அத்தியாயம் - 8
மானிடப் பிறவியின் சிறப்பு - சாயிபாபா உணவுப் பிச்சையெடுத்தல் - பாயஜாபாயின் சேவை - சாயிபாபாவின் படுக்கை - குஷால்சந்திடம் அவருக்கு உள்ள பிரேமை.
இப்போது முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ளபடியே மனித வாழ்க்கையின் முக்கியத்துவத்தைப்பற்றி ஹேமத்பந்த் பலப்படக் கூறிய பின்பு, சாயிபாபா அவரது உணவை எங்ஙனம் இரந்தார், எவ்வாறு பாயஜாபாயி அவருக்குச் சேவை செய்தார், எவ்வாறு அவர் மசூதியில் தாத்யா கோதே பாடீலுடனும், மஹல்ஸாபதியுடனும் உறங்கினார் எவ்வாறு ராஹாதாவைச் சேர்ந்த குஷால்சந்த்தை விரும்பினார் என்பவைகளை விளக்கிச் சொல்லுகிறார்.
மானிடப் பிறவியின் சிறப்பு
இவ்வியத்தகு பிரபஞ்சத்தில் கடவுள் பல கோடிக்கணக்கான (ஹிந்து சாஸ்திர கணக்குப்படி 84 லட்சம் விதமான) மோட்சம், நரகம், நிலம், கடல், வானம், இடைப்பகுதிகள் ஆகியவைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஜீவராசிகளை (மனிதர்கள், மிருகங்கள், பூச்சிகள், தேவர்கள், உபதேவதைகள் உட்பட) சிருஷ்டி செய்திருக்கிறார். எவருடைய புண்ணியங்கள் மேம்படுகிறதோ அவர்கள், தங்களின் செய்கைகளின் பலன்களை மகிழ்ந்து அனுபவிக்குந்தோறும் மோக்ஷத்திற்குச் சென்று வாழ்கிறார்கள். அது முடிந்தபிறகு அவர்கள் கீழேயிறங்கி வருகிறார்கள். தீமைகள், பாவங்கள் அதிகமுள்ள ஆத்மாக்களோ நரகத்திற்குச் சென்று, தாங்கள் தகுதியுள்ளதோறும், தங்கள் தீவினைகளின் பலன்களை அனுபவித்து அவதியுறுகிறார்கள். நல்வினை, தீவினை இரண்டும் சம அளவாய் இருப்பின், அவர்கள் மீண்டும் இவ்வுலகில் பிறக்கின்றனர். தங்களது சுயமான முக்திக்கு உழைக்கும் முயற்சிக்கு மீண்டும் ஒரு வாய்ப்புத் தரப்படுகிறார்கள். முடிவாகத் தமது நல்வினை, தீவினை இரண்டுமே முழுமையாக அகற்றப்படும்போது அவர்கள் சுதந்திரமடைந்து விடுவிக்கப்பட்டவர்களாகிறார்கள். ரத்தினச் சுருக்கமாக உரைத்தால், அவரவர்களின் செய்கைகளுக்கும், நுண்ணறிவு, மனப் பண்பாட்டிற்கேற்பப் பிறவிகளைப் பெறுகிறார்கள்.
மானிட உடம்பின் தனிச்சிறப்பு
நாமனைவரும் அறிந்தபடியாக சர்வஜீவராசிகளுக்கும் நான்கு விஷயங்கள் பொதுவானதாகும். அதாவது உணவு, உறக்கம், பயம், புணர்ச்சி முதலியவை ஆகும். மனிதனுடைய விஷயத்தில் அவன் ஒரு சிறப்பான சாமர்த்தியத்துடன் இயற்கையாகவே ஆக்கப்பட்டிருக்கிறான். அதாவது மற்றெல்லாப் பிறப்பாலும் அடையப்பட இயலாத ஞானத்தின் மூலம் அவன் கடவுள் காட்சியைப் பெறலாம். இக்காரணத்திற்காகவே தேவர்கள், மனிதனது உரிமையை (நிலைமையைக்) குறித்துப் பொறாமைப்படுகிறார்கள். தங்கள் முடிவான விடுதலையைப் பெறுவதற்காக, மானுடர்களாய்ப் பிறப்பதற்கு ஆவல்கொள்கிறார்கள்.
