Ads

அத்தியாயம் - 34 - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்அத்தியாயம்‌ - 34

உதியின்‌ பெருமை (தொடர்ச்சி)

(1) டாக்டரின்‌ சகோதரியின்‌ மகன்‌, (2) டாக்டர்‌ பிள்ளை, (3) ஷாமாவின்‌ மைத்தூனி, (4) ஈரானியப்‌ பெண்‌, (5) ஹர்தா கனவான்‌, (6) பம்பாய்ப்‌ பெண்மணி.

உதியின்‌ பெருமை என்னும்‌ பொருளைப்‌ பற்றி இந்த அத்தியாயம்‌ தொடர்கிறது. உதியை இட்டுக்‌ கொள்வதால்‌ மிகுந்த பலனளித்த விஷயங்களைப்‌ பற்றிக்‌ கூறுகிறது.

டாக்டரின்‌ சகோதரியின்‌ மகன்‌

மாலேகாவனில்‌ (நாசிக்‌ ஜில்லா) ஒரு டாக்டர்‌ இருந்தார்‌. (படித்துப்‌ பட்டம்‌ பெற்றவர்‌). அவரின்‌ சகோதரியின்‌ மகன்‌ குணமாக்க இயலாத எலும்புருக்கி நோய்க்கட்டியால்‌ (Tubercular bone abcess) துன்பப்பட்டான்‌. டாக்டர்‌ தாமும்‌, அவரின்‌ சகோதரர்களும்‌ மற்றும்‌ மருத்துவ நிபுணர்களும்‌ எல்லாவிதமான சிகிச்சைகளையும்‌, அறுவை சிகிச்சையும்‌ கூட முயன்று பார்த்தனர்‌. குணம்‌ என்பதே இல்லை. அச்சிறுவனின்‌ துன்பத்துக்கும்‌ ஒரு முடிவில்லை. நண்பர்களும்‌, உறவினர்களும்‌ அந்த சிறுவனின்‌ பெற்றோர்களிடம்‌ தெய்வீக உதவியைக்‌ கோரும்படியும்‌, குணமாக்க இயலாத வியாதிகளையெல்லாம்‌ தமது வெறும்‌ கடைக்கண்‌ பார்வையினால்‌ மட்டுமே குணமாக்கிவிடும்‌ சாயிபாபாவிடம்‌ முயற்சிக்கும்படியும்‌ அறிவுறுத்தினர்‌. எனவே பெற்றோர்கள்‌ ஷீர்டிக்கு வந்தனர்‌. பாபாவின்‌ முன்னர்‌ வைத்துப்‌ பணிவுடனும்‌, மரியாதையுடனும்‌ வேண்டினர்‌. தங்கள்‌ பையனை காக்கும்படி மன்றாடிப்‌ பிரார்த்தித்தனர்‌. கருணையுள்ள பாபா அவர்களுக்கு ஆறுதலளித்து, “இம்மசூதியை அடைக்கலம்‌ புகுவோர்‌ இந்தப்‌ பிறப்பிலும்‌, காலத்தின்‌ முடிவு வரையிலும்‌ எதைக்‌ குறித்தும்‌ கஷ்டமே படமாட்டார்கள்‌. இப்போது கவலையற்றிருங்கள்‌. உதியை நோய்‌ கட்டியின்‌ மீது தடவுங்கள்‌. ஒரு வாரத்திற்குள்‌ அவன்‌ குணமடைவான்‌. கடவுளை நம்பு. இது மசூதியல்ல. த்வாரகாமாயி, இவ்விடத்தில்‌ காலடி வைப்பவன்‌ துரிதமாக உடல்நலத்தையும்‌, மகிழ்ச்சியையும்‌ பெறுவான்‌. அவனுடைய தொல்லைகள்‌ எல்லாம்‌ ஒரு முடிவுக்கு வந்துவிடும்‌” என்றார்‌. பையன்‌ பாபாவின்‌ முன்னர்‌ உட்கார வைக்கப்பட்டான்‌. நலிவுற்ற பகுதியின்‌ மீது பாபா தமது கையை வைத்துத்‌ தடவி அவன்‌ மீது தமது அன்புப்‌ பார்வையைச்‌ செலுத்தினார்‌. பையன்‌ மகிழ்ச்சியடைந்தான்‌. உதியை தடவிய பின்னர்‌ அவன்‌ குணமடையத்‌ தொடங்கினான்‌. சில நாட்களுக்குப்‌ பின்னர்‌ பூரண ஆரோக்கியமானான்‌. பின்னர்‌ பாபா உதியினாலும்‌, அருட்பார்வையினாலும்‌ குணப்படுத்தியதற்கு பாபாவுக்கு நன்றி செலுத்திவிட்டுப்‌ பெற்றோர்‌ ஷீர்டியை விட்டுப்‌ புறப்பட்டனர்‌.

