Ads

அத்தியாயம் - 23 - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்



அத்தியாயம்‌ - 23

யோகமும்‌, வெங்காயமும்‌ - பாம்புக்‌ கடியினின்று ஷாமா குணமாக்கப்படுதல்‌ - வாந்தி பேதியின்‌ (காலரா) கட்டளைகள்‌ மீறப்பட்டன - குரு பக்திக்குக்‌ கடுமையான சோதனை.

முன்னுரை

உண்மையிலேயே இந்த ஜீவன்‌ (மனித ஆத்மா) சத்துவம்‌, ராஜஸம்‌, தாமஸம்‌ என்ற மூன்று குணங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில்‌ இருக்கிறது. ஆனால்‌ மனிதன்‌ மாயையால்‌ மறைக்கப்பட்டுத்‌ தனது இயற்பண்பான சச்சிதானந்தப்‌ பெருநிலையை மறந்து தானே செய்விப்பவனும்‌, அனுபவிப்பவனும்‌ என்று நினைத்துக்கொண்டு இவ்வாறாக முடிவற்ற இடர்ப்பாடுகளில்‌ தன்னைத்தானே சிக்க வைத்துக்கொள்கிறான்‌. விடுவித்துக்கொள்ளும்‌ வழியும்‌ அவனுக்குப்‌ புலப்படவில்லை.

 குருவின்‌ பாதங்களில்‌ செலுத்தும்‌ அன்பான பக்தி ஒன்றே விடுதலையடைவதற்கான ஒரே வழி. சாயிபிரபு என்னும்‌ மஹத்தான விளையாட்டுக்காரர்‌ அல்லது நடிகர்‌, தம்‌ அடியவர்களை மகிழ்வித்தார்‌. அவர்களைத்‌ தாமாகவே, தமது பண்புருவாகவே மாற்றம்‌ செய்துகொண்டார்‌.

 முன்னரே குறிப்பிடப்பட்ட காரணங்களால்‌ சாயிபாபாவை நாம்‌ ஒரு அவதாரமாகவே கருதுகிறோம்‌. ஆனால்‌ தான்‌ கடவுளின்‌ பணிவுள்ள ஒரு சேவகன்‌ என்றே அவர்‌ எப்போதும்‌ கூறினார்‌. அவர்‌ தாமே ஓர்‌ அவதாரமானபோதும்கூட எங்ஙனம்‌ திருப்தியான வகையில்‌ மக்கள்‌ நடந்துகொள்ளவேண்டும்‌. வாழ்க்கையில்‌ தாங்கள்‌ தங்கள்‌, பணித்துறையிடத்திற்கேற்ற (வருணாஸ்ரம தர்மத்திற்கேற்ப) கடமைகளைச்‌ செய்யவேண்டும்‌ என்று வழி காண்பித்தார்‌.

அவர்‌ ஒருபோதும்‌ எந்த வகையிலும்‌ மற்றவர்களைப்‌ போட்டியிட்டு மேம்படும்‌ முயற்சியைக்‌ கொண்டதில்லை அல்லது தமக்காக ஏதேனும்‌ செய்யும்படி அவர்களைக்‌ கேட்டதில்லை. இவ்வுலகின்‌ அசையும்‌, அசையாப்‌ பொருட்கள்‌ யாவற்றிலும்‌ கடவுளைக்‌ கண்ட அவருக்குப்‌ பணிவுடைமையே மிகவும்‌ பொருத்தமானதொன்றாகும்‌. ஒருவரையும்‌ அவர்‌ புறக்கணித்ததில்லை அல்லது மதிக்காமல்‌ இருந்ததில்லை. நாராயணனை (கடவுளை) சர்வ ஜீவராசிகளிடமும்‌ கண்டார்‌. “நான்‌ கடவுள்‌” என்று ஒருபோதும்‌ அவர்‌ சொன்னது இல்லை. ஆனால்‌ தான்‌ ஒரு பணிவுள்ள சேவகன்‌ என்றும்‌, எப்போதும்‌ அவரை நினைவில்‌ வைத்திருப்பதாகவும்‌ கூறினார்‌. ‘அல்லா மாலிக்‌’ (இறைவனே எஜமானன்‌) என்று எப்போதும்‌ உச்சரிப்பார்‌.