கேவலமான அழுக்கு, சளி, கோழை, அசுத்தம் இவைகளால் நிரம்பியதும் தேய்வு, நோய், மரணம் ஆகியவற்றிற்குக் காரணமாய் உள்ளதுமான இம்மனித உடம்பைவிடக் கேவலமானது எதுவும் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். இது ஓரளவிற்கு உண்மை என்பதில் ஐயமில்லை. இவ்வாறான குற்றங்குறைகள் இருப்பினும், இம்மனித உடம்பின் சிறப்பான மதிப்பு யாதெனில், ஞானத்தை அடைய மனிதனுக்கு ஆற்றல் இருக்கிறது என்பதேயாம். மனித உடம்பினால் மட்டுமே அல்லது அதன் பொருட்டே அழியக்கூடிய நிலையில்லாத உடம்பின் தன்மையைப் பற்றியும், இவ்வுலகத்தைப் பற்றியும், புலன் இன்பங்களின் மீது வெறுப்பையும், நித்ய-அநித்ய வஸ்துக்களைப் பகுத்தறியும் விவேகத்தையும், இங்ஙனமாக அதன் மூலம் கடவுள்காட்சியையும் ஒருவன் எய்த இயலுகிறது. அதன் அசுத்தத் தன்மைக்காக நாம் உடம்பைப் புறக்கணித்தோமானால், கடவுள்காட்சியைப் பெறும் வாய்ப்பை இழக்கிறோம். அதையே சீராட்டி புலன் இன்பங்களின் பின்னால் ஓடுவோமானால் அது விலை மதிப்பற்றதாகையால் நாம் நரகிடை வீழ்வோம். எனவே, நாம் பின்பற்ற வேண்டிய ஒழுங்கான நெறிமுறையானது பின்வருமாறு :
“உடம்பைப் புறக்கணிக்கவோ, விரும்பிச் செல்லமாகப் பராமரிக்கவோ கூடாது. ஆனால் முறையாகப் பராமரிக்க வேண்டும். குதிரையில் சவாரி செய்யும் ஒர் வழிப்பயணி, தான் போகுமிடத்தை அடைந்து வீடு திரும்பும் வரைக்கும் தனது குதிரையை எவ்வாறு பராமரிக்கிறானோ, அதையொப்ப இவ்வுடம்பைப் பராமரிக்க வேண்டும். இவ்வுடம்பு இவ்விதமாக எப்போதும் வாழ்க்கையின் உச்ச உயர் நோரக்கமரன கடவுள்காட்சி அல்லது ஆத்மானுழுதியை அடையவே உபயோகப்படுத்தப்பட வேண்டும்”.
பல்வேறு ஜீவராசிகளையும் கடவுள் படைத்தார். எனினும், அவைகளில் எதுவும் அவர்தம் வேலையை அறிந்து பாராட்ட இயலாததனால் அவர் திருப்தியடையவில்லை.
எனவே அவர் ஒரு சிறப்பான சாமர்த்தியமுள்ள ஜந்துவாக மனிதனைப் படைக்க வேண்டியதாயிற்று. ‘ஞானம்’ என்னும் சிறந்த வரத்தையும் அளித்தார். அவரின் லீலையையும், அற்புதமான வேலையையும், சாதுர்யத்தையும் மனிதன் பாராட்ட இயன்றபோது அவர் பெரிதும் மகிழ்ந்து திருப்தி அடைந்தார். (ஸ்ரீமத் பாகவதம் 11:9:28) இம்மானிட தேகம் எடுத்தது உண்மையிலேயே நல்ல அதிர்ஷ்டமாகும். அந்தணர் குலத்தில் உதிப்பது அதைக் காட்டிலும் நற்பேறுடையது. அதைக் காட்டிலும் மிகச்சிறப்பான அதிர்ஷ்டமானது சாயிபாபாவின் பாதங்களில் தஞ்சம் அடைந்து, சரணாகதி அடையும் வாய்ப்பைப் பெற்றதேயாகும்.
