Ads

அத்தியாயம் - 27 - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்



அத்தியாயம்‌ - 27

விஷ்ணு ஸஹஸ்ரநாமம்‌, ஸ்ரீமத்‌ பாகவதம்‌ ஆகியவற்றைக்‌ கொடுத்து அனுகூலம்‌ செய்தல்‌ - தீக்ஷித்தின்‌ விட்டல்‌ காட்சி - கீதா ரஹஸ்யம்‌ - கபர்டே குடும்பம்‌.

பாபா தமது ஸ்பரிசத்தால்‌ புனிதப்படுத்தி, மத சம்பந்தமான நூல்களைப்‌ பாராயணத்துக்காகவும்‌, இதர விஷயங்களுக்காகவும்‌ பக்தர்களுக்கு அளித்து எங்ஙனம்‌ அனுகூலம்‌ செய்தார்‌ என்பதை இவ்வத்தியாயம்‌ கூறுகிறது.

முன்னுரை

ஒரு மனிதன்‌ கடலில்‌ மூழ்கும்போது, எல்லா தீர்த்தங்களிலும்‌ புனித ஆறுகளிலும்‌ நீராடிய புண்ணியம்‌ அவனை வந்தெய்துகிறது. அதே மாதிரியாக ஒரு மனிதன்‌ சத்குருவின்‌ பாதங்களில்‌ அடைக்கலம்‌ புகும்போது, மூவரையும்‌ (பிரம்மா, விஷ்ணு, மஹாதேவர்‌), பரப்பிரம்மத்தையும்‌ வணங்கும்‌ பேறு அவனுக்கு உண்டாகிறது. கற்பகத்‌ தருவும்‌, ஞானசாகரமும்‌ நமக்கு ஆன்ம உணர்வை அளிப்பவருமான சாயிக்கு ஜெயம்‌ உண்டாகட்டும்‌..

ஓ! சாயி, தங்களது கதைகள்பால்‌ எங்களுக்கு ஆர்வம்‌ உண்டாகச்‌ செய்யுங்கள்‌. சாதகப்‌ பறவை மேகங்களினுள்‌ உறையும்‌ நீரைப்‌ பருகி இன்பமடையும்‌. இதைக்‌ கற்போரும்‌, கேட்போரும்‌ அதே மன நிறைவுப்‌ பாங்கில்‌ இவைகளை ஆர்வத்துடன்‌ பருகட்டும்‌. தங்களது கதைகளைக்‌ கேட்டுக்‌ கொண்டிருக்கும்போது அவர்களும்‌, அவர்களது குடும்பமும்‌ சாத்வீக உணர்வுகள்‌ அனைத்தையும்‌ பெறட்டும்‌. அதாவது மனம்‌ உருகி கண்களில்‌ நீர்‌ நிறைய அவர்கள்‌ மூச்சு ஒரே சீராக அமைந்து அவர்கள்‌ மனம்‌ அமைதியடைந்து, மயிர்க்கூச்செறிந்து, அழுது, தேம்பி உடல்‌ குலுங்கட்டும்‌. எங்கள்‌ பகைமையும்‌ வித்தியாசங்களும்‌, பெரியனவாயினும்‌ சிறியனவாயினும்‌ மறைந்தொழிடட்டும்‌.

இவைகள்‌ எல்லாம்‌ நடந்தால்‌, குருவின்‌ கிருபை அவன்மீது மலர்ந்திருக்கிறது என்பது பொருள்‌. இத்தகைய உணர்வுகள்‌ உன்பால்‌ எழும்போது குரு மிகமிக மகிழ்கிறார்‌. ஆத்ம உணர்வு என்னும்‌ லட்சியத்தில்‌ உனக்கு நிச்சயமாக வழிகாட்டுவார்‌. பாபாவிடம்‌ முழுமையான இதயப்பூர்வமான சரணாகதி எய்துதலே மாயையின்‌ பிடிகளிலிருந்து விடுபடுவதற்கு மிகச்சிறந்த வழியாகும்‌. மாயைக்கு அப்பால்‌ வேதங்களால்‌ உன்னை எடுத்துச்செல்ல முடியாது. சத்குரு ஒருவரே அங்ஙனம்‌ செய்யமுடியும்‌. பரம்பொருளை எல்லா ஜீவராசிகளிடமும்‌ காண முடியும்‌.