பல்வேறு வகையான முனிவர்களையெல்லாம்‌ நமக்குத்‌ தெரியாது. எங்ஙனம்‌ அவர்கள்‌ நடந்து கொள்கிறார்கள்‌, என்ன செய்கிறார்கள்‌, எதைச்‌ சாப்பிடுகிறார்கள்‌ என்பதெல்லாம்‌ நாமறியோம்‌. அறியாமையிலுள்ள, பிணிக்கப்பட்ட ஆன்மாக்களை விடுவிப்பதற்காகக்‌ கடவுள்‌ அருளால்‌ அவர்கள்‌ இவ்வுலகத்தில்‌ தங்களை அவதரித்துக்கொள்கிறார்கள்‌.

நல்வினைகளின்‌ சேமிப்பு ஏதேனும்‌ நமது கணக்கில்‌ இருக்குமானால்‌ முனிவர்களின்‌ கதைகள்‌ அல்லது லீலைகளைக்‌ கேட்பதற்கு நமக்கு ஓர்‌ ஆர்வம்‌ அல்லது சுவாரசியம்‌ ஏற்படுகிறது. அல்லாவிடில்‌ கேட்பதற்கு ஆர்வம்‌ எழாது. இந்த அத்தியாயத்தின்‌ முக்கிய கதைகளுக்கு இப்போது திரும்புவோம்‌. 

யோகமும்‌ - வெங்காயமும்‌

நானா சாஹேப்‌ சாந்தோர்கருடன்‌ ஒருமுறை ஷீர்டிக்கு ஒரு யோகப்‌ பயிற்சியாளர்‌ (யோக சாதகர்‌) வரும்படி நேரிட்டது. பதஞ்சலியின்‌ யோகசூத்திரங்கள்‌ உள்ளிட்ட எல்லா யோகப்‌ புத்தகங்களையும்‌ அவர்‌ கற்றிருந்தார்‌. எனினும்‌ யோகத்தில்‌ நடைமுறை அனுபவம்‌ ஏதும்‌ அவருக்கு இல்லை. தமது மனதை ஒருமுகப்படுத்தி குவிக்கவும்‌, சமாதி நிலையை ஒரு சிறிதுநேரம்‌ எய்தவும்‌ கூட அவரால்‌ முடியவில்லை. சாயிபாபா தம்பால்‌ மகிழ்ச்சி அடைந்தாரென்றால்‌, நீண்டநேரம்‌ சமாதி நிலையை எய்துவதற்கு அவர்‌ தமக்கு வழிகாட்டுவார்‌ என்று நினைத்தார்‌. உள்ளத்தில்‌ இக்குறிக்கோளுடன்‌ அவர்‌ ஷீர்டிக்கு வந்தார்‌.

மசூதிக்கு அவர்‌ சென்றபோது சாயிபாபா ரொட்டியை வெங்காயத்துடன்‌ சாப்பிட்டுக்‌ கொண்டிருப்பதைக்‌ கண்டார்‌. இதைக்‌ கண்ணுற்ற அவருக்கு மனதில்‌ ஓர்‌ எண்ணம்‌ எழுந்தது. “மட்கிப்போன ரொட்டியுடன்‌ பச்சை வெங்காயத்தை உண்டுகொண்டிருக்கும்‌ இம்மனிதர்‌ எங்ஙனம்‌ எனது தொல்லைகளுக்கு விடைகண்டு எனக்கு உதவிசெய்ய முடியும்‌?!”

சாயிபாபா அவரது உள்ளத்தைப்‌ படித்தறிந்து நானா சாஹேபை நோக்கிக்‌ கூறினார்‌, “ஓ! நானா, வெங்காயத்தை ஜீரணிக்கும்‌ ஆற்றல்‌ உள்ளவன்‌ மட்டுமே அதை உண்ணவேவண்டும்‌. மற்ற ஒருவரும்‌ அங்ஙனம்‌ செய்யக்கூடாது”.

