Ads

அத்தியாயம் - 37 - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்


அத்தியாயம்‌ - 37

சாவடி ஊர்வலம்‌.

இந்த அத்தியாயத்தில்‌ ஹேமத்பந்த்‌ வேதாந்தத்தின்‌ கருத்துக்கள்‌ சிலவற்றைக்‌ குறிப்பிட்டுவிட்டுச்‌ சாவடி ஊர்வலத்தை வர்ணிக்கிறார்‌.

முன்னுரை‌

சாயியின்‌ வாழ்க்கை புனிதமானது. அவரது அன்றாட நடைமுறையொழுக்கம்‌ புனிதமானது. அவரின்‌ வழிகளும்‌ செயல்களும்‌ விவரிக்க இயலாதவை. சில நேரங்களில்‌ அவர்‌ பிரம்மானந்தப்‌ பெருநிலையில்‌ (தெய்வீக ஆனந்தம்‌) இருந்தார்‌. மற்றும்‌ சில சமயங்களில்‌ ஆத்மஞானத்துடன்‌ அடக்கமாய்‌ இருந்தார்‌. ஏராளமான பல செயல்களைச்‌ செய்தாலும்‌ சில சமயங்களில்‌ அவைகளில்‌ தொடர்பேதுமின்றித்‌ தனித்து இருந்தார்‌. முற்றிலும்‌ செயலே அற்றவராகச்‌ சில சமயம்‌ தோன்றியபோதும்‌ அவர்‌ சோம்பலாகவோ, தூக்க மயக்கமாகவோ இருக்கவில்லை.

தமது சொந்த ஆன்மாவிலேயே கட்டுண்டு இருந்தார்‌. அமைதியான நிசப்தமான அசைவற்ற கடலைப்போல காணப்பட்டாலும்‌ அவர்‌ அளவிட முடியாத ஆழமானவர்‌. எவரே அவரின்‌ சொல்லில்‌ அடங்காப்‌ பெருங்குணத்தை விவரிக்க இயலும்‌? அவர்‌ ஆண்களை சகோதரர்கள்‌ என்றும்‌, பெண்களை சகோதரியாகவும்‌, தாயார்‌ ஆகவும்‌ கருதினார்‌. எல்லோரும்‌ அறிந்துள்ளபடி அவர்‌ பரிபூர்ண தூய நிரந்தர புனித பிரம்மச்சாரியாவார்‌. அவர்தம்‌ கூட்டுறவால்‌ நாம்‌பெறும்‌ ஞானமானது நிரந்தரமாக நம்மிடம்‌ திகழட்டும்‌. அவர்தம்‌ பாதங்களுக்கு எப்போதும்‌ முழுமையான பக்தியுடன்‌ சேவை செய்வோம்‌. அவரை அனைத்து ஜீவராசிகளிடமும்‌ காண்பேரம்‌. அவர்‌ நாமத்தை எப்போதும்‌ விரும்புவோம்‌.

ஹேமத்பந்த்‌ தாமே விலகிச்‌ செல்வதாகக்‌ கருதும்‌ வேதாந்தத்தின்‌ சில தலைப்புகளில்‌ நீண்ட விளக்கவுரை புரிந்த பின்னர்‌ சாவடி ஊர்வலத்தை விவரிக்கச்‌ செல்கிறார்‌.

சாவடி ஊர்வலம்‌

பாபாவின்‌ படுக்கையறை முன்னமே விவரிக்கப்பட்டது. ஒருநாள்‌ அவர்‌ மசூதியில்‌ தூங்கினார்‌. மறுநாள்‌ சாவடியில்‌ (மசூதிக்கு அருகில்‌ ஓரிரண்டு அறைகள்‌ உள்ள கட்டிடம்‌) தூங்கினார்‌. இவ்வாறு மாறிமாறித்‌ தூங்குவது பாபா மஹாசமாதி அடையும்வரை நடைபெற்றது.

