Ads

அத்தியாயம் - 25 - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்



அத்தியாயம்‌ - 25 

அஹமத்‌ நகர்‌ தாமு அண்ணா - (1) வியாபார விவகாரம்‌ (2) மாம்பழலீலை.

முன்னுரை

கருணைக்‌ கடலும்‌, ஈசுவர அவதாரமும்‌, பரப்பிரம்மமும்‌, மாபெரும்‌ யோகீஸ்வரனும்‌ ஆகிய சாயிபாபாவுக்கு நமது அஷ்ட அங்கங்களாலும்‌ நமஸ்கரித்துவிட்டு நாம்‌ இந்த அத்தியாயத்தைத்‌ தொடங்குகிறோம்‌. ஞானிகளின்‌ முடிமணியாகவும்‌, எல்லாப்‌ புனிதப்‌ பொருட்களின்‌ இருப்பிடமாகவும்‌ நமது ஆத்மராமனேயாகவும்‌, பக்தர்களுக்கு ஒரு வல்லமை வாய்ந்த அடைக்கலப்‌ பொருளாகவும்‌ விளங்கும்‌ சாயிபாபாவுக்கு ஜெயம்‌ உண்டாகட்டும்‌. வாழ்க்கையின்‌ லட்சியம்‌, குறிக்கோள்‌ இவற்றை எய்திய அவர்முன்‌ வீழ்ந்து வணங்குவோம்‌..

சரயிபாபா எப்போதுமே கருணை நிறைந்தவராக இருக்கிறார்‌. அவர்பால்‌ முழுமனதான பக்தியே நம்மைப்‌ பொறுத்தவரை தேவைப்படுவதாகும்‌. உறுதியான நம்பிக்கையும்‌, பக்தியும்‌ ஒரு பக்தன்‌ பெறும்போது அவனது விருப்பங்கள்‌ விரைவில்‌ நிறைவேறுகின்றன. சாயிபாபாவின்‌ வாழ்க்கையையும்‌, லீலைகளையும்‌ எழுதவேண்டுமென்ற ஆர்வம்‌ ஹேமத்பந்தின்‌ உள்ளத்தில்‌ எழுந்தபோது அதை உடனே அவரைக்கொண்டு எழுதி முடிக்கச்செய்தார்‌. குறிப்புகள்‌, ஞாபகங்கள்‌ இவைகளை வைத்துக்கொள்ள உத்தரவு கொடுக்கப்பட்டபோது, ஹேமத்பந்த்‌ உணர்வூட்டப்‌ பெற்றார்‌. அவரது அறிவு, வேலையை மேற்கொண்டு முடிப்பதற்கு வேண்டிய உறுதியும்‌, தைரியமும்‌ பெற்றது.

இப்பணியை மேற்கொள்ளத்‌ தாம்‌ தகுதியுடையவரல்ல என்றும்‌ ஆனால்‌ பாபாவின்‌ அருள்‌ நிறைந்த ஆசீர்வாதங்களே மேற்கொண்ட பணியை சம்பூர்ணம்‌ செய்வதற்கு அவரை ஊக்குவித்தது என்றும்‌ அவர்‌ கூறுகிறார்‌. எனவே சத்சரிதம்‌ என்ற இக்கிணற்றிலிருந்து அல்லது நீர்த்தேக்கத்தினின்று அல்லது சோமகாந்தக்கல்லிலிருந்து சாயி லீலைகள்‌ என்ற ரூபத்தில்‌ அமிர்தம்‌ ஊறி வருகிறது. படிப்போர்‌ அதை மனதாறப்‌ பருகுகிறார்கள்‌.

சாயிபாபாவின்‌ மீது எந்த ஒரு பக்தனுக்கு முழுமனதான, பூரணமான பக்தி ஏற்படுகிறதோ அவனது கேடுகளும்‌, அபாயங்களும்‌ துடைக்கப்பட்டு அவனது நலம்‌ பாபாவால்‌ கவனிக்கப்படுகிறது. அஹமத்நகரிலிருந்த (பிற்பாடு புனேவில்‌) தாமோதர்‌ சாவ்லாராம்‌ ராஸனே காஸார்‌ என்ற தாமு அண்ணாவின்‌ கதை மேற்கூறிய கருத்தின்‌ விளக்கமாகக்‌ கீழே தரப்படுகிறது.

