Ads

அத்தியாயம் - 36 - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்அத்தியாயம்‌ - 36

(1) இரண்டு கோவா கனவான்கள்‌, (2) திருமதி ஓளரங்காபாத்கர்‌ ஆகியோரின்‌ அற்புதக்‌ கதைகள்‌.

இந்த அத்தியாயம்‌ கோவாவிலிருந்து வந்த இரண்டு கனவான்கள்‌, சோலாபூரின்‌ திருமதி ஓளரங்காபாத்கர்‌ ஆகியோரின்‌ அற்புதக்‌ கதைகளைப்‌ பற்றிக்கூறுகிறது.

இரண்டு கோவா கனவான்கள்‌

ஒருமுறை சாயிபாபாவின்‌ தரிசனத்தைப்‌ பெறுவதற்காக கோவாவிலிருந்து இருவர்‌ வந்து, அவர்முன்‌ வீழ்ந்து பணிந்தனர்‌. இருவரும்‌ ஒன்றாக வந்தபோதும்‌ அவர்களில்‌ ஒருவரிடம்‌ மட்டுமே, பாபா தக்ஷிணையாக ரூ.15 கேட்டார்‌. அதுவும்‌ விருப்பமுடன்‌ கொடுக்கப்பட்டது. மற்றொருவர்‌ தாமாகவே முன்வந்து ரூ.35 அளித்தார்‌. மற்றெல்லாரும்‌ ஆச்சரியப்படும்படியாக பாபா அதைப்‌ பெற்றுக்கொள்ளவில்லை. அங்கிருந்த ஷாமா பாபாவிடம்‌, “என்ன பாபா! இருவரும்‌ ஒன்றாக வந்தனர்‌. ஒருவரின்‌ தகஷிணையை நீங்கள்‌ கேட்டுப்‌ பெறுகிறீர்கள்‌. மற்றொன்றைத்‌ தாமாகவே அளித்தபோதும்‌ ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டீர்கள்‌. ஏன்‌ இந்த வேறுபாடு?” என்றார்‌.

அதற்கு பாபா, “ஷாமா உனக்கு ஒன்றுமே தெரியாது. நான்‌ ஒருவரிடமிருந்தும்‌ ஒன்றும்‌ எடுத்துக்கொள்வதில்லை. இம்மசூதியின்‌ ஆளும்‌ தெய்வமான மசூதிமாயி குறிக்கப்பட்ட கடன்‌ தொகையைக்‌ கேட்டாள்‌. அதை அவர்‌ அளித்துக்‌ கடனிலிருந்து விடுபடுகிறார்‌. கவனிக்கும்படியாக எனக்கு எவ்வித வீடோ, சொத்தோ, குடும்பமோ இருக்கிறதா? எனக்கு எதுவுமே தேவையில்லை. எப்போதும்‌ சுதந்திரமாகவே இருக்கிறேன்‌. கடன்‌, பகைமை, கொலை ஆகியவைகளுக்குப்‌ பரிகாரம்‌ தேடப்பட்டே ஆகவேண்டும்‌. தப்ப வழியே இல்லை” என்று கூறிவிட்டுப்‌ பின்‌ தமக்கே உரித்தான பாணியில்‌ பின்வருமாறு கூறத்தொடங்கினார்‌.

முதலில்‌ அவர்‌ ஏழையாயிருந்ததாகவும்‌, அவருக்கு ஒரு வேலை கிடைத்தால்‌ முதல்‌ மாதச்‌ சம்பளத்தை காணிக்கையாகச்‌ செலுத்துவதாகவும்‌ வேண்டிக்கொண்டார்‌. மாதம்‌ ரூ.15 சம்பளமுள்ள ஒரு வேலை அவருக்குக்‌ கிடைத்தது. பின்னர்‌ சம்பளம்‌ படிப்படியாக உயர்ந்து ரூ.700ஐ அடைந்தது. ஆனால்‌ அவரின்‌ சுபிட்சத்தில்‌ அவர்‌ வேண்டிக்கொண்டதை முழுமையுமாக மறந்துவிட்டார்‌. கர்மவினை அவரை இவ்விடம்‌ தள்ளிவிட்டிருக்கிறது. அதனால்‌ அத்தொகையை நான்‌ அவரிடமிருந்து தக்ஷிணையாகப்‌ பெற்றேன்‌.

