Ads

அத்தியாயம் - 26 - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்அத்தியாயம்‌ - 26

(1) பக்த பந்த்‌, (2) ஹரிச்சந்திர பிதலே, (3) கோபால்‌ ஆம்ப்டேகர்‌ ஆகியோரின்‌ கதைகள்‌.

முன்னுரை

இப்பிரபஞ்சத்தில்‌ நாம்‌ காணும்‌ யாவும்‌ மாயையின்‌ விளையாட்டே. கடவுளின்‌ ஆக்கும்‌ ஆற்றலே. இவைகள்‌ உண்மையில்‌ இருப்பவை அல்ல. உண்மையான பரப்பிரம்மமே நிச்சயமாக இருக்கிறது. இருளின்‌ காரணமாக ஒரு கயிற்றையோ, ஒரு மாலையையோ பாம்பாக நாம்‌ எண்ணிக்‌ கொள்வதைப்‌ போலவே, புறத்தோற்றத்தை மட்டுமே காண்கிறோம்‌. காணக்கூடிய பொருட்களிலெல்லாம்‌ உள்ளுறைந்து கிடக்கும்‌ மெய்ப்பொருளை நாம்‌ காண்பதே இல்லை.

நமது அறிவுக்‌ கண்களை சத்குரு மட்டுமே திறந்துவிடுகிறார்‌. பொருட்களை அவைகளின்‌ தோற்றத்தில்‌ காணப்படுவதுபோல்‌ பாராமல்‌ உண்மையான ஒளியில்‌ அவைகளைக்‌ காணுமாறு நம்மை அவர்‌ ஊக்குவிக்கிறார்‌. எனவே நாம்‌ சத்குருவை வணங்கி, உண்மையான காட்சியை அதாவது கடவுள்‌ காட்சியை நமக்கருள வேண்டி நிற்போம்‌..

அந்தரங்க வழியாடு

ஒரு நூதன வழிபாட்டை ஹேமத்பந்த்‌ நமக்குக்‌ கொடுத்திருக்கிறார்‌. சத்குருவின்‌ பாதாம்புயத்தைக்‌ கழுவும்‌ நன்னீராக நமது ஆனந்தக்‌ கண்ணீரை உபயோகித்து, பரிசுத்தமான அன்பு என்னும்‌ சந்தனத்தை அவர்‌ மேனியில்‌ பூசிவிட்டு, உண்மை நம்பிக்கை என்னும்‌ உடையை அவர்‌ மேனிக்கு உடுத்தி, நமது எட்டு விதமான சாத்வீக உணர்ச்சிகள்‌ என்னும்‌ அஷ்ட கமலங்களையும்‌ “ஒருமை மனது” என்னும்‌ கனியையும்‌ அவருக்குச்‌ சமர்ப்பிப்போம்‌. பக்தி என்னும்‌ நறுமணக்‌ கரும்பொடியை அவர்‌ தலைக்கு இட்டு, பற்று என்னும்‌ வேட்டியைக்‌ கட்டிவிட்டு நமது தலையை அவர்‌ பாதங்களில்‌ வைப்போம்‌.

இத்தகைய எல்லா அணிமணிகளாலும்‌ சத்குருவை அலங்கரித்துவிட்டு, நமதனைத்தையும்‌ அவரிடம்‌ சமர்ப்பித்து விடுவோம்‌. உஷ்ணத்தைப்‌ போக்குவதற்கு பக்தியென்னும்‌ சாமரம்‌ கொண்டு வீசுவோம்‌. இத்தகைய பேரானந்த வழிபாட்டுக்குப்பின்‌ அவரை இங்ஙனம்‌ வேண்டுவோம்‌.

“எங்களது புத்தியை திசை திருப்பிவிடுங்கள்‌. அந்தர்முகமாகச்‌ செய்யுங்கள்‌. நித்ய - அநித்ய வஸ்துக்களைப்‌ பகுத்துணரும்‌ விவேகம்‌, எல்லா உலகப்‌ பொருட்களின்‌ மீது பற்றின்மை ஆகியவைகளை எங்களுக்கு நல்கி ஆத்ம உணர்வை அடைய இவ்விதமாக எங்களை ஊக்குவியுங்கள்‌.