இதையறிந்த அப்பையனின்‌ மாமாவாகிய டாக்டர்‌ ஆச்சரியமடைந்தார்‌. தாம்‌ ஏதோ விஷயமாகப்‌ பம்பாய்க்குப்‌ போகும்‌ வழியில்‌ ஷீர்டிக்குப்‌ போக விரும்பினார்‌. ஆனால்‌ மாலேகாவனிலும்‌, மன்மாடிலும்‌ அவரிடம்‌ சிலர்‌ பாபாவுக்கு எதிராகப்‌ பேசி அவரது செவிகளில்‌ விஷத்தைப்‌ பாய்ச்சினர்‌. எனவே ஷீர்டிக்குத்‌ தாம்‌ விஜயம்‌ செய்ய இருந்த எண்ணத்தை விட்டுவிட்டு பம்பாய்க்கு நேரடியாகச்‌ சென்றுவிட்டார்‌. தமது விடுமுறையின்‌ மீதமுள்ள நாட்களை அவர்‌ அலிபாகில்‌ கழிக்க விரும்பினார்‌. ஆனால்‌ பம்பாயில்‌ இருந்தபோது மூன்று தொடர்ந்த இரவுகளிலும்‌ “இன்னும்‌ நீ என்னை நம்ப மறுக்கிறாயா?” என்ற ஒரு குரல்‌ எழுந்தது.

பின்னர்‌ டாக்டர்‌ தமது மனதை மாற்றிக்கொண்டு ஷீர்டிக்குச்‌ செல்ல தீர்மானித்தார்‌. பம்பாயில்‌ ஒட்டு ஜுரம்‌ வந்த ஒரு நோயாளியை அவர்‌ கவனிக்க வேண்டியிருந்தது. அது விரைவில்‌ குணமடையும்‌ அறிகுறி எதையும்‌ காணோம்‌. எனவே தமது ஷீர்டி விஜயம்‌ ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது என்று அவர்‌ நினைத்தார்‌. எனினும்‌ தமது மனதில்‌ ஒரு சிறிய பரீட்சை வைத்துக்கொண்டார்‌! நோயாளி இன்று குணமடைந்தால்‌ நான்‌ நாளை ஷீர்டி விஜயம்‌ செய்வேன்‌ என்று கூறிக்கொண்டார்‌. ஆச்சர்யம்‌ என்னவெனில்‌ அவர்‌ அத்தீர்மானம்‌ எடுத்த அக்கணந்தொட்டே ஜுரம்‌ நீங்கத்‌ தொடங்கி உடல்‌ சாதாரண நிலைக்கு வந்துவிட்டது.

பின்னர்‌ தமது தீர்மானத்தின்படி அவர்‌ ஷீர்டிக்குச்‌ சென்றார்‌. பாபாவின்‌ தரிசனத்தைப்‌ பெற்று அவரை வீழ்ந்துபணிந்தார்‌. அவர்‌ தமக்கு அடியவராகும்‌ வண்ணம்‌ பாபா அவருக்கு அத்தகைய அனுபவங்களை அளித்தார்‌. அவர்‌ அங்கு நான்கு நாட்கள்‌ தங்கியிருந்தார்‌. பாபாவின்‌ உதி ஆசீர்வாதங்களுடன்‌ வீட்டுக்குத்‌ திரும்பினார்‌. பதினைந்தே நாட்களுக்குள்‌ பீஜப்பூருக்கு உத்தியோக உயர்வில்‌ மாற்றப்பட்டார்‌. அவருடைய சகோதரி மகன்‌ விஷயம்‌ பாபாவைப்‌ பார்ப்பதற்கு அவருக்கு ஒரு சந்தர்ப்பமளித்தது. இந்த விஷயம்‌ ஞானியின்‌ பாத கமலங்களின்‌ மீது அசைக்க இயலாத பக்தியை அவரிடம்‌ தோற்றுவிப்பதற்குக்‌ காரணமாய்‌ இருந்தது.