மற்றொரு கதை, கடற்கரை ஓரமாக நான்‌ உலவித்‌ திரிந்துகொண்டிருந்தபோது ஒரு பிரம்மாண்டமான மாளிகையை வந்தடைந்தேன்‌. அதன்‌ தாழ்வாரத்தில்‌ அமர்ந்தேன்‌. வீட்டுக்காரர்‌ எனக்கு நல்ல வரவேற்பளித்து, வயிறார உணவளித்தார்‌. உறங்குவதற்காக அலமாரிக்கு அருகிலுள்ள தூய சுத்தமான இடத்தை எனக்குக்‌ காண்பித்தார்‌. அங்கு உறங்கினேன்‌. நான்‌ ஆழ்ந்த துயில்‌ கொண்டிருக்கும்போது அம்மனிதன்‌ சுவற்றைக்‌ கன்னம்‌ வைத்து உள்நுழைந்து என்‌ பையிலிருந்த பணத்தையெல்லாம்‌ கத்தரித்து எடுத்துக்கொண்டான்‌. கண்விழித்தபோது எனது ரூ.30,000மும்‌ திருடப்பட்டுவிட்டதை அறிந்தேன்‌. பெரிதும்‌ கவலையுற்று புலம்பிக்கொண்டிருந்தேன்‌.

பணம்‌ கரன்ஸி நோட்டாக இருந்தது. அப்பிராமணன்‌ அதைத்‌ திருடிவிட்டான்‌ என நான்‌ நினைத்தேன்‌. உணவிலும்‌, பானத்திலும்‌ எனது விருப்பத்தையெல்லாம்‌ இழந்து அந்தத்‌ தாழ்வாரத்திலேயே பதினைந்து நாட்கள்‌ புலம்பி அழுதுகொண்டு உட்கார்ந்திருந்தேன்‌. பதினைந்து நாட்கள்‌ கழிந்ததும்‌ வழிப்போக்கரான ஒரு பக்கிரி நான்‌ அழுதுகொண்டிருப்பதைக்‌ கண்டு எனது துன்பத்திற்கான காரணத்தை விசாரித்தார்‌. நான்‌ அவரிடம்‌ எல்லாவற்றையும்‌ கூறினேன்‌. அதற்கு அவர்‌ “நான்‌ சொல்லுகிறபடி செய்தீரானால்‌ உமக்குப்‌ பணம்‌ திரும்பக்‌ கிடைக்கும்‌.

ஒரு பக்கிரியிடம்‌ செல்லும்‌. நான்‌ அவரைப்‌ பற்றிய விபரம்‌ தருகிறேன்‌. அவரிடம்‌ உம்மை முழுவதும்‌ சமர்ப்பித்துவிடும்‌. அவர்‌ உனது பணத்தை மீட்டுத்‌ தருவார்‌. இந்த இடைப்பட்ட வேளையில்‌ பணம்‌ திரும்பக்‌ கிடைக்கும்வரை உமக்குப்‌ பிடித்தமான உணவை விட்டுவிடவும்‌?” என்றார்‌. அப்பக்கிரியின்‌ அறிவுரைப்படி நடந்து எனது பணத்தைத்‌ திரும்பப்பெற்றேன்‌. பின்னர்‌ வாதாவை விட்டு நீங்கி கடற்கரையை அடைந்தேன்‌. அங்கு ஒரு நீராவிக்கப்பல்‌ நின்றுகொண்டிருந்தது. அதில்‌ கூட்டமாக இருந்ததால்‌ ஏறமுடியவில்லை ஆனால்‌ அங்கிருந்த நல்ல குணமுடைய பியூன்‌ ஒருவன்‌ எனக்காகக்‌ குறுக்கிட்டதால்‌ அதிர்ஷ்டவசமாக உள்ளே ஏறினேன்‌. கப்பல்‌ என்னை அக்கரை கொண்டுசேர்த்தது. அங்கிருந்து ரயில்‌ ஏறி மசூதிமாயிடம்‌ (மசூதி தெய்வத்திடம்‌) வந்தேன்‌.