மனிதனின் முயற்சி
மனித வாழ்க்கை எவ்வளவு அருமையானதென்று உணர்ந்து, மரணம் உறுதி என்று அறிந்து, அது எத்தருணத்திலும் நம்மைப் பற்றும் என்று அறிந்து, நமது வாழ்க்கையின் குறிக்கோளை எய்த நாம் எப்போதும் விழிப்பாய் இருக்கவேண்டும். சிறிதளவும் காலம் தாழ்த்தக்கூடாது. ஆகையால் நமது குறிக்கோளை அடைய கூடியவரை விரைவாகச் செயல்பட வேண்டும். அதாவது மனைவியை இழந்தவன் மறுமணம் புரிந்துகொள்ளக் கொண்டுள்ள மிகுதியான அக்கறை போன்றும், காணாமற்போன தன் மகனை, அரசன் சல்லடை போட்டுத் தேடுவதைப் போன்றும் இருக்கவேண்டும். எனவே நமது இலக்கை எய்த நம்மிடத்திலுள்ள முழு ஊக்கத்துடனும், வேகத்துடனும் நாம் பாடுபட வேண்டும். அதாவது “தன்னை உணர்தல்”. நமது சோம்பேறித்தனத்தை அகற்றிவிட்டு தூக்கத்தைக் களைந்து அல்லும், பகலும் ஆத்மத்யானம் செய்தல் வேண்டும். இதைச் செய்ய நாம் தவறுவோமானால் நம்மை நாமே மிருக நிலைக்குத் தாழ்த்திக் கொண்டவர்களாவோம்.
எவ்வாறு செல்வது
கடவுள்காட்சியைத் தாமே எய்திய தகைமையுள்ள ஞானி, முனிவர் அல்லது சத்குரு ஆகிய இவர்களை அணுகுவதே, நமது குறிக்கோளை அடைய மிகச்சிறந்த பயன் அளிக்கக்கூடியதும், துரிதமுமான வழியாகும். மதப் பிரசங்கங்களைக் கேட்டும், மத நூல்களைக் கற்றும் அடைய முடியாதவைகளை அம்மதிப்புமிக்க ஆத்மாக்களின் கூட்டுறவால் பெறலாம். சூரியன் மட்டுமே கொடுக்கும் ஒளியை, மற்றெல்லா நட்சத்திரங்களும் சேர்ந்தாலும் கொடுக்க இயலாததைப் போன்றே, புனித நூல்கள் அனைத்தும், மதப்பிரசங்கங்கள் அனைத்தும் சேர்ந்து கொடுக்க இயலாத ஆத்ம விவேகத்தை சத்குரு நமக்கு அளிக்கிறார்.
அவரின் அசைவுகளும் சாதாரணப் பேச்சும் நமக்கு மெளன உபதேசத்தை நல்குகின்றது. மன்னித்தல், அடக்கம் உடைமை, அவாவின்மை, தர்மம், உதாரகுணம், மனம் - மெய் இவற்றின் கட்டுப்பாடு, அஹங்காரமற்ற தன்மை முதலிய நற்பண்புகளெல்லாம் அத்தகைய தூய புனிதமான கூட்டுறவால் பயிற்சிக்கப்பட்டு அடியவர்களால் அனுசரிக்கப்படுகின்றன. இது அவர்களது மனதை ஒளிப்படுத்தி, ஞானத்தை நல்கி, தன்னையுணரச்செய்கிறது. சாயிபாபா அத்தகைய முன்னேற்றத்தை அருளும் ‘ஞானி’ அல்லது ‘சத்குரு’ ஆவார். பக்கிரியைப் (இரவலர்) போன்று அவர் நடித்தாலும், எப்போதும் ஆத்மாவிலேயே முற்றிலும் தன்வயப்பட்டிருந்தார். கடவுள் அல்லது தெய்வத் தன்மையை சர்வ ஜீவராசிகளுள்ளும் கண்டு, அவைகளை அவர் எப்போதும் அன்பு செய்தார். இன்பங்களால் அவர் உயரவும் இல்லை, துரதிர்ஷ்டங்களால் தாழ்ச்சியுறவும் இல்லை. அரசனும், ஆண்டியும் அவருக்கு ஒன்றே. எவருடைய கடைக்கண் பார்வை, பிச்சைக்காரனையும் அரசனாக்க வல்லதோ அவர் ஷீர்டியில் வீட்டுக்குவீடு சென்று உணவை யாசிப்பது வழக்கம். அதை அவர் எப்படிச் செய்தார் என்பதைத் தற்போது கவனிப்போம்.
