Ads

அத்தியாயம் - 43 & 44 - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்



அத்தியாயம்‌ - 43 & 44

பாபா மஹா சமாதியடைதல்‌ (தொடர்ச்சி)

ஏற்பாடுகள்‌ - சமாதி மந்திர்‌ (கோவில்‌) - செங்கல்‌ உடைதல்‌ - 72 மணிநேர சமாதி - ஜோகின்‌ துறவு - பாபாவின்‌ அமுத மொழிகள்‌.

அத்தியாயம்‌ 43ம்‌ 44ம்‌ பாபா மஹாசமாதியடையும்‌ நிகழ்ச்சி பற்றியே குறிப்பிடுவதால்‌ அவைகள்‌ ஒன்றாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

முன்னேற்பாடு

ஒருவன்‌ மரணத்‌ தறுவாயில்‌ இருக்கும்போது அவனது போகும்வழி இயற்கையாகவும்‌, எளிதாகவும்‌ இருக்கும்பொருட்டு, உலக விஷயங்களிலிருந்து அவன்‌ மனதை மீட்டு ஆன்மிக விஷயங்களில்‌ நிலைத்திருக்கச்செய்யும்‌ எண்ணத்துடன்‌ சில மத சம்பந்தமான நூல்கள்‌ பாராயணம்‌ செய்யப்படுவது ஹிந்துக்களுக்கிடையே உள்ள பொதுவான வழக்கமாகும்‌. ஒரு அந்தண ரிஷியின்‌ புதல்வனால்‌ பரீக்ஷித்து மஹாராஜன்‌ சாபமிடப்பட்டு மரணத்‌ தறுவாயில்‌ இருந்த நாட்களில்‌ மாபெரும்‌ ரிஷியான சுகர்‌ புகழ்பெற்ற பாகவத புராணத்தை (சப்தாஹம்‌) அவருக்கு விளக்கினார்‌. இப்பழக்கம்‌ இன்றளவும்‌ பின்பற்றப்பட்டு பகவத்கீதை, ஸ்ரீமத்‌ பாகவதம்‌ இன்னும்‌ பல புனிதநூல்களும்‌ மரணத்தறுவாயில்‌ இருப்பவர்களிடம்‌ வாசிக்கப்படுகிறது. கடவுளின்‌ அவதாரமான பாபாவுக்கு அத்தகைய உதவி எதுவும்‌ தேவையிருக்கவில்லை. ஆனால்‌, மக்களுக்கு வழிகாட்டும்‌ பொருட்டாக இவ்வழக்கத்தை அவர்‌ பின்பற்றினார்‌. தாம்‌ விரைவில்‌ காலமடையப்‌ போவதை அறிந்த அவர்‌, வஸே என்பாரை தம்மிடம்‌ ராமவிஜயத்தைப்‌ படிக்கும்படிக்‌ கட்டளை இட்டார்‌. வஸே வாரமொருமுறை அதைப்படித்தார்‌. பின்னர்‌ இரவும்‌, பகலும்‌ அதையே படிக்கும்படி பாபா கேட்டுக்கொண்டார்‌. அவர்‌ மூன்றே நாட்களில்‌ இரண்டாவது பாராயணத்தை முடித்தார்‌. இவ்வாறாக பதினோரு நாட்கள்‌ சென்றன. பின்னர்‌ மீண்டும்‌ மூன்று நாட்கள்‌ படித்துக்‌ களைப்படைந்துவிட்டார்‌. எனவே பாபா அவரைப்போக அனுமதித்துவிட்டு தாமே அமைதியாக இருந்துகொண்டார்‌. தமது ஆத்மபோதத்திலேயே மூழ்கினவராய்‌ தமது கடைசி வினாடிக்காகக்‌ காத்திருந்தார்‌.

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னரே தமது காலை சஞ்சாரத்தையும்‌, பிக்ஷ£தனம்‌ பெறச்செல்லும்‌ நியமத்தையும்‌ அவர்‌ நிறுத்திவிட்டு மசூதியிலேயே தங்கிவிட்டார்‌. தமது இறுதி வினாடிவரை உணர்வுடன்‌ இருந்து தமதூ அடியவர்களை மனமுடைய வேண்டாமென்று உபதேசித்துக்கொண்டிருந்தார்‌. தாம்‌ சமாதி அடையவுள்ள சரியான தருணத்தை அவர்‌ ஒருவருக்கும்‌ அறிவிக்கவில்லை. மசூதியில்‌ தினந்தோறும்‌ அவருடன்‌ காகா சாஹேப்‌ தீக்ஷித்தும்‌, பூட்டியும்‌ மதிய உணவு உண்டனர்‌. ஆனால்‌ அன்று (அக்டோபர்‌ 15) ஆரத்திக்குப்‌ பின்னர்‌ பாபா அவர்களை, தங்கள்‌ இருப்பிடங்களுக்குச்‌ சாப்பிடச்‌ செல்லும்படி கூறினார்‌ என்றாலும்‌ லக்ஷ்மிபாய்‌ ஷிண்டே, பாகோஜி ஷிண்டே, பயாஜி, லக்ஷ்மண்‌ பாலா ஷிம்பி, நானா சாஹேப்‌ நிமோண்கர்‌ போன்றவர்கள்‌ அங்கேயே இருந்துகொண்டனர்‌.