கதை முடிந்தது. பாபா ஷாமாவிடம்‌ அவ்விருந்தாளிகளை அழைத்துச்சென்று அவர்களின்‌ உணவுக்கு ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டார்‌. பின்னர்‌ ஷாமா அவர்களை வீட்டிற்கு அழைத்துச்சென்று உணவளித்தார்‌. உணவின்போது ஷாமா அவர்களிடம்‌ பாபாவின்‌ கதை விளங்காத புதிராக இருப்பதாகவும்‌, ஏனெனில்‌ அவர்‌ கடற்கரைப்‌ பக்கமே சென்றது கிடையாதென்றும்‌, ரூ.30,000 போன்ற எவ்வித பணத்தையும்‌ அவர்‌ வைத்திருக்கவில்லையென்றும்‌, பயணம்‌ செய்ததேயில்லை பணத்தைத்‌ தொலைத்ததேயில்லை மீண்டும்‌ அதைத்‌ திரும்பப்‌ பெற்றதேயில்லையென்றும்‌ கூறி அதை அவர்கள்‌ புரிந்துகொண்டு அதன்‌ குறிப்பு நுட்பத்தை அறிந்துகொண்டார்களா என்று கேட்டார்‌. விருந்தினர்‌ ஆழ்ந்து மனமுருகி கண்ணீர்‌ சிந்தினர்‌. தொண்டை அடைக்கும்‌ குரலில்‌ அவர்கள்‌, “பாபா நிறைபேரறிவுடையவர்‌, எல்லையற்றவர்‌. தந்நிகர்‌ இல்லாத முழுமுதற்பொருள்‌ (பரப்பிரம்மம்‌). அவர்‌ உரைத்த கதை சரிநுட்பமாக எங்களது கதையேயாகும்‌. அவர்‌ பேசியது யாவும்‌ எங்களைப்‌ பொறுத்தவரை ஏற்கனவே நடந்துவிட்டன. இதையெல்லாம்‌ அவர்‌ எங்ஙனம்‌ அறிந்தாரென்பது ஆச்சரியத்துள்‌ எல்லாம்‌ ஆச்சரியம்‌! எல்லாத்‌ தகவல்களையும்‌ நாங்கள்‌ உணவுக்குப்பின்‌ உரைக்கின்றோம்‌.

உணவுக்குப்பின்‌ அவர்கள்‌ வெற்றிலை போட்டுக்கொண்டிருக்கும்போது விருந்தினர்‌ தங்கள்‌ கதையைச்‌ சொல்ல ஆரம்பித்தனர்‌. அவர்களுள்‌ ஒருவர்‌ கூறுகிறார்‌.

மலைத்தொடரின்‌ மீதுள்ள ஒரு கோடைவாசஸ்தலமே எனது சொந்த ஊர்‌. ஒரு வேலைதேடிப்‌ பணம்‌ சம்பாதிக்கும்‌ பொருட்டு கோவாவுக்குச்‌ சென்றேன்‌. தத்தர்‌ தெய்வத்திடம்‌ எனக்கு வேலை கிடைத்தால்‌ முதல்மாத ஊதியத்தை சமர்ப்பிப்பதாக வேண்டிக்கொண்டேன்‌. அவரது அருளால்‌ ரூ.15 சம்பளமுள்ள ஒரு வேலை கிடைத்தது. பாபா குறிப்பிட்டபடியே எனக்கு உத்தியோக உயர்வும்‌ கிடைத்தது. எனது வேண்டுதலைப்‌ பற்றியெல்லாம்‌ அதன்‌ பிறகு நிச்சயமாக மறந்தேவிட்டேன்‌. இவ்வகையாக பாபா அதை நினைவுபடுத்தி ரூ.15 என்னிடமிருந்து மீட்டுப்‌ பெற்றுக்கொண்டார்‌. ஒருவர்‌ நினைக்கும்படியாக அது தகஷிணையன்று, பழைய கடன்‌ ஒன்றை அடைத்தலும்‌ நீண்டநாள்‌ மறந்துபோன வேண்டுதலை நிறைவேற்றுதலும்‌ ஆகும்‌.