டாக்டர்‌ பிள்ளை

டாக்டர்‌ பிள்ளை என்பவர்‌ பாபாவின்‌ மிக நெருங்கிய பக்தர்‌. பாபா அவரை மிகவும்‌ விரும்பினார்‌. எப்போதும்‌ அவரை பாவ்‌ (சகோதரன்‌) என்று அழைத்தார்‌. பாபா அவருடன்‌ அடிக்கடி பேசினார்‌. எல்லா விஷயங்களிலும்‌ அவரைக்‌ கலந்தாலோசித்தார்‌. அவர்‌ எப்போதும்‌ தமதருகில்‌ இருக்கவும்‌ விரும்பினார்‌. இந்த பிள்ளை ஒருமுறை நரம்புச்‌ சிலந்தி நோய்வந்து மிகவும்‌ அவதியுற்றார்‌. அவர்‌ காகா சாஹேப்‌ தீக்ஷித்திடம்‌, “இந்த வலி உயிர்வதையாகவும்‌, தாங்க முடியாததாகவும்‌ இருக்கிறது. அதைவிடச்‌ சாவையே விரும்புகிறேன்‌. முன்‌ ஊழ்வினையால்‌ இவ்வலி நேர்ந்தது என்பது எனக்குத்‌ தெரியும்‌. ஆனால்‌ பாபாவிடம்‌ சென்று வலியை நிறுத்தும்படியும்‌, எனது முன்‌ ஊழ்வினையை வரப்போகும்‌ பத்து பிறப்புகளுக்கும்‌ மாற்றும்படியும்‌ கூறுங்கள்‌” என்றார்‌. தீக்ஷித்‌ பாபாவிடம்‌ சென்று அவரின்‌ வேண்டுகோளைத்‌ தெரிவித்தார்‌. பாபா அவரது வேண்டுகோளைக்‌ கேட்டு மனமிரங்கி தீக்ஷித்திடம்‌ “பயப்படாதிருக்கும்படி அவரிடம்‌ கூறுங்கள்‌. ஏன்‌ அவர்‌ பத்து ஜன்மங்கள்‌ கஷ்டப்படவேண்டும்‌. பத்தே நாட்களில்‌ அவர்‌ தொல்லைகளையும்‌, முன்னைய ஊழ்வினைகளையும்‌ உழைத்து நிறைவேற்ற முடியும்‌. அவருக்கு இகபர நலன்களை அளிக்க நான்‌ இவ்விடத்தில்‌ இருக்கும்போது அவர்‌ ஏன்‌ சாவதற்கு வேண்டிக்கொள்ள வேண்டும்‌?! யார்‌ முதுகிலாவது அவரை இவ்விடம்‌ கொண்டுவாருங்கள்‌. நாம்‌ வேலை செய்து அவர்தம்‌ தொல்லைகளை அடியோடு களைந்துவிடலாம்‌” என்றார்‌.

