எப்போதெல்லாம் கஷ்டங்களை சமாளிக்கவேண்டி இருக்கிறதோ, அப்போதெல்லாம் பாபாவின் முன் நின்றாலோ, உட்கார்ந்தாலோ போதும். ஒரு வார்த்தை கூட பேச வேண்டிய அவசியமில்லை . தமது குழந்தைகளின் உள்ளங்களில் இருப்பதை அப்போதைக்கப்போதே பாபா அறிவார், வேண்டியதை அவரே செய்து விடுவார்.
ஒருசமயம் பாபாவின் பக்தையான தாராபாயின் கண்களில் உபாதை.
அவர் பாபாவின் முன் சென்று அமர்ந்தார். கண்களில் வலி. நீர் பெருகிக் கொண்டிருந்தது. பாபா அவரை உற்று நோக்கினார். அவருடைய கண்வலி பறந்தது. நீர் வடிவது நின்றது. ஆனால் பாபாவின் கண்களிலிருந்து நீர் வந்து கொண்டிருந்தது.
மருத்துவர்களுக்கு வியாதிக்கு சரியான காரணம் என்னவென்பதை கண்டுபிடிக்க அதிக நேரமும் முயற்சியும் தேவைப்படும். ஆனால் பாபாவைப் பொறுத்தவரை நோயின் காரணத்தை கண்டுபிடித்தல், நோய்க்கு சிகிச்சை எல்லாமே அக்கணமே நிகழ்கின்றன. ஆழப்பதிந்துவிட்ட சரீர உபாதை கணத்தில் திடிரென நிவர்த்திக்கப்படுகிறது. அவரிடமிருந்து பாபா தமக்கு நோயை தரிவித்துக் கொள்வது, அதுவும் சங்கல்ப சக்தியினால் மட்டுமே, பிரமிக்கத்தக்கது. அசாதாரணமான ஒன்று. யார்தான் வியாதியை தன்னிடம் வரவழைத்துக் கொள்ள விரும்புவார்? பாபாவை போன்ற சமர்த்த சதகுருவால் மட்டுமே சாத்தியம்.