நீதி

உண்மையில்‌ ஒருபோதும்‌ பாபா எந்தப்‌ பணத்தையும்‌ யாசிக்கவில்லை. தமது அடியவர்களையும்‌ யாசிக்க அனுமதிக்கவில்லை. ஆன்மிக முன்னேற்றத்துக்கும்‌ பயணத்தை ஒரு அயாயமாக, தடையாக அவர்‌ கருதினார்‌. தமது யக்தர்களை அதன்‌ பிடியில்‌ விழ அனுமதிப்பதில்லை. இது விஷயத்தில்‌ பகத்‌ மஹல்ஸாபதி ஓர்‌ உதாரணம்‌ ஆவார்‌. அவர்‌ பரம ஏழை. வரவையும்‌, செலவையும்‌ ஒன்றாக்க அவரால்‌ இயலவில்லை. பாபா அவரை ஒருபோதும்‌ எந்தப்‌ பணத்தையும்‌ சம்பாதிக்க அனுமதிக்கவில்லை. தமது தக்ஷிணைப்‌ பணத்தினின்றும்‌ ஏதும்‌ கொடுக்கவுமில்லை. ஒருமுறை ஹம்ஸ்ராஜ்‌ என்ற தயாளமும்‌, தாராள குணமும்‌ உள்ள ஒரு வியாபாரி பாபாவின்‌ முன்னால்‌ மஹல்ஸாபதிக்கு ஒரு பெருந்தொகை அளித்தார்‌. ஆனால்‌ பாபா அதை ஏற்றுக்கொள்ள அவரை அனுமதிக்கவில்லை.

பின்னர்‌ இரண்டாவது விருந்தினர்‌ தனது கதையைக்‌ கூறினார்‌. எனது பிராமண சமையல்காரன்‌ எனக்கு 35 ஆண்டுகள்‌ விசுவாசத்துடன்‌ பணிவிடை செய்துவந்தான்‌. துரதிர்ஷ்டவசமாக தீய வழிகளில்‌ இறங்கினான்‌. அவன்‌ மனம்‌ மாறி என்னுடைய செல்வத்தையே கொள்ளையடித்தான்‌. நாங்களெல்லாம்‌ தூங்கிக்கொண்டிருக்கும்போது உள்ளேவந்து எனது அலமாரி வைக்கப்பட்டுள்ள அறையின்‌ சுவற்றை கன்னம்‌ வைத்து கரன்ஸி நோட்டுக்களாக நான்‌ சேகரித்திருந்த ரூ.30,000 முழுவதையும்‌ கொண்டுபோய்விட்டான்‌. பாபா அதே தொகையை எங்ஙனம்‌ குறிப்பிட்டார்‌ என்பது எப்படி என்று எனக்குத்‌ தெரியாது. இரவும்‌ பகலும்‌ நான்‌ அழுதுகொண்டிருந்தேன்‌.

எனது விசாரணைகளின்‌ பலன்‌ ஒன்றுமில்லை. ஆழ்ந்த கவலையில்‌ அரைமாதத்தை கழித்தேன்‌. தாழ்வாரத்தில்‌ நான்‌ அமர்ந்திருந்தபோது அவ்வழியாகப்‌ போய்க்கொண்டிருந்த ஒரு பக்கிரி, வருத்தப்பட்டு நொந்துபோயிருக்கும்‌ எனது நிலையைக்‌ கவனித்துவிட்டு அதன்‌ காரணத்தை விசாரித்தார்‌. அனைத்தைப்‌ பற்றியும்‌ அவரிடம்‌ கூறினேன்‌. கோபர்காவன்‌ தாலுக்கா, ஷீர்டியில்‌ சாயி என்ற பெயருடைய அவலியா ஒருவர்‌ இருப்பதாக அவர்‌ கூறினார்‌. அவரிடம்‌ ஒரு வேண்டுதல்‌ செய்துகொள்‌ உனக்கு மிகவும்‌ பிடிக்கும்‌ உணவு ஒன்றை மனதில்‌ நினைத்து உமது தரிசனம்‌ பெறும்வரை அவ்வுணவு உண்பதை நீக்கிவிட்டேன்‌ என்று கூறிக்கொள்‌ என்றார்‌. பின்னர்‌ அவ்வாறே நான்‌ பிரார்த்தனை செய்துகொண்டேன்‌. அரிசிச்சோறு சாப்பிடுவதை விட்டுவிட்டேன்‌. “பாபா, அதை எனது சொத்து மீண்ட பிறகும்‌, நான்‌ உமது தரிசனத்தைப்‌ பெற்றான பிறகும்‌ உண்பேன்‌” என்று உறுதி கூறிக்கொண்டேன்‌.