1909ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌ 10ம்‌ தேதி முதல்‌ அடியார்கள்‌ பாபாவுக்கு சாவடியிலேயே முறையான வழிபாடு செய்யத்‌ தொடங்கினர்‌. சாவடிக்குப்‌ போகும்முறை வந்ததும்‌ மக்கள்‌ மசூதியைச்‌ சூழ்ந்து கொள்வர்‌. மண்டபத்தில்‌ சில மணிநேரம்‌ பஜனை செய்வர்‌. அவர்களுக்குப்‌ பின்னால்‌ துளசி பிருந்தாவனத்தின்‌ வடதிசைக்கும்‌ பாபாவின்‌ முன்பும்‌ உள்ள இடைப்பட்ட இடத்தில்‌ ஒரு அழகிய ரதம்‌ இருந்தது. பஜனையில்‌ விருப்பமுள்ள மக்கள்‌ இருந்தனர்‌. பஜனையில்‌ விருப்பமுள்ள ஆண்களும்‌, பெண்களும்‌ உரிய நேரத்தில்‌ வந்தனர்‌. தங்கள்‌ கைகளில்‌ தால்‌ (ஜால்ரா), சப்ளா கட்டை, கர்தால்‌ (கஞ்சிரா), மிருதங்கம்‌, கோல்‌ (டோலக்கு) முதலிய இன்னிசைக்‌ கருவிகளை வைத்துக்கொண்டு பஜனை நடத்தினர்‌. அங்குள்ள அடியவர்களையெல்லாம்‌ ஈர்த்து இழுத்த காந்தம்‌ சாயிபாபா ஆவார்‌. புறத்தேயுள்ள திண்ணையில்‌ சிலர்‌ தங்கள்‌ தீவட்டிகளை ஒழுங்குபடுத்தினர்‌. சிலர்‌ பல்லக்கை அலங்கரித்தனர்‌.

சிலர்‌ தங்கள்‌ கைகளில்‌ பிரம்புக்குச்சியை வைத்துக்கொண்டு பாபாவுக்கு ஜெயகோஷம்‌ செய்துகொண்டிருந்தனர்‌. மசூதியின்‌ மூலையானது ஜோடனைத்‌ துணிகளால்‌ அலங்கரிக்கப்பட்டது. மசூதியைச்‌ சுற்றிலும்‌ எரியும்‌ விளக்குகளின்‌ வரிசை தங்கள்‌ ஒளியைச்‌ சிந்தின. ஷ்யாம்‌ கர்ணா என்ற பாபாவின்‌ குதிரை முழுவதுமாக அலங்கரிக்கப்பட்டு வெளியே நின்றுகொண்டிருந்தது. பின்னர்‌ தாத்யா பாடீல்‌ சில ஆட்களுடன்‌ பாபாவிடம்‌ வந்து அவரைத்‌ தயாராகும்படிக்‌ கேட்டுக்‌ கொள்கிறார்‌.

தாத்யா வந்து தனது கைகளை பாபாவின்‌ அக்குளில்‌ கொடுத்து அவருக்கு உதவி செய்யும்‌ வரை பாபா அமைதியாக உட்கார்ந்திருப்பார்‌. தாத்யா பாபாவை மாமா என்றழைத்தார்‌. உண்மையில்‌ அவர்களது உறவு மிகமிக நெருக்கமானது. தமது உடம்பில்‌ பாபா வழக்கமான கஃப்னியை அணிந்து சட்காவைத்‌ (சிறுதடி) தமது அக்குளில்‌ வைத்துக்கொண்டு, தம்‌ சில்லிம்‌ (புகைபிடிக்கும்‌ மண்குழாய்‌), புகையிலை இவற்றோடு ஒரு துணியைத்‌ தோளில்‌ போட்டுக்கொண்டு கிளம்ப ஆயத்தமாகிறார்‌. பின்னர்‌ தாத்யா பொன்னால்‌ எம்ப்ராய்டரி வேலை செய்யப்பட்ட ஓர்‌ அழகிய சால்வையை அவர்மீது அணிவித்தார்‌. இதன்பின்‌ பாபா பின்னால்‌ இருக்கும்‌ விறகுக்‌ கட்டைகளைத்‌ தமது வலதுகால்‌ கட்டை விரலால்‌ சிறிது இழுத்து, வலது கையால்‌ எரிந்துகொண்டிருக்கும்‌ விளக்கை அணைத்துவிட்டுச்‌ சாவடிக்குப்‌ புறப்படுகிறார்‌. டாஷே (முரசு), பேண்டு, சங்குகள்‌, மிருதங்கம்‌ முதலிய எல்லாவிதமான இசைக்கருவிகளும்‌ தங்கள்‌ விதவிதமான ஒலிகளை எழுப்புகின்றன. வாணவேடிக்கைகள்‌ மாறுபாடான வெவ்வேறு வகையான வர்ணஜாலக்‌ காட்சிகளைக்‌ காட்டுகின்றன.