இக்குறிப்பைக்‌ கேட்ட யோகி ஆச்சரியத்தால்‌ செயலிழந்தார்‌. பின்னர்‌ பூரணசரணாகதியுடன்‌ பாபாவின்‌ பாதங்களில்‌ அவர்‌ வீழ்ந்தார்‌. தூய, திறந்த உள்ளத்துடன்‌ தனது தொல்லைகளைக்‌ கேட்டு பாபாவிடமிருந்து அவைகளுக்கு விடையும்‌ பெற்றார்‌. இவ்வாறாகத்‌ திருப்தியும்‌, மகிழ்ச்சியும்‌ அடையப்பெற்று பாபாவின்‌ உதி ஆசீர்வாதங்களுடன்‌ அவர்‌ ஷீர்டியை விட்டுச்சென்றார்‌.

பாம்புக்‌ கடியினின்று ஷாமா குணமாகுதல்‌

இக்கதையைத்‌ தொடங்கும்‌ முன்பாக ஹேமத்பந்த்‌, ஜீவனை கிளிக்கு மிக நன்றாக ஒப்பிடலாம்‌ என்றும்‌, ஒன்று உடம்பினுள்ளும்‌ மற்றொன்று கூண்டினுள்ளுமாக இரண்டுமே கட்டுண்டிருக்கின்றன என்றும்‌, கட்டுண்டுகிடக்கும்‌ அவைகளது தற்போதைய நிலையே அவைகளுக்கு ஏற்ற நன்மையானது என்று அவைகள்‌ கருதுவதாகவும்‌ கூறுகிறார்‌. உதவியாளர்‌ ஒருவர்‌ அதாவது குரு வரும்போது கடவுளருளால்‌ அவைகளின்‌ கண்ணைத்‌ திறந்து, அவைகளின்‌ கட்டுக்களினின்று அவைகளை விடுவிக்கும்போது மட்டுமே அவைகளின்‌ கண்கள்‌, இன்னும்‌ பெரியதும்‌ சிறந்ததுமான வாழ்க்கைக்குத்‌ திறந்துவிடப்படுகிறது. இத்துடன்‌ அவர்கள்‌ முன்னைய வரையறையை உடைய வாழ்க்கையை ஒப்பிட்டால்‌ அது சூன்யமே ஆகும்‌.

கடந்த அத்தியாயத்தில்‌ மிரீகருக்கு நேரிடவிருந்த பேராபத்தினை எங்ஙனம்‌ பாபா அறிந்திருந்தார்‌ என்பதையும்‌, அதிலிருந்து எங்ஙனம்‌ அவரைக்‌ காப்பாற்றினார்‌ என்பதையும்‌ கண்டோம்‌. இதைவிடச்‌ சிறப்பான கதை ஒன்றினை இப்போது வாசகர்கள்‌ கேட்பார்களாக!

ஒருமுறை ஷாமாவையே நதச்சுப்பாம்பு ஒன்று கடித்துவிட்டது. அவரது கையிலுள்ள சுண்டு விரலில்‌ கடிபட்டு விஷம்‌ உடம்பு முழுக்கப்‌ பரவத்தொடங்கியது. ஷாமாவும்‌ தாம்‌ விரைவில்‌ இறந்துவிடுவோமென்று எண்ணும்‌ அளவிற்கு வலியும்‌ அவ்வளவு தீவிரமானதாய்‌ இருந்தது. அந்த மாதிரியான விஷயங்கட்கு எல்லாம்‌ அடிக்கடி அனுப்பப்படும்‌ விட்டோபா கடவுளிடம்‌ அவரது நண்பர்கள்‌ அவரை எடுத்துச்செல்ல விரும்பினர்‌.