இதன்பின்‌ பதினைந்து நாட்கள்‌ கழிந்தன. அந்த பிராமணன்‌ தானாகவே என்னிடம்‌ திரும்பிவந்து எனது பணத்தைத்‌ திருப்பிக்‌ கொடுத்துத்‌ தன்‌ செயலுக்காக வருந்தி, “எனக்குப்‌ பைத்தியம்பிடித்து இவ்வாறு நடந்துகொண்டேன்‌. இப்போது உமது காலடிகளில்‌ என்‌ தலையை வைக்கிறேன்‌. தயவு செய்து மன்னித்தருளும்‌” என்றான்‌. இவ்வாறு எல்லாமே நலமாகவே முடிவடைந்தன. என்னைச்‌ சந்தித்து எனக்கு உதவிய பக்கிரி மீண்டும்‌ காணப்படவில்லை. அப்பக்கிரி எனக்குக்‌ கூறிய சாயிபாபாவைக்‌ காணவேண்டுமென்றே ஒரு தீவிர ஆர்வம்‌ என்னுள்‌ எழுந்தது. எனது வீடுவரை வந்த அப்பக்கிரி சாயிபாபாவைத்‌ தவிர வேறுயாருமில்லை என்று நான்‌ நினைத்தேன்‌. என்னைக்‌ காணவந்து எனது தொலைந்துபோன பணத்தை மீண்டும்‌ பெற்றுத்‌ தருவதற்காக எனக்கு உதவிபுரிந்த அவரா 35 ரூபாய்‌ பெறுவதற்காக ஆர்வமாயிருப்பார்‌? மாறாக எங்களிடமிருந்து எதையும்‌ எதிர்பார்த்துக்கொண்டிராது எங்களை ஆன்மிக முன்னேற்றப்‌ பாதையில்‌ அழைத்துச்‌ செல்வதில்‌ அவர்‌ தம்மாலான முழு முயற்சியை எப்போதுமே செய்கிறார்‌.