ஷாமா கீழே படிகளில்‌ அமர்ந்திருந்தார்‌. லக்ஷ்மிபாய்‌ ஷிண்டேவுக்கு ரூ.9 கொடுத்தபின்பு பாபா தமக்கு மசூதியில்‌ செளகரியமாய்‌ இல்லையென்றும்‌, பூட்டியினுடைய தகடி வாதாவுக்கு (கல்‌ கட்டிடம்‌) எடுத்துச்‌ செல்லப்படவேண்டும்‌ என்றும்‌, அங்கு தாம்‌ நலமுற்றுவிடப்‌ போவதாகவும்‌ கூறினார்‌. இக்கடைசி மொழிகளை உதிர்த்துவிட்டு பயாஜி கோதேயின்‌ மேனியில்‌ சாய்ந்துகொண்டு உயிர்‌ நீத்தார்‌. அவரது மூச்சு நின்றுவிட்டதை பாகோஜி கவனித்து கீழே அமர்ந்திருந்த நானா சாஹேப்‌ நிமோண்கரிடம்‌ கூறினார்‌. நானா சாஹேப்‌ சிறிது தண்ணீர்‌ கொணர்ந்து பாபாவின்‌ வாயில்‌ ஊற்றினார்‌. அது வெளியே வந்துவிட்டது.

பின்னர்‌ அவர்‌ பலமாக “ஓ! தேவா” என்று கதறினார்‌. பாபா சிறிதே தமது கண்களைத்‌ திறந்து “ஆ!” என்று மெல்லிய குரலில்‌ கூறுவதைப்‌ போன்றிருந்தது. ஆனால்‌, பாபா தமது பூத உடலை க்ஷேமமாக நீத்துவிட்டார்‌ என்பது சீக்கிரமாக நிதர்சனமாயிற்று. பாபா காலமான செய்தி ஷீர்டி கிராமத்தில்‌ காட்டுத்தீபோல்‌ பரவியது. ஆண்கள்‌, பெண்கள்‌, குழந்தைகள்‌ யாவரும்‌ மசூதிக்கு ஓடி வந்து இந்த இழப்பின்‌ துயரைப்‌ பல்வேறு விதங்களில்‌ வெளியிட்டனர்‌. சிலர்‌ பலமாகக்‌ கதறினர்‌. சிலர்‌ தெருவில்‌ உருண்டு புரண்டனர்‌. சிலர்‌ மூர்ச்சித்து விழுந்தனர்‌. எல்லோருடைய கண்களிலிருந்தும்‌ தாரை தாரையாக நீர்‌ வழிந்தது. அனைவரும்‌ வருத்தத்தால்‌ பீடிக்கப்பட்டிருந்தனர்‌.

சிலர்‌ சாயிபாபாவின்‌ மொழிகளை நினைவூட்டிக்கொள்ள ஆரம்பித்தனர்‌. வரப்போகும்‌ காலங்களில்‌ தாம்‌ ஒரு எட்டுவயது பையனாகத்‌ தோன்றப்‌ போவதாக மஹராஜ்‌ (சாயிபாபா) தம்‌ பக்தர்களிடம்‌ தெரிவித்ததாகச்‌ சிலர்‌ கூறினர்‌. இவைகள்‌ ஞானியின்‌ மொழிகள்‌. எனவே, இது குறித்து யாரும்‌ ஐயுறத்‌ தேவையில்லை ஏனெனில்‌ கிருஷ்ணாவதாரத்தில்‌ சக்ரபாணி (மஹாவிஷ்ணு) இதே காரியத்தைத்தான்‌ நிகழ்த்தினார்‌. சிறையிலிருந்த தேவகியின்முன்‌ கிருஷ்ணர்‌ ஒளி பொருந்திய நிறத்தினராகவும்‌, தமது நான்கு கரங்களிலும்‌ ஆயுதங்கள்‌ தரித்த எட்டுவயது பையனாகவும்‌ தோற்றமளித்தார்‌.