ஆனால்‌ ஷாமா, மசூதிக்குத்‌ தமது விட்டோபாவிடம்‌ (சாயிபாபா) ஓடிவந்தார்‌. அவரைப்‌ பார்த்ததும்‌ பாபா திட்டவும்‌, கண்டிக்கவும்‌ தொடங்கினார்‌. அவர்‌ மூர்க்கமடைந்து “ஓ! இழிந்த பதுர்த்யா! (பூசாரியே) மேலே ஏறாதே. அங்ஙனம்‌ ஏறினாயோ ஜாக்கிரதை” என்று கர்ஜித்தார்‌. பின்பு “போ, அப்பாலே போ! கீழிறங்கு” என்றார்‌. இங்ஙனம்‌ பாபா சீற்றத்தினால்‌ சிவந்து இருப்பதைப்‌ பார்த்த ஷாமா பெரிதும்‌ குழப்பமடைந்து ஏமாற்றம்‌ அடைந்தார்‌. அவர்‌ மசூதியே தமது வீடு என்றும்‌, சாயிபாபாவே தமது ஒரே அடைக்கலம்‌ என்றும்‌ எண்ணியிருந்தார்‌. ஆனால்‌ இங்ஙனம்‌ விரட்டப்பட்டால்‌ அவர்‌ எங்கே செல்வார்‌? உயிர்‌ வாழ்வதின்‌ நம்பிக்கை அனைத்தையும்‌ இழந்து அமைதியாய்‌ இருந்தார்‌. சிறிது நேரத்திற்குப்‌ பின்‌ பாபா சாதாரணமாகவும்‌, அமைதியாகவும்‌ ஆனார்‌. அப்போது ஷாமா மேலே சென்று அவர்‌ அருகில்‌ அமர்ந்தார்‌.

பின்னர்‌ பாபா அவரிடம்‌ “பயப்படாதே, எள்ளளவும்‌ கவலைப்படாதே! கருணையுள்ள பக்கிரி உன்னைக்‌ காப்பாற்றுவார்‌. போய்‌ வீட்டில்‌ அமைதியாக அமர்ந்திரு, வெளியில்‌ செல்லாதே. என்னை நம்பு. பயப்படாமல்‌ இரு, கவலைப்படாதே” என்று கூறினார்‌, பின்னர்‌ அவர்‌ வீட்டிற்கு அனுப்பப்பட்டார்‌, அதன்‌ பின்னர்‌ அவர்‌ (ஷாமா) எதை விரும்புகிறாரோ அதை உண்ணவேண்டுமென்றும்‌, வீட்டில்‌ நடையுடையாக இருக்கவேண்டும்‌ என்றும்‌, ஆனால்‌ படுத்து உறங்கவே கூடாது என்றும்‌ குறிப்புகளுடன்‌ தாத்யா பாடீலையும்‌, காகா சாஹேப்‌ தீகஷித்தையும்‌ உடனேயே பாபா அனுப்பினார்‌. இவ்வுரைகள்‌ பின்பற்றப்பட்டன என்றும்‌, சிறிது நேரத்தில்‌ ஷாமா குணப்படுத்தப்பட்டுவிட்டார்‌ என்றும்‌ கூறவும்‌ வேண்டுமோ!

இது சம்பந்தமாக நினைவில்‌ வைக்கவேண்டியது ஒன்றுதான்‌. பாபாவின்‌ மொழிகள்‌ (போ, அப்பாலே ஓடு! -  'கீழிறங்கு' என்னும்‌ ஐந்தெழுத்து மந்திரம்‌) மேலெழுந்தவாரியாக அது காணப்பட்டாற்போல்‌ ஷாமாவை நோக்கிக்‌ கூறப்பட்டதல்ல. அவை ஷாமாவின்‌ உடலினுள்‌ புகுந்து இரத்த ஓட்டத்துடன்‌ கலக்க வேண்டாமென்று பாம்புக்கும்‌, அதன்‌ விஷத்துக்கும்‌ இடப்பட்ட நேரடிக்‌ கட்டளைகளாகும்‌. மந்திர சாஸ்த்திரத்தில்‌, நல்லறிவுத்‌ திறமுடைய பிறர்களைப்‌ போன்று எவ்வித மந்திர உச்சாடனமிடப்பட்ட அரிசியையோ, தண்ணீரையோ உபயோகிக்க வேண்டியிருந்ததில்லை. அவர்தம்‌ சொற்களே ஷாமாவின்‌ உயிரைக்‌ காப்பதில்‌ மிகச்சிறந்த பயனுள்ளவையாய்‌‌ இருந்தன.