புனிதமாக்கப்பட்ட நூலை அளித்தல்‌

பாபா உபதேசம்‌ அளிக்கும்‌ பலமுறைகளை முந்தைய அத்தியாயங்களில்‌ நாம்‌ முன்னரே கண்டிருக்கிறோம்‌. அவற்றில்‌ ஒருமுறையை இங்கு காண்போம்‌. தாங்கள்‌ சிறப்பாகப்‌ பாராயணம்‌ செய்ய விரும்பிய சில மத சம்பந்தமான நூல்களை பாபாவிடம்‌ எடுத்துச்சென்று அவரது திருக்கரங்கள்பட்டு புனிதம்‌ ஆக்கப்பட்டபின்‌ அவைகளைத்‌ திரும்பப்‌ பெற்றுக்கொள்வது சிலரின்‌ வழக்கமாக இருந்து வந்தது.

அத்தகைய நூல்களை அவர்கள்‌ தினந்தோறும்‌ படிக்கும்போது பாபா அவர்களுடன்‌ இருப்பதாக உணர்ந்தனர்‌. ஒருமுறை காகா மஹாஜனி ஏக்நாத்‌ பாகவதம்‌ புத்தகம்‌ ஒன்றுடன்‌ ஷீர்டிக்கு வந்தார்‌. ஷாமா இந்நூலைப்‌ படிப்பதற்காக மசூதிக்கு எடுத்துச்‌ சென்றார்‌. பாபா அதை அவரிடமிருந்து வாங்கி இங்கும்‌ அங்குமாக சில பக்கங்களைப்‌ புரட்டிவிட்டு ஷாமாவிடம்‌ திரும்ப அளித்து, “இதை நீ வைத்துக்கொள்‌”? என்றார்‌. ஷாமா : அது காகாவுடையது. அவருக்கு அதைத்‌ திரும்பக்‌ கொடுத்துவிட வேண்டும்‌.

பாபா : இல்லையில்லை. நான்‌ அதை உனக்கு அளித்ததால்‌ நன்மைக்காக உன்னிடமே வைத்துக்கொள்‌. உனக்கு அது பயன்படும்‌.

இவ்விதமாகப்‌ பல நூல்கள்‌ ஷாமாவிடம்‌ ஒப்படைக்கப்பட்டன. காகா இன்னும்‌ சில நாட்களில்‌ மற்றொரு பாகவதத்துடன்‌ வந்து அதை பாபாவின்‌ கரங்களில்‌ அளித்தார்‌. பாபா அவருக்கு அதைப்‌ பிரசாதமாகத்‌ திரும்ப அளித்து அதை நன்றாகப்‌ பாதுகாக்கும்படியும்‌ அது அவரை நல்ல நிலையில்‌ வைத்திருக்கும்‌ என்றும்‌ கூறினார்‌. காகாவும்‌ அதை வணக்கத்துடன்‌ பெற்றுக்கொண்டார்‌.

ஷாமாவும்‌, விஷ்ணு ஸஹஸ்ரநாமமும்‌

ஷாமா, பாபாவின்‌ மிக நெருங்கிய பக்தர்‌. விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின்‌ ஒரு பிரதியை பிரசாதமாக அவருக்கு அளிப்பதன்‌ மூலம்‌ பாபா அவருக்கு அருள்‌ செய்ய விரும்பினார்‌. ஒருமுறை ஒரு ராம்தாஸி பக்தர்‌ ஷீர்டிக்கு வந்து அங்கு சில காலம்‌ இருந்தார்‌. அவர்‌ தினந்தோறும்‌ பின்பற்றிய ஒழுங்குமுறை கீழ்வருமாறு, அதிகாலையில்‌ அவர்‌ எழுந்திருந்து முகம்‌ கழுவி, குளித்துவிட்டு, காவி ஆடை உடுத்திக்கொண்டு, திருநீற்றை உடலில்‌ தரித்துக்கொண்டு, விஷ்ணு ஸஹஸ்ரநாமம்‌, அத்யாத்ம ராமாயணம்‌ ஆகிய புனிதநூல்களை நம்பிக்கையுடன்‌ படிப்பார்‌. அவர்‌ இவற்றை அடிக்கடி பலமுறை படித்தார்‌.

