கிக்‌ கல்லைத்‌ தட்டி நெருப்புப்‌ பற்றவைத்தபோது, ஒரு வழிப்போக்கன்‌ எனதருகில்‌ வந்து அமர்ந்து, என்னைப்‌ பணிவுடன்‌ வணங்கி உணவுக்கும்‌, இளைப்பாறுதலுக்கும்‌, தன்‌ வீட்டிற்கு வருமாறு அழைத்தான்‌. புகைக்குழாயைப்‌ பற்றவைத்து என்னிடம்‌ கொடுத்தான்‌. மீண்டும்‌ ஓலம்‌ கேட்டது. அவன்‌ அது என்ன என்று அறிந்துகொள்ள விரும்பினான்‌.

நான்‌ அவனிடம்‌ ஒரு தவளை கஷ்டத்தில்‌ இருக்கிறதென்றும்‌, அது தன்னுடையதேயான முந்தைய வினைகளின்‌ கசப்பான பலனை அனுபவித்துக்கொண்டிருக்கிறது என்றும்‌ கூறினேன்‌. முந்தைய பிறவிகளில்‌ நாம்‌ விதைத்த பழத்தின்‌ பலனை நாமே அறுவடை செய்யவேண்டும்‌. அதைப்‌ பற்றிக்‌ கதறுவதால்‌ பலனொன்றுமில்லை என்றேன்‌. பின்னர்‌ அவன்‌ புகைபிடித்துவிட்டு குழாயை என்னிடம்‌ கொடுத்துவிட்டு தானே நேரடியாகச்‌ சென்று அதைப்‌ பார்த்து வருவதாகக்‌ கூறினான்‌. அதற்கு நான்‌, ஒரு பெரிய பாம்பு தவளையைப்‌ பிடித்துக்கொண்டிருப்பதாகவும்‌, தவளை ஓலமிட்டு அழுவதாகவும்‌ முந்தைய பிறவிகளில்‌ இவ்விருவருமே மிகக்‌ கொடூரமானவர்களாகயிருந்தனர்‌ என்றும்‌, இப்போது அவைகளின்‌ பலனை இவ்வுடம்பில்‌ அனுபவிக்கிறார்கள்‌ என்றும்‌ நான்‌ அவனிடம்‌ கூறினேன்‌. அவன்‌ வெளியேசென்று ஒரு பெரும்‌ கருநாகம்‌, ஒரு பெரிய தவளையைத்‌ தன்‌ வாயில்‌ கவ்விக்கொண்டிருந்ததை கண்டான்‌.

பிறகு என்னிடம்‌ திரும்பிவந்து இன்னும்‌ பத்துப்‌ பன்னிரெண்டு நிமிடங்களில்‌ தவளையைப்‌ பாம்பு தின்றுவிடும்‌ என்று கூறினான்‌. நான்‌, “இல்லை அப்படி இருக்க முடியாது. நானே அதன்‌ தந்‌தை (பாதுகாவலன்‌). மேலும்‌ நான்‌ இப்போது இங்கேயே இருக்கிறேன்‌. அப்பாம்பு அதைத்‌ தின்பதை எங்ஙனம்‌ நான்‌ அனுமதிப்பேன்‌? வெறும்‌ தண்டத்துக்கா நான்‌ இங்கு இருக்கிறேன்‌? அதை எங்ஙனம்‌ விடுவிக்கிறேன்‌ என்பதைச்‌ சற்றே பாருங்கள்‌!” என்று கூறினேன்‌.