டாக்டர்‌ அந்நிலையில்‌ கொண்டுவரப்பட்டார்‌. பாபாவின்‌ வலப்புறத்தில்‌ ஃபக்கிர்‌ பாபா எப்போதும்‌ அமரும்‌ இடத்தில்‌ அமரச்‌ செய்விக்கப்பட்டார்‌. பாபா தமது திண்டையே அவருக்கு அளித்து, “இங்கேயே அமைதியாக படுத்து ஆசுவாசப்படுத்திக்கொள்‌. உண்மையான சிகிச்சை யாதெனில்‌ முன்வினைகளின்‌ பலனை அனுபவித்துத்‌ தீர்ப்பதேயாம்‌. நமது கர்மங்களின்‌ விளைவே இன்ப - துன்பங்கள்‌. எனவே, உனக்கு நேரிடும்‌ அனைத்தையும்‌ பொறுத்துக்கொள்‌. அல்லாவே தீர்ப்பவர்‌. காப்பவர்‌. அவரையே ஏப்போதும்‌ நினை. அவர்‌ உன்னைக்‌ கவனித்துக்கொள்வார்‌. உனது உடலால்‌, உள்ளத்தால்‌, செல்வத்தால்‌, வாக்கால்‌ அவரை சரணடை. அதாவது முழுவதுமாக, பின்னர்‌ அவர்‌ என்ன செய்கிறார்‌ என்பதை கவனி!” என்றார்‌. நானா சாஹேப்‌ ஒரு பாண்டேஜ்‌ போட்டிருப்பதாகவும்‌, ஆயினும்‌ அவர்‌ எவ்வித நிவாரணத்தையும்‌ உணரவில்லை என்றும்‌ டாக்டர்‌ பிள்ளை பதில்‌ கூறினார்‌. “நானா ஒரு மடையன்‌?” என்றார்‌ பாபா. “பாண்டேஜை எடுத்து விடு. இல்லாவிடில்‌ செத்துவிடுவாய்‌. இப்போது ஒரு காக்கை வந்து உன்னைக்‌ கொத்தும்‌. அதன்பின்‌ நீ குணமடைவாய்‌” என்றார்‌. இவ்வுரையாடல்‌ நிகழ்ந்து கொண்டிருக்கும்போது எப்போதும்‌ விளக்குகளை ஒழுங்குபடுத்தி மசூதியைச்‌ சுத்தப்படுத்தும்‌ அப்துல்‌ என்பவர்‌ வந்தார்‌. அவர்‌ தனது சீர்செய்யும்‌ வேலையை கவனித்துக்கொண்டிருக்கையில்‌ தற்செயலாக அவரது பாதம்‌ டாக்டர்‌ பிள்ளையின்‌ நீட்டப்பட்ட கால்களின்‌ மீது பட்டுவிட்டது (அதாவது மிதித்து விட்டார்‌). கால்‌ ஏற்கனவே வீங்கியிருந்தது. அப்துலின்‌ கால்வேறு மிதித்துவிட்டதால்‌ ஏழு சிலந்திப்‌ புழுக்களும்‌ (Guinea Worms) வெளியே தள்ளப்பட்டன. வலி தாங்க முடியாமல்‌ டாக்டர்‌ பிள்ளை பெருங்கூச்சலில்‌ அலறினார்‌. சில சமயத்தில்‌ அவர்‌ அமைதியடைந்து மாறிமாறிப்‌ பாடவும்‌, அழவும்‌ தொடங்கினார்‌. பாபா அப்போது, “பார்‌, நமது சகோதரன்‌ இப்போது செளக்கியமாகிப்‌ பாடிக்கொண்டிருக்கிறார்‌!'” என்றார்‌. அப்போது பிள்ளை “காக்கை எப்போது வரும்‌? கொத்தும்‌” என்று கேட்டார்‌. பாபா “காக்கையை நீ காணவில்லையா? அவன்‌ மீண்டும்‌ வரமாட்டான்‌. அப்துல்தான்‌ காக்கை என்றார்‌. இப்போது வாதாவுக்குப்‌ போய்‌ ஓய்வெடுத்துக்கொள்‌ விரைவில்‌ நீ குணமடைவாய்‌” என்றார்‌.

உதியைத்‌ தடவியும்‌ அதைத்‌ தண்ணீருடன்‌ உட்கொண்டும்‌ வேறு எவ்வித சிகிச்சையும்‌, மருந்தும்‌ இல்லாமலேயே பாபா முன்னரே கூறியபடி பத்தே நாட்களில்‌ வியாதி பூரண குணமாக்கப்பட்டது.