சில நாட்களுக்குப்‌ பின்னர்‌ பாபா விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை ஷாமாவுக்கும்‌ ஆரம்பித்து வைத்து அவருக்கு அருள்செய்ய நினைத்தார்‌. எனவே ராம்தாஸியைத்‌ தன்னருகில்‌ அழைத்து, “நான்‌ தாங்க முடியாத வயிற்றுவலியால்‌ அல்லலுறுகிறேன்‌. சூரத்தாவாரை (Sennapods - மிதமான பேதி மருந்து) உட்கொண்டாலன்றி வலி நிற்காது. எனவே கடை வீதிக்குப்‌ போய்‌ இம்மருந்தை வாங்கி வா” என்றார்‌. பின்னர்‌ தமது யதாஸ்தானத்திலிருந்து இறங்கி ராம்தாஸி படித்துக்‌ கொண்டிருந்த இடத்துக்கு வந்து விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை எடுத்துத்‌ தமது இடத்துக்கு வந்து ஷாமாவிடம்‌,

“ஓ! ஷாமா, இப்புத்தகம்‌ மிகவும்‌ பயனுள்ளது, பலனுள்ளது, எனவே இதை உனக்குப்‌ பரிசளிக்கிறேன்‌. ஒருமுறை நான்‌ தீவிரமாகக்‌ கஷ்டப்பட்டேன்‌. ஏனதூ இதயம்‌ துடிக்கத்‌ தொடங்கி, என்‌ உயிர்‌ மிகவும்‌ ஆபத்தான நிலையில்‌ இருந்தது. அத்தகைய தருணத்தில்‌ நான்‌ இந்நூலை எனது மரர்போடு வைத்தூ அணைத்துக்கொண்டேன்‌. அப்போது, அது எத்தகைய ஆறுதலை அளித்தது. அல்லாவே என்னைக்‌ காப்பாற்றக்‌ கீழிறங்கி வந்தாரென்று நினைத்தேன்‌. எனவே இதை உனக்குக்‌ கொடுக்கிறேன்‌. மெதுவாகப்படி. தினந்தோறும்‌ குறைந்த பட்சம்‌ ஒரு நாமத்தையாவது படி. அது உனக்கு நன்மை செய்யும்‌”.

ஷாமா : அது எனக்கு வேண்டாம்‌. அதன்‌ சொந்தக்காரனான ராம்தாஸி ஒரு பைத்தியம்‌, பிடிவாதக்காரன்‌, கோபக்காரன்‌. நிச்சயம்‌ என்னுடன்‌ சண்டைக்கு வருவான்‌. மேலும்‌ நான்‌ ஒரு பட்டிக்காட்டான்‌. ஆதலால்‌ எனக்கு இந்நூலிலுள்ள சமஸ்கிருத எழுத்துக்கள்‌ படிக்கத்‌ தெரியாது.

ஷாமா, பாபா தமது இச்செய்கையின்‌ மூலம்‌ தன்னை ராம்தாஸிக்கு எதிராகக்‌ கிளப்பிவிடுவதாக நினைத்தார்‌. பாபா அவருக்காக என்ன நினைத்தார்‌ என்பதைப்‌ பற்றிய எண்ணமே அவருக்கு இல்லை. ஷாமா ஒரு பட்டிக்காடாக இருந்தபோதும்‌, அவருடைய நெருங்கிய பக்தராகையால்‌ இந்த விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை அவர்‌ கழுத்தில்‌ சூட்டி உலகத்‌ துன்பங்களினின்று அவரைக்‌ காக்க பாபா எண்ணியிருக்க வேண்டும்‌.

கடவுள்‌ நாமத்தின்‌ சக்தி யாவரும்‌ அறிந்ததே. அது நம்மை எல்லாப்‌ பாவங்களினின்றும்‌ காப்பாற்றி, பிறப்பு - இறப்புச்‌ சுழலினின்றும்‌ நம்மை விடுதலையாக்குகிறது. இதைவிடச்‌ சுலபமான சாதனம்‌ வேறெதுவும்‌ இல்லை. நம்‌ மனதை மிகச்சிறந்தமுறையில்‌ அது தூய்மைப்படுத்துகிறது. அதற்கு எவ்வித சடங்குமுறைகளோ, தடையோ கிடையாது. அது அவ்வளவு சுலபம்‌, அவ்வளவு பயனுள்ளது. ஷாமா இந்த சாதனையில்‌ ஆர்வம்கொள்ளாதவராய்‌ இருப்பினும்‌ பாபா இதைத்தான்‌ ஷாமாவைச்‌ செய்யும்படி விரும்பினார்‌. எனவே பாபா அதை அவர்மேல்‌ திணித்தார்‌.