இக்கதையையும்‌ அதைப்போன்றவற்றையும்‌ கேட்கும்‌ எவனும்‌ சாயிபாபாவின்‌ பாதங்களில்‌ உறுதியான நம்பிக்கை அடையப்‌ பெறுவான்‌. மாயை என்னும்‌ பெருங்கடலைக்‌ கடப்பதற்கு பாபாவின்‌ பாதங்களை எப்போதும்‌ நினைவில்‌ வைத்திருப்பதே ஒரே வழியாகும்‌.

காலரா வியாதி

ஒருமுறை ஷீர்டியில்‌ காலரா நச்சுத்தன்மை மிகுந்து தாண்டவமாடியது. ஊர்க்காரர்கள்‌ மிகவும்‌ பயந்து புறத்தேயுள்ள மக்கள்‌ தொடர்பையெல்லாம்‌ நிறுத்திக்கொண்டனர்‌. பஞ்சாயத்தார்‌ கூடி தொத்துவியாதி தடுப்புக்கும்‌, ஒழிப்பிற்கும்‌ இரண்டு கட்டளைகளை ஏற்படுத்தினர்‌. அவைகளாவன :

1. எவ்வித எரிபொருள்‌ (விறகு) வண்டியையும்‌ கிராமத்திற்குள்‌ வர அனுமதிக்கக்‌ கூடாது.

2. அங்கு ஒரு ஆடு கூட கொல்லப்படக்கூடாது.

 எவரேனும்‌, இக்கட்டளைகளுக்குக்‌ கீழ்ப்படியாமல்‌ இருந்தால்‌ கிராமப்‌ பஞ்சாயத்தார்களாலும்‌, அதிகாரிகளாலும்‌ அபராதம்‌ விதிக்கப்படுவர்‌. இவைகளெல்லாம்‌ வெறும்‌ மூட நம்பிக்கையென்று பாபா அறிந்தவராதலால்‌ காலராக்‌ கட்டளைகளை சிறிதளவும்‌ லட்சியம்‌ செய்யவில்லை. இக்கட்டளைகள்‌ அமுலில்‌ இருக்கும்போது ஒரு எரிபொருள்‌ வண்டி அங்கு வந்து கிராமத்துக்குள்‌ நுழைய விரும்பியது. கிராமத்தில்‌ எரிபொருள்‌ பஞ்சம்‌ இருந்தது. எல்லோருக்கும்‌ தெரிந்திருந்தது என்றாலும்‌ மக்கள்‌ எரிபொருள்‌ வண்டியை விரட்ட ஆரம்பித்தனர்‌.

பாபாவுக்கு இவைகளெல்லாம்‌ தெரியவந்தன. அவர்‌ அவ்விடத்திற்குச்‌ சென்று வண்டிக்காரனை மசூதிக்கு ஓட்டி வரும்படிக்‌ கூறினார்‌. பாபாவின்‌ செய்கைக்கெதிராக ஒருவருக்கும்‌ குரல்‌ எழுப்பத்‌ தைரியமில்லை. தமது துனிக்கு அவருக்கு எரிபொருள்‌ தேவைப்பட்டது. எனவே அவர்‌ அதை வாங்கினார்‌. அக்னிஹோத்ரி தனது புனித நெருப்பை தன்‌ வாழ்நாள்‌ முழுவதும்‌ எரியவிடுவது போன்றே பாபா தமது துனியை இரவும்‌ பகலும்‌ எரியவிட்டார்‌. இதற்காக அவர்‌ எப்போதும்‌ எரிபொருளைச்‌ சேமித்து வைத்திருந்தார்‌. பாபாவின்‌ வீடான மசூதி அனைவருக்கும்‌ தடைகளற்றும்‌, திறந்து வைக்கப்பட்டும்‌ இருந்தது. அதற்குப்‌ பூட்டோ சாவியோ கிடையாது. அங்கிருந்து சில ஏழை மக்கள்‌ தங்கள்‌ உபயோகத்திற்காக விறகை எடுத்துக்கொண்டு சென்றனர்‌.