வீணை, மிருதங்கத்துடன்‌ இணைந்து ஆண்களும்‌, பெண்களும்‌ பஜனை செய்துகொண்டு, பாபாவின்‌ பெயரைப்‌ பாடிக்கொண்டு நடக்கத்‌ துவங்குகிறார்கள்‌. சிலர்‌ மகிழ்ச்சியால்‌ நடனமாடினர்‌. சிலர்‌ பலவகையான கொடிகளையும்‌, கம்புகளையும்‌ எடுத்துச்‌ செல்கின்றனர்‌. மசூதியின்‌ படிகளுக்கு பாபா வந்ததும்‌ பல்தார்கள்‌ பாபாவுக்குக்‌ கட்டியம்‌ கூறினர்‌. பாபாவின்‌ இரண்டு பக்கங்களிலும்‌ சாமரம்‌ பிடித்துக்‌ கொண்டிருப்பவர்களும்‌, விசிறுபவர்களும்‌ நின்றுகொண்டிருந்தனர்‌. அடியவர்களின்‌ கைகளால்‌ தாங்கப்பட்டவாறே பாபா நடந்துவரும்‌ வழியில்‌ துணி மடிப்புகள்‌ விரிக்கப்பட்டிருந்தன. தாத்யாபாடீல்‌, அவரது இடது கையையும்‌, மஹல்ஸாபதி வலது கையையும்‌ பாபு சாஹேப்‌ ஜோக்‌ அவர்‌ தலைமீது குடையையும்‌ பிடித்திருந்தனர்‌.

இவ்விதமாகப்‌ பாபா சாவடிக்கு நடந்து செல்கிறார்‌. முழுமையும்‌ அலங்கரிக்கப்பட்ட ஷ்யாம்‌ கர்ணா என்ற சிவப்புக்‌ குதிரை வழிவகுத்துக்கொண்டு சென்றது. அதன்பின்‌ பல்லக்குத்‌ தூக்கிகள்‌, ஏவலாட்கள்‌, இசைபாடுவோர்‌ மற்றும்‌ அடியவர்‌ கும்பலும்‌ வந்தனர்‌. ஹரி நாமமும்‌, சாயி நாமமும்‌ இசையுடன்‌ இணைந்து குரலொலி வானைப்பிளந்தது. இவ்விதமாகவே ஊர்வலம்‌ வீதி முனையை அடைந்தது. இந்தக்‌ கூட்டத்தில்‌ கலந்துகொண்ட யாவரும்‌ மிக்க மகிழ்ச்சியடைந்து களிப்புடன்‌ காணப்பட்டனர்‌.