ஆன்மாவையும்‌, உடலையும்‌ உம்மிடம்‌ ஒப்புவித்தோம்‌ (உடலுணர்வு மற்றும்‌ அஹங்காரம்‌). எங்களது கண்களைத்‌ தங்களதாக்குங்கள்‌. அதன்‌ மூலம்‌ நாங்கள்‌ இன்ப - துன்பங்களையே உணராதிருப்போம்‌. தங்கள்‌ சங்கல்பத்தின்படி, விருப்பத்தின்படி எங்களது மனதையும்‌, உடலையும்‌ கட்டுப்படுத்துங்கள்‌. தங்கள்‌, பாதாம்புயத்தில்‌ எங்களது மனம்‌ ஆறுதல்‌ பெறட்டும்‌.”

இப்போது இந்த அத்தியாயத்தின்‌ கதைகளுக்கு வருவோம்‌.

பக்த பந்த்‌

மற்றொரு சத்குருவின்‌ சீடரான பந்த்‌ என்பவர்‌ ஷீர்டிக்கு வரும்‌ நல்லதிர்ஷ்டம்‌ பெறநேர்ந்தது. அவருக்கு ஷீர்டிக்குச்‌ செல்லும்‌ எண்ணமில்லை. ஆயின்‌ மனிதன்‌ ஒரு விதமாக எண்ண கடவுள்‌ வேறொரு விதமாகச்‌ செயல்படுத்துகிறார்‌. அவர்‌ ரயில்‌ வண்டியில்‌ பிரயாணம்‌ செய்துகொண்டிருக்கும்போது ஷீர்டிக்குப்‌ போய்க்கொண்டிருந்த தனது பல நண்பர்களையும்‌, உறவினர்களையும்‌ காண நேர்ந்தது. அவர்கள்‌ எல்லோரும்‌ அவரை உடன்‌ அழைத்தனர்‌. அவரால்‌ இயலாதென்று சொல்ல முடியவில்லை. அவர்கள்‌ எல்லோரும்‌ பம்பாயில்‌ இறங்கினர்‌. பந்த்‌ விராரில்‌ இறங்கினார்‌.

பின்னர்‌ ஷீர்டி விஜயத்திற்காகத்‌ தனது சத்குருவிடம்‌ உத்தரவு பெற்றுக்கொண்டு செலவுக்கு ஏற்பாடுகள்‌ எல்லாம்‌ செய்தபின்‌ அக்கோஷ்டியுடன்‌ ஷீர்டிக்குப்‌ புறப்பட்டார்‌. எல்லோரும்‌ மறுநாள்‌ ஷீர்டியை அடைந்து மசூதிக்குச்‌ ௬மார்‌ 11 மணிக்குச்‌ சென்றனர்‌. பாபாவின்‌ வழிபாட்டுக்காகக்‌ குழுமியுள்ள பக்தர்கள்‌ வந்துகொண்டும்‌, போய்க்கொண்டும்‌ இருப்பதைக்‌ கண்ட அவர்கள்‌ எல்லோரும்‌ மிகவும்‌ மகிழ்ந்தனர்‌. ஆனால்‌ பந்த்‌ திடீரென்று வலிப்பு வந்து உணர்வின்றிக்‌ கீழே சாய்ந்தார்‌. அவர்கள்‌ எல்லோரும்‌ பீதியடைந்தனர்‌. எனினும்‌ அவரைத்‌ திரும்ப உணர்வுக்குக்‌ கொண்டு வர தங்களால்‌ இயன்றதைச்‌ செய்தனர்‌. பாபாவின்‌ அருளாலும்‌, அவர்‌ தலைமீது தெளிக்கப்பட்ட நீராலும்‌ பிரக்ஞைக்கு வந்து, அப்போதுதான்‌ தூக்கத்திலிருந்து விழித்தவர்‌ போல்‌ எழுந்து உட்கார்ந்தார்‌.