ஷாமாவின்‌ மைத்துனி

ஷாமாவின்‌ தம்பியான பாபாஜி ஸாவ்லிவிஹீர்‌ கிராமத்துக்கு அருகில்‌ தங்கியிருந்தார்‌. ஒருமுறை அவர்‌ மனைவி கட்டிகளுள்ள பிளேக்‌ வியாதியால்‌ தாக்கப்பட்டாள்‌. அவளுக்கு அதிகமான ஜுரமும்‌, அடிவயிற்றில்‌ இரு கட்டிகளும்‌ ஏற்பட்டன. பாபாஜி ஷீர்டிக்கு ஷாமாவிடம்‌ ஓடிவந்து உதவி செய்யும்படிக்‌ கூறினார்‌. ஷாமா பீதி அடைந்தார்‌. ஆனால்‌ தமது வழக்கப்படி பாபாவிடம்‌ சென்று அவர்‌ திருமுன்‌ வீழ்ந்துபணிந்து அவருடைய உதவியைக்‌ கோரி வியாதியைக்‌ குணமாக்கும்படிக்‌ கேட்டுக்கொண்டார்‌. தன்‌ தம்பியின்‌ வீட்டிற்குப்‌ போகவும்‌ அவருடைய உத்தரவை வேண்டி நின்றார்‌. பாபா “அங்கே இந்தப்‌ பின்னிரவு நேரத்தில்‌ செல்லவேண்டாம்‌. அவளுக்கு உதியை அனுப்புக. ஜுரத்தைப்‌ பற்றியும்‌, கட்டியைப்‌ பற்றியும்‌, ஏன்‌ கவலைப்பட வேண்டும்‌? கடவுளே நமக்குத்‌ தந்தையும்‌ எஜமானருமாவார்‌. எளிதில்‌ அவள்‌ குணமடைவாள்‌. இப்போது போகாதே. நாளை காலையில்‌ போய்‌ உடனே திரும்பிவிடு” என்றார்‌.

பாபாவின்‌ உதியில்‌ ஷாமாவுக்குப்‌ பூரண நம்பிக்கை உண்டு. அது பாபாஜியிடம்‌ அனுப்பப்பட்டது. கட்டிகளின்‌ மீது அது தடவப்பட்டது. சிறிது தண்ணீரில்‌ கரைக்கப்பட்டு குடிக்கக்‌ கொடுக்கப்பட்டது. அதை உட்கொண்டதுதான்‌ தாமதம்‌, பெருமளவில்‌ வேர்த்துக்கொட்டி ஜுரம்‌ விட்டது. நோயாளிக்கு நல்ல தூக்கம்‌ கிடைத்தது. அடுத்தநாள்‌ காலை பாபாஜி தமது மனைவியின்‌ உடல்நிலை தேறிவிட்டதையும்‌ ஜுரம்‌, கட்டிகள்‌ நீங்கி புதுவலுவூட்டப்‌ பெற்றதையும்‌ கண்டு அதிசயப்பட்டார்‌. ஷாமா அவ்விடத்திற்கு அடுத்தநாள்‌ சென்றபோது அப்பெண்மணி அடுப்பருகில்‌ அமர்ந்து தேநீர்‌ (டீ) தயாரித்துக்கொண்டிருப்பதைக்‌ கண்டு ஆச்சரியப்பட்டார்‌. தம்பியைக்‌ கேட்டதும்‌ பாபாவின்‌ உதி அவளை முழுவதுமாக ஒரே இரவில்‌ குணமாக்கிவிட்டது என்று கூறினார்‌. “காலையில்‌ சென்று உடனே திரும்பு” என்னும்‌ பாபாவின்‌ மொழிகளிலுள்ள குறிப்பு நுட்பத்தை அப்போது ஷாமா புரிந்துகொண்டார்‌.