அந்த அவதாரத்தின்போது கிருஷ்ணர்‌ பூமியின்‌ பாரத்தைக்‌ குறைத்தார்‌. இந்த அவதாரம்‌ தமது பக்தர்களின்‌ முன்னேற்றத்திற்கானது. எனவே ஐயத்துக்குரிய காரணம்‌ எங்கேயுள்ளது? ஞானிகளின்‌ வழியோ உண்மையான அறிவெல்லை கடந்தது. சாயிபாபாவுக்குத்‌ தமது பக்தர்களுடன்‌ உண்டான தொடர்பு இந்த ஒரு தலைமுறைக்குரியது மட்டுமன்று அது கடந்த 72 ஜென்மங்களின்‌ தொடர்பாகும்‌. இத்தகைய அன்புப்‌ பிணைப்புக்களை உருவாக்குதற்‌ பொருட்டே மஹராஜ்‌ (சாயிபாபா) திக்விஜயம்‌ செய்யச்‌ சென்றுள்ளார்‌ போலத்தோன்றுகிறது. அவர்‌ மீண்டும்‌ விரைவில்‌ திரும்பி வருவார்‌ என்று அவர்‌ பக்தர்கள்‌ உறுதியான நம்பிக்கை பூண்டுள்ளனர்‌.

பின்னர்‌ பாபாவின்‌ பூதவுடலை எங்ஙனம்‌ அடக்கம்‌ செய்வது என்ற கேள்வி எழுந்தது. சிலர்‌ (முஸ்லிம்கள்‌) பாபாவின்‌ உடல்‌ திறந்த வெளியில்‌ அடக்கம்‌ செய்யப்பட்டு அதன்‌ மேல்‌ ஒரு சமாதி கட்டவேண்டும்‌ என்றனர்‌. குஷால்சந்தும்‌, அமீர்‌ ஷக்கரும்‌ இந்தக்‌ கருத்தையே கொண்டிருந்தனர்‌. ஆனால்‌ ராமச்சந்திர பாடீல்‌ என்னும்‌ கிராம அதிகாரி உறுதியான தீர்மானமான குரலில்‌ கிராம பரிஷத்தை நோக்கி, “எங்களுக்கு உங்கள்‌ கருத்து சம்மதமில்லை. வாதாவைத்‌ தவிர வேறு எவ்விடத்திலும்‌ பாபாவின்‌ உடல்‌ அடக்கம்‌ செய்யப்படக்கூடாது” என்று கூறினார்‌. மக்கள்‌ இந்த விஷயத்தில்‌ கருத்து வேறுபாடுகொண்டு முப்பத்தாறு மணிநேரம்‌ வரை இதைப்பற்றி விவாதித்துக்கொண்டிருந்தனர்‌. புதன்கிழமை காலை பாபா, லக்ஷ்மண்‌ மாமா ஜோஷியின்‌ கனவில்‌ தோன்றி அவரைத்‌ தம்‌ அருகில்‌ அழைத்து, “சீக்கிரம்‌ எழுந்திரு, பாபு சாஹேப்‌ நான்‌ இறந்து விட்டதாக நினைக்கிறார்‌. எனவே அவர்‌ வரமாட்டார்‌. நீ வழிபாட்டை நடத்தி காகட்‌ (காலை) ஆரத்தி செய்‌?” என்றார்‌. லக்ஷ்மண்‌ மாமா, கிராம ஜோசியரும்‌ ஷாமாவின்‌ தாய்‌ மாமனுமாவர்‌. அவர்‌ ஒரு வைதீகப்‌ பிராமணர்‌. பாபாவைக்‌ காலையில்‌ வணங்கிய பின்னர்‌ கிராம தெய்வங்களை வணங்கினார்‌. பாபாவிடம்‌ அவருக்கு மிகுந்த பக்தி உண்டு. இக்கனவுக்குப்‌ பின்னர்‌ பூஜாத்திரவியங்கள்‌ அனைத்துடனும்‌ வந்து மெளல்விகளின்‌ எதிர்ப்பையும்‌ பொருட்படுத்தாது உரிய சம்பிரதாயங்களுடன்‌ பூஜையும்‌, காலை ஆரத்தியும்‌ காண்பித்துச்‌ சென்றுவிட்டார்‌. பின்னர்‌ மத்தியானம்‌ பாபு சாஹேப்‌ ஜோக்‌ மற்றெல்லாருடனும்‌ வந்து வழக்கம்போல்‌ மத்தியான ஆரத்தியைச்‌ செய்தார்‌.