வீதியின்‌ இந்த முனைக்கு வந்ததும்‌ பாபா சாவடியை நோக்கி நின்றுகொண்டார்‌. ஒரு தெய்வீக ஒளியுடன்‌ அவர்‌ பிரகாசித்தார்‌. அதிகாலையைப்‌ போன்றோ, உதயசூரியனின்‌ பிரபையைப்‌ போன்றோ அவர்‌ முகம்‌ சுடரொளி வீசியது. ஒருமுகப்பட்ட மனதுடன்‌ பாபா அங்கு யாரையோ கூப்பிடுவோர்போல்‌ வடக்குத்திக்கை நோக்கி நிற்கிறார்‌. எல்லா இசைக்கருவிகளும்‌ ஒலித்துக்‌ கொண்டிருக்கும்போது பாபா தமது வலது கையை மேலும்கீழும்‌ சிறிது நேரம்‌ அசைக்கிறார்‌. இந்நேரம்‌ காகா சாஹேப்‌ தீக்ஷித்‌ குலால்‌ என்ற சிவப்புப்‌ பொடியுடன்‌ கலந்த மலர்களைக்கொண்ட வெவள்ளித்தட்டுடன்‌ முன்னேவந்து அவைகளை பாபாவின்‌ திருமேனியில்‌ அடிக்கடி தூவினார்‌. இத்தருணத்தில்‌ இன்னிசைக்‌ கருவிகள்‌ மிகச்சிறப்பாக ஒலித்தன. பாபாவின்‌ முகம்‌ நிலையுறுதியான அதிகரிக்கப்பட்ட காந்தியுடனும்‌, அழகுடனும்‌ கதிரை உமிழ்ந்தது. எல்லா மக்களும்‌ இந்த ஜோதியை தங்கள்‌ மனநிறைவுகொள்ளும்வரை பருகுகிறார்கள்‌.

இந்நிகழ்ச்சியின்‌ காட்சியையும்‌, உயர்வான கீர்த்தியையும்‌ விவரிக்க வார்த்தைகள்‌ தவறிவிடுகின்றன. சில சமயங்களில்‌ மஹல்ஸாபதி ஏதோவொரு ஆவேசம்‌ பிடித்தவர்போல்‌ ஆடுகிறார்‌. அதனால்‌ பாபாவின்‌ ஏகாக்கிரசித்தம்‌ (கவனம்‌) சிறிதளவும்‌ கலைக்கப்படாதது கண்டு அனைவரும்‌ அதிசயித்தனர்‌. தமது கையில்‌ விளக்குடன்‌ தாத்யாபாடீல்‌ பாபாவின்‌ இடப்புறத்திலும்‌ பகத்மஹல்ஸாபதி வலப்புறத்திலும்‌ பாபாவின்‌ ஆடையின்‌ நுனியைப்‌ பிடித்துக்கொண்டு வருகிறார்கள்‌. எத்தகைய சுந்தர ஊர்வலம்‌! எத்தகைய பக்தியின்‌ பாங்குகள்‌! இதைக்காண ஆண்களும்‌- பெண்களும்‌, ஏழைகளும்‌-பணக்காரர்களும்‌ அங்கு ஒன்றாகத்‌ திரண்டுள்ளனர்‌. பாபா மிக மெதுவாகவே நடக்கிறார்‌.

பக்தர்கள்‌ இருமருங்கிலும்‌ அன்புடனும்‌, பக்தியுடனும்‌ தொடர்கிறார்கள்‌. அவ்விடத்து வளி மண்டலம்‌ முழுவதும்‌ மகிழ்ச்சி ஊடுருவிப்பரந்து ஊர்வலம்‌ சாவடியை அடைகிறது. அக்காட்சியும்‌ அந்நாட்களும்‌ சென்றுவிட்டன. ஒருவரும்‌ அவைகளை இப்போதோ எதிர்காலத்திலோ பார்க்கமுடியாது. எனினும்‌ அக்காட்சியின்‌ தோற்றத்தை நினைவுகூர்ந்தும்‌, மனக்கண்முன்‌ கொணர்ந்தும்‌ நமது உள்ளங்களுக்கு அமைதியையும்‌, திருப்தியையும்‌ வழங்கலாம்‌.