மீண்டும்‌ புகைபிடித்த பின்னர்‌ நாங்கள்‌ அவ்விடத்துக்கு நடந்து சென்றோம்‌. அவன்‌ பயந்து பாம்பு எங்களை தாக்கலாமாதலால்‌ மேற்கொண்டு செல்லவேண்டாமென்று என்னிடம்‌ கூறினான்‌. அவனைப்‌ பொருட்படுத்தாது நான்‌ முன்னேசென்று அந்த ஜந்துக்களைக்‌ நோக்கி இங்ஙனம்‌ விளித்துக்‌ கூறினேன்‌, “ஓ! வீரபத்ரப்பா, உனது பகைவனான பஸப்பா தவளையாகப்‌ பிறந்த போதிலும்‌, தான்‌ செய்ததற்காக வருத்தப்படவில்லையா. நீயும்‌ பாம்பாகப்‌ பிறந்தும்‌ அவன்மீது இன்னும்‌ கசப்பான பகைமையை வைத்திருக்கிறாயா? சீ! கேவலம்‌ வெட்கப்படு. உன்னுடைய பகைமையை இப்போதே ஒழித்துவிட்டு அமைதியாக இரு” என்றேன்‌.

இவ்வார்த்தைகளைக்‌ கேட்டு, பாம்பு தவளையைவிட்டு உடனே அகன்று ஆற்றில்‌ தாவி மறைந்துவிட்டது. தவளையும்‌ குதித்து புதர்களில்‌ தன்னை மறைத்துக்கொண்டது.

வழிப்போக்கன்‌ மிகவும்‌ ஆச்சரியப்பட்டான்‌. அந்த மொழிகளைக்‌ கூறியவுடன்‌ பாம்பு எங்ஙனம்‌ தவளையைப்‌ போட்டுவிட்டு மறைந்தது என்பது தனக்கு விளங்கவில்லை என்றும்‌, யார்‌ வீரபத்ரப்பா? யார்‌ பஸப்பா? அவர்களின்‌ பகைக்குக்‌ காரணம்‌ என்ன என்றும்‌ கேட்டான்‌. அவனுடன்‌ நான்‌ மரத்தடிக்கு வந்து சிறிது புகைபிடித்த பின்னர்‌ அப்புதிர்‌ முழுவதையும்‌ பின்வருமாறு விளக்கினேன்‌.

எனது இடத்திலிருந்து நாலைந்து மைல்‌ தொலைவில்‌ மஹாதேவரின்‌ கோவிலால்‌ புனிதமாக்கப்பட்ட ஒரு புராதன கே்ஷத்திரம்‌ இருந்தது. கோவில்‌ மிகப்பழமையானதாகவும்‌, சிதிலம்‌ அடைந்தும்‌ இருந்தது. அவ்வூரார்‌ கோவிலின்‌ பழுதுபார்க்கும்‌ வேலைகளுக்கு நிதி வசூலித்தனர்‌. பெருந்தொகை வசூலிக்கப்பட்டதும்‌ வழிபாட்டுக்கான ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டன. பழுதுபார்ப்பதற்குத்‌ திட்டமும்‌, மதிப்பீடும்‌ தயாரிக்கப்பட்டது. ஒரு உள்ளூர்‌ பணக்காரன்‌ பொக்கிஷதாரனாக நியமிக்கப்பட்டு, முழு வேலையும்‌ அவனிடம்‌ ஒப்படைக்கப்பட்டது. அவன்‌ ஒழுங்காகக்‌ கணக்கு வைத்துக்கொண்டு, தனது எல்லா விஷயங்களிலும்‌ நேர்மையாக இருந்திருக்கவேண்டும்‌. அவன்‌ முதல்‌ தரமான கஞ்சன்‌. பழுதுபார்க்கும்‌ செலவுகளுக்காக மிகக்கொஞ்சமே பணம்‌ கொடுத்ததால்‌ வெகுசொற்ப முன்னேற்றமே காணப்பட்டது.