தேநீர்‌ உட்கொண்டதும்‌ ஷாமா திரும்பினார்‌. பாபாவை வணங்கிய பின்‌, “தேவா! தங்களது திருவிளையாடல்தான்‌ என்ன? தாங்கள்‌ முதலில்‌ புயலை எழுப்பி எங்களை நிலைகுலையச்‌ செய்கிறீர்கள்‌. பின்னர்‌ அதை அமைதிப்படுத்தி ஆசுவாசப்படுத்துகிறீர்கள்‌”? என்றார்‌. பாபா “நடவடிக்கைகளின்‌ வழி விளங்காப்‌ புதிர்நிலையாக உள்ளது. நான்‌ எதையும்‌ செய்யவில்லையாயினும்‌ ஊழ்வினையின்‌ காரணமாக நிகழும்‌ செயல்களுக்கெல்லாம்‌ அவர்கள்‌ என்னைப்‌ பொறுப்பாளியாக்குகிறார்கள்‌. நான்‌ அவர்களின்‌ சாட்சி மாத்திரமே. கடவுள்‌ ஒருவரே ஒரே செயலாளர்‌. அகத்தாண்டுவிப்பாளர்‌. மேலும்‌ அவர்‌ மிகவும்‌ கருணையுள்ளவர்‌. நான்‌ கடவுளோ, பரமாத்மாவோ அல்ல. அவரின்‌ பணிவுள்ள ஒரு வேலைக்காரனும்‌ அவரை அடிக்கடி நினைவில்‌ இருத்திக்கொள்ளுபவனும்‌ மட்டுமே. எவனொருவன்‌ தனது அஹங்காரத்தை ஒதுக்கித்தள்ளி அவருக்கு நன்றி செலுத்தி அவரை முழுமையாக நம்புகிறானோ அவனது பந்தங்கள்‌ அறுபட்டுப்‌ போகின்றன. அவன்‌ முக்தியடைகிறான்‌” என்றார்‌.

ஈரானியரின்‌ பெண்‌

ஒரு ஈரானிய கனவானுடைய அனுபவத்தை இப்போது படியுங்கள்‌. அவரது சிறு மகளுக்கு ஒவ்வொரு மணிக்கும்‌ வலிப்பு வந்தது. அப்போது அவள்‌ பேசும்‌ சக்தியை இழந்தாள்‌. அங்கங்கள்‌ குறுகி உணர்வின்றிக்‌ கீழே சாய்ந்தாள்‌. எந்த சிகிச்சையும்‌ அவளுக்கு எவ்வித குணத்தையும்‌ அளிக்கவில்லை.

பாபாவின்‌ உதியைச்‌ சில நண்பர்கள்‌ அவளது தந்தைக்கு சிபாரிசுசெய்து அதை பம்பாயில்‌ விலேபார்லேயில்‌ உள்ள காகா சாஹேப்‌ தீக்ஷித்திடம்‌ இருந்து பெறும்படிக்‌ கூறினார்கள்‌. பின்னர்‌ ஈரானிய கனவான்‌ உதியைப்பெற்றுத்‌ தினந்தோறும்‌ அதை நீரில்‌ கலந்து தன்‌ மகளுக்குக்‌ கொடுத்தார்‌. ஆரம்பத்தில்‌ மணிக்கு ஒருமுறை வந்துகொண்டிருந்த வலிப்பு, ஏழு மணிக்கு ஒருமுறை வரத்தொடங்கியது. அதற்குச்‌ சில தினங்களுக்குப்‌ பின்‌ அவள்‌ முழுமையும்‌ குணமடைந்தாள்‌.

ஹர்தா கனவான்‌

ஹர்தாவைச்‌ சேர்ந்த முதியவர்‌ ஒருவர்‌ தமது மூத்திரப்‌ பையிலுள்ள கல்‌ ஒன்றால்‌ கஷ்டப்பட்டார்‌. அத்தகைய கற்களெல்லாம்‌ பொதுவாக ரணசிகிச்சை மூலமாகவே நீக்கப்படுகின்றன. மக்கள்‌ அவரையும்‌ ஒரு அறுவை சிகிச்சை செய்துகொள்ளும்படிக்‌ கூறினர்‌. அவர்‌ முதுமையும்‌, தளர்ச்சியும்‌ உடையவராயிருந்தார்‌. அவருக்கு மனோதிடமும்‌ தேவையாயிருந்தது. அறுவை சிகிச்சைக்குத்‌ தன்னை உட்படுத்திக்கொள்வதை அவரால்‌ நினைக்க இயலவில்லை. அவரது கஷ்டம்‌ மற்றொரு வகையில்‌ தீர இருந்தது.