ஏக்நாத்‌ மஹராஜ்‌ இம்மாதிரியாகவே ஒரு ஏழைப்பிராமணனிடம்‌ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைத்‌ திணித்து அவனைக்‌ காப்பாற்றினார்‌ என்று வெகுநாட்களுக்கு முன்பே கூறப்பட்டிருக்கிறது. விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைப்‌ பாராயணம்‌ செய்வதும்‌ மனதைத்‌ தூய்மைப்‌ படுத்துகின்ற திறந்த அகலமான வழியாகும்‌. எனவேதான்‌ பாபா இதை ஷாமாவிடம்‌ திணித்தார்‌.

ராம்தாஸி சூரத்தாவாரை விதைகளுடன்‌ உடனே திரும்பினார்‌. அங்கிருந்த அண்ணா சிஞ்சணீகர்‌ நாரதர்‌ வேலை செய்யவிரும்பி நடந்ததையெல்லாம்‌ அவரிடம்‌ உரைத்தார்‌. ராம்தாஸி உடனே கோபத்தால்‌ குதித்தார்‌. தனது முழு வெறியுடன்‌ ஷாமாவிடம்‌ இறங்கி வந்தார்‌. தனக்கு வயிற்றுவலி என்ற பேரில்‌ மருந்து வாங்கிவர அவரை அனுப்பும்படி பாபாவைத்‌ தூண்டி விட்டது ஷாமாதான்‌ என்றும்‌ இவ்வாறாக அவரது புத்தகத்தை எடுத்துக்கொண்டார்‌ என்றும்‌ கூறினார்‌. ஷாமாவை அவர்‌ திட்டவும்‌ செய்து அவர்‌ புத்தகத்தைத்‌ திருப்பித்‌ தரவில்லையானால்‌ அவர்முன்‌ தன்‌ மண்டையை உடைத்துக்கொள்ளப்‌ போவதாகக்‌ கூறினார்‌. ஷாமா அமைதியாக அவருடன்‌ எதிர்த்துப்‌ பார்த்தார்‌. அது பயனளிக்கவில்லை. பின்‌ பாபா அன்புடன்‌ அவரை நோக்கி “ஓ! ராம்தாஸி, என்ன விஷயம்‌? ஏன்‌ இவ்வளவு கலங்கிப்‌ போயிருக்கிறாய்‌? ஷாமா நம்‌ பையன்‌ இல்லையா? வீணாக அவனை ஏன்‌ திட்டுகிறாய்‌? இவ்வளவு சண்டைபோடும்‌ ஆளாக நீ எப்படி இருக்கிறாய்‌? மிருதுவான, இனிமையான மொழிகளைப்‌ பேச உன்னால்‌ முடியாதா? நீ தினந்தோறும்‌ இந்தப்‌ புனித நூல்களைப்‌ படிக்கிறாய்‌, எனினும்‌ உன்‌ மனது தூய்மையற்றதாயும்‌ உனது உணர்வுகள்‌ கட்டுப்பாடில்லாமலும்‌ இருக்கின்றன! நீ என்ன ராம்தாஸி போ! இவைகள்‌ எல்லாவற்றிலும்‌ நீ பற்றற்று கவனமின்றி இருக்கவேண்டும்‌. இந்தப்‌ புத்தகத்தை நீ இவ்வளவு அதிகமாக விரும்புவது வியப்பாயில்லை? உண்மையான ராம்தாஸிக்கு ‘மமதா’ (பற்று) இருக்கக்கூடாது. ஆனால்‌ ‘சமதா’ (எல்லோரையும்‌ ஒன்று எனப்பாவிக்கும்‌ பண்பு) இருக்கவேண்டும்‌. ஷாமா பையனுடன்‌ ஒரு புத்தகத்துக்காக நீ இவ்வளவு சண்டை செய்துகொண்டிருக்கிறாய்‌, போ! உன்‌ இடத்தில்‌ அமர்ந்துகொள். பணம்‌ கொடுத்தால்‌ ஏராளமாகப்‌ புத்தகங்கள்‌ கிடைக்கும்‌. ஆனால்‌ மனிதர்கள்‌ கிடைக்கமாட்டார்கள்‌. நன்றாக நினைத்துப்‌ பார்த்துத்‌ தயவுள்ளவனாய்‌ இரு. உன்‌ புத்தகம்‌ என்ன மதிப்புப்‌ பெறும்‌? ஷாமாவுக்கு அதைப்பற்றி கவலையில்லை. நான்தான்‌ அதை எடுத்து அவனிடம்‌ கொடுத்தேன்‌. உனக்கு அது மனப்பாடமாகத்‌ தெரியும்‌. ஷாமா அதைப்‌ படித்து பலனடைய வேண்டும்‌ என்று நான்‌ எண்ணினேன்‌. எனவேதான்‌ அதை அவனிடம்‌ கொடுத்தேன்‌”' என்றார்‌.