எல்லா நிதியையும்‌ அவனே செலவழித்து ஏப்பம்‌ விட்டுவிட்டான்‌. தனது பணம்‌ ஏதுமே செலவழிக்கவில்லை. அவனுக்கு இனிமையாகப்‌ பேசுந்திறன்‌ இருந்தது. வேலையின்‌ தாமதத்தைப்பற்றியும்‌, மிகசொற்ப முன்னேற்றத்துக்கும்‌ சாமர்த்தியமாக ஒப்புக்கொள்ளக்கூடிய சமாதானங்கள்‌ கூறினான்‌. அவனாலான மிகச்சிறந்த முயற்சியை செய்து உதவினாலன்றி வேலை பூர்த்தியடையாது என்று மக்கள்‌ மீண்டும்‌ அவனிடம்‌ சென்று கூறினர்‌. அவ்வேலையைச்‌ செய்துமுடிக்க அவர்கள்‌ அவனை வேண்டிக்கொண்டு மீண்டும்‌ நிதி சேகரித்து அவனிடம்‌ கொடுத்தனர்‌. அவன்‌ அதைப்‌ பெற்றுக்கொண்டு முன்போலவே எவ்வித முன்னேற்றமும்‌ செய்யாமல்‌ இருந்தான்‌. சிலநாட்களுக்குப்‌ பிறகு கடவுள்‌ (மஹாதேவ்‌) அவனது மனைவியின்‌ கனவில்‌ தோன்றி, “எழுந்திரு, கோவிலின்‌ கோபுரத்தைக்‌ கட்டு. நீ செலவழித்ததைப்‌ போல்‌ நூறு பங்கு உனக்குத்‌ திருப்பித்தருகிறேன்‌'” என்று அவளிடம்‌ கூறினார்‌. இக்காட்சியை அவள்‌ தன்னுடைய கணவனுக்கு அறிவித்தாள்‌. அது அவனுக்குக்‌ கொஞ்சம்‌ செலவுவைக்கும்‌ என்று பயந்து, அது வெறும்‌ கனவே என்றும்‌ அதை நம்பிச்செயலில்‌ இறங்கத்‌ தேவையில்லை என்றும்‌ அல்லாவிடில்‌ தன்னிடமும்‌ ஏன்‌ கடவுள்‌ தோன்றிச்‌ சொல்லவில்லை என்றும்‌ கூறி, சிரித்து மழுப்பிவிட்டான்‌. அவன்‌ அவளிடமிருந்து நெடுந்தொலைவிலா இருந்தான்‌? கணவன்‌ மனைவியிடத்தே மனஸ்தாபம்‌ உண்டாக்கும்‌ நோக்கத்துடன்‌ கூடிய கெட்டகனவு மாதிரி தோன்றுகிறது என்றான்‌. அவள்‌ அமைதியாக இருக்கவேண்டியதாயிற்று.

நன்கொடையாளர்களின்‌ விருப்பத்துக்குமாறாக சேகரிக்கப்படும்‌ பெருந்தொகைகளைக்‌ கடவுள்‌ விரும்புவதில்லை. ஆனால்‌ அன்பு, பக்தி, ஆர்வம்‌ இவற்றுடன்‌ கொடுக்கப்படும்‌ எளிய தொகைகளையே அவர்‌ உவப்புடன்‌ ஏற்கிறார்‌. சில நாட்களுக்குப்‌ பின்னர்‌ கடவுள்‌ மீண்டும்‌ அவளது கனவில்‌ தோன்றி, “உனது கணவனைப்‌ பற்றியோ அல்லது அவனிடமிருக்கும்‌ நிதியைப்பற்றியோ கவலைப்படாதே. கோவிலுக்காக அவனை எதையும்‌ செலவு செய்யும்படியும்‌ வற்புறுத்தாதே. எனக்குத்‌ தேவையானது உணர்வும்‌, பக்தியுமே. எனவே உனக்குச்‌ சொந்தமானது எதையும்‌ நீ விரும்பினால்‌ கொடுப்பாயாக?” என்று அவளிடம்‌ கூறினார்‌. இக்காட்சியைப்பற்றி அவள்‌ தன்‌ கணவனுடன்‌ கலந்தாலோசித்தாள்‌.