பாபா இதைக்கண்டு முணுமுணுக்கவில்லை. பிரபஞ்சமனைத்திலும்‌ கடவுள்‌ வியாபித்திருந்ததை அவர்‌ கண்டார்‌. எனவே எவருடனும்‌ அவர்‌ பகையோ, கெட்ட எண்ணமோ கொண்டதில்லை. முழுவதுமாகத்‌ துறந்தவராயினும்‌ மக்களுக்கு ஒரு முன்‌உதாரணமாக இருக்கும்‌ பொருட்டு அவர்‌ இல்லறத்தார்‌ போன்று வாழ்ந்தார்‌.

குருபக்திக்குக்‌ கடுமையான சோதனை

இரண்டாவது காலராக்‌ கட்டளை பாபாவினால்‌ எங்ஙனம்‌ செயல்படுத்தப்பட்டது என்பதைத்‌ தற்போது காண்போம்‌. கட்டளை அமுலில்‌ இருக்கையில்‌ யாரோ ஒருவர்‌ மசூதிக்கு ஒரு ஆட்டைக்‌ கொண்டுவந்தார்‌. அது பலவீனமாயும்‌, மூப்புடனும்‌ இறக்கப்போகும்‌ தருவாயிலும்‌ இருந்தது. இத்தருணத்தில்‌ மாலிகானைச்‌ சேர்ந்த ஃபக்கீர்‌ பீர்‌ முஹமது என்ற படேபாபா அருகிலிருந்தார்‌.

சாயிபாபா அவரை அதை ஒரே வெட்டில்‌ வெட்டிப்‌ பலியிட்டுச்‌ சமர்ப்பிக்கும்படிக்‌ கேட்டார்‌. இந்த படேபாபா என்பவர்‌ சாயிபாபாவால்‌ மிகவும்‌ மதிக்கப்பட்டவர்‌. சாயிபாபாவின்‌ வலது புறத்திலேயே அவர்‌ எப்போதும்‌ அமர்ந்திருந்தார்‌. ஹூக்காவை அவர்‌ முதலில்‌ குடித்த பின்பு அது பாபாவுக்கும்‌ பிறருக்கும்‌ அளிக்கப்படும்‌. மத்தியான உணவுவேளையின்போது கறிவகைகள்‌ எல்லாம்‌ பரிமாறப்பட்ட பின்பு பாபா, படேபாபாவை மரியாதையுடன்‌ கூப்பிட்டுத்‌ தமது இடப்பக்கத்தில்‌ அமர்த்திய பின்பு எல்லோரும்‌ உண்டனர்‌. தகஷிணையாகச்‌ சேகரிக்கப்பட்ட பணத்திலிருந்தும்‌ பாபா அவருக்கு தினசரி ரூ.50 அளித்து வந்தார்‌. அவர்‌ போகும்போது பாபாவும்‌ நூறு அடி தூரம்வரை அவருடன்‌ கூடச்‌ செல்வார்‌. பாபாவிடம்‌ அவருக்கிருந்த அந்தஸ்து அத்தகையது.

ஆட்டை வெட்டும்படி பாபா அவரிடம்‌ கேட்டபோது அவர்‌ அதைத்‌ திட்டவட்டமாக மறுத்துவிட்டார்‌. “எதற்கும்‌ பயனின்றி அது ஏன்‌ கொல்லப்பட வேண்டும்‌?” என்று அவர்‌ கேட்டார்‌. பின்னர்‌ பாபா ஷாமாவை அதனைக்‌ கொல்லும்படிக்‌ கேட்டுக்கொண்டார்‌. ராதாகிருஷ்ணமாயிடம்‌ சென்று கத்தி ஒன்றை அவளிடமிருந்து வாங்கிவந்து அதை பாபாவின்‌ முன்னால்‌ வைத்தார்‌. கத்தி எதற்காக வாங்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்த ராதாகிருஷ்ணமாயி அதை திருப்பி எடுத்துக்கொண்டாள்‌.