மற்றொரு குருவின்‌ சீடர்‌ அவர்‌ என்று அறிந்துகொண்ட சர்வாந்தர்யாமியான பாபா அஞ்சாமலிருக்கும்படி அவருக்கு உறுதிகூறி, அவரது சொந்த குருவின்‌ மீதுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்திக்‌ கீழ்கண்டவாறு அவரிடம்‌ கூறினார்‌. “வருவது வரட்டும்‌, விட்டு விடாதே. உனது ஆதாரத்தையே (குருவையே) உறுதியாகப்‌ பற்றிக்கொண்டு எப்போதும்‌ நிதானத்துடனும்‌, சதாகாலமும்‌ அவருடன்‌ ஒன்றியும்‌ இருப்பாய்‌”.

இம்மொழிகளின்‌ குறிப்பை பந்த்‌ உடனே அறிந்துகொண்டார்‌. இவ்விதமாக அவர்‌ தமது சத்குருவை நினைவுகூர்ந்தார்‌. பாபாவின்‌ இந்த அன்பை அவர்தம்‌ வாழ்நாளில்‌ மறக்கவே இல்லை. 

ஹரிச்சந்திர பிதலே

பம்பாயில்‌ ஹரிச்சந்திர பிதலே என்னும்‌ பெயருள்ள மனிதர்‌ ஒருவர்‌ இருந்தார்‌. காக்காய்‌ வலிப்பால்‌ அவதியுறும்‌ ஒரு மகன்‌ அவருக்கு இருந்தான்‌. பல அலோபதி, ஆயுர்வேத வைத்தியர்களிடம்‌ காண்பித்தும்‌ குணமேதும்‌ ஏற்படவில்லை. ஒரே ஒரு வழிதான்‌ பாக்கி இருந்தது. அதாவது ஞானிகளிடம்‌ அடைக்கலம்‌ புகுவது, தாஸ்கணு தமது மிகச்சிறந்த, அற்புதமான கீர்த்தனைகளால்‌ பம்பாய்‌ ராஜதானி எங்கும்‌ பாபாவின்‌ புகழைப்‌ பரவச்‌ செய்தார்‌ என்று அத்தியாயம்‌ 15ல்‌ முன்னரே குறிக்கப்பட்டுள்ளது. பிதலே இக்கீர்த்தனைகள்‌ சிலவற்றை 1910ல்‌ கேட்டார்‌.

அதிலிருந்தும்‌, மற்றவர்கள்‌ மூலமாகவும்‌ பாபா தமது ஸ்பரிசத்தாலும்‌, வெறும்‌ பார்வையாலும்‌ மட்டுமே அனேக தீர்க்க முடியாத வியாதிகளைக்‌ குணப்படுத்தியிருப்பதாக அறிந்தார்‌. அதனால்‌ சாயிபாபாவைக்‌ காண அவர்‌ மனதில்‌ ஆர்வம்‌ எழுந்தது. எல்லா ஏற்பாடுகளையும்‌ செய்துகொண்டு, வெகுமதிகளையும்‌, பழக்‌ கூடைகளையும்‌ எடுத்துக்கொண்டு, பிதலே குடும்பத்துடன்‌ ஷீர்டிக்கு வந்து சேர்ந்தார்‌. பின்னர்‌ அவர்களுடன்‌ மசூதிக்குச்‌ சென்று பாபாவின்முன்‌ வீழ்ந்து நமஸ்கரித்துவிட்டு தனது நோயாளிப்‌ புதல்வனைப்‌ பாபாவின்‌ பாதங்களில்‌ வைத்தார்‌. பாபா அக்குழந்தையைக்‌ கண்ட அத்தருணத்திலேயே ஒரு அசம்பாவிதம்‌ நிகழ்ந்தது. கண்களைச்‌ சுழற்றிக்கொண்டு அப்புதல்வன்‌ உணர்வற்றுக்‌ கீழே விழுந்தான்‌. அவனது வாய்‌ நுரைதள்ளி, உடம்பு முழுவதும்‌ வியர்த்துக்‌ கொட்டியது. உயிரை விட்டுவிட்டான்‌ போல்‌ தோன்றியது. இதைக்‌ கண்டு பெற்றோர்‌ மிகவும்‌ படபடத்து உணர்ச்சி வசப்பட்டனர்‌. பையனுக்கு அடிக்கடி வலிப்பு வருமாயினும்‌ இந்த வலிப்பு நீண்டதாகத்‌ தோன்றியது.