தனது தந்தையால்‌ கொடுக்கப்பட்ட ஆபரணங்களையெல்லாம்‌ கொடுக்கத்‌ தீர்மானித்தாள்‌. கஞ்சன்‌ கலக்கமடைந்து கடவுளையே இவ்விஷயத்தில்‌ ஏமாற்றத்‌ தீர்மானித்தான்‌. அவன்‌ அவ்வாபரணங்களை ரூபாய்‌ ஆயிரத்துக்கு குறைவாக மதிப்பீடு செய்து தானே வாங்கிக்கொண்டு அதற்கு பதிலாக கடவுளுக்கு ஒரு நிலத்தை பாதுகாப்புச்‌ சொத்தாக அளித்தான்‌. இதற்கு மனைவியும்‌ சம்மதித்தாள்‌. இந்நிலமும்‌ அவனுடையது அல்ல. டுபகி என்ற ஏழைப்‌ பெண்மணி ஒருத்தி அதை அவனிடம்‌ ரூ.200க்கு அடமானம்‌ வைத்து நெடுநாளாக அதை மீட்க முடியாமல்‌ இருந்தாள்‌. எனவே கபடமான அக்கஞ்சன்‌ தனது மனைவி, டுபகி மற்றும்‌ கடவுள்‌ அனைவரையும்‌ ஏமாற்றினான்‌. நிலமோ தரிசு, ஒன்றுக்கும்‌ பயனற்றது. சிறந்த பருவகாலங்களில்‌ கூட விளைச்சல்‌ ஏதும்‌ கொடுக்காது.

இவ்விதமாக இந்த வாணிப நடவடிக்கை முடிவுபெற்றது. ஒரு ஏழைப்‌ பூசாரியின்‌ பொறுப்பில்‌ நிலம்‌ விடப்பட்டது. அவனும்‌ இத்தர்மத்தால்‌ மகிழ்ச்சியடைந்தான்‌. சில நாட்களுக்குப்‌ பிறகு வினோதமான நிகழ்ச்சிகள்‌ நடைபெற்றன. பயங்கர புயலும்‌, பேய்மழையும்‌ வந்தது. கஞ்சன்‌ வீட்டில்‌ இடிவிழுந்து கணவனும்‌, மனைவியும்‌ இறந்தனர்‌. டுபகியும்‌ மரணமடைந்தாள்‌.

அடுத்த பிறவியில்‌ அப்பணக்காரக்‌ கஞ்சன்‌ மதுராவில்‌ ஒரு அந்தணக்‌ குடும்பத்தில்‌ பிறந்து வீரபத்ரப்பா என்று பெயரிடப்பட்டான்‌. அவனுடைய பக்தியுள்ள மனைவி கோவில்‌ பூசாரியின்‌ மகளாகப்‌ பிறந்து கெளரி என்று பெயரிடப்பட்டாள்‌. டுபகி கோவில்‌ பணி செய்பவர்‌ ஒருவரின்‌ குடும்பத்தில்‌ ஆணாகப்‌ பிறந்து சனபஸப்பா என்று பெயரிடப்பட்டாள்‌. அப்பூசாரி எனது நண்பன்‌. அவன்‌ அடிக்கடி என்னிடம்‌ வந்து உரையாடி புகைபிடிப்பான்‌. அவனது மகளான கெளரியும்‌ என்னிடம்‌ பக்தி பூண்டவள்‌. அவள்‌ வேகமாக வளர்ந்தாள்‌. அவளது தகப்பனார்‌ நல்ல வரன்‌ ஒன்றை அவளுக்குத்‌ தேடினார்‌.