 பாபாவின்‌ மொழிகள்‌ எவ்வளவு இனிமையாக இருக்கின்றன. அவைகளின்‌ பலன்‌ ஆச்சரியமானது. ராம்தாஸி அமைதியானார்‌. ஷாமாவிடம்‌ அதற்குப்‌ பதிலாக பஞ்சரத்னி கீதை ஒன்று எடுத்துக்‌ கொள்வதாகக்‌ கூறினார்‌. ஷாமா அதிக சந்தோஷமடைந்து, “ஒன்று ஏன்‌? பதிலாக உனக்குப்‌ பத்து பிரதிகள்‌ தருகிறேன்‌” என்று கூறினார்‌.

முடிவாக இவ்விஷயம்‌ சமாதானத்துக்கு வந்தது. எந்தக்‌ கடவுளை அறியவேண்டுமென்று அவர்‌ கவலைப்பட்டது கிடையாதோ அவரைப்‌ பற்றிய விஷயங்கள்‌ அடங்கியுள்ள பஞ்சரத்னி கீதையை ராம்தாஸி கேட்டது ஏன்‌? தினந்தோறும்‌ மசூதியில்‌ பாபாவின்முன்‌ மதப்‌ புத்தகங்களைப்‌ படித்த ராம்தாஸி, ஷாமாவிடம்‌ அவர்‌ முன்னிலையிலேயே சண்டை செய்வானேன்‌? என்ற கேள்விகளையெல்லாம்‌ கருதுங்கால்‌ பழியை யாரிடம்‌ ஒதுக்குவது என்பதையும்‌, யாரைத்‌ திட்டுவது என்பதையும்‌ நாம்‌ அறியோம்‌. இந்நிகழ்ச்சி நடந்திராவிட்டால்‌ ஈஸ்வர நாமத்தின்‌ மகிமை, விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம்‌ ஆகிய விஷயங்களெல்லாம்‌ ஷாமாவின்‌ அறிவிற்கு எட்டியிருக்காது என்பதை மட்டும்‌ நாம்‌ அறிவோம்‌. எனவே பாபாவின்‌ கற்பிக்கும்முறையும்‌ ஆரம்பித்து வைக்கும்முறையும்‌ விசேஷமானது என்று நாம்‌ காண்கிறோம்‌. இவ்விஷயத்தில்‌ ஷாமா அந்நூலைப்‌ படிப்படியாகக்‌ கற்கவே செய்தார்‌. புனே இன்ஜினியரிங்‌ கல்லூரி பேராசிரியரும்‌ ஸ்ரீமான்‌ பூட்டியின்‌ மருமகனுமான பேராசிரியர்‌ G.G. நார்கே M.A.,M.Sc., என்பவருக்கு அதை விவரித்துச்‌ சொல்லும்‌ அளவுக்கு அதில்‌ வல்லமை பெற்றார்‌.

விட்டல்‌ காட்சி

ஒருநாள்‌ காகா சாஹேப்‌ தீக்ஷித்‌ ஷீர்டியில்‌ உள்ள தனது வாதாவில்‌ காலைக்‌ குளியலுக்குப்பின்‌ தியானம்‌ செய்துகொண்டிருக்கும்போது விட்டலின்‌ தெய்வீகக்காட்சி ஒன்று கிடைத்தது. அதன்‌ பின்பு பாபாவை அவர்‌ காணச்‌ சென்றபோது, “விட்டல்‌ பாடீல்‌ வந்தாரா? நீர்‌ அவரைக்‌ காணவில்லையா? அவர்‌ மிகவும்‌ நழுவல்‌ பேர்வழி. இறுக்க அவரைப்‌ பிடித்துக்கொள்ளும்‌ இல்லாவிடில்‌ உமக்கு ‘டேக்கா’ கொடுத்துவிட்டு ஓடிப்போய்‌ விடுவார்‌!” என்று கூறினார்‌ பாபா. பின்னர்‌ மத்தியான வேளையில்‌ பண்டரீபுரத்து விட்டலின்‌ 20-25 படங்களுடன்‌ ஒரு வியாபாரி வந்தான்‌. தான்‌ தியானத்தில்‌ கண்ட விட்டலின்‌ உருவத்துடன்‌ இது அப்படியே அச்சாகப்‌ பொருந்தியிருப்பது கண்டு தீக்ஷித்‌ அதிசயமடைந்தார்‌. பாபாவின்‌ மொழிகளை நினைவு கூர்ந்து, மிகுந்த விருப்பத்துடன்‌ ஒரு படத்தை வாங்கி, தனது பூஜையறையில்‌ வழிபாட்டுக்காக வைத்தார்‌.‌