தாயாரின்‌ கண்களிலிருந்து கண்ணீர்‌ பெருக்கெடுத்து அழத்‌ தொடங்கி விட்டாள்‌. கொள்ளைக்காரனுக்குப்‌ பயந்து ஒரு வீட்டில்‌ ஒளிந்த ஒருவன்‌ மீது அவ்வீடு சரிந்து விழுந்துவிட்டதைப்‌ போலவும்‌, புலிக்குப்‌ பயந்து ஓடிய பசு ஒன்று கசாப்புக்‌ கடைக்காரன்‌ கையில்‌ அகப்பட்டுக்கொண்டதைப்‌ போலவும்‌, வெப்பம்‌ தாங்காது ஒரு மரத்தடியில்‌ ஒதுங்கிய ஒரு வழிப்போக்கன்‌ மீது அம்மரமே சாய்ந்து விழுந்துவிட்டதைப்‌ போன்றும்‌, பக்தியுள்ள ஒருவன்‌ கோவிலுக்கு வழிபடச்‌ சென்றபோது அக்கோவிலே அவன்மீது இடிந்து விழுந்துவிட்டதைப்‌ போன்றும்‌ தனது நிலையிருப்பதாகக்‌ கூறி அவள்‌ ஓலமிடத்‌ தொடங்கினாள்‌.

பின்‌ பாபா அவளை நோக்கி, “இம்மாதிரி ஓலமிடாதே. கொஞ்சம்‌ பொறு. அமைதியாய்‌ இரு. உன்‌ இருப்பிடத்துக்கு இவனை எடுத்துச்‌ செல்‌. அரைமணி நேரத்தில்‌ அவன்‌ சுவாதீனத்துக்கு வருவான்‌” என்று கூறித்‌ தேற்றினார்‌. பாபா கூறியபடியே அவர்கள்‌ செய்தனர்‌. பாபாவின்‌ மொழிகள்‌ உண்மையானதைக்‌ கண்டனர்‌. வாதாவுக்கு எடுத்துச்‌ செல்லப்பட்ட உடனேயே பையன்‌ குணமடைந்தான்‌. பிதலேயின்‌ குடும்பத்தவர்‌ அனைவரும்‌ மிகவும்‌ ஆச்சரியம்‌ அடைந்தனர்‌. அவர்கள்‌ ஐயம்‌ அழிந்தது.

பின்‌ பிதலலே தன்‌ மனைவியுடன்‌ பாபாவைக்‌ காணவந்தார்‌. அவர்முன்‌ மிகப்பணிவாகவும்‌, மரியாதையாகவும்‌ வீழ்ந்து நமஸ்கரித்துவிட்டு பாபாவின்‌ கால்களைப்‌ பிடித்துவிட்டவாறே, மனதில்‌ பாபாவின்‌ உதவிக்கு நன்றி செலுத்தினார்‌. பாபா புன்சிரிப்புடன்‌, “உமது எல்லா எண்ணங்களும்‌, சந்தேகங்களும்‌, கருத்துகளும்‌ இப்போது சாந்தப்படுத்தப்பட்டனவா? நம்பிக்கையும்‌, பொறுமையும்‌ உடையோரை ஹரி காப்பாற்றுகிறார்‌?” என்றார்‌. பிதலே வசதியுள்ள பணக்கார மனிதர்‌. பெருமளவில்‌ அவர்‌ இனிப்புகளை வினியோகித்து பாபாவுக்கு மிகச்சிறந்த பழங்களையும்‌, வெற்றிலை பாக்கையும்‌ அளித்தார்‌. பிதலேயின்‌ மனைவி மிகச்சிறந்த பண்புடையவள்‌. எளிமை, அன்பு, நம்பிக்கை உடையவள்‌. தூணுக்கு அருகில்‌ அமர்ந்து கண்களில்‌ ஆனந்தக்‌ கண்ணீர்‌ பொங்கி வழிய பாபாவையே உற்றுப்‌ பார்த்தவண்ணம்‌ அமர்ந்திருப்பாள்‌. அவளது நட்பும்‌, அன்புமுள்ள குணத்தைக்‌ கண்டு பாபா மிகவும்‌ சந்தோஷமடைந்தார்‌. முழு மனத்தோடும்‌, முழு ஆத்மாவோடும்‌ தம்மிடம்‌ சரணடைந்து வழிபடுவோர்பால்‌ ஞானிகளும்‌, கடவுளரும்‌ சார்ந்திருக்கின்றனர்‌ அன்றோ! பாபாவின்‌ சந்நிதானத்தில்‌ சில இன்பமான நாட்களைக்‌ கழித்த பின்னர்‌ அக்குடும்பத்தினர்‌ புறப்படுவதற்குப்‌ பாபாவின்‌ அனுமதியை பெற மசூதிக்கு வந்திருந்தனர்‌. உதியையும்‌, ஆசீர்வாதத்தையும்‌ அவர்களுக்கு பாபா அளித்த பின்பு பிதலேயை அருகே அழைத்தார்‌, “பாபு, நான்‌ உனக்கு முன்பே இரண்டு ரூபாய்‌ கொடுத்திருக்கிறேன்‌. இப்போது மூன்று ரூபாய்‌ தருகிறேன்‌. இதை உனது பூஜையறையில்‌ வைத்துக்கொள்‌. நீ நன்மையடைவாய்‌” என்று கூறினார்‌.