பாபாவின்‌ இறுதி மொழிகளுக்கு கிராம மக்கள்‌ உரிய மதிப்பு கொடுத்து அவர்தம்‌ திருமேனியை வாதாவில்‌ வைக்க முடிவுசெய்து, அதன்‌ நடுப்பகுதியைத்‌ தோண்டத்‌ துவங்கினார்கள்‌. அடுத்த நாள்‌ மாலை ராஹாதாவிலிருந்து சப்‌-இன்ஸ்பெக்டரும்‌ மற்ற இடங்களிலிருந்து மக்களும்‌ வந்து எல்லோரும்‌ கலந்து பேசி அம்முடிவை ஏற்றுக்கொண்டனர்‌. அடுத்த நாள்‌ காலை பம்பாயிலிருந்து அமீர்பாயும்‌, கோபர்காவனிலிருந்து மம்லதாரும்‌ வந்தனர்‌. மக்கள்‌ கருத்து வேறுபாடு கொண்டதாகத்‌ தோன்றியது. சிலர்‌ அவர்‌ உடம்பைத்‌ திறந்தவெளியில்‌ அடக்கம்‌ செய்வதற்கு வற்புறுத்தினர்‌. எனவே மம்லதார்‌ ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி வாதாவை உபயோகப்படுத்தும்‌ தீர்மானம்‌ மற்றதைப்‌ போல்‌ இரண்டு பங்கு ஓட்டுகள்‌ பெற்றதைக்‌ கண்டார்‌.

ஆயினும்‌ அவர்‌ கலெக்டரிடம்‌ இதுபற்றி குறிப்பிட விரும்பியதையொட்டி காகா சாஹேப்‌ தீக்ஷித்‌ அஹமத்நகருக்குப்‌ புறப்பட ஆயத்தமானார்‌. இத்தருணத்தில்‌ பாபாவின்‌ அகத்தூண்டுதலால்‌ மறுசாராரிடம்‌ ஒரு கருத்துமாற்றம்‌ ஏற்பட்டு அனைவரும்‌ எதிர்ப்பின்றி ஒரே முடிவை ஆதரித்தனர்‌. புதன்கிழமை மாலை பாபாவின்‌ திருமேனி ஊர்வலமாக எடுத்துச்‌ செல்லப்பட்டு வாதாவுக்கு கொண்டுவரப்பட்டு உரிய சம்பிரதாயங்களுடன்‌ முரளீதரின்‌ மூலஸ்தானமாக ஒதுக்கப்பட்ட மத்திய இடத்தில்‌ அடக்கம்‌ செய்யப்பட்டது. உண்மையில்‌ பாபா முரளீதரர்‌ ஆனார்‌.

எங்கே அவ்வளவு அதிகமான பக்தர்கள்‌ அமைதியும்‌, சாந்தியும்‌ தேடிச்சென்றரர்களோ, சென்று கொண்டிருக்கிறார்களோ அத்தகைய கோவிலாகவும்‌, புனித ஆலயமாகவும்‌ வாதா திகழத்‌ தொடங்கியது. பாபாவின்‌ இறுதிச்‌ சடங்குகள்‌ யாவும்‌ பாலா சாஹேப்‌ பாடேயாலும்‌ பாபாவின்‌ ஒரு பெரும்‌ அடியவரான உபாஸனியாலும்‌ நிறைவேற்றப்பட்டது.

பேராசிரியர்‌ நார்கே கவனித்த விதமாக இந்த இடத்தில்‌ இது குறிப்பிடப்படுகிறது. முப்பத்தாறு மணிநேரம்‌ பாபாவின்‌ உடல்‌ திறந்து வைக்கப்பட்டிருந்தபோதிலும்‌ சடலம்‌ விறைத்துப்‌ போகாமலும்‌, அங்கங்கள்‌ வளைந்து கொடுக்கும்‌ விதத்திலும்‌ மிருதுவாக இருந்ததால்‌ அவர்‌ அணிந்துகொண்டிருந்த கஃப்னி துண்டுகளாகக்‌ கிழிக்கப்படாமல்‌ கழற்றி எடுக்கப்பட்டது.

செங்கல்‌ உடைதல்‌

பாபா இறுதிவிடை பெறவிருந்த சில தினங்களுக்கு முன்பாக இது குறித்து முன்கூட்டியே ஒரு சகுனம்‌ ஏற்பட்டது. மசூதியில்‌ பாபா கைவைத்து அமரும்‌ ஒரு பழைய செங்கல்‌ இருந்தது. இரவில்‌ அதன்‌ மீது சாய்ந்துகொண்டு இருக்கையில்‌ அமர்வார்‌. இது பல ஆண்டுகள்‌ நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒருநாள்‌ பாபா இல்லாதபோது தரையைக்‌ கூட்டிக்கொண்டிருந்த ஒரு பையன்‌ தனது கையில்‌ அதை எடுத்தான்‌. துரதிர்ஷ்டவசமாக கைதவறிக்‌ கீழே விழுந்து அது இரண்டாகியது.