கீதா ரஹஸ்யம்‌‌

பிரம்ம வித்தையைக்‌ கற்பவர்களை பாபா எப்போதும்‌ நேசித்தார்‌. அவர்களை ஊக்குவித்தார்‌. உதாரணத்துக்கு ஒன்று, ஒருமுறை பாபு சாஹேப்‌ ஜோக்‌ ஒரு பார்சலைப்‌ பெற்றார்‌. லோகமான்ய திலகர்‌ எழுதிய கீதாரஹஸ்யத்தின்‌ ஒரு பிரதி அதனுள்‌ இருந்தது. தனது அக்குளில்‌ அதை வைத்தவாறு மசூதிக்கு வந்து அவர்‌ பாபாவின்முன்‌ வீழ்ந்து பணிந்தபோது பார்சல்‌ பாபாவின்‌ பாதத்தில்‌ சென்று விழுந்தது. பாபா அது என்ன என்று விசாரித்தார்‌. அவ்விடத்திலேயே பார்சல்‌ உடைக்கப்பட்டு அப்புத்தகம்‌‌ பாபாவின்‌ கரத்தில்‌ வைக்கப்பட்டது. இங்குமங்குமாக அதன்‌ சில பக்கங்களை அவர்‌ புரட்டிவிட்டுத்‌ தமது பையிலிருந்து ஒரு ரூபாயை எடுத்து அதன்மீது வைத்து, அதை ஜோகிடம்‌ அளித்து, “இதை முழுமையும்‌ படி, உனக்கு நன்மை விளையும்‌” என்றார்‌.

கபர்டே குடும்பம்‌

கபர்டேயைப்‌ பற்றிய விளக்கங்களுடன்‌ இவ்வத்தியாயத்தை நாம்‌ முடிப்போம்‌. ஒருமுறை தாதா சாஹேப்‌ கபர்டே தன்‌ குடும்பத்துடன்‌ ஷீர்டிக்கு வந்து சில மாதங்கள்‌ தங்கியிருந்தார்‌. (அவர்‌ தங்கியிருந்ததன்‌ நாட்குறிப்பு சாயிலீலா சஞ்சிகையில்‌ (தொகுப்பு 7) ஆங்கிலத்தில்‌ பதிப்பிக்கப்பட்டு. தற்போது தமிழில்‌ “கபர்டே டைரி”யாக மொழிபெயர்க்கப்பட்டு சமஸ்தானத்தால்‌ வெளியிடப்பட்டுள்ளது).

தாதா சாஹேப்‌ சாதாரண மனிதரல்ல. அவர்‌ அமராவதியின்‌ மிகப்பெரிய பணக்காரர்‌, மிகவும்‌ புகழ்பெற்ற அட்வகேட்டும்‌, டெல்லி கவுன்சிலின்‌ அங்கத்தினர்களுள்‌ ஒருவரும்‌ ஆவார்‌. மிகுந்த புத்திசாதுர்பமுடையவரும்‌, மிகச்சிறப்பான பேச்சாளருமாவார்‌. ஆயினும்‌ பாபாவின்முன்‌ வாய்திறக்க அவருக்குத்‌ தைரியமில்லை. பெரும்பாலான பக்தர்கள்‌ பாபாவுடன்‌ அடிக்கடி பேசி விவாதித்தனர்‌. ஆனால்‌ கபர்டே, நூல்கர்‌, பூட்டி ஆகிய மூவர்‌ மட்டும்‌ எப்போதும்‌ மெளனமாக இருந்தனர்‌. அவர்கள்‌ சாந்தம்‌, எளிமை, பொறுமை, நற்பண்பு வாய்க்கப்பெற்றவர்கள்‌. தாதா சாஹேப்‌ மற்றவர்களுக்கு பஞ்சதசியை (புகழ்பெற்ற வித்யாரண்யரால்‌ இயற்றப்பெற்ற அத்வைத தத்துவத்தைப்‌ பற்றிய பிரசித்தமான சமஸ்கிருத நூல்‌) படித்து விளக்கம்‌ செய்யும்‌ வல்லமை உடையவர்‌. அவர்‌ மசூதிக்கு பாபாவின்முன்‌ வந்தபிறகு ஒரு வார்த்தைகூட பேசமாட்டார்‌.