இவைகளைப்‌ பிரசாதமாக ஏற்றுக்கொண்டு மீண்டும்‌ அவர்முன்‌ வீழ்ந்து வணங்கிவிட்டு, அவரது ஆசீர்வாதத்துக்காக வேண்டி நின்றார்‌. ஷீர்டிக்கு இதுவே தமது முதல்‌ விஜயமாதலால்‌ பாபா தாம்‌ முன்னரே இரண்டு ரூபாய்‌ கொடுத்ததாகச்‌ சொல்லியது தமக்கு விளங்கவில்லை என்ற எண்ணம்‌ அவர்‌ மனதில்‌ எழுந்தது. இப்புதிர்‌ விடுபடுவதற்கு அவர்‌ ஆவலாய்‌ இருந்தார்‌. ஆனால்‌ பாபா மெளனமாக இருந்துவிட்டார்‌. பிதலே பம்பாய்க்குத்‌ திரும்பியபின்‌ தனது கிழத்தாயாருக்கு ஷீர்டியில்‌ நடந்த எல்லாவற்றையும்‌, பாபா அவருக்கு முன்னரே இரண்டு ரூபாய்‌ கொடுத்திருப்பதாகச்‌ சொன்ன புதிரையும்‌ கூறினார்‌.

அந்தக்‌ கிழவிக்கும்‌ அப்புதிர்‌ புரியவில்லை. ஆனால்‌ இதைப்பற்றித்‌ தீவிரமாகச்‌ சிந்தித்தபின்‌, நினைவுக்கு வந்த ஒரு பழைய சம்பவம்‌ அப்புதிரை விடுவித்தது. “உனது மகனோடு இப்போது நீ சாயிபாபாவை பார்க்கச்‌ சென்றதுபோல்‌, பல ஆண்டுகளுக்கு முன்‌ உனது தந்தையும்‌ உன்னை அக்கல்கோட்டுக்கு அப்பெருமானின்‌ தரிசனத்துக்காக அழைத்துச்‌ சென்றார்‌. அப்பெருமான்கூட ஒரு சித்தர்‌, பரிபூரண யோகி, சர்வவியாபி, தாராள மனதுடையவர்‌. உனது தந்‌தை தூயவர்‌, பக்தியுடையவர்‌, அவரது வழிபாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர்‌ உனது தந்தைக்கு இரண்டு ரூபாய்களை பூஜையறையில்‌ வைத்து வழிபடுவதற்காக அளித்தார்‌. உனது தந்‌தை, தான்‌ சாகும்வரை அதை முறைப்படி வழிபட்டு வந்தார்‌. ஆனால்‌ அதற்குப்பின்‌ வழிபாடு புறக்கணிக்கப்பட்டு அந்த ரூபாய்கள்‌ தொலைந்துபோயின. சில ஆண்டுகளுக்குப்‌ பின்‌ அவற்றின்‌ நினைப்பும்‌ மறந்துபோயின. தற்போது நீ அதிர்ஷ்டசாலியாக இருந்ததால்‌, சாயிபாபாவின்‌ ரூபத்தில்‌ அக்கல்கோட்‌ மஹராஜ்‌ உனது கடமைகள்‌, வழிபாடு இவற்றை நினைவூட்டவும்‌, அபாயங்களை அகற்றிவிடவும்‌ தோன்றியிருக்கிறார்‌.