சாவடியும்‌ நல்ல வெண்மையான கூரை, கண்ணாடிகள்‌, பல்வேறுவித விளக்குகள்‌ இவைகளால்‌ அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அதை அடைந்ததும்‌ தாத்யா முன்னால்‌ சென்று ஒரு ஆசனத்தை விரித்து ஒரு திண்டை வைத்துவிட்டு பாபாவை அங்கு அமரச்செய்து நல்ல கோட்டையும்‌ அணிவிக்கிறார்‌. பின்னர்‌ அடியவர்கள்‌ அவரைப்‌ பல்வேறு விதங்களில்‌ வழிபடுகின்றனர்‌. இறகுகளுடன்‌ கூடிய கிரீடத்தை அவருக்குச்‌ சூட்டுகின்றார்கள்‌. அவர்‌ கழுத்தைச்‌ சுற்றி பூமாலைகளையும்‌, அணிமணிப்பூண்‌ மாலைகளையும்‌ அணிவித்து நறுமணம்‌ கமழும்‌ நேர்கோடுகளையும்‌ ஒரு புள்ளியையும்‌ (வைணவ அடியார்களைப்‌ போன்று) இட்டு அவர்கள்‌ அவரை உள்ளம்‌ நிறைவடையும்‌ வண்ணம்‌ நீண்டநேரம்‌ கூர்ந்து பார்க்கிறார்கள்‌. தலைப்பாகையை அடிக்கடி மாற்றுகின்றனர்‌. தூக்கியெறிந்து விடுவாரென்று பயந்து அவர்‌ தலையிலிருந்து எடுத்து மேலே சிறிது தூக்கிப்‌ பிடிக்கிறார்கள்‌. அவர்கள்‌ உள்ளங்களையெல்லாம்‌ பாபா அறிகிறார்‌. அடக்கவொடுக்கமுடனும்‌, தடைசெய்யாமலும்‌ அவர்கள்‌ இஷ்டங்களுக்கெல்லாம்‌ பாபா சாதுவாகக்‌ கீழ்ப்படிகிறார்‌. இவ்வலங்காரங்களுடன்‌ அவர்‌ வியக்கத்தக்க அழகுடன்‌ திகழ்கிறார்‌.

நானா சாஹேப்‌ நிமோண்கர்‌ கம்பைச்சுற்றிச்‌ செய்யப்பட்டுள்ள அழகான குஞ்சரங்களுடன்‌ கூடிய குடையை மேலே பிடிக்கிறார்‌. பாபு சாஹேப்‌ ஜோக்‌ ஒரு வெள்ளிப்‌ பாத்திரத்தில்‌ பாபாவின்‌ பாதங்களைக்‌ கழுவுகிறார்‌. அர்க்கியமும்‌, பூஜையையும்‌ உரிய சம்பிரதாயங்களுடன்‌ செய்துவிட்டு அவர்‌ கைகளில்‌ சந்தனம்‌ பூசி, தாம்பூலம்‌ அளிக்கிறார்‌. பாபா தமது ஆசனத்தில்‌ அமரும்போது தாத்யாவும்‌, மற்றவர்களும்‌ நின்றுகொண்டிருக்கிறார்கள்‌. அவர்‌ பாதங்களில்‌ வீழ்ந்து பணிகிறார்கள்‌. பாபா வசதியாக திண்டின்மேல்‌ சாய்ந்து அமர்ந்துகொண்டிருக்கும்போது இருமருங்கும்‌ உள்ள அடியவர்கள்‌ சாமரமும்‌, விசிறியும்‌ வீசுகிறார்கள்‌.