பாபா இதைத்‌ தெரிந்துகொண்டதும்‌ அவர்‌ அதன்‌ இழப்பைக்‌ குறித்து வெகுவாகக்‌ கவலை அடைந்து “உடைந்தது செங்கல்‌ அல்ல. எனது விதியே துண்டுகளாக உடைந்துவிட்டது. அது எனது ஆயுட்கால நண்பன்‌. அதன்‌ ஸ்பரிசத்துடன்‌ நான்‌ எப்போதும்‌ ஆத்மதியானம்‌ செய்தேன்‌. அது என்‌ உயிரைப்போன்று அவ்வளவு பிரியமானது. இன்று அது என்னைவிட்டு நீங்கிவிட்டது”* என புலம்பி அழுதார்‌. செங்கல்லைப்‌ போன்ற ஒரு ஜடப்‌ பொருளுக்கு பாபா ஏன்‌ இவ்வளவு வருந்தவேண்டும்‌? என்று சிலர்‌ கேட்கலாம்‌. இதற்கு ஹேமத்பந்த்‌, “ஞானிகள்‌ இவ்வுலகில்‌ ஆதரவற்றோரைக்‌ காப்பது என்ற முக்கிய நோக்கத்துக்காகவே அவதரிக்கிறார்கள்‌. அவதரித்த உருவில்‌ மக்களுடன்‌ கலந்து அவர்களைப்போலவே இயங்கும்போது, அம்மக்களைப்‌ போலவே வெளிப்படையாகச்‌ சிரித்தல்‌, விளையாடுதல்‌, அழுதல்‌ ஆகியவற்றைச்‌ செய்தாலும்‌ தமக்குள்ளே அவர்கள்‌ தமது கடமைகளையும்‌, பிறவியெடுத்த நோக்கத்தையும்‌ பற்றி முழுதும்‌ விழிப்பாய்‌ இருக்கிறார்கள்‌?” என பதிலளித்திருக்கிறார்‌.

72 மணி நேர சமாதி

இதற்கு முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னால்‌ அதாவது 1886ல்‌ பாபா எல்லைக்கோட்டை (ஆயுள்‌ என்ற எல்லை) தாண்ட முயற்சித்தார்‌. ஒரு மார்கழிப்‌ பெளர்ணமி தினத்தன்று பாபா கடுமையான ஆஸ்த்மாவால்‌ பீடிக்கப்பட்டார்‌. அதைத்‌ தொலைப்பதற்கு பாபா தனது பிராணனை மிகஉயர எடுத்துச்சென்று சமாதிநிலையை அடையத்‌ தீர்மானித்தார்‌. பகத்‌ மஹல்ஸாபதியிடம்‌ “எனது உடலை மூன்று நாட்கள்‌ பாதுகாப்பாயாக. நான்‌ திரும்பினால்‌ எல்லாம்‌ சரியாகிவிடும்‌. நான்‌ திரும்பவில்லை என்றால்‌ அந்த திறந்தவெளியில்‌ (சுட்டிக்காண்பித்து) எனது உடலைப்‌ புதைத்துவிட்டு அதன்மேல்‌ இரண்டு கொடிகளை அடையாளமாக நட்டுவிடு” என்று கூறினார்‌.

இதைக்‌ கூறிவிட்டு இரவு சுமார்‌ பத்துமணிக்கு பாபா கீழே சாய்ந்தார்‌. அவரது மூச்சும்‌, நாடியும்‌ நின்றுபோயின. உடம்பை விட்டுவிட்டு உயிர்‌ அகன்றுவிட்டதைப்போல்‌ தோன்றியது. கிராம மக்கள்‌ உள்ளிட்ட அனைவரும்‌ அங்குவந்து விசாரணை ஒன்று நடத்தி, பாபாவால்‌ சுட்டிக்‌ காண்பிக்கப்பட்ட இடத்தில்‌ அவரை அடக்கம்செய்ய வந்தனர்‌. ஆனால்‌ மஹல்ஸாபதி இதைத்‌ தடை செய்தார்‌. தமது மடியிலேயே பாபாவின்‌ உடம்பை வைத்துக்கொண்டு மூன்று நாட்கள்‌ விடாமல்‌ காத்திருந்தார்‌. மூன்று நாட்கள்‌ கழிந்ததும்‌ காலை 3 மணிக்கு பாபாவிடம்‌ உயிரின்‌ அறிகுறிகள்‌ தெரிந்தன. அவரது சுவாசம்‌ ஆரம்பித்து, அடிவயிறு அசையத்‌ தொடங்கியது. கண்கள்‌ திறந்தன. தமது அங்கங்களை நீட்டிக்கொண்டு மீண்டும்‌ உணர்வுக்கு வந்தார்‌.