வேதங்களில்‌ கூட ஒருவன்‌ எவ்வளவுதான்‌ கற்றுத்‌ தேறியிருப்பினும்‌ பிரம்மத்தை அறிந்தவன்முன்‌ உண்மையிலேயே மங்கிவிடுகிறான்‌. ஆன்ம அறிவின்முன்‌ கல்வி பிரகாசிக்க முடியாது. தாதா சாஹேப்‌ நான்கு மாதங்கள்‌ தங்கியிருந்தார்‌. ஆனால்‌ அவர்‌ மனைவியோ ஏழு மாதங்கள்‌ தங்கியிருந்தாள்‌. இருவரும்‌ தங்களின்‌ ஷீர்டி வாசத்தைப்‌ பற்றி மிகவும்‌ மகிழ்ச்சி அடைந்தனர்‌. திருமதி கபர்டே பாபாவின்பால்‌ விசுவாசம்‌, பக்தி, ஆழ்ந்த அன்பு இவைகளைக் கொண்டிருந்தாள்‌. ஒவ்வொரு மதியமும்‌ மசூதிக்கு அவளே பாபாவுக்கு நைவேத்தியத்தை எடுத்து வருவாள்‌. அது பாபாவால்‌ ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்புதான்‌ அவள்‌ உண்ணச்‌ செல்வாள்‌. அவளது நிதானமான, உறுதியான பக்தியை மற்றவர்களுக்குக்‌ காட்ட பாபா விரும்பினார்‌. ஒருநாள்‌ அவள்‌ சன்ஸா (கோதுமை பலகாரம்‌), பூரி, சாதம்‌, சூப்‌, சர்க்கரைப்‌ பொங்கல்‌, வற்றல்‌ இவைகளுடன்‌ மசூதிக்கு வந்தாள்‌. வழக்கமாக மணிக்கணக்கில்‌ காக்கும்‌ பாபா உடனே எழுந்திருந்து தனது சாப்பாட்டு இடத்துக்குச்‌ சென்று, பாத்திரத்தின்‌ மூடியை எடுத்துவிட்டு ஊக்கத்துடன்‌ அவைகளை உண்ணத்‌ தொடங்கினார்‌.

ஷாமா : ஏன்‌ இந்த பாரபட்சம்‌? மற்றவர்களின்‌ உணவை வீசியெறிந்துவிட்டு, அவைகளைக்‌ கண்ணெடுத்துப்‌ பார்ப்பதற்கும்‌ கவலைகொள்ளாமல்‌ இருக்கிறீர்கள்‌. ஆனால்‌ இதையோ தாங்களே ஊக்கத்துடன்‌ வாங்குகிறீர்கள்‌. அதற்கு நியாயம்‌ செய்யுங்கள்‌. இப்பெண்மணியின்‌ பலகாரங்கள்‌ மட்டும்‌ ஏன்‌ அவ்வளவு இனிமையாக இருக்கின்றன? இது எங்களுக்கு எல்லாம்‌ ஒரு பிரச்சினையாக இருக்கிறது.