தாமு அண்ணா

அத்தியாயம்‌ 6ல்‌ ஷீர்டியில்‌ ராமநவமித்‌ திருவிழா சம்பந்தமாக இவரைப்பற்றி முன்னமே கூறப்பட்டிருப்பதை வாசகர்கள்‌ கவனித்திருப்பார்கள்‌. ஏறக்குறைய 1895ல்‌ ராமநவமி உற்சவக்‌ கொண்டாட்டம்‌ துவக்கப்பட்டபோது அவர்‌ ஷீர்டிக்குச்‌ சென்றார்‌. அதிலிருந்து ஒவ்வொரு வருட விழாவின்போதும்‌ அவர்‌ அலங்காரக்‌ கொடியையோ அல்லது பொம்மையுள்ள குச்சியையோ ஏற்பாடு செய்துவந்தார்‌. அவ்விழாவுக்கு வரும்‌ ஏழைகளுக்கும்‌, பக்கிரிகளுக்கும்‌ அன்னதானம்‌ செய்தார்‌.

அவரது வியாயார ஊக பபரங்கள்‌ : (1) பஞ்சு

தாமு அண்ணாவும்‌, பம்பாய்‌ நண்பரொருவரும்‌ கூட்டாகப்‌ பஞ்சு பேர வியாபாரம்‌ செய்யவேண்டுமென்றும்‌ அது பல லட்சங்களை லாபமாகக்‌ கொணரும்‌ என்றும்‌ எழுதியிருந்தார்‌. (ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியிடம்‌* 1936ல்‌ தாமு அண்ணா கொடுத்த வாக்குமூலத்தின்படி, பம்பாய்‌ விவகாரம்‌ கூட்டாளி இல்லாமல்‌ தரகர்‌ ஒருவரிடமிருந்து பெற்றதென்பதும்‌, தாமு அண்ணா மட்டும்‌ லாபம்‌ பெறுவார்‌ என்றும்‌ கூறப்பட்டிருக்கிறது).

வியாபாரம்‌ நன்றாயிருக்கிறது என்றும்‌, எவ்வித அபாயமும்‌ இல்லை என்றும்‌ வாய்ப்பு தவறவிடப்படக்கூடாது என்றும்‌ தரகர்‌ எழுதி இருந்தார்‌. தாமு அண்ணா மனதில்‌ ஊசலாடிக்‌ கொண்டிருந்தார்‌.

இந்த விவகாரத்தில்‌ உடனே முடிவெடுக்க அவரால்‌ முடியவில்லை. இதைப்பற்றி அவர்‌ சிந்தித்தார்‌. அவர்‌ பாபாவின்‌ பக்தர்‌. எல்லாத்‌ தகவல்களையும்‌ கொடுத்து அவர்‌ ஷாமாவுக்கு ஒரு கடிதம்‌ எழுதினார்‌. இது குறித்து பாபாவைக்‌ கேட்டு அவரது ஆலோசனையை எழுதும்படியும்‌ வேண்டிக்கொண்டிருந்தார்‌. அடுத்த நாள்‌ கடிதம்‌ ஷாமாவுக்குக்‌ கிடைத்தது. மத்தியானம்‌ மசூதிக்கு வந்து, அதை பாபாவின்முன்‌ வைத்தார்‌. ஷாமாவை விஷயம்‌ என்னவென்று கேட்டு, கடிதம்‌ எதைப்‌ பற்றியது என்று வினவினார்‌.

ஷாமா : சில விஷயங்கள்‌ பற்றி அஹமத்நகரைச்‌ சேர்ந்த தாமு அண்ணா தங்களைக்‌ கேட்க விரும்புகிறார்‌.

பாபா : அவன்‌ என்ன எழுதுகிறான்‌? என்ன திட்டம்‌ போடுகிறான்‌ கடவுள்‌ கொடுத்ததைக்‌ கொண்டு திருப்தியடையாமல்‌ ஆகாயத்தைப்‌ பிடிக்க முயற்சி செய்வதாகத்‌ தெரிகிறது. கடிதத்தைப்‌ படி.