இதிலிருந்தும்‌ மற்ற காரணங்களாலும்‌ வாசகர்கள்‌, சாயிபாபா இத்தனை ஆண்டுகளாக உறைந்த 3½ முழ அளவான உடலைக்கொண்டவர்தானா, அதை விட்டுவிட்ட பிறகு அவர்‌ நீங்கிவிட்டாரா, அல்லது அகத்தே உறையும்‌ ஆத்மவடிவாக விளங்கினாரா என்று தீர்மானித்துக்கொள்ளலாம்‌. பஞ்ச பூதங்களாலான இவ்வுடம்பு அழியக்கூடியது, நிலையற்றது. ஆனால்‌ அதனுள்‌ இருக்கும்‌ ஆன்மாவே பரம்பொருள்‌. அதுவே அழியாததும்‌, நிலையானதுமான பரிபூர்ண உண்மையாகும்‌. இப்புனித மெய்மை, உணர்வுநிலை அல்லது பிரம்மமே மனத்திற்கும்‌, புலன்களுக்கும்‌ அதிபதியாகவும்‌ ஆட்டுவிப்போராகவும்‌ உள்ள சாயி என்ற பரம்பொருள்‌.

இப்பரம்‌பாருளாகிய சாயியே அண்ட பேரண்டங்களிலும்‌ இடைவளி இல்லாமல்‌ வியாபித்திருக்கிறார்‌. குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக இவ்வுடம்பை எடுத்துக்கொண்டார்‌. தமது குறிக்கோள்‌ நிறைவேறியதும்‌ தமது அழியும்‌ உடம்பைத்‌ (வரையறையுள்ள பண்புக்கூறு) துறந்துவிட்டு தமது வரையறையற்ற பண்புக்கூற்றை அடைந்தார்‌. கடவுள்‌ தத்தர்‌, கனகாபூரைச்‌ சேர்ந்த ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி போன்ற முந்தைய அவதாரங்கள்‌ போலவே சாயி எப்போதும்‌ வாழ்கிறார்‌. அவரது மரணம்‌ ஒரு புறத்தோற்றமே தவிர உயிருள்ளவற்றிலும்‌, ஜடப்பொருட்களிலும்‌ நிலைபெற்று ஆதிக்கம்‌ செலுத்தி அவைகளைக்‌ கட்டுப்படுத்துகிறார்‌. இது இயல்பானதே. இப்போதும்‌ கூடத்‌ தங்களைத்‌ தாங்களே முழுமையும்‌ சரணாகதியடைவோரும்‌ அவரையே முழுமனதாக பக்தியுடன்‌ வணங்குவோருமாகிய பலரும்‌ அனுபவப்பூர்வமாக இதை உணரலாம்‌.

பாபாவின்‌ ஸ்தூல உருவத்தை நாம்‌ தற்போது காண இயலாவிடினும்‌, இப்போதும்கூட ஷீர்டிக்குச்‌ செல்வோமானால்‌, மசூதியில்‌ அவரது அழகான, தத்ரூபமான சித்திரம்‌ காட்சியளித்துக்‌ கொண்டிருப்பதைப்‌ பார்க்கலாம்‌. பாபாவின்‌ புகழ்பெற்ற அடியவரும்‌, சித்திரக்காரருமான ஷாம்ராவ்‌ ஜெயகரால்‌ இந்த ஓவியம்‌ வரையப்பட்டது. கற்பனைவளம்‌, யக்தியுள்ள பார்வையாளருக்கு இப்படம்‌ இன்றும்‌ பாபாவின்‌ தரிசனம்‌ தரும்‌ திருப்தியையளிக்கிறது. பாபா இப்போது உடல்‌ உருவில்‌ இல்லையாயினும்‌ அவர்‌ அங்கும்‌, எங்கும்‌ இருந்து அவர்‌ பூதவுடலுடன்‌ இருந்த சமயம்‌ எவ்வாறு பக்தர்களை நலமுடன்‌ ஆதரித்தாரோ அவ்வாறே இப்போதும்‌ அருள்‌ செய்கிறார்‌. பாபாவைப்‌ போன்ற ஞானிகள்‌ மனிதர்களைப்போன்று தோன்றினாலும்‌, இறப்பதே இல்லை. உண்மையில்‌ அவர்கள்‌ கடவுளே ஆவர்‌.