பின்னர்‌ ஷாமா மற்றொரு கத்தியைப்‌ பெறுவதற்காகச்‌ சென்று உடனே திரும்பிவராமல்‌ காகா சாஹேப்‌ தீக்ஷித்தின்‌ வாதாவில்‌ தங்கிவிட்டார்‌. அப்போது காகா சாஹேபின்‌ முறை வந்தது. அவர்‌ “நல்ல தங்கம்‌” தான்‌ என்பதில்‌ ஐயமில்லை என்றாலும்‌ பரீட்சிக்கப்படவேண்டும்‌. கத்தியை வாங்கி வந்து ஆட்டைக்‌ கொல்லும்படி பாபா அவரைக்‌ கேட்டார்‌. அவர்‌ சாதேவின்‌ வாதாவுக்குச்‌ சென்று ஒரு கத்தியுடன்‌ திரும்பிவந்தார்‌. பாபா ஏவியதும்‌ கொல்லுவதற்குத்‌ தயாராக அவர்‌ இருந்தார்‌. தூய பிராமணக்‌ குடும்பத்தில்‌ பிறந்த அவருக்குத்‌ தமது வாழ்க்கையில்‌ கொலையைப்‌ பற்றியே தெரியாது. ஹிம்சைச்‌ செயலுக்கு முற்றும்‌ அவர்‌ எதிரானபோதும்‌ ஆட்டைக்‌ கொல்வதற்குத்‌ தன்னைத்தானே தைரியப்படுத்திக்கொண்டார்‌.

முஹமதியரான படேபாபா அதைக்‌ கொல்வதற்கு விருப்பமற்றவராய்‌ இருப்பதையும்‌, இந்த தூய பிராமணர்‌ அதைக்‌ கொல்வதற்கு ஆயத்தப்படுத்திக்கொண்டு இருப்பதையும்‌ கண்ட அனைவரும்‌ அதிசயப்பட்டனர்‌. தன்‌ வேட்டியை இறுகக்‌ கட்டிக்கொண்டு கையைக்‌ கத்தியுடன்‌ தூக்கிக்கொண்டு பாபாவின்‌ முடிவான அனுமதிக்‌ குறிப்புக்காக அவரைப்‌ பார்த்தார்‌. பாபா “எதை நினைத்துக்கொண்டு இருக்கிறாய்‌, உம்‌! வெட்டு” என்றார்‌.

பின்னர்‌ கைகள்‌ வெட்டுவதற்குத்‌ தயாராக கீழே இறக்கப்படவிருந்த அதே தருணம்‌ பாபா “நிறுத்து, நீ எவ்வளவு கொடுமையானவனாய்‌ இருக்கிறாய்‌! பிராமணனாயிருந்துகொண்டு ஆட்டைக்‌ கொல்கிறாய்‌” என்றார்‌. காகா சாஹேப்‌ கீழ்ப்படிந்து கத்தியைக்‌ கீழே வைத்துவிட்டு பாபாவிடம்‌ கூறினார்‌. “அமிர்தத்தையொத்த தங்கள்‌ சொல்‌ எங்களுக்குச்‌ சட்டமாகும்‌. எங்களுக்கு வேறு எவ்விதச்‌ சட்டமும்‌ தெரியாது. எப்போதும்‌ தங்களையே நினைவு கூர்கிறோம்‌. தங்கள்‌ ரூபத்தைத்‌ தியானிக்கிறோம்‌. இரவும்‌, பகலும்‌ தங்களுக்கே கீழ்ப்படிகிறோம்‌. கொல்வது சரியா, தப்பா என்பது எங்களுக்குத்‌ தெரியாது அல்லது அதை நாங்கள்‌ கருதுவதில்லை. பொருட்களுக்கான காரணத்தை ஆராயவோ, விவாரதிக்கவோ நாங்கள்‌ விரும்புவதில்லை. ஆனால்‌ குருவின்‌ கட்டளைகளுக்கு ஐயுறாப்‌ பற்றுறுதிப்பாட்டுடன்‌ ஒழுங்கான பணிவிணக்கப்‌ பண்புடன்‌ நடத்தலே எங்களது கடமையும்‌, தர்மமும்‌ ஆகும்‌.”