பாபா உணவை இரத்தல்
பாபா, எந்த ஷீர்டி மக்களின் வீடுகள் முன்னர் ஒரு பிச்சைக்காரனைப் போல் நின்று “ஓ! லாசி (அம்மா), ஒரு ரொட்டித்துண்டு கொடு”? என்று கூவி அப்பிச்சையை ஏற்கத் தம் திருக்கரங்களை நீட்டி அருளினாரோ அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவர் ஒரு கையில் தகரக் குவளையும், மற்றொன்றில் ஸோலி என்ற சதுரத் துண்டும் வைத்திருந்தார். தினந்தோறும் சில குறிப்பிட்ட வீடுகளுக்கும், ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கும் பிச்சையெடுக்கச் சென்றார். திரவ ஆகாரமான சூப், காய்கறிகள், பால், மோர் முதலியவற்றை தகரக் குவளையிலும், சோறு, ரொட்டி முதலிய திடப் பொருட்களை துண்டிலும் வாங்கிக்கொண்டார். பாபாவுக்கு தம் நாவுமேல் கட்டுப்பாடு உண்டாதலால் அது சுவையறிவதில்லை. எனவே பல்வேறு பொருட்களை ஒன்றுகூட்டிய ருசியை எங்ஙனம் அவர் பொருட்படுத்த முடியும். துண்டிலும், தகரக் குவளையிலும் கொண்டுவரப்பட்ட எல்லா உணவுப் பொருட்களும் ஒன்று கலக்கப்பட்டு பாபாவால் அவர் மனம் நிறைவெய்தும் வண்ணம் பகிர்ந்து உட்கொள்ளப்பட்டது. சில குறிப்பிட்ட பதார்த்தங்கள் சுவையானவையாகவோ, மாறாகவோ இருப்பினும், பாபா தமது நாக்கு முழுதும் சுவையுணர்வையே இழந்துவிட்டதைப் போலக் கவனிப்பதே இல்லை.
பாபா மதியம் வரை பிச்சையெடுத்தார். ஆனால் பிச்சையெடுப்பது மிகவும் நியதியில்லாதிருந்தது. சில நாட்களில் சில சுற்றுக்களே சென்றார். சில நாட்களில் பகல் பன்னிரெண்டு மணி வரையும் எடுத்தார். இவ்வாறு சேர்க்கப்பட்ட உணவு, ஒரு சட்டியில் கொட்டப்பட்டது. நாய்களும், காக்கைகளும், பூனைகளும் அதிலிருந்து தாராளமாகச் சாப்பிட்டன. பாபா அவைகளை விரட்டியதே இல்லை. மசூதியைப் பெருக்கிய பெண்மணி பத்து அல்லது பன்னிரெண்டு ரொட்டித் துண்டுகளை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றாள். அவள் அங்ஙனம் செய்வதை யாரும் தடை செய்யவில்லை. கனவில் கூடப் பூனைகளையும், நாய்களையும் கடுஞ்சொற்களாலோ ஜாடைகளாலோ விரட்டியறியாத அவர், எங்ஙனம் ஏழ்மையான திக்கற்ற மக்களுக்கு உணவை மறுக்க இயலும்? அத்தகைய உயர் குணமுடையவரின் வாழ்க்கை உண்மையிலேயே ஆசிகள் நிரம்பப்பெற்றதாகும்.
ஷீர்டி மக்கள் அவரை ஆரம்ப காலத்தில் ஒரு கேனப் பக்கிரியாகக் கருதினர். இப்பெயராலேயே அவர் அறியப்பட்டார். இரந்த பிச்சையான சில ரொட்டித் துண்டுகளை உண்டு வாழ்ந்த அவர் எங்ஙனம் மதிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட முடியும். ஆனால் இந்தப் பக்கிரியோ உள்ளத்திலும், கையிலும் மிகவும் தாராளமானவராகவும், அவாவற்றவராகவும், தர்ம சிந்தையுடையவராகவும் இருந்தார். ஸ்திரமில்லாதவராயும், இருப்புகொள்ளாதவராயும் புறத்தில் தோன்றினாலும் அகத்தில் உறுதியுள்ளவராயும், நிதானம் உள்ளவராயும் இருந்தார். அவருடைய வழியோ அறிவுக்கெட்டாதது. எனினும் அச்சிறு கிராமத்தில்கூட அன்பும், ஆசீர்வாதமும் உள்ள சிலர் பாபாவை பரமாத்மா என்றே உணர்ந்து மதித்தனர். அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி கீழே தரப்பட்டுள்ளது.