இனிமேலாவது ஜாக்கிரதையாக எல்லா ஐயங்களையும்‌ கெட்ட எண்ணங்களையும்‌ அகற்றிவிட்டு உனது மூதாதையர்‌ வழிநின்று நன்றாக நடந்துகொள்‌. குடும்ப தெய்வங்களையும்‌ காசுகளையும்‌ வணங்கி, நன்றாக எடைபோட்டு, ஞானிகளின்‌ ஆசிகளில்‌ பெருமைகொள்‌. உனது பக்தி உணர்ச்சிக்கு சமர்த்த சாயி அன்புடன்‌ புத்துணர்ச்சி ஊட்டியிருக்கிறார்‌. உனது நன்மைக்காக அதைப்‌ பயிர்‌ செய்வாய்‌” என்று கூறினாள்‌. தாயாரின்‌ இம்மொழிகளைக்‌ கேட்டு பிதலே மிகவும்‌ ஆச்சரியப்பட்டார்‌. பாபாவின்‌ சர்வவியாபித்துவத்‌ தன்மையை அவர்‌ அறிய தலைப்பட்டு, அதில்‌ உறுதியானார்‌. பாபாவின்‌ தரிசனத்தின்‌ முக்கியத்துவத்தையும்‌ அவர்‌ அறிந்தார்‌. அதிலிருந்து அவர்‌ குணத்தைப்‌ பற்றி சர்வ ஜாக்கிரதையுடையவரானார்‌.

ஆம்ப்டேகர்‌

புனேவைச்‌ சேர்ந்த கோபால்‌ நாராயண்‌ ஆம்ப்டேகர்‌ என்பவர்‌ பாபாவின்‌ பக்தர்‌. அவர்‌ பத்து ஆண்டுகளுக்கு தாணே ஜில்லாவிலும்‌, பின்‌ ஜவ்ஹர்‌ ஜில்லாவிலும்‌ எக்ஸைஸ்‌ டிபார்ட்மெண்டில்‌ பணியாற்றிய பிறகு ஓய்வுபெற்றார்‌. வேறு ஒரு வேலை பெறுவதற்காக அவர்‌ முயற்சித்தார்‌. ஆனால்‌ முடியவில்லை. மற்ற கேடுகளால்‌ அவர்‌ தாக்கப்பட்டு அவரது நிலை நாளுக்கு நாள்‌ மோசமடைந்துகொண்டே வந்தது. இதே நிலைமையில்‌ ஷீர்டிக்கு ஒவ்வோர்‌ ஆண்டும்‌ சென்று தனது கவலைகளை பாபாவின்முன்‌ சமர்ப்பிப்பதுமாக ஏழாண்டுகள்‌ கழித்தார்‌. 1916ல்‌ அவரது நிலைமை மோசமாகி, ஷீர்டியிலேயே‌‌ தற்கொலை செய்துகொள்வது என தீர்மானித்தார்‌.

எனவே தன்‌ மனைவியுடன்‌ ஷீர்டிக்கு வந்து இரண்டு மாதங்கள்‌ தங்கியிருந்தார்‌. ஒருநாள்‌ தீக்ஷித்‌ வாதாவின்‌ முன்னால்‌ உள்ள மாட்டு வண்டியில்‌ அமர்ந்துகொண்டிருக்கும்போது பக்கத்திலுள்ள ஒரு கிணற்றில்‌ குதித்துத்‌ தன்‌ வாழ்க்கையை முடித்துக்கொள்ள அவர்‌ தீர்மானித்து விட்டார்‌. அவர்‌ ஒரு மாதிரியாக எண்ண, பாபா வேறொருவிதமாக நடப்பித்தார்‌. இந்த இடத்துக்கு சில அடி தூரத்தில்‌ இருந்த ஒரு ஹோட்டல்‌ முதலாளியும்‌ பாபாவின்‌ அடியவருமான சகுண்‌ என்பவர்‌ வெளியே வந்து அவரிடம்‌, “அக்கல்கோட்‌ மஹராஜின்‌ இச்சரிதத்தை நீங்கள்‌ எப்போதாவது படித்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்‌. ஆம்ப்டேகர்‌ அவரிடமிருந்து அந்நூலை வாங்கிப்‌ படிக்கத்‌ தொடங்கினார்‌. எதேச்சையாக அல்லது தெய்வாதீனமாகக்‌ கீழ்கண்ட ஒரு கதையை அவர்‌ படிக்கத்‌ தொடங்கினார்‌.