ஷாமா : தாங்கள்‌ இப்போது கூறியதைத்தான்‌ இக்கடிதம்‌ கூறுகிறது. ஓ! தேவா, நீங்கள்‌ இங்கே அமைதியாகவும்‌, அடக்கமாகவும்‌ அமர்ந்துகொண்டு பக்தர்களைக்‌ குழம்பச்செய்து அவர்கள்‌ அமைதியற்றுத்‌ தவிக்கும்போது சிலரைக்‌ கடிதம்‌ மூலமாகவும்‌, சிலரை நேரடியாகவும்‌ இங்கு இழுக்கிறீர்கள்‌. கடிதத்தில்‌ அடங்கியுள்ள விஷயம்‌

* பூஜ்ய ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள்‌ (1874 - 1956) சென்னை, திருமயிலை சாயிபாபா கோவிலையும்‌ அகில இந்திய சாயி சமாஜத்தையும்‌ நிறுவியவர்‌. தங்களுக்குத்‌ தெரியுமென்றால்‌ பின்‌ என்னை ஏன்‌ படிக்கும்படிச்‌ சொல்லி வற்புறுத்துகிறீர்கள்‌?

பாபா : ஓ! ஷாமா, தயவுசெய்து அதைப்படி, சந்தர்ப்பவசமாக நான்‌ ஏதாவது பேசுவேன்‌. அதை யார்‌ நம்புவார்கள்‌?

பின்‌ ஷாமா அக்கடிதத்தை வாசித்தார்‌. பாபா அதைக்‌ கவனத்துடன்‌ கேட்டு உணர்ச்சியுடன்‌ கூறினார்‌, “சேட்டுக்கு (தாமு அண்ணாவுக்கு) பைத்தியம்‌ பிடித்துவிட்டது. அவனது வீட்டில்‌ எதுவும்‌ தேவையிருக்கவில்லை. இப்போது அவனுக்கு இருப்பதைக்கொண்டு திருப்தியடைந்து லட்சங்களைப்‌ பற்றிக்‌ கவலைப்படாமல்‌ இருக்கும்படி பதில்‌ எழுது.”

தாமு அண்ணா ஆவலுடன்‌ காத்திருந்த பதிலை ஷாமா அனுப்பினார்‌.

அதைப்‌ படித்துவிட்டு லட்ச ரூபாய்களை லாபமாகப்‌ பெறவிருந்த அவரின்‌ ஆர்வமும்‌, நம்பிக்கையும்‌ தரைமட்டமாக்கப்பட்டதை அறிந்தார்‌. பாபாவைக்‌ கலந்தாலோசித்ததில்‌ தாம்‌ தவறு செய்துவிட்டதாகக்‌ கருதினார்‌. ஆனால்‌ பதிலில்‌ ஷாமா, பார்ப்பதற்கும்‌ கேட்பதற்கும்‌ அதிக வித்தியாசம்‌ இருப்பதாகவும்‌, அவரே ஷீர்டிக்கு நேரடியாக வரவேண்டுமெனவும்‌, பாபாவைக்‌ காணவேண்டும்‌ என்றும்‌ குறிப்பிட்டிருந்ததால்‌ தாமே ஷீர்டிக்குச்‌ சென்று பாபாவை நேரடியாக இவ்விஷயத்தைப்‌ பற்றிக்‌ கேட்பதே சரியானது என்று நினைத்தார்‌. எனவே அவர்‌ ஷீர்டிக்குச்‌ சென்று பாபாவைக்‌ கண்டு, வீழ்ந்துபணிந்து அவரது கால்களைப்‌ பிடித்துவிட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார்‌. விவகாரத்தைப்‌ பற்றி வெளிப்படையாகக்‌ கேட்க அவருக்குத்‌ தைரியமில்லை. பாபாவுக்கு கொஞ்சம்‌ பங்கு கொடுத்தால்‌ நலமாயிருக்கும்‌ என அவர்‌ எண்ணினார்‌.