பாபு சாஹேப்‌ ஜோகின்‌ தூறவு

ஜோகின்‌ சந்நியாசத்தைப்‌ பற்றிய செய்தியுடன்‌ ஹேமத்பந்த்‌ இந்த அத்தியாயத்தை முடிக்கிறார்‌. புனேவைச்‌ சேர்ந்த புகழ்பெற்ற வர்க்காரி விஷ்ணுபுவா ஜோக்‌ என்பவரின்‌ மாமா சகாராம்‌ ஹரி என்ற பாபு சாஹேப்‌ ஜோக்‌ ஆவார்‌. அவர்‌ அரசாங்க உத்தியோகத்திலிருந்து (P.W. டிபார்ட்மெண்டில்‌ சூப்பர்வைசர்‌) 1909ல்‌ ஓய்வு பெற்றதும்‌, தமது மனைவியுடன்‌ ஷீர்டிக்கு வந்து வசித்தார்‌. அவருக்குக்‌ குழந்தைகள்‌ இல்லை. கணவனும்‌, மனைவியும்‌ பாபாவை நேசித்தனர்‌. பாபாவை வழிபடுவதிலும்‌, அவருக்குச்‌ சேவை செய்வதிலும்‌, தங்கள்‌ முழுநேரத்தையும்‌ செலவிட்டனர்‌. மேகாவின்‌ மரணத்திற்குப்பின்‌ மசூதியிலும்‌, சாவடியிலும்‌ பாபாவின்‌ மஹாசமாதி வரை ஜோக்‌ ஆரத்தி எடுத்தார்‌. சாதேவின்‌ வாதாவில்‌ ஞானேஷ்வரியையும்‌, ஏக்நாத்‌ பாகவதத்தையும்‌ மக்களுக்குப்‌ படித்து விவரிக்கும்‌ வேலையும்‌ அவரிடம்‌ ஒப்படைக்கப்பட்டது. ஜோக்‌ பல ஆண்டுகள்‌ பாபாவுக்குச்‌ சேவை செய்த பின்னர்‌ பாபாவை நோக்கி, “நான்‌ இத்தனை காலம்‌ தங்களுக்கு சேவை செய்தேன்‌. எனது மனம்‌ இன்னும்‌ அமைதியும்‌, சாந்தியும்‌ பெறவில்லை. ஞானிகளுடன்‌ எனக்கு உண்டான தொடர்பு எங்ஙனம்‌ என்னை முன்னேற்றாமல்‌ இருக்கிறது? எப்போது என்னைத்‌ தாங்கள்‌ ஆசீர்வதிப்பீர்கள்‌?” என்று கேட்டார்‌.

பக்தரின்‌ வேண்டுகோளைச்‌ செவிமடுத்த பாபா, “உரிய காலத்தில்‌ உனது தீவினைகள்‌ (அவைகளின்‌ விளைவு அல்லது பயன்‌) அழிக்கப்பட்டுவிடும்‌. உனது நன்மை, தீமை யாவும்‌ சாம்பலாக்கப்படும்‌. எல்லாப்பற்றுக்களையும்‌ துறந்து, அடங்காச்‌ சிற்றின்ப அவாவையும்‌, சுவை உணர்வையும்‌ ஜெயித்து, எல்லாத்‌ தடைகளையும்‌ ஒழித்துவிட்டு, முழு மனதுடன்‌ கடவுளுக்கே சேவை செய்து பிச்சைப்‌ பாத்திரத்தை எப்போது நாடி அடைகிறாயோ (சந்நியாசம்‌ ஏற்கிறாயோ) அன்றே நான்‌ உன்னை புனிதமடைந்தவனாக நினைப்பேன்‌” என்றார்‌. சில நாட்களுக்குப்‌ பின்‌ பாபாவின்‌ மொழிகள்‌ உண்மையாயின. அவரது மனைவி அவருக்குமுன்‌ இயற்கை எய்தினாள்‌. வேறு பற்றொன்றும்‌ அவருக்கு இல்லை. அவர்‌ சுதந்திரமானார்‌. இறப்பதற்குமுன்‌ சன்னியாசம்‌ ஏற்றார்‌. வாழ்க்கையின்‌ லட்சியத்தை எய்தினார்‌.

பாபாவின்‌ அமுத மொழிகள்‌

அன்பும்‌, கருணையும்‌ உள்ள சாயிபாபா பலமுறை கீழ்கண்ட இனிய மொழிகளை மசூதியில்‌ கூறியிருக்கிறார்‌,