பின்னர்‌ ஷாமா சில்லிம்‌ (புகைபிடிக்கும்‌ மண்குழாய்‌) தயார்செய்து அதைத்‌ தாத்யா பாடீலின்‌ கையில்‌ கொடுக்க அவர்‌ அதைத்‌ தமது சுவாசத்தால்‌ ஒருமுறை உறிஞ்சிய பின்னர்‌ பாபாவிடம்‌ கொடுக்கிறார்‌. பாபா புகைத்த பின்னர்‌ அது பகத்‌ மஹல்ஸாபதியிடம்‌ கொடுக்கப்பட்டு பின்னர்‌ சுற்றி எல்லோரிடமும்‌ வழங்கப்படும்‌. ஜடமான சில்லிம்‌ புனிதமாக்கப்பட்டது. அது பலவித தண்டனைகளுக்கும்‌, துயரங்களுக்கும்‌ ஆட்படவேண்டியிருக்கிறது. குயவர்களால்‌ மிதியுண்டும்‌, வெயிலில்‌ காய வைக்கப்பட்டும்‌, நெருப்பில்‌ சுடப்பட்டும்‌ இருப்பினும்‌, பாபாவின்‌ கைகளில்படுவதற்கும்‌, அவரின்‌ முத்தத்தைப்‌ பெறுவதற்கும்‌ அது நல்லதிர்ஷ்டம்‌ பெற்றிருக்கிறது. இதன்‌ பின்னர்‌ விழா முடிவடைந்து பூமாலையை பாபாவின்‌ கழுத்தில்‌ அடியவர்கள்‌ அணிவிக்கிறார்கள்‌. பூச்செண்டும்‌ அளிக்கிறார்கள்‌.

உணர்வுவசமுறா - நடுநிலைமையின்‌, அவாவின்மையின்‌ அவதாரமாகிய சாயி அட்டிகை அணிமணிகள்‌, பூமாலைகள்‌ மற்றும்பல அலங்காரங்கள்‌ இவைகளைப்‌ பற்றியெல்லாம்‌ எள்ளளவும்‌ கவலைப்படுவதில்லை. ஆனால்‌ தம்‌ அடியவர்களிடம்‌ உள்ள உண்மையான அன்பின்‌ காரணமாக அவரவர்கள்‌ தாங்கள்‌ விரும்பிய வழிகளைக்‌ கையாண்டு மகிழ்வடைய அனுமதித்தார்‌. முடிவாக இன்னிசைக்‌ கருவிகள்‌ தங்கள்‌ புனித ராகங்களை ஒலித்துக்கொண்டிருக்க பாபு சாஹேப்‌ ஜோக்‌ எல்லா சம்பிரதாயங்களுடனும்‌ ஆரத்தி காண்பிக்கிறார்‌. இந்த ஆரத்தி முடிவுற்றதும்‌ அடியவர்கள்‌ ஒவ்வொருவராக வணங்கி விடைபெற்றுக்கொண்டு வீடுகளுக்குத்‌ திரும்புகிறார்கள்‌.

தாத்யா பாடீல்‌ அவருக்குச்‌ சில்லிம்‌, பன்னீர்‌, அத்தர்‌, செண்ட்‌ இவைகளை அளித்துவிட்டுப்‌ புறப்படுவதற்காக எழும்போது பாபா அவரிடம்‌ அன்பு ததும்ப “என்னைப்‌ பார்த்துக்கொள்‌. வேண்டுமானால்‌ போ. இரவில்‌ சில சமயங்கள்‌ வந்து என்னை விசாரித்துக்கொள்‌” என்று கூறுகிறார்‌. சரியென விடையளித்துவிட்டு தாத்யாபாடீல்‌ சாவடியைவிட்டு வீட்டுக்குச்‌ செல்கிறார்‌. பின்னர்‌ பாபா தாமே படுக்கையைத்‌ தயாரித்துக்கொள்கிறார்‌. ஒன்றின்மேல்‌ ஒன்றாக ஐம்பது, அறுபது வெள்ளைத்‌ துண்டுகளை விரித்துப்‌ படுக்கையைத்‌ தயார்‌ செய்துகொண்டு இளைப்பாறச்‌ செல்கிறார்‌.

வாசகர்கள்‌ ஒவ்வொரு நாளும்‌ படுக்கப்புகும்முன்‌ சாயிபாபாவையும்‌ அவரது சாவடி ஊர்வலத்தையும்‌ நினைவு கூரும்படியான வேண்டுகோளுடன்‌ இந்த அத்தியாயத்தை முடித்து அனைவரும்‌ இளைப்பாறுவோமாக!

ஸ்ரீ சாயியைப்‌ பணிக

அனைவர்க்கும்‌ சாந்தி நிலவட்டும்‌