பாபா இந்த வியாபாரத்தில்‌ தமக்கு உதவி செய்தால்‌ அவருக்குக்‌ கொஞ்சம்‌ பங்கையோ, லாபத்தையோ அளிக்கலாம்‌ என மனதில்‌ நினைத்தார்‌. தாமு அண்ணா தன்‌ மனதில்‌ ரகசியமாகச்‌ சிந்தித்துக்கொண்டிருந்தார்‌. ஆனால்‌ பாபாவுக்கு எதுவுமே திரையிடப்பட்டிருக்கவில்லை. நடந்தது, நடப்பது, நடக்கப்போவது யாவும்‌ அவருக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல்‌ தெளிவாக இருந்தது. குழந்தை இனிப்பை விரும்புகிறது. ஆனால்‌ தாய்‌ அதற்குக்‌ கசப்பான மாத்திரைகளைப்‌ புகட்டுகிறாள்‌. முன்னது அதன்‌ தேக நிலைக்குக்‌ கேடு செய்கிறது. பின்னது நலப்படுத்துகிறது. சிசுவின்‌ நலங்கருதியே தாய்‌ கசப்பான மாத்திரையை அதற்குச்‌ சமாதானம்‌ செய்து புகட்டுகிறாள்‌.

அன்பான தாயான பாபாவும்‌, பக்தர்களின்‌ நிகழ்கால, எதிர்கால நன்மைகளை அறிந்தவரானதால்‌ தாமு அண்ணாவின்‌ மனதில்‌ இருப்பதை அறிந்து, “பாபு, அம்மாதிரியான உலக விவாகாரத்திலெல்லாம்‌ (லாபப்பங்கு) நான்‌ சிக்கிக்கொள்ள விரும்பவில்லை” என்றார்‌. பாபாவின்‌ சம்மதமின்மையை அறிந்த தாமு அண்ணா அந்த எண்ணத்தைக்‌ கைவிட்டார்‌.

(2) தானிய வியாயாரம்‌

பின்‌ அவர்‌ தானியம்‌, அரிசி, கோதுமை, பலசரக்குச்‌ சாமான்கள்‌ இவைகளில்‌ வியாபாரம்‌ செய்யலாம்‌ என நினைத்தார்‌. பாபா அவரின்‌ இந்த எண்ணத்தையும்‌ படித்து “ரூபாய்க்கு 5 சேர்‌ என வாங்கி 7 சேர்‌ என விற்பாய்‌” எனக்‌ கூறினார்‌. எனவே இந்த வியாபாரமும்‌ கைவிடப்பட்டது. தானிய விலையேற்றம்‌ சிலநாள்வரை இருந்தது. பாபாவின்‌ தீர்க்க தரிசனம்‌ பொய்யாகிவிடும்போல்‌ தோன்றியது. ஆனால்‌ ஓரிரண்டு மாதங்களில்‌ எங்கும்‌ ஏராளமான மழை பெய்து, விலைகளெல்லாம்‌ திடீரென இறங்கிப்‌ போய்விட்டன.

எனவே தானியத்தைச்‌ சேர்த்து வைத்தவர்கள்‌ எல்லாம்‌ நஷ்டம்‌ அடைந்தனர்‌. இவ்விதியிலிருந்து தாமு அண்ணா காப்பாற்றப்பட்டார்‌. மற்றொரு வியாபாரியுடன்‌ தரகர்‌ நடத்திய பஞ்சு வியாபாரமும்‌ பயங்கரமான நஷ்டம்‌ அடைந்ததெனக்‌ கூறத்‌ தேவையில்லை. பஞ்சு, தானியம்‌ என்ற இரண்டு வியாபாரங்களிலும்‌ உள்ள பலத்த நஷ்டத்தில்‌ இருந்து தன்னைக்‌ காப்பாற்றியதைக்‌ கண்ட தாமு அண்ணாவின்‌ நம்பிக்கை பலமடைந்து பாபாவின்‌ உண்மை பக்தராக இன்றுவரை கூட இருந்து வருகிறார்‌.