பாயஜாபாயின் உன்னத சேவை
தாத்யா கோதே பாடீலின் தாயார் பாயஜாபாயி ஆவார். அவர் தினந்தோறும் மதியம் ரொட்டியும், காய்கறிகளும் அடங்கிய கூடையை தன் தலையில் வைத்துக்கொண்டு காடுகளுக்குப் போவது வழக்கம். புதர், பூண்டுகளில் பல மைல் கணக்கில் அவ்வம்மையார் அலைந்து திரிந்து கேனப் பக்கிரியைக் கண்டுபிடித்து, அவர் பாதத்தில் வீழ்ந்து, அடக்கமாகவும், அசைவில்லாமலும் தியானத்தில் அமர்ந்திருக்கும் அவர் முன்னர் இலையை விரித்து ரொட்டி, காய்கறிகள் மற்ற உணவுப் பொருட்கள் முதலியவற்றை அதன்மேல் வைத்து அவரை பலவந்தமாக உண்பித்தார். பாயஜாபாயின் நம்பிக்கையும் சேவையும் வியக்கத்தக்கதாகும். ஒவ்வொரு நாளும் அவர் காட்டில் மதிய வேளைகளில் அலைந்து திரிந்து, உணவை உண்ணும்படி பாபாவை வற்புறுத்தினார்.
அவருடைய சேவை, உபாசனை, தவம் என்று எவ்விதப் பெயரிட்டு அதை நாம் அழைத்தாலும், இறுதி மூச்சு வரையிலும் பாபா அதனை மறக்கவில்லை. அவர் செய்த சேவையை முழுமையும் ஞாபகத்தில்கொண்ட பாபா, அவரது மகனுக்கு அபாரமான அளவிற்கு உதவிசெய்தார். தாய்க்கும், மகனுக்கும் அவர்களது கடவுளான பக்கிரியின் மீது பெருமளவிற்கு நம்பிக்கையிருந்தது. பாபா அவர்களிடம் அடிக்கடி “ஆண்டித்தனமே உண்மையான பிரபுத் தன்மையாகும். ஏனெனில், அது எப்போதும் நிலைத்திருக்கிறது. புகழ்பெற்ற பிரபுத்தனமெல்லாம் (செல்வமெல்லாம்) நிலையற்றவை” என்று கூறுவார். சில ஆண்டுகளுக்குப் பின்னால் பாபா காட்டுக்குப் போவதை விட்டுவிட்டு கிராமத்தில் வசிக்கத் தொடங்கினார். தமது உணவை மசூதியிலேயே உட்கொள்ளத் தொடங்கினார். அதிலிருந்து பாயஜாபாயின் காடுகளில் சுற்றி அலையும் தொந்தரவுகள் முற்றுபெற்றன.
மூவரின் படுக்கையிடம்
எவர்களின் உள்ளத்தில் வாசுதேவர் உறைகிறாரோ அந்த ஞானிகள் எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அத்தகைய ஞானிகளின் கூட்டுறவைப் பெறும் அதிர்ஷ்டமுடைய பக்தர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். தாத்யா கோதே பாடீல், பகத் மஹல்ஸாபதி என்ற அத்தகையதான இரு அதிர்ஷ்டசாலிகள் சாயிபாபாவின் கூட்டுறவைச் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர். பாபாவும் அவர்கள் இருவரையும் சமமாக நேசித்தார். இம்மூவரும் தங்கள் தலைகள் கிழக்கு, மேற்கு, வடக்கு நோக்கி இருக்கும்படியும் தங்கள் கால்கள் எல்லாம் சந்திக்கும்படியும் மசூதியில் தூங்கினர். தங்களது படுக்கையை விரித்து அதன்மீது படுத்துக்கொண்டு பல விஷயங்களைப்பற்றி அரட்டையடித்துக்கொண்டும், வம்பு பேசிக்கொண்டும் நள்ளிரவு நெடுநேரம்வரை படுத்திருப்பர்.
அவர்களுள் யாருக்காவது தூக்க அடையாளம் தென்பட்டால் மற்றவர்கள் அவரை எழுப்பிவிடவேண்டும். உதாரணமாகத் தாத்யா குறட்டைவிடத் தொடங்கினால் பாபா உடனே எழுந்திருந்து பக்கவாட்டில் அவரை அசைத்து தலையை அழுத்தியும், மஹல்ஸாபதி அவ்வாறு தூங்கினால் அவரை நெருங்கிக் கட்டியணைத்தும், அவரது முதுகைப் பிடித்துவிட்டும், கால்களை உதைத்தும் எழுப்பிவிடுவார். இவ்விதமாகப் பதினான்கு முழு ஆண்டுகளும், பாபாவின் மீதுள்ள அன்பால் தனது வீட்டிலுள்ள பெற்றோரை விட்டுவிட்டுத் தாத்யா மசூதியில் தூங்கினார். எத்துணை மகிழ்ச்சியும் மறக்க இயலாததுமான அத்தகைய நாட்கள்! அவ்வன்பை எவ்வாறு அளப்பது?! பாபாவின் ஆசியை எங்ஙனம் மதிப்பிடுவது?! தனது தந்தை காலமானதும் தாத்யா குடும்பப் பொறுப்பை ஏற்றார். பின்பு தமது வீட்டிலேயே தூங்க ஆரம்பித்தார்.