பின்னர்‌ பாபா, காகா சாஹேபிடம்‌ தாமே பலியிடுதலையும்‌, வெட்டும்‌ வேலையையும்‌ செய்துவிடுவதாகக்‌ கூறினார்‌. ஃபக்கீர்கள்‌ அமரும்‌ தகியா என்னும்‌ இடத்தில்‌ ஆட்டை வெட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. பின்னர்‌ ஆடு அவ்விடத்துக்குக்‌ கொண்டுசெல்லப்படுகையில்‌ வழியிலேயே இறந்து விழுந்தது.

ஹேமத்பந்த்‌ அடியவர்களைப்‌ பாகுபடுத்துவதுடன்‌ இந்த அத்தியாயத்தை முடிக்கிறார்‌. மூன்று விதமானவர்கள்‌ இருப்பதாக அவர்‌ கூறுகிறார்‌.

(1) முதல்‌ தரம்‌ அல்லது சிறந்தவர்கள்‌.

(2) இரண்டாம்‌ தரம்‌ அல்லது நடுவானவர்கள்‌.

(3) மூன்றாம்‌ தரம்‌ அல்லது சாதாரணமானவர்கள்‌.

முதல்‌ தரமானவர்கள்‌ குரு என்ன விரும்புகிறார்‌ என்பதை ஊகித்தறிந்து அதை உடனே நிறைவேற்றி அவர்களிடமிருந்து உத்தரவு வரும்வரை காத்திராமல்‌ அவர்களுக்குச்‌ சேவை செய்கிறார்கள்‌.

இரண்டாம்‌ தரமானவர்கள்‌ தங்களது குருவின்‌ கட்டளையை அட்சர சுத்தமாக சிறிதும்‌ தாமதமின்றிக்‌ கீழ்ப்படிகிறார்கள்‌.

மூன்றாம்‌ தரமானவர்களோ குருவின்‌ கட்டளையை நிறைவேற்றுதலை ஒத்திப்போட்டுக்கொண்டும்‌ ஒவ்வொரு படியிலும்‌ தவறு செய்துகொண்டும்‌ இருக்கிறார்கள்‌.

அறிவுக்கூர்மையைப்‌ பின்னணியாகக்கொண்ட உறுதியான நம்பிக்கையைச்‌ சீடர்கள்‌ பெற்றிருக்க வேண்டும்‌. பொறுமையும்‌ இவைகளுடன்‌ சேருமானால்‌ ஆன்மிக லட்சியம்‌ தொலைவில்‌ இல்லை. மூச்சுக்‌ கட்டுப்பாடு (உள்‌ மூச்சு - வெளி மூச்சு) அல்லது ஹடயோகம்‌ அல்லது பிற கடினப்‌ பயிற்சிகள்‌ தேவையே இல்லை. மேலே குறிப்பிடப்பட்ட குணாதிசயங்களை அடியவர்கள்‌ பெறுவார்களேயானால்‌ இன்னும்‌ அதிகமான செயல்‌ திட்டங்களுக்கு அவர்கள்‌ தயாராகின்றார்கள்‌. பின்னர்‌ குருமார்கள்‌ தோன்றி ஆன்மிகப்‌ பாதையின்‌ முழுநிறைவுக்கு அவர்களை வழிநடத்துகிறார்கள்‌.

அடுத்த அத்தியாயத்தில்‌ நாம்‌ பாபாவின்‌ விறுவிறுப்பான நகைச்சுவையையும்‌, தமாஷையும்‌ காண்போம்‌.

ஸ்ரீ சாயியைப்‌ பணிக

அனைவர்க்கும்‌ சாந்தி நிலவட்டும்‌