ஆம்ர லீலா (மாம்பழ அற்புதம்‌)

ஒருமுறை 300 நல்ல மாம்பழங்கள்‌ கொண்ட ஒரு பார்சல்‌ ஷீர்டிக்கு வந்தது. அது கோவாவிலிருந்து ராலே என்ற மம்லதாரால்‌ பாபாவுக்காக ஷாமாவின்‌ பேரில்‌ அனுப்பப்பட்டு இருந்தது. அது திறக்கப்பட்டதும்‌ எல்லா மாம்பழங்களும்‌ நன்றாக இருந்தன. அவைகளில்‌ நான்கை மட்டும்‌ தமது கோலம்பாவில்‌ வைத்துக்கொண்டு மீதியை ஷாமாவிடம்‌ ஒப்படைத்தார்‌. “இந்த நாலு பழமும்‌ தாமு அண்ணாவுக்கு, அவைகள்‌ இங்கேயே இருக்கட்டும்‌” என்றார்‌ பாபா.

இந்த தாமு அண்ணாவுக்கு 3 மனைவிகள்‌. முன்னரே சொல்லப்பட்ட அவருடைய வாக்குமூலத்தின்படி அவருக்கு மூன்று அல்ல, இரண்டு மனைவியர்தாம்‌. அவருக்குக்‌ குழந்தை இல்லை. பல ஜோசியர்களைக்‌ கலந்தும்‌, தாமே ஜோதிடத்தை ஓரளவு கற்றும்‌ ஒரு பாப கிரஹம்‌ தன்‌ ஜாதகத்தில்‌ புத்திர ஸ்தானத்தில்‌ இருப்பதால்‌ தனக்குக்‌ குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என அறிந்துகொண்டார்‌. ஆனால்‌ பாபாவிடம்‌ அவருக்கு பெரும்நம்பிக்கை உண்டு. மாம்பழம்‌ வந்து சேர்ந்த இரண்டு மணி நேத்திற்குப்‌ பின்னர்‌ பாபாவை வணங்க அவர்‌ ஷீர்டி சென்றபோது, மற்றவர்களெல்லாம்‌ அந்த மாம்பழத்துக்காக ஏங்கினார்களாயினும்‌, அவை தாம்யாவினுடையதே. யாரைச்‌ சேரவேண்டுமோ அவர்‌ அதை “உண்டு மரிக்கவேண்டும்‌” என பாபா கூறினார்‌.

இவ்வார்த்தைகளை முதலில்‌ தாமு அண்ணா கேட்டபோது அதிர்ச்சி அடைந்தார்‌. ஆனால்‌ மஹல்ஸாபதி அவைகளை விளக்கினார்‌. சாவு என்பது ‘தான்‌’ என்ற அஹங்காரச்‌ சாவு ஆகும்‌. அது பாபாவின்‌ திருவடிகளருகில்‌ நிகழ்வது ஓர்‌ ஆசியேயாகும்‌. மனம்‌ தெளிந்து தாம்‌ பழத்தை வாங்கிச்‌ சாப்பிடுவதாகத்‌ தாமு கேட்டுக்கொண்டார்‌. ஆனால்‌ பாபா அவரிடம்‌, “நீயே தின்றுவிடாதே. உனது இளைய மனைவிக்கு இவைகளைக்‌ கொடு. இந்த ஆம்ரலீலா (மாம்பழ அற்புதம்‌) அவளுக்கு நான்கு மகன்களையும்‌, நான்கு மகள்களையும்‌‌ கொடுக்கும்‌”. காலப்போக்கில்‌ பாபாவின்‌ மொழிகளே உண்மையாயின, ஜோசியர்களுடையது அல்ல என்றும்‌ அறியப்பட்டது.

பாபாவின்‌ கூற்றுக்களின்‌ திறமும்‌, பெருமையும்‌ அவர்‌ வாழ்நாளில்தான்‌ நிரூபணமாயிற்றென்றால்‌, ஆச்சரியத்திலும்‌ ஆச்சரியம்‌! அவர்‌ சமாதியடைந்த பின்னும்‌ அது மாதிரியே நிகழ்ந்தன. “நான்‌ இறந்து விட்டபோதிலும்‌ என்னை நம்புங்கள்‌. எனது சமாதியில்‌ உள்ள எலும்புகள்‌ உங்களுக்கு நம்பிக்கையையும்‌ தைரியத்தையும்‌ அளிக்கும்‌. நான்‌ மட்டுமல்ல, என்னிடம்‌ முழு இதயத்தோடு சரணடைபவர்களுடன்‌ எனது சமாதியும்‌ பேசும்‌, கூடச்‌ செல்லும்‌, தொடர்புகொள்ளும்‌. நான்‌ உங்களிடத்து இல்லை 0யன்பதாகக்‌ கவலைகொரள்ளாதீர்கள்‌. எனது எலும்புகள்‌ உங்களது நலத்தைக்‌ குறித்துப்‌ பேசி விவாதிப்பதைக்‌ கேட்பீர்கள்‌. ஆனால்‌ என்னையே எப்போதும்‌ நினைவுகூருங்கள்‌. உள்ளம்‌, உயிர்‌ இவற்றால்‌ என்னை நம்புங்கள்‌. அப்போதுதான்‌ நீங்கள்‌ மிகுந்த பலனை அடைவீர்கள்‌” என்றார்‌.