திருடப்பட்ட எனது சொத்து மீண்டும்‌ கிடைத்தவுடன்‌ நான்‌ பெருமகிழ்வுற்றேன்‌. அந்த மயக்கத்தில்‌ எனது வேண்டுதலையெல்லாம்‌ மறந்துவிட்டேன்‌. பின்னர்‌ நான்‌ கொலபாவில்‌ இருந்தபோது ஒருநாள்‌ இரவு கனவில்‌ சாயிபாபாவைக்‌ கண்டேன்‌. இது நான்‌ ஷீர்டிக்கு வருகிறேன்‌ என்று எடுத்திருந்த பிரார்த்தனையை எனக்கு நினைவூட்டியது. அதனால்‌ கோவாவுக்குச்‌ சென்று அங்கிருந்து கப்பலில்‌ பம்பாய்‌ வழியாக ஷீர்டிக்குச்‌ செல்ல விரும்பினேன்‌. ஆனால்‌ துறைமுகத்துக்கு வந்தபோது அக்கப்பல்‌ ஏற்கனவே கூட்டமாயிருப்பதையும்‌, இடமில்லாததையும்‌ அறிந்தேன்‌. கப்பல்‌ தளபதி என்னை அனுமதிக்கவில்லை. நல்ல குணமுடைய எனக்கு பழக்கமில்லாத ஒரு பியூன்‌ குறுக்கிட்டதால்‌ எனக்கு கப்பலில்‌ இடம்‌ அனுமதிக்கப்பட்டு பம்பாய்‌ வந்து சேர்ந்தேன்‌. பின்னர்‌ ரயில்‌ மூலமாக இவ்விடம்‌ வந்தேன்‌. பாபா எவ்விடத்தும்‌ வியாபித்து இருப்பவர்‌ என்றும்‌ எல்லாமறிந்தவர்‌ என்றும்‌ நான்‌ நிச்சயமாக நம்புகிறேன்‌. நாங்கள்‌ யார்‌? எங்கள்‌ வீடு எங்கே இருக்கிறது? பாபா எங்களது பணத்தை மீட்டுக்கொடுத்து, தாமே எங்களை அவரிடம்‌ ஈர்த்து இழுத்ததான எங்களது நல்ல அதிர்ஷ்டம்தான்‌ எவ்வளவு பெரியது? ஷீர்டியைச்‌ சேர்ந்த மக்களாகிய நீங்கள்‌ நிச்சயமாக எங்களைக்‌ காட்டிலும்‌ எல்லையற்ற அளவு மேலானவர்களாகவும்‌, மிகுந்த அதிர்ஷ்டம்‌ வாய்ந்தவர்களாகவும்‌ இருக்கிறீர்கள்‌.

பாபா விளையாடி, சிரித்து, உரையாடி இவ்வளவு ஆண்டுகள்‌ வாழ்ந்துகொண்டிருப்பதும்‌ உங்களுடனேயே அல்லவா? உங்களுடைய பூர்வபுண்ணிய பலன்‌ அளவிடற்கரியதாக இருக்கவேண்டும்‌. ஏனெனில்‌ அதுவே பாபாவை ஷீர்டிக்கு இழுத்து விட்டிருக்கிறது. சாயியே எங்களது தத்தர்‌. அவரே வேவண்டுதலுக்குக்‌ கட்டளையிட்டார்‌. கப்பலில்‌ ஓர்‌ இடமும்‌ அளித்து என்னை இவ்விடம்‌ சேர்ப்பித்தார்‌. இவ்விதமாக அவரது எங்கும்நிறை பேரறிவிற்கும்‌, எல்லாம்வல்ல பேராற்றலுக்கும்‌ நிரூபணத்தை அளித்தார்‌.

திருமதி, ஒளரங்காயாத்கர்‌

ஸோலாபூரைச்‌ சேர்ந்த சகாராம்‌ ஓளரங்காபாத்கர்‌ என்பாரின்‌ மனைவிக்கு 27 ஆண்டு காலமாகக்‌ குழந்தையேயில்லை. கணக்கற்ற பிரார்த்தனைகளை அவள்‌ கடவுளர்களிடமும்‌, அம்மன்களிடமும்‌ செய்துகொண்டாள்‌. ஆனால்‌ வெற்றிபெறவில்லை. பின்னர்‌ அவள்‌ பெருமளவு நம்பிக்கை இழந்தவளாக ஆனாள்‌. இவ்விஷயத்தில்‌ இறுதியான முயற்சியாகத்‌ தனது சகோதரியின்‌ புதல்வனான விஸ்வநாத்துடன்‌ ஷீர்டி வந்து பாபாவுக்குச்‌ சேவை செய்துகொண்டு இரண்டு மாதங்கள்‌ தங்கியிருந்தாள்‌. மசூதிக்கு அவள்‌ சென்றபோதெல்லாம்‌ கூட்டத்தால்‌ மசூதி நிரம்பி இருப்பதையும்‌, பாபா பக்தர்களால்‌ சூழப்பட்டிருப்பதையும்‌ கண்டாள்‌.