அந்த நகரத்தின்‌ இனாம்தார்‌ அந்நேரத்தில்‌ அவ்விடத்துக்கு வரும்படியாக நிகழ்ந்தது. அவர்‌ பாபாவின்‌ அடியவர்களில்‌ ஒருவர்‌. எப்போதும்‌ தம்மிடம்‌ உதி கையிருப்பை வைத்திருந்தார்‌. சிலரின்‌ சிபாரிசின்‌ பேரில்‌ அம்முதியவரின்‌ மகன்‌ உதியை சிறிது அவரிடமிருந்து பெற்று தண்ணீரில்‌ அதைக்‌ கலக்கி தனது கிழத்தந்தைக்கு உட்கொள்ளக்‌ கொடுத்தான்‌. ஐந்தே நிமிடத்திற்குள்‌ உதி உடம்பில்‌ சார்ந்து, கல்‌ கரைந்து சிறுநீர்‌ வழியாக வெளிவந்துவிட்டது. முதியவரும்‌ விரைவில்‌ குணம்‌ அடைந்தார்‌.

பம்பாய்‌ பெண்மணி

பம்பாயில்‌, காயஸ்த பிரபு ஜாதியைச்‌ சேர்ந்த ஒரு பெண்மணி, பிரசவத்தின்போதெல்லாம்‌ கடும்‌ வேதனையடைந்தாள்‌. ஒவ்வொருமுறை தான்‌ கர்ப்பமானதும்‌ என்ன செய்வதென்று தெரியாமல்‌ அவள்‌ பீதியடைந்தாள்‌. பாபாவின்‌ ஒரு பக்தரான கல்யாணைச்‌ சேர்ந்த ராமமாருதி என்பார்‌ சுகப்பிரசவத்துக்காக அவளை ஷீர்டி அழைத்துச்‌ செல்லும்படி அவளது கணவனுக்கு அறிவுரைத்தார்‌. மீண்டும்‌ அவள்‌ கருவுற்றபோது கணவனும்‌ மனைவியும்‌ ஷீர்டிக்குச்‌ சென்று அங்கு சில மாதங்கள்‌ தங்கி பாபாவை வணங்கி அவர்தம்‌ கூட்டுறவால்‌ ஆய பலன்களையெல்லாம்‌ அடைந்தனர்‌.

சிலநாட்களுக்குப்பின்‌ பிரசவ நேரம்‌ வந்தது. வழக்கம்போல்‌ கருப்பையிலிருந்து வரும்‌ வழியில்‌ தடங்கல்‌ ஏற்பட்டது. பிரசவ வேதனையை அவள்‌ அனுபவித்தாள்‌. என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனால்‌ பாபாவை நோக்கி நிவாரணத்திற்குப்‌ பிரார்த்தனை செய்தாள்‌. இத்தருணத்தில்‌ பக்கத்தில்‌ குடியிருந்த ஒரு பெண்மணி வந்து சேர்ந்தாள்‌. பாபாவைத்‌ தொழுது பிரார்த்தனை செய்தபின்‌ உதிக்‌ கலவையை பருகுவதற்கு அவளிடம்‌ கொடுத்தாள்‌. ஐந்தே நிமிடங்களில்‌ அப்பெண்‌ பத்திரமாகவும்‌, வலியேதுமின்றியும்‌ பிரசவித்தாள்‌. பிறந்த குழந்தை அதன்‌ தலைவிதிப்படி இறந்தே பிறந்தது. ஆனால்‌ தாயோ கவலையினின்றும்‌, வலியினின்றும்‌ நீங்கியவளாய்‌ பத்திரமான பிரசவத்துக்காகப்‌ பாபாவுக்கு நன்றிசெலுத்தி எப்போதும்‌ அவர்பால்‌ நன்றியுள்ளவளாய்‌ இருந்தாள்‌.

ஸ்ரீ சாயியைப்‌ பணிக

அனைவர்க்கும்‌ சாந்தி நிலவட்டும்‌