பிரார்த்தனை

இவ்வத்தியாயத்தை ஹேமத்பந்த்‌ ஒரு வேண்டுதலுடன்‌ முடிக்கிறார்‌. “ஓ! சாயி சத்குருவே, பக்தர்களின்‌ கற்பகத்தருவே! நாங்கள்‌ வேண்டுகிறோம்‌. தங்கள்‌ பாதாம்புயத்தை மறக்கவோ, காணாமலோ இருக்கக்கூடாது. இச்சம்சார வாழ்க்கையில்‌ பிறப்பு இறப்புகளால்‌ நாங்கள்‌ அல்லலுற்றுக்‌ கொண்டிருக்கிறோம்‌. இச்சுழலில்‌ இருந்து எங்களை இப்போது விடுவித்தருளும்‌. எங்களது புலன்கள்‌ ஆசைகளைத்தேடி ஓடுவதிலிருந்து தடுத்தருளி அந்தர்முக ஆத்மதரிசனத்தைப்‌ பெறத்‌ திருப்பி விடுங்கள்‌. புலன்களும்‌ மனதும்‌ இப்படி வெளியில்‌ ஓடித்திரியும்‌ இயல்பைத்‌ தடுக்காவிடில்‌, தடை செய்யப்படாதவரை, தன்னை உணரும்‌ நல்வாய்ப்பே கிடையாது. மகனோ, மனைவியோ, நண்பனோ இறுதியில்‌ நமக்கு உதவுவது கிடையாது. தாங்கள்‌ மட்டுமே எங்களுக்கு முக்தியையும்‌, மகிழ்ச்சியையும்‌ அளிப்பீர்கள்‌.

எங்களது விவாதப்‌ பண்பையும்‌, மற்ற பல கெடுதலான விஷயங்களையும்‌ அறவே அழித்துவிடுங்கள்‌. தங்களது நாமத்தை உச்சரிப்பதில்‌ எங்களது நாவுக்கு ஒரு பேராவல்‌ ஏற்படட்டும்‌. எங்களது நல்ல, கெட்ட எண்ணங்களையெல்லாம்‌ துரத்திவிட்டு எங்களது வீடு, உடல்‌ இவைகளைப்‌ பற்றிய உணர்வை மறக்கச்செய்து, எங்களது ‘தான்‌’ என்ற அஹங்காரத்தை அழித்துவிடுங்கள்‌. எப்போதும்‌ தங்கள்‌ நாமத்தை நினைவுகூர்ந்து மற்ற எல்லாவற்றையும்‌ மறந்துவிடச்‌ செய்யுங்கள்‌. எங்களது மனச்சலனங்களை அடக்கி அமைதி, சாந்தம்‌ இவைகளை எங்களுக்கு அருளுங்கள்‌. தாங்கள்‌ எங்களைச்‌ சற்றே அரவணைத்தால்‌ எங்கள்‌ அறியாமை இருள்‌ மறைந்து உங்கள்‌ ஒளிபெற்ற மகிழ்வுடன்‌ வாழ்வோம்‌.

தங்களது நல்லருளினாலும்‌ எங்களது முந்தைய நல்வினைகளாலும்‌ தங்களது லீலாம்ருதத்தை பருகச்செய்து ஆழ்ந்த துயிலிலிருந்து எங்களை எழுப்பிவிட்டீர்கள்‌.