அவனிடம்‌ நான்‌ இதைப்பற்றிக்‌ கவலையுற வேண்டாமென்றும்‌ மாப்பிள்ளையே அவளைத்‌ தேடிக்கொண்டு வருவானென்றும்‌ கூறினேன்‌. அவர்கள்‌ ஜாதியில்‌ உள்ள வீரபத்ரப்பா என்ற ஏழைப்பையன்‌ ஊரூராகத்‌ திரிந்துகொண்டும்‌, பிச்சையெடுத்துக்கொண்டும்‌ அப்பூசாரியின்‌ வீட்டுக்கு வந்தான்‌. என்னுடைய சம்மதத்தின்பேரில்‌ பூசாரி கெளரியை அவனுக்கு மணம்‌ செய்து வைத்தான்‌. அவனுடைய திருமணத்திற்கு நான்‌ சிபாரிசு செய்ததால்‌ வீரபத்ரப்பாவும்‌ முதலில்‌ என்பால்‌ பக்தி பூண்டவனாக இருந்தான்‌. இப்புது ஜன்மத்திலும்‌ அவன்‌ பணத்தாசை பிடித்தவனாக இருந்தான்‌. தான்‌ சம்சாரியாக இருப்பதால்‌ பணம்‌ சம்பாதிக்க என்னை உதவிசெய்யச்‌ சொன்னான்‌.

அதன்பின்‌ விசித்திரமான நிகழ்ச்சிகள்‌ நடைபெற்றன. விலைவாசிகளில்‌ ஒரு திடீர்‌ ஏற்றம்‌ கண்டது. கெளரியின்‌ நல்லதிர்ஷ்டத்தினால்‌ நிலத்துக்குப்‌ பெரும்‌ கிராக்கி ஏற்பட்டு அந்த தர்ம நிலம்‌ ஒரு லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டது. (அவளது ஆபரணத்தின்‌ மதிப்பைப்‌ போல்‌ நூறு மடங்கு) பாதித்தொகை பணமாகவும்‌, மீதித்‌ தொகை ரூ.2,000 வீதமாக இருபத்தைந்து தவணைகளில்‌ கொடுக்கப்படவும்‌ இருந்தது. இந்த விவகாரத்தை அனைவரும்‌ ஒப்புக்கொண்டனர்‌. ஆனால்‌ பணத்துக்காகச்‌ சண்டை பிடித்துக்கொண்டனர்‌. எனது யோசனைக்காக அவர்கள்‌ என்னிடம்‌ வந்தனர்‌. கடவுளுக்குரிய அந்த சொத்து பூசாரியின்‌ பாதுகாப்பில்‌ இருந்தது.

கெளரியே அதன்‌ பிதுரார்ஜித சொத்துக்கு வாரிசுக்காரி, உரிமைக்காரி. அவளது சம்மதமின்றி எந்தப்‌ பணமும்‌ செலவழிக்கப்படக்கூடாது. அவளது கணவனுக்கு அதில்‌ எவ்விதத்திலும்‌ உரிமையில்லை என்று நான்‌ கூறினேன்‌. என்னுடைய கருத்தைக்கேட்டு வீரபத்ரப்பா என்மீது கடுமையான கோபமடைந்தான்‌. நான்‌ கெளரியின்‌ உரிமையைப்‌ பலப்படுத்தி அவளது சொத்தைக்‌ கவர விரும்புவதாக அவன்‌ கூறினான்‌. அவன்‌ கூற்றைக்கேட்டு நான்‌ கடவுளை நினைவுகூர்ந்து அமைதியாய்‌ இருந்தேன்‌. வீரபத்ரப்பா அவனது மனைவியைத்‌ திட்டினான்‌. மதியம்‌ அவள்‌ என்னிடம்‌ வந்து பிறர்‌ மொழிகளைப்‌ பொருட்படுத்த வேண்டாம்‌ என்றும்‌, எனது மகளாயிருப்பதால்‌ அவளைக்‌ கைவிடவேண்டாம்‌ என்றும்‌ கூறினாள்‌. இவ்வாறாக அவள்‌ எனது பாதுகாப்பை வேண்டியதனால்‌ அவளைக்‌ காப்பதற்காக நான்‌ ஏழ்கடலையும்‌ கடப்பேன்‌ என்று அவளுக்கு வாக்குக்‌ கொடுத்தேன்‌.