அவள்‌ அவரைத்‌ தனியாகக்கண்டு வீழ்ந்து வணங்கித்‌ தனது இதயத்தைத்‌ திறந்து பிள்ளை வரம்‌ வேண்ட விரும்பினாள்‌. ஆனால்‌ உரிய சந்தர்ப்பம்‌ கிடைக்கவே இல்லை. முடிவாக அவள்‌ பாபாவிடம்‌ அவர்‌ தனியாக இருக்கும்போது தனக்காகப்‌ பேசும்படி ஷாமாவிடம்‌ கேட்டுக்‌ கொண்டாள்‌. ஷாமா அவளிடம்‌ பாபாவின்‌ தர்பார்‌ வெளிப்படையானது என்றும்‌, எனினும்‌ அவளுக்காகத்‌ தான்‌ முயற்சிப்பதாகவும்‌, கடவுள்‌ அவரை ஆசீர்வதிக்க வேண்டும்‌ என்றும்‌ கூறினார்‌. தேங்காயுடனும்‌, ஊதுபத்தியுடனும்‌ முன்னிருக்கும்‌ திறந்தவெளியில்‌ பாபாவின்‌ உணவு நேரத்தில்‌ தயாராக இருக்கும்படியும்‌, அவர்‌ அவளுக்கு ஜாடை காண்பித்ததும்‌ வரவேண்டும்‌ என்றும்‌ கூறினார்‌. ஒருநாள்‌ உணவுக்குப்பின்‌ பாபாவின்‌ ஈரக்கையை ஷாமா துண்டால்‌ துடைத்துவிட்டுக்‌ கொண்டிருந்தார்‌. பாபா அப்போது அவர்‌ கன்னத்தைக்‌ கிள்ளிவிட்டார்‌.

ஷாமா : (பொய்க்கோபத்துடன்‌) தேவா இந்த மாதிரி என்னைக்‌ கிள்ளுவது சரியா? இந்த மாதிரி கிள்ளிக்‌ குறும்பு செய்யும்‌ கடவுள்‌ எங்களுக்குத்‌ தேவையில்லை. நாங்கள்‌ உங்களையே சார்ந்து இருப்போரல்லவா? இதுதான்‌ எங்களது நெருக்கமான உறவின்‌ பலனா?

பாபா : ஓ! ஷாமா, கடந்த 72 தலைமுறைகளாக நீ என்னுடன்‌ இருக்கிறாய்‌. இதுவரை உன்னை நான்‌ கிள்ளியதில்லை. இப்போது நான்‌ உன்னைத்‌ தொட்டதைக்‌ குற்றமாகக்கொண்டு கோபித்துக்‌ கொள்கிறாயே?

ஷாமா : எங்களுக்கு எப்போதும்‌ முத்தங்களையும்‌, உண்பதற்கு இனிப்புகளையும்‌ கொடுக்கும்‌ ஒரு கடவுளையே நாங்கள்‌ விரும்புகிறோம்‌. தங்களிடமிருந்து எந்த மரியாதையையோ மோக்ஷத்தையோ, புஷ்பக விமானம்‌ முதலானவற்றையோ நாங்கள்‌ வேண்டவில்லை. தங்கள்‌ பாதாம்புயத்தின்பால்‌ எங்களது நம்பிக்கை எப்போதும்‌ மிக நன்றாக தெளிந்த விழிப்பு நிலையில்‌ இருக்கவேண்டும்‌ அதற்கு ஆசீர்வதியுங்கள்‌. பாபா : ஆம்‌, உண்மையில்‌ அதற்காகவேதான்‌ நான்‌ வந்திருக்கிறேன்‌. நான்‌ உங்களுக்கு உணஷட்டிப்‌ பேணி வளர்த்து வருகிறேன்‌. உங்கள்‌ மீது அன்பும்‌, பாசமும்‌ பூண்டிருக்கிறேன்‌.

இதன்‌ பின்னர்‌ பாபா தமது இருக்கையில்‌ போய்‌ அமர்ந்தார்‌. ஷாமா அப்பெண்மணிக்கு ஜாடை செய்தார்‌. அவள்‌ மேலே வந்து வணங்கி தேங்காய்‌, ஊதுபத்தி இவைகளை பாபாவிடம்‌ அளித்தார்‌. பாபா அந்த முற்றல்‌ தேங்காயை ஆட்டினார்‌. அதனுள்ளிருந்த பருப்பு உருண்டு சப்தம்‌ செய்தது.

