ஆரத்தி
ஜீவன்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும் ஓ! சாயிபாபா, தங்களுக்கு தீப ஆராதனை செய்கிறோம். தங்களுடைய சேவார்த்திகளும், பக்தர்களுமான எங்களுக்குத் தங்கள் பாதாரவிந்தங்களில் அமைதியைக் கொடுங்கள். ஆசைகளை அழித்து, எங்களது ஆத்மாவுக்குள்ளேயே தாங்கள் கலந்து, வேண்டுவோர்க்கு இறைவனைக் காட்டுகிறீர்கள். பேரார்வத்துடன் விரும்பினோர்க்குத் தாங்கள் அனுபவங்களையும் அல்லது உணர்வுகளையும் கொடுக்கிறீர்கள்.
ஓ! அன்புள்ளம் கொண்டோரே, தங்கள் சக்தி அத்தகையது. தங்கள் திருநாமஸ்மரணை எங்கள் சம்சார பயங்களைப் போக்குகிறது. தங்களது லீலைகள் ஆழங்காண முடியாதவை. எப்போதும் ஏழைகளுக்கும், ஆதரவற்றோர்களுக்கும் அருள்கிறீர்கள். இந்தக் கலியுகத்தில் சர்வவியாபியான, தத்தாவாகிய தாங்கள் சகுணப் பிரம்மமாக உண்மையில் அவதரித்தீர். வியாழக்கிழமை தோறும் தங்களிடம் வரும் பக்தர்களைக் கடவுளின் திருவடிகளைக் காணச்செய்து அவர்களின் சம்சார பயங்களைப் போக்குங்கள்.
ஓ! இறைவனுக்கெல்லாம் இறைவனே! எனது செல்வங்கள் யாவும் தங்களது சேவையில் இருக்கவேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். சாதகப் பறவைக்கு மேகங்கள் சுத்தமான நீரை அளிப்பதுபோல் மாதவ்க்கு* மகிழ்வுடன் உணவளித்துத் தங்கள் வாக்கை நிலைநிறுத்துங்கள்!
ஸ்ரீ சாயியைப் பணிக அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்
* இந்த ஆரத்திப் பாடல் சமகாலத்தில் வாழ்ந்த மாதவ் அட்கர் என்னும் அடியவரால் இயற்றப்பட்டது.