பின்னர்‌ அன்றிரவு கெளரி ஒரு கனவு கண்டாள்‌. மஹாதேவ்‌ அவளது கனவில்‌ தோன்றி “பணம்‌ முழுவதும்‌ உன்னுடையது. அதை யாரிடமும்‌ கொடுக்காதே, கொஞ்சம்‌ பணத்தை கோவில்‌ வேலைக்காக சனபஸப்பாவிடம்‌ கலந்து ஆலோசித்துச்‌ செலவிடு. வேறெதற்காவது அதை நீ செலவிட விரும்பினால்‌ மசூதியிலுள்ள பாபாவிடம்‌ கலந்தாலோசி” என்று சொன்னார்‌. கெளரி என்னிடம்‌ அக்கனவைக்‌ கூறினாள்‌. இவ்விஷயத்தில்‌ அவளுக்கு நான்‌ உரிய ஆலோசனை கூறினேன்‌. அசல்‌ தொகையை அவளே எடுத்துக்கொள்ளவும்‌, வட்டியில்‌ பாதியை சனபஸப்பாவுக்குக்‌ கொடுக்கவும்‌ இவ்விஷயத்தில்‌ வீரபத்ரப்பாவுக்கு ஒன்றுமில்லையென்றும்‌ கூறினேன்‌. இவ்வாறு நான்‌ பேசிக்கொண்டிருக்கும்போது வீரபத்ரப்பாவும்‌, சனபஸப்பாவும்‌ சண்டை போட்டுக்கொண்டே வந்தனர்‌. அவர்களைச்‌ சாந்தப்படுத்த என்னாலான முழு முயற்சியைச்‌ செய்து அவர்களுக்குக்‌ கெளரியின்‌ கனவைக்‌ கூறினேன்‌. வீரபத்ரப்பா மூர்க்கனாகிக்‌ கோபமடைந்து சனபஸப்பாவை கண்டதுண்டமாக வெட்டப்போவதாக பயமுறுத்தினான்‌. பின்னவன்‌ பீதியடைந்து என்‌ கால்களைப்‌ பிடித்துக்கொண்டு எனது அடைக்கலத்தை வேண்டினான்‌. அவனது எதிரியின்‌ கொடுங்கோபத்திலிருந்து அவனைக்‌ காப்பதாக நான்‌ என்னுடையதான வாக்குறுதியை கொடுத்தேன்‌.

சில காலத்திற்குப்பின்‌ வீரபத்ரப்பாவும்‌, சனபஸப்பாவும்‌ காலமாகி முறையே பாம்பாகவும்‌, தவளையாகவும்‌ பிறந்தனர்‌. சனபஸப்பாவின்‌ ஓலத்தைக்‌ கேட்டதும்‌ எனது வாக்குறுதியை நினைவுகூர்ந்து இங்குவந்து அவனைப்‌ பாதுகாத்து என்‌ வார்த்தையைக்‌ காப்பாற்றினேன்‌. தமது அடியவர்களின்‌ அபாயகாலத்தில்‌ கடவுள்‌ ஓடிச்சென்று உதவுகிறார்‌. அவர்‌ என்னை இங்கு அனுப்பியதன்‌ மூலம்‌ சனபஸப்பாவைக்‌ காத்தார்‌. இவைகளெல்லாம்‌ கடவுளின்‌ லீலை அல்லது திருவிளையாடல்‌.

நீதி

ஒருவன்‌ விதைப்பதை அவனே அறுவடைசெய்து தீரவேண்டும்‌ என்றும்‌, மற்றவர்களிடம்பட்ட பழைய கடனையும்‌, விவகாரங்களையும்‌ கஷ்டத்துடன்‌ அனுபவித்து தீர்த்தாலன்றி வேறு விமோசனம்‌ இல்லையென்றும்‌, பணத்தின்‌ மீதுள்ள பேராசையானது அப்பேராசைக்காரனை கீழான நிலைக்கு இழுத்துச்சென்று கடைசியில்‌ அவனுக்கும்‌, பிறருக்கும்‌ அழிவைக்‌ கொணரர்கிறது என்பதுமே இக்கதையின்‌ நீதியாகும்‌.

ஸ்ரீ சாயியைப்‌ பணிக

அனைவர்க்கும்‌ சாந்தி நிலவட்டும்‌