ராஹாதாவைச் சேர்ந்த குஷால்சந்த்
ஷீர்டியைச் சேர்ந்த கண்பத் கோதே பாடீலை பாபா விரும்பினார். அதற்குச் சமமாக ராஹாதாவைச் சேர்ந்த சந்த்ரபன்சேட் மார்வாடியையும் விரும்பினார். இந்த சேட் காலமான பின்பு அவர் சகோதரர் புத்திரனான குஷால்சந்தை அதற்குச் சமமாக அல்லது அதற்கு அதிகமாகவே கூட அன்பு செலுத்தி, அல்லும் - பகலும் அவர் நலத்தில் கண்ணாய் இருந்தார். சில சமயங்களில் மாட்டு வண்டியிலோ அல்லது குதிரை வண்டியிலோ (டோங்கா) நண்பர்களுடன் பாபா ராஹாதாவிற்குச் செல்வார். அக்கிராமத்து மக்கள் பேண்ட் வாத்திய இசையுடன் வந்து, கிராமத்தின் நுழைவாயிலில் பாபாவை வரவேற்று, அவர் முன்னால் வீழ்ந்து வணங்குவார்கள். பெரும் வியப்பொலியுடனும், விழாக்கோலத்துடனும் அவர் கிராமத்துக்குள் அழைத்துச் செல்லப்படுவார். குஷால்சந்த், அவரைத் தன் வீட்டுக்கு அழைத்துச்சென்று வசதியாக ஆசனத்தில் அமர்த்தி நல்ல உணவளிப்பார். பின்னர் அவர்கள் சரளமாகவும், மகிழ்ச்சியுடனும் சிறிது நேரம் உரையாடியபின் அனைவர்க்கும் மகிழ்ச்சியையும், ஆசியையும் நல்கிவிட்டு பாபா ஷீர்டிக்குத் திரும்புவார்.
தெற்கே ராஹாதாவுக்கும் வடக்கே நீம்காவனுக்கும் இடையே சரியான மையப்பகுதியில் ஷீர்டி அமைந்துள்ளது. இந்த இடங்களுக்கு அப்பால், பாபா தமது வாழ்நாளில் சென்றதில்லை. அவர் எவ்வித ரயில் வண்டியையும் பார்த்ததோ, பிரயாணம் செய்ததோ கிடையாது. எனினும் எல்லா வண்டிகள் வரும், புறப்படும் நேரங்கள் எல்லாம் மிகச் சரியாகவே பாபாவுக்குத் தெரியும். தாங்கள் பாபாவிடம் விடைபெற்றுக்கொண்டபோது அவரின் அறிவுரைகளின்படி நடந்தவர்கள் நன்மையடைந்தனர். அதை மதிக்காதவர்கள் பலவித துர்ச்சம்பவங்களுக்கும், விபத்திற்கும் உள்ளானார்கள். இதைப்பற்றியும் இன்னும் பல நிகழ்ச்சிகள் குறித்தும் அடுத்த அத்தியாயத்தில் காண்போம். குறிப்பு : இவ்வத்தியாயத்தின் முடிவில் கொடுக்கப்பட்ட நிகழ்ச்சி குஷால்சந்த் மீது பாபா செலுத்திய அன்பையும், அவர் ஒருநாள் மாலை காகா சாஹேப் தீக்ஷித்தை ராஹாதாவுக்குச் சென்று குஷால்சந்தை அழைத்து வரும்படிக் கூறியதும், அத்தருணத்திலேயே குஷால்சந்தின் மதியத் தூக்கத்தில் கனவில், தோன்றி ஷீர்டிக்கு வரும்படிக் கூறியதும், இங்கு விவரிக்கப்படவில்லை. காரணம் பின்வரும் 30ஆம் அத்தியாயத்தில் அது விவரிக்கப்பட்டிருக்கிறது.
ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்