பாபா உண்மையிலேயே இவ்வுணவு அசாதாரணமானதுதான்‌. முந்தைய பிறவியில்‌ இவள்‌, ஒரு வியாபாரியின்‌ கொழுத்த பசுவாக அதிக பால்‌ கொடுத்து வந்தாள்‌. பின்னர்‌ அவள்‌ மறைந்து ஒரு தோட்டக்காரன்‌ குடும்பத்திலும்‌, பின்னர்‌ க்ஷத்ரிய குடும்பம்‌ ஒன்றிலும்‌ பிறந்து, ஒரு வணிகனைத்‌ திருமணம்‌ செய்துகொண்டாள்‌. பின்னர்‌ ஒரு பிராமணக்‌ குடும்பத்தில்‌ பிறந்தாள்‌. மிக நீண்ட காலத்துக்குப்‌ பின்‌ நான்‌ அவளைக்‌ காண்கிறேன்‌. அவளது பாத்திரத்திலிருந்து சில அன்புக்‌ கவளங்களை நான்‌ உண்பேன்‌. இவ்வாறு கூறிக்கொண்டே அவளது பலகாரத்துக்குரிய முழுத்‌ தீர்ப்பையும்‌ வழங்கி, தமது வாய்‌, கை முதலியவற்றைக்‌ கழுவிக்கொண்டு மனநிறைவின்‌ அறிகுறியாகச்‌ ஏப்பம்‌ விட்டுத்‌ தமது இருக்கையில்‌ அமர்ந்தார்‌.

பின்னர்‌ அவள்‌ வணங்கி அவர்‌ கால்களைப்‌ பிடித்துவிடத்‌ தொடங்கினாள்‌. பாபா அவளுடன்‌ பேசத்‌ தொடங்கி தம்‌ கால்களைப்‌ பிடித்துவிட்டுக் கொண்டிருந்த அவளது கையை ஆதரவாகப்‌ பிடித்துவிடத்‌ தொடங்கினார்‌. இந்த பரஸ்பர சேவையைக்‌ கண்டுவிட்டு ஷாமா வேடிக்கை செய்ய ஆரம்பித்தார்‌. “இது நன்றாக இருக்கிறது. கடவுளும்‌ - பக்தையும்‌ ஒருவருக்கொருவர்‌ சேவை செய்து கொள்வதைக்‌ காண்பது அற்புதக்‌ காட்சியாகும்‌” என்றார்‌. அவளது விசுவாசமான சேவையைக்‌ கண்டு பாபா அவளை, மெதுவான, மிருதுவான, அற்புதமான குரலில்‌ 'ராஜாராமா..! ராஜாராமா..!' என்று அப்போதிலிருந்து எப்போதும்‌ ஸ்மரிக்கும்படியாகக்‌ கூறி “இதை நீ செய்துவந்தால்‌, உனது வாழ்க்கையின்‌ நோக்கத்தை எய்துவாய்‌. உனது மனம்‌ சாந்தி பெற்று பெருமளவு நீ பயனடைவாய்‌” என்றார்‌. ஆன்மிக விஷயங்களைப்‌ பற்றிப்‌ பழக்கமில்லாதவர்களுக்கு இது ஒரு சாதாரண விஷயமாகத்‌ தோன்றும்‌. உண்மையில்‌ அது அவ்வாறில்லை. ‘சக்தி-பாத்‌’ என்றழைக்கப்படும்‌ குருவின்‌ சக்தியை சீடனுக்கு மாற்றிவிடுவதாகும்‌. பாபாவின்‌ மொழிகள்‌ எவ்வளவு வல்லமை வாய்ந்தவைகளாகவும்‌, பலனுள்ளவையாகவும்‌ இருக்கின்றன. ஒரே வினாடியில்‌ அவைகள்‌ அவளது உள்ளத்தைத்‌ துளைத்து அங்கே இடம்‌ பிடித்துக்கொண்டன.

குருவுக்கும்‌, சீடனுக்கும்‌ இருக்கவேண்டிய உறவுத்‌ தன்மையைப்‌ பற்றி இந்நிகழ்ச்சி நமக்கு விளக்குகிறது. இருவரும்‌ ஒருவருக்கொருவர்‌ அன்பு கூர்ந்து சேவை செய்யவேண்டும்‌. அவர்களிடையே எவ்விதப்‌ பாகுபாடும்‌, வித்தியாசமும்‌ இல்லை. இருவரும்‌ ஒருவரே. ஒருவரில்லாமல்‌ மற்றவர்‌ வாழ முடியாது. சீடன்‌ குருவின்‌ பாதங்களில்‌ தனது தலையை வைப்பது புறத்தோற்றமே. உண்மையில்‌ அந்தரங்கமாக அவர்கள்‌ ஒன்றேயாம்‌. அவர்களிடையே எவ்விதப்‌ பாகுபாட்டையும்‌ காண்பவன்‌ இன்னும்‌ பக்குவமடையாதவன்‌, ஒழுங்கற்றவன்‌.

ஸ்ரீ சாயியைப்‌ பணிக

அனைவர்க்கும்‌ சாந்தி நிலவட்டும்‌