அக்கல்கோட்‌ மஹராஜின்‌ அடியவன்‌ ஒருவன்‌ தீர்க்கப்படமுடியாத ஒரு வியாதியால்‌ மிகவும்‌ அல்லலுற்றுக்கொண்டிருந்தான்‌, அந்த வேதனையை மேற்கொண்டு தாங்க முடியாமற்போகவே அவன்‌ மனம்‌ உடைந்து தனது தொல்லைகள்‌ எல்லாம்‌ ஒரு முடிவுக்குக்கொண்டுவர ஒருநாள்‌ நள்ளிரவு கிணற்றில்‌ குதித்துவிட்டான்‌.

உடனே மஹராஜ்‌ அங்குவந்து அவனைத்‌ தன்‌ கரங்களாலேயே வெளியே எடுத்து “நல்லதோ கெட்டதோ உன்‌ முந்தைய கர்மத்தின்‌ பயனை நீ அடைந்ததாக, அனுபவித்தாக வேண்டும்‌, அந்த அனுபவித்தல்‌ பூரணமெய்தவில்லையானால்‌ தற்கொலை உனக்கு உதவியளிக்காது. மீண்டும்‌ ஒரு பிறவி எடுத்து அக்கஷ்டத்தையே அடையவேண்டும்‌. எனவே உன்னை நீயே கொன்று கொள்வதற்குப்‌ பதிலாக ஏன்‌ இன்னும்‌ கொஞ்சம்‌ கஷ்டப்பட்டு உழைத்து, முந்தைய கர்மத்தின்‌ பலன்களை எல்லாம்‌ முழுவதுமாக தீர்த்துவிடக்கூடாது?” என்றார்‌.

இந்த பொருத்தமான, தக்க சமயத்தில்‌ கிடைத்த கதையைப்‌ படித்துவிட்டு ஆம்ப்டேகர்‌ மிகவும்‌ ஆச்சரியப்பட்டார்‌. உள்ளம்‌ உருகினார்‌. பாபாவின்‌ குறிப்பை இக்கதையின்‌ மூலம்‌ அவர்‌ பெற்றிருக்காவிட்டால்‌ அவர்‌ உயிருடன்‌ இருந்திருக்கமாட்டார்‌. பாபாவின்‌ சர்வ வியாபித்துவத்தையும்‌, தயாளத்தையும்‌ கண்டு, பாபா மேலுள்ள நம்பிக்கை அவருக்கு உறுதியாகி, பாபாவின்‌ பெரும்‌ பக்தராகிவிட்டார்‌. அவர்‌ தந்தையார்‌ அக்கல்கோட்‌ மஹராஜின்‌ பக்தராக இருந்தவர்‌. சாயிபாபா அவரையும்‌ அவர்‌ தந்தையார்‌ சென்ற அடிச்சுவட்டிலேயே சென்று அவரிடம்‌ பக்தி பூண்டவராகத்‌ தொடர்ந்திருக்கும்படி விரும்பினார்‌. பின்னர்‌ பாபாவின்‌ ஆசீர்வாதம்‌ பெற்றார்‌. அவரின்‌ எதிர்காலம்‌ சிறப்புறத்‌ தொடங்கியது. பின்னர்‌ ஜோதிடம்‌ படித்து அதில்‌ திறமைபெற்றுத்‌ தனது செல்வத்தைப்‌ பெருக்கினார்‌. போதுமான பணத்தை சம்பாதிக்க அவரால்‌ இயன்று, தனது பிற்கால வாழ்வை செளகரியமாகவும்‌, வசதியாகவும்‌ கழித்தார்‌.

ஸ்ரீ சாயியைப்‌ பணிக

அனைவர்க்கும்‌ சாந்தி நிலவட்டும்‌