பாபா : ஷாமா இது உருளுகிறதே என்ன சொல்கிறதென்பதைக்‌ கவனி.

ஷாமா : இப்பெண்மணி, அம்மாதிரியாகவே ஒரு குழந்தையும்‌ தனது வயிற்றில்‌ உருண்டு உயிர்ப்புற வேண்டுமென்று வேண்டுகிறாள்‌. எனவே அத்தேங்காயைத்‌ தங்களது ஆசீர்வாதத்துடன்‌ கொடுங்கள்‌.

பாபா : இத்தேங்காய்‌ அவளுக்கு மதலையளிக்குமா? இம்மாதிரி விஷயங்களில்‌ எல்லாம்‌ ஜனங்கள்‌ எவ்வளவு முட்டாள்தனமாகவும்‌, போலி நம்பிக்கையுடனும்‌ இருக்கிறார்கள்‌.

ஷாமா : தங்களது மொழி, ஆசி இவைகளின்‌ சக்தியை நானறிவேன்‌. தங்களது சொல்‌ அவளுக்கு குழந்தைகளின்‌ தொடரையே அளிக்கும்‌. நீங்கள்‌ விவாதித்துக்கொண்டிருக்கிறீர்களே தவிர உண்மையான ஆசியை அளிக்கவில்லை.

விவாதம்‌ கொஞ்சநேரம்‌ நடந்துகொண்டு இருந்தது. பாபா தேங்காயை உடைக்கும்படி மீண்டும்‌ மீண்டும்‌ ஆணையிட்டுக்கொண்டிருந்தார்‌. ஷாமாவோ முழுத்‌ தேங்காயையும்‌, அப்பெண்மணிக்கே அளிக்கும்படி விவாதித்துக்கொண்டிருந்தார்‌. முடிவாக பாபா சம்மதித்தார்‌.

பாபா : அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கும்‌

ஷாமா : எப்போது? பாபா : 12 மாதங்களில்‌

இதன்பேரில்‌ தேங்காய்‌ இரண்டாக உடைக்கப்பட்டு ஒரு பகுதியை இருவரும்‌ உண்டனர்‌. மறுபகுதி அவளிடம்‌ அளிக்கப்பட்டது.

பின்னர்‌ ஷாமா அப்பெண்மணியின்‌ பக்கம்‌ திரும்பி “அன்புள்ள அம்மையே! நீ எனது மொழிகளுக்கு ஒரு சாட்சி. பன்னிரெண்டு மாதங்களுக்குள்‌ உனக்குக்‌ குழந்தை ஏதும்‌ பிறவாவிட்டால்‌ ஒரு தேங்காயை இந்த தெய்வத்தின்‌ (சாயிபாபாவின்‌) தலையின்மீது அடித்து அவரை மசூதியிலிருந்து வெளியே விரட்டிவிடுவேன்‌. இதை நான்‌ செய்யத்‌ தவறுவேனாயின்‌ என்னை மாதவ்‌ என்று நானே அழைத்துக்கொள்ள மாட்டேன்‌. நான்‌ கூறுவதை நீ விரைவில்‌ உணர்வாய்‌”? என்று சூளுரைத்தார்‌.

அவள்‌ ஓராண்டுக்குள்‌ ஒரு புதல்வனைப்‌ பெற்றெடுத்தாள்‌. புதல்வனது ஐந்தாவது மாதத்தில்‌ அவனை மசூதிக்கு எடுத்துவந்தாள்‌. கணவன்‌ மனைவி இருவரும்‌ பாபாவின்‌ முன்னால்‌ வீழ்ந்து வணங்கினார்கள்‌. நன்றியுள்ள அத்தகப்பனார்‌ ரூ.500ஐ அன்பளிப்பாக சமர்ப்பித்தார்‌. ஷ்யாம்‌ கர்ணா என்ற பாபாவின்‌ குதிரைக்கு ஒரு கொட்டகை கட்டுவதற்காக அத்தொகை செலவிடப்பட்டது.

ஸ்ரீ சாயியைப்‌ பணிக

அனைவர்க்கும்‌ சாந்தி நிலவட்டும்‌