“என்னை எவன்‌ மிகவும்‌ விரும்புகிறானோ, அவன்‌ எப்போதும்‌ என்னைக்‌ காண்கிறான்‌. என்னைவிட்டு நீங்கினால்‌ இவ்வுலகமே அவனுக்கு சூன்யமாய்த்‌ தோன்றுகிறதூ. எனது கதைகளைத்தவிர பிறவற்றைக்‌ அவன்‌ கூறுவதில்லை. இடையறாது என்னையே தியானித்து என்‌ நாமத்தையே அவன்‌ ஸ்மரணம்‌ செய்கிறான்‌. முழுமையாக தன்னை என்னிடம்‌ சமர்ப்பித்து என்னையே எப்போதும்‌ எவன்‌ நினைவில்‌ கொண்டிருக்கிறானோ அவனுக்கு நான்‌ கடன்பட்டதாக உணர்கிறேன்‌. அவனுக்கு விடுதலையை (தன்னை உணர்தல்‌) அளித்து எனது கடனைத்‌ தீர்ப்பேன்‌. என்னை நினைத்து, எனக்காக ஏங்குபவனையும்‌, எதையும்‌ முதலில்‌ என்னை நினைக்காமல்‌ உண்ணாதவன்பாலும்‌ நான்‌ சார்ந்திருக்கிறேன்‌. இங்ஙனம்‌ என்னிடம்‌ வருபவன்‌ ஆறு கடலுடன்‌ ஒன்றாவதுபோல்‌ என்னுடன்‌ இரண்டறக்‌ கலக்கிறான்‌. பெருமையையும்‌, அஹங்காரத்தையும்‌ விட்டொழித்துவிட்டு எள்ளளவும்‌ அவற்றின்‌ அடையாளம்‌ கூட இல்லாதபடி விலக்கி உங்கள்‌ இதயத்தே அமர்ந்துகொண்டிருக்கிற என்னிடம்‌ உங்களைப்‌ பூரணமாகச்‌ சமர்ப்பிப்பீர்கணாக!

யார்‌ இந்த ‘நான்‌'

பலமுறை சாயிபாபா யார்‌ இந்த நான்‌ என்பதை விளக்கியிருக்கிறார்‌. அவர்‌ கூறினார்‌, “நீங்கள்‌ தொலைதூரமோ அல்லது எங்கெங்கேயோ என்னைத்‌ தேடிக்கொண்டு போகவேண்டாம்‌. உங்களது நாமத்தையும்‌, ரூபத்தையும்‌ நீக்கினால்‌ உங்களுள்ளும்‌ அதைப்போன்று அனைத்து ஜீவராசிகளுள்ளும்‌ உளதாயிருக்கும்‌ உணர்வு அல்லது ஸ்தாபிக்கெபற்றிருக்கும்‌ உணர்வுநிலை காணப்பபெறுகிறது. அது நானேயாகும்‌. இதை உணர்ந்துகொண்டு உங்களிடத்தும்‌, எல்லா ஜீவராசிகளிடத்தும்‌ என்னைக்‌ காண்மீர்களாக. இதை நீங்கள்‌ பயிற்சிப்பீர்களானால்‌ சர்வ வியாபகத்தை உணர்ந்து என்னுடன்‌ ஒன்றாகும்‌ நிலையை நீங்கள்‌ பெறுவீர்கள்‌”.

எனவே வாசகர்களுக்கு ஹேமத்பந்த்‌ வணக்கம்‌ தெரிவித்துவிட்டு எல்லாத்‌ தெய்வங்களையும்‌, ஞானிகளையும்‌, பக்தர்களையும்‌ மரியாதை செய்யும்படி பணிவுடனும்‌, அன்புடனும்‌ வேண்டிக்கொள்கிறார்‌. “ஏவனொருவன்‌ பிறர்மீது குறைகூறி குற்றங்கண்டு குதர்க்கம்‌ செய்கிறானோ, அவன்‌ என்னை உள்ளத்தில்‌ துளைத்துக்‌ காயமேற்படுத்துகிறான்‌. ஆனால்‌ எவன்‌ கஷ்டப்பட்டுப்‌ பொறுமையுடன்‌ இருக்கிறானோ, அவன்‌ என்னை மிக அதிகமாக சந்தோஷப்படுத்துகிறான்‌” என்று பாபா அடிக்கடி கூறியதில்லையா?

பாபா இங்ஙனம்‌ எல்லா ஐந்துக்களிடமும்‌, ஜீவராசிகளிடமும்‌ வியாபித்து அவைகள்பாலும்‌, எல்லாத்‌ திசைகளிலும்‌ சூழ்ந்து இருக்கிறார்‌. எல்லா உயிர்களிடமிருந்தும்‌, அன்பைத்‌ தவிர வேறெதையும்‌ அவர்‌ விரும்புவதில்லை. இத்தகைய புனிதமான அமிர்தம்‌ எப்போதும்‌ பாபாவின்‌ திருவாயினின்று பெருக்கெடுத்தது. அவர்தம்‌ புகழை அன்புடன்‌ பாடுவோர்‌, அதையே பக்தியுடன்‌ கேட்போர்‌ ஆகிய இருவரும்‌ சாயியிடம்‌ ஒன்றாகிவிடுகிறார்கள்‌.

ஸ்ரீ சாயியைப்‌ பணிக

அனைவர்க்கும்‌ சாந்தி நிலவட்டும்‌