குறிப்பு : முன்னரே குறிக்கப்பட்ட தாமு அண்ணாவின்‌ வாக்கு மூலத்திலிருந்து கீழ்கண்ட பகுதி கவனத்திற்குரியது.

ஒருமுறை நான்‌ அவர்‌ திருவடிகளருகில்‌ மற்றவர்களுடன்‌ அமர்ந்திருக்கும்போது எனது மனதில்‌ இரண்டு கேள்விகள்‌ எழுந்தன. பாபா அவ்விரண்டிற்கும்‌ விடையளித்தார்‌.

(1) சாயிபாபாவைச்‌ சுற்றி இவ்வளவு பேரர்‌ கூடுகிறார்களே, இவர்கள்‌ அனைவரும்‌ அவரிடமிருந்து பலன்‌ பெறுகிறார்களா?

இதற்கு அவர்தம்‌ வாய்‌ மொழியிலேயே பதிலிறுத்தார்‌ :

“பூத்திருக்கும்‌ போது அம்மரத்தைப்‌ பார்‌. எல்லாப்‌ பூக்களுமே கனியாகிவிட்டால்‌ அது எத்தகைய அற்புதமான அறுவடையாகும்‌. ஆனால்‌ அவ்வாறாகிறதா? பெரும்பாலானவை மலர்களாகவோ, கனியாத காய்களாகவோ காற்று ஆகியவற்றால்‌ விழுந்துவிடுகின்றன. மிகச்சிலவே மிஞ்சுகின்றன”.

(2) இரண்டாவது கேள்வி என்னைப்‌ பற்றியதாகும்‌.

“பாபா இறக்க நேரிட்டால்‌ எத்தகைய நம்பிக்கையற்ற நிலையில்‌ நான்‌ நிலைகுலைவேன்‌. அப்போது நான்‌ எங்ஙனம்‌ வாழ்வேன்‌? இதற்கு பாபா, நான்‌ அவரை நினைக்கும்போதெல்லாம்‌ எப்போதும்‌ எங்கும்‌ என்னுடன்‌ இருப்பதாகப்‌ பதில்‌ கூறினார்‌. இந்த வாக்குறுதியை அவர்‌ 1918ஆம்‌ ஆண்டுக்கு முன்னரும்‌ அதற்குப்‌ பின்னரும்‌ காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்‌. அவர்‌ இன்னும்‌ என்னுடன்‌ இருக்கிறார்‌. இன்னும்‌ எனக்கு வழிகாட்டுகிறார்‌. இது 1910- 11ல்‌ எனது சகோதரர்கள்‌ என்னை விட்டுப்‌ பாகம்‌ பிரிந்துபோனது, எனது சகோதரி இறந்தது, ஒரு திருட்டால்‌ போலீஸ்‌ விசாரணை நடந்தது ஆகியவற்றால்‌ நான்‌ மிகவும்‌ மனமுடைந்து இருந்தேன்‌.

எனது சகோதரியின்‌ இறப்பால்‌ வாழ்வில்‌ ஈடுபாடற்று, குதூகலமற்று சோர்ந்துபோயிருந்த சமயம்‌, பாபாவிடம்‌ நான்‌ சென்றபோது தமது உபதேசத்தால்‌ என்னை அவர்‌ சாந்தமாக்கினார்‌. அப்பா குல்கர்ணியின்‌ வீட்டில்‌ ஒரு ‘பூரண்போளி’ சாப்பிடச்செய்து, சந்தனம்‌ பூசச்செய்தார்‌. எனது வீட்டில்‌ ஒரு திருட்டு நடந்தது. எனது முப்பது வருட நண்பன்‌, என்‌ மனைவியின்‌ நகைப்‌ பெட்டியை அதனுள்ளிருந்த ஒரு புனித மூக்குவளையத்துடன்‌ திருடிவிட்டான்‌. பாபாவின்‌ புகைப்படத்தின்முன்‌ நான்‌ அழுதேன்‌. மறுநாள்‌ அப்பெட்டியுடன்‌ அவன்‌ திரும்பிவந்து மன்னிக்க வேண்டினான்‌.

ஸ்ரீ சாயியைப்‌ பணிக

அனைவர்க்கும்‌ சாந்தி